இங்கே விழா வீட்டில் சஞ்சனாவைத் தேடிக்கொண்டிருந்தார் பிரபாவதி. சஹானாவோடு அவள் வரவும், முகம் கடுக்க, “பாக்க எவ்வளவு வேலை கிடக்கு. அதை விட்டுப்போட்டு இந்த..” என்றவர் கணத்தில் மகளின் விழியில் ஜொலித்த சினத்தில் அடங்கி, “போ போய் வேலையைப்பார்! உன்ர அண்ணாவையும் காணேல்ல!” என்றபடி நடந்தார்.
சஞ்சனா போகாமல் சஹானாவைப் பார்க்க, “நீ போ. நான் அகில் மச்சானை வரச்சொல்லப்போறன். இனி வீட்டப்போய் வெளிக்கிடத்தான் சரி!” என்றாள் கண்ணுக்கு எட்டாத ஒரு முறுவலோடு.
போகப்போகிறாள்! இன்று இந்த ஊரில் இருந்து. நாளை இந்த நாட்டிலிருந்தே! நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு வந்தது சஞ்சனாவுக்கு. “உனக்குக் கவலையா இல்லையா மச்சி?”
“கவலைப்பட்டு எதுவும் மாறப்போகுதா என்ன?” என்றாள் எங்கோ பார்த்தபடி.
அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துவிட்டு, “இந்த ரெண்டு நாளைக்க நீ நிறைய மாறிட்டாய் மச்சி! எனக்கு இந்த மச்சாளை பிடிக்கவே இல்லை!” என்பதற்குள் யாரோ அவளை அழைத்தார்கள். “இவர்கள் வேறு!” என்று சலித்துவிட்டு, “அகில் அண்ணா வந்ததும் சொல்லாம கொள்ளாம ஓடிறாத. என்னைக் கூப்பிடு. நான் வந்தபிறகுதான் போகோணும்!” என்றுவிட்டு அவர்களிடம் விரைந்தாள் அவள்.
அதற்குமேல் அங்கிருக்கப் பிடிக்காமல் அகிலனை வரச்சொல்லிவிட்டு, கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினாள் சஹானா. அப்பாவின் மடியில் விழுந்து அழவேண்டும் போல் துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது. அப்பப்பாவின் நிலை, அப்பம்மாவின் கோபம், அத்தையின் அகங்காரம், மாமாவின் பாராமுகம், மச்சானின் கடுமை என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் காயம் மட்டுமே.
ஏன் இப்படி? அதுவும் அவளின் மச்சான் அவனுக்கு ஏன் அவளில் இத்தனை வெறுப்பு? அவள் கேள்விப்படுகிற அவனது முகம் ஒன்றாகவும் நேரில் பார்க்கும் முகம் இன்னொன்றாகவும் இருப்பது புரியவில்லை. வெறுப்பு அவள் மீது மட்டும் தான் போலும். விரக்தியாய் உதட்டோரம் வளைந்தது.
ஆக மொத்தத்தில் அவள் வந்த காரியம் முழுத் தோல்வி. அப்பாவிடம் என்ன சொல்லுவாள்? தேடிப் போனேன் அப்பா. துரத்தி அடித்துவிட்டார்கள் என்றா? துடித்துவிட மாட்டாரா? உயிராகத் தன்னை வளர்த்த அப்பாவுக்கு அவர் விரும்பிய உறவுகளைக் கொடுக்க முடியாமல் தோற்றுப் போனாள். கண்ணோரம் மின்னிய கண்ணீரோடு தன்னை மறந்து கால்போன போக்கில் நடந்துகொண்டிருந்தவள் அப்போதுதான் சுற்றுப்புறத்தைக் கவனித்தாள்.
சுற்றிவரத் தோட்டம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரையும் காணோம். அருகில் தெரிந்த பனைக்காடுகள் மிகுந்த தொலைவுக்கு வந்திருக்கிறாள் என்று சொல்ல, மெல்லிய பயம் ஒன்று நெஞ்சைக் கவ்வியது.
திரும்பி ஓடிவிடலாம் என்று எண்ணியபடி திரும்பியபோது அங்கிருந்த வீடு ஒன்றைக் கண்டதும் விழிகளை விரித்தாள். வீடு என்றுகூடச் சொல்ல முடியாத அளவில் குட்டியாக ஒன்று.
மண்வெட்டிகள், அலவாங்கு, வயர்கள், தோட்டத்துக்கு மருந்து அடிக்கும் மெஷின்கள், மோட்டர்கள் என்று தோட்டத்துக்குத் தேவையான பொருட்கள் அங்கே இருப்பதை திரும்பி வரும்போது கவனித்தாள். இவற்றை வைத்து எடுக்கப் பயன்படுத்துகிறார்கள் போலும் என்று எண்ணிக்கொண்டு நடந்தவளுக்கு, அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த ஒரு மனிதத் தலையைக் கண்டதும் நெஞ்சு ஒருமுறை திக் என்று அதிர்ந்தது. ஊன்றிக் கவனித்தபோதுதான் தோட்ட வேலைக்காரன் முத்து என்று தெரிந்தது. ஆசுவாசமாகிப் புன்னகைத்துத் தலையாட்டினாள்.
