திறந்ததும் ஓடிப்போய்ப் பிளாஸ்ட்ரை அகற்றி கைக்கட்டை அவிழ்த்துவிட்டு, “நித்தி!” என்று தாவி, அவனைக் கட்டிக்கொண்டு கதறினாள்.
எத்தனை நாள் தேடல்! எவ்வளவு ஏக்கம்! பட்ட காயங்களுக்கெல்லாம் அவனது கைவளைவு ஆறுதலைத் தர வெடித்துச் சிதறியிருந்தாள் சஹானா. சுவரோடு சுவராகச் சாய்ந்து அவளை மார்பில் தாங்கியவனின் கண்களிலும் மெல்லிய நீர் கசிவு.
நித்திலனுக்குப் பேச்சே வரவில்லை. உடல் மரத்துப் போயிருந்தது. பனிப்பாறைக்குள் அகப்பட்டுக்கிடந்தவன் போன்று எதையும் சிந்திக்கவோ செயலாற்றவோ சக்தியற்றுப் போயிருந்தான்.
அன்று, அப்பாவின் கைபேசியில் இருந்து அழைப்பு வர சாதாரணமாகத்தான் எடுத்தான். எதிர் முனையில் கேட்ட விசயம் தான் அவனைக் கதிகலங்க வைத்தது.
“பிரதாபன இங்க வரச்சொல்லு! இல்லையோ உன்ர அம்மா அப்பாவை இனி நீ பாக்கமாட்டாய்!” என்று ஒரு குரல் அதட்டியபோது, அதற்கு ஊடாக, “தம்பி! மாமாட்ட எதையுமே சொல்லிப்போடாத!” என்ற தந்தையின் பதட்டம் நிறைந்த குரலில் ஆடித்தான் போனான் அவன்.
“அப்ப நீ உன்ர அம்மாவையும் அப்பாவையும் இனி மறந்திடு!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தது அந்தக்குரல்.
திரும்பத் திரும்ப ஓராயிரம் தடவை அழைத்தும் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுவிட்டான் நித்திலன். தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் போகிறோம் என்று பிரதாபன் மாமாவிடம் சொன்னாலும், அவரின் அம்மா அப்பாவோடு கதைப்பதற்காக இலங்கைக்குத்தான் போகிறார்கள் என்று அவனுக்கு முதலே தெரியும். தாய்லாந்தில் ஏதோ ஒரு பகுதி அங்கே, இணைய வசதிகள் எல்லாம் இல்லை அதனால் என்னைத் தேடாதே என்று அப்பா மாமாவிடம் சொன்னதையும் அறிவான். அப்படியிருக்கையில்தான் இப்படியொரு அழைப்பு.
மாமாவிடம் நடந்ததைச் சொல்வோமா என்கிற எண்ணத்தை, சொல்லவேண்டாம் என்று தந்தை சொன்னது நினைவில் வந்து தடுத்தது. இதெல்லாம் தெரியவந்தால் மாமாவும் நிச்சயம் கிளம்புவார். அப்பாவுக்கே ஆபத்து எனும்போது மாமாவுக்கு அது இன்னும் விபரீதமாக முடிந்துவிடுமோ என்று அஞ்சித்தான் யாரிடமும் எதுவும் சொல்லாமல் அவனே புறப்பட்டு வந்தான். அப்போதுதான் கடந்த ஒரு மாதமாக அம்மாவும் அப்பாவும் அளந்து பேசியதும் மனதை உறுத்திற்று. குறிப்பாக அவன் அழைத்தபோதெல்லாம் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததும், அவர்களாக அழைக்கிறபோது மாத்திரமே அவன் பேசியதும் இப்போது கவனத்துக்கு வந்தது.
மாமாவின் ஊரின் பெயர் தெரியும் என்பதால் இலங்கை வந்து சாவகச்சேரிக்குப் பஸ்ஸில் வந்து இறங்கியவனை அப்படியே அள்ளிக்கொண்டிருந்தது ஒரு கூட்டம். அதன்பிறகான அவனின் சிறை இந்த வீடுதான். பிரதாபன் இங்கே வருகிறவரைக்கும் இங்கேதான் என்றுவிட்டான் அந்த அவன்.
நா உலர்ந்து தொண்டை வறண்டு எதுவுமே பேச வராமல் அவளின் முதுகை மட்டும் வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தான்.
அப்போது தன் வேக நடையில் அந்தத் தோட்ட வீட்டுக்குள் நுழைந்தான் சஞ்சயன். ஒற்றைப்பார்வையில் சூழ்நிலையை அளந்தவனின் விழிகள் அவசரமாக சஹானாவைச் சந்தித்தது.
கண்ணீரில் நனைந்திருந்த சஹானாவின் விழிகள் நம்பமுடியாத அதிர்வோடு அவனில் நிலை குத்தியது! அடுத்த நொடியே அவனின் முன்னால் வந்து நின்றாள். நித்திலனைக் கையால் காட்டி, “இத செய்தது நீங்கதானா?” என்றாள்.
“சொல்லுங்கோ மச்சான்! இதுக்கெல்லாம் காரணம் நீங்களா? மாமா மாமி எங்க? அவர்களையும் அடைச்சு வச்சிருக்கிறீங்களா? சொல்லுங்கோ!” தலை கலைந்து சேலை நலுங்கி கண்களில் கண்ணீருடன் கோபமும் வழியக் கேட்டவளின் முகத்தைப் பார்க்காமல் பார்வையைத் திருப்பிக்கொண்டு, “அவே ஹோட்டல்ல நல்லாத்தான் இருக்கினம்.” என்று முணுமுணுத்தான்.
அவளுக்கு நம்பவே முடியாத திகைப்பு! நொடியில் ஓராயிரம் விடயங்கள் மண்டைக்குள் மின்னல் வேகத்தில் அங்குமிங்குமாக ஓடியது. கண்களில் தவிப்புடன், “அப்ப அப்பான்ர பேங்க்ல இருந்து காசு எடுத்தது நீங்க! வீடு பறிபோகிற அளவுக்குக் கொண்டுவந்தது நீங்க. அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வரவச்சது நீங்க. இண்டைக்கு என்ர அப்பா உயிருக்குப் போராடிக்கொண்டு ஆஸ்பத்திரில கிடக்கக் காரணம் நீங்க. அப்பிடித்தானே? சொல்லுங்கோ மச்சான்! நல்லா இருந்த அப்பா நெஞ்சப் பிடிச்சுக்கொண்டு விழ நீங்கதான் காரணமா?” அவனைப்போட்டு உலுக்கினாள் சஹானா.
‘என்னது?’ திடுக்கிட்டுத் திரும்பி அவளைப் பார்த்தான் அவன்.
அவளோ தன் கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்திருந்தாள். “ஏன் மச்சான்? ஏன்? நாங்க உங்களுக்கு அப்பிடி என்ன பாவம் செய்தனாங்க? நான் உங்களை எவ்வளவு நம்பினான் தெரியுமா? ஆத்திரப்பட்டாலும் கோபப்பட்டாலும் என்ர மச்சான் நல்லவர் எண்டு நினைச்சேனே. நீங்களே என்ர அப்பாவை..” கொல்ல பார்த்தீர்கள் என்கிற வார்த்தையைச் சொல்லமுடியாமல் தரையில் விழுந்த மீனாக அவள் துடிக்க, விளங்கியும் விளங்காமல் அதிர்ந்து நின்றவன் அவசரமாக அவளைத் தாங்கினான்.
எங்கிருந்துதான் அவ்வளவு ஆவேசம் வந்ததோ, “விடுங்கோ என்னை! என்ர அப்பாவை துடிக்க வச்ச நீங்க என்ன தொடக்கூடாது! விடுங்கோ!” என்றவளை விடாது பற்றி, “அவருக்கு என்ன? சொல்லு!” என்று உலுக்கினான் அவன். கோபம் தான். வஞ்சம் தீர்க்க நினைத்தான் தான். அதற்காக, அந்த உயிரைப் பறிக்க எண்ணியதே இல்லையே!
அவனின் பதட்டத்தை உணரும் நிலையில் அவள் இருக்கவில்லை. “உங்கள நம்பினேனே. உங்கள மட்டும் தானே நம்பி வந்தனான். என்ர பெரிய மச்சான் இருக்கிறார், அவர் எனக்காக நிப்பார் எண்டு நினைச்சேனே. கடைசில பாத்தா.. ஏன்? ஏன் இப்பிடி செய்தனீங்க?” என்று கட்டுப்பாட்டை இழந்து கதறிக்கொண்டிருந்தாள் சஹானா.
அதிர்ச்சியடைந்த நித்திலனும் சிரமப்பட்டு எழுந்து சஹானாவின் தோளைப் பற்றினான். “மாமாக்கு என்ன?” அந்த ஒற்றைக் கேள்வியில் சஞ்சயனின் கைகளை உதறி அவனிடம் பாய்ந்து கேவலும் கண்ணீருமாக நடந்ததைச் சொன்னாள் சஹானா.
கேட்ட நித்திலனுக்குத் தலையைச் சுற்றியது. ‘மாமா…’ என்று மனம் பதறியது. ஒரு கொஞ்ச நாட்கள். அதற்குள் அவர்கள் எல்லோரின் வாழ்வையும் தலைகீழாக மாற்றிவிட்டானே. மிகுந்த வெறுப்புடன் அவனை நோக்கி, “மாமாக்கு மட்டும் ஏதும் நடந்தது…” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு, “என்ர அம்மா அப்பா இப்பவே வரவேணும்!” என்றவன் சஹானாவையும் இழுத்துக்கொண்டு நடந்தான்.
‘எனக்குச் சொல்லாம போயிடாத’ என்று சொல்லியும் சொல்லாமல் போய்விட்டாளா என்கிற கவலையோடு மண்டபம் முழுக்க சஹானாவைத் தேடிக்கொண்டிருந்த சஞ்சனா, ஒரு அழைப்பு வரவும் பதட்டத்தோடு மண்டபத்தில் இருந்து விரையும் தமையனைக் கண்டதும் சந்தேகத்துடன் பின்தொடர்ந்து வந்திருந்தாள். வந்தவளோ நடந்த அனைத்தையும் கண்டு, நம்பவே முடியாத அதிர்ச்சியில் சிலையாகிப்போனாள்.