அவன் கண்களிலும் அவளை எதிர்பாராத அதிர்ச்சி. உடல் மொழியில் ஒரு தடுமாற்றம். அவள் புருவங்களைச் சுருக்கிக் கேள்வியாக நோக்க, வேகமாகப் புன்னகைத்து, “என்னம்மா இந்தப் பக்கம்? இங்க ஆள் நடமாட்டம் குறைவு. பாம்பு பூச்சி இருக்கும். சஞ்சுவே வரமாட்டா. நீங்க வெளிநாட்டில வளர்ந்த பிள்ளை. இந்தப்பக்கம் வராதீங்கோ. ஏதும் நடந்து நீங்க கத்தினாலும் யாருக்கும் கேக்காது.” என்றவன் அவளோடு கூட நடந்தான்.
அதை ஏற்று முறுவலித்து, “சும்மா நடந்துகொண்டு வந்தாப்போல அப்பிடியே இங்க வரைக்கும் வந்திட்டன் முத்து அண்ணா. திரும்புவம் எண்டு நினைக்க நீங்க வாறீங்க.” என்று அவன் முகம் பார்த்துச் சிரித்தவள், அப்போதுதான் அவன் கையில் இருந்த ஆடைகளைக் கவனித்தாள்.
கவனித்தவளின் நடை நின்றது. பார்வை கூர்மையாயிற்று. “இது யாரின்ர அண்ணா?” கேட்கும்போதே பரபரப்பும் பதட்டமும் தொற்றிக்கொண்டது. விழிகள் அந்த ஆடையிலேயே இருந்தது.
“அது.. அது சஞ்சயன் தம்பின்ர. அன்றைக்கு எங்கயோ போயிட்டு அவசரமா தண்ணி பாய்ச்சவேணும் எண்டு வந்தவர் இங்கேயே உடுப்பு மாத்தினதுல விடுபட்டுப் போச்சுது. அதுதான் எடுத்துக்கொண்டு போறன்.” முதலில் தடுமாறினாலும் முடிக்கையில் தெளிந்திருந்தான் அவன்.
அதை நம்ப அவள் தயாராயில்லை! அது நித்திலனின் ஆடைகள்! அதுவும் அவனின் பிறந்தநாளுக்கு அவள் வாங்கிப் பரிசளித்த ஷேர்ட்டும் ஜீன்சும்!
“பொய் சொல்லாதீங்க அண்ணா! இது யாரின்ர? உண்மையைச் சொல்லுங்க!” விரல் நீட்டி அதட்டினாள்.
“தம்பின்ரதான்..” அவனுடைய பொய்யைக் கேட்கப் பொறுமையற்று அந்த வீட்டை நோக்கி ஓடினாள் சஹானா.
“நித்தி.. நித்தி! எங்க இருக்கிறாய்? டேய் நித்தி!” உள்ளமும் உடலும் நடுங்க, அந்த வீட்டுக்குள் எப்படி நுழைவது என்று தெரியாமல் வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடினாள்.
“நித்தி! நித்தி.. இருக்கிறியா? ஓம் எண்டு சொல்லடா..” என்று பரிதவித்தவளுக்கு, “ம்.. ம்ம்.. ம்..” என்ற முனகல் கேட்கவும் அப்படியே நின்றாள்.
இருக்கிறான்! இங்கேதான் இருக்கிறான். மனம் பதறித் துடித்துச் சொன்னது! “முத்து அண்ணா. மரியாதையா வந்து கதவைத் திறந்து விடுங்கோ! நித்தி இந்த வீட்டுக்கதான் இருக்கிறான். எனக்கு அவனின்ர குரல் கேக்குது!” அங்கிருந்த குட்டி ஓட்டையால் எட்டிப்பார்க்க கைகள் பின்னால் கட்டப்பட்டு வாய் அடைக்கப்பட்டிருக்க நிலத்தில் இருந்து நித்திலன் எழுந்துகொள்ள முடியாமல் சிரமப்படுவது தெரிய கண்ணீரே வந்தது அவளுக்கு.
“நித்தி! அப்பிடியே இரு. நான் உன்னைப் பாத்திட்டன். பயப்படாத!” அப்போதும் அசையாமல் நின்றவரிடம், “இப்ப நீங்க திறக்கேல்ல இந்த வீட்டையே உடைப்பன்! ஒருத்தனை ஈவு இரக்கமே இல்லாம அடைச்சு வைக்க உங்களுக்கு எல்லாம் எவ்வளவு தைரியம்?” என்று சினம் கொண்டு சீறியவளைக் கண்டு அதிர்ந்தான் முத்து.
“திறவடா கெதியா! இல்ல உன்ர மண்டைய உடைப்பன்!” உயிர் நண்பன் கையும் வாயும் கட்டப்பட்டுக் கிடந்த காட்சி நிதானத்தைப் பறிக்க, அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து ஓங்கிக்கொண்டு வந்தவளைக் கண்டு அதிர்ந்து, பயந்து சொன்னதைச் செய்தான் அவன்.