ஆட்டோவில் போய்க்கொண்டிருந்த ரட்ணத்துக்கும் நிவேதாவுக்கும் நடப்பதை நம்பவே முடியவில்லை. அவர்கள் தப்பிவிட்டார்களா? உண்மையிலேயே வெளியே வந்துவிட்டார்களா? இல்லை நடப்பதெல்லாம் கனவா? என்று திகைத்துப் போயிருந்தனர்.
நண்பனின் மனக்கவலையை ரட்ணம் மிக நன்றாகவே அறிவார். அதைவிட, தகப்பனார் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார் என்று கேள்வியுற்றதில் இருந்து பிரதாபனின் அலைப்புறுதல் அதிகரித்துப்போயிருந்தது. நடக்கக்கூடாத எதுவும் நடந்துவிட்டால் என்றைக்குமே தந்தையிடம் தன்னைப் புரிய வைத்துவிட முடியாமலேயே போய்விடும் என்பது அவரைக் கரையான் அரிப்பது போன்று அரிப்பதையும் விளங்கிக்கொண்டார். ‘என்னடா?’ என்று கேட்டால் மறந்தும் சொல்லமாட்டார். தனக்குள்ளேயே போட்டு வருந்துகிறான் என்பதால் தான் அவரே களத்தில் இறங்க முடிவு எடுத்ததே!
அதனால் தான் இந்தியா டூர் போகிறோம் என்றுவிட்டு இலங்கைக்கு வந்திருந்தார்கள். சாவகச்சேரி டவுனுக்கு வந்திறங்கியபோது அப்படியே பிரதாபனை முப்பது வருடங்களுக்கு முதல் பார்த்தது போலவே இருந்தவனைக் கண்டு அவருக்கு நெஞ்சுவலி வராததுதான் குறை. அந்தளவுக்கு அச்சு அசப்பில் அப்படியே இருந்தான் அவன். தலைகால் புரியாத சந்தோசத்தில் ஓடிவந்து அவனைப் பிடித்தும்விட்டார்.
ஆவலாக வந்து கதைத்தவரிடம், “நீங்க ஆரு எண்டு தெரியேல்லையே?” என்று இன்முகமாகத்தான் விசாரித்தான் அவன்.
சாயல் மட்டுமல்ல குணமும் நண்பனைப்போலவேதான் என்பதில் மிகுந்த புலகாங்கிதம் அடைந்துபோனார் ரட்ணம். அதன்பிறகு மடை திறந்த வெள்ளமாக அவரின் பேச்சுக்குத் தடையில்லாது போயிற்று!
பிரதாபனின் நண்பன் என்று தன்னை அறிமுகம் செய்துவிட்டு, “சொந்தமாகத்தான் தம்பி பழகிறோம். ஆனா, உண்மையாவே வருங்காலத்தில சொந்தமா மாறுவோம் எண்டும் நினைக்கிறன்.” என்று ஆரம்பித்தவர்,
“தொழில்ல நாங்க பாட்னர் தம்பி. எனக்கு அவனை மாதிரி கெட்டித்தனம் இலை. அதால, கணக்கு வழக்கு நான் பாப்பன். அவன்தான் விலைபேசுறது, வாங்குறது விக்கிறது எல்லாம். உங்கட மாமா இருக்கிறானே அவனை மாதிரி நேர்மையான நல்ல மனுசனை இந்தக் காலத்தில பாக்கவே மாட்டீங்க.” என்று ஆரம்பித்தவர், விமானம் ஏறியபோது முதன் முதலாகச் சந்தித்ததில் தொடங்கி நடந்த அனைத்தையும் கொட்டி முடித்தார்.
அவர்களை இணைக்கும் பாலமாக அவனையே நம்பியவர் கிஞ்சித்தும் அவனைச் சந்தேகிக்கவேயில்லை. அவனுடைய தோற்றம் வேறு அதற்கான சிந்தனையை அவருக்குள் தோற்றுவிக்கவேயில்லை.
ஆனால், அவர்களின் கண் முன்னே நிற்பவன், அன்னையின் கண்ணீரில் வெஞ்சினம் கொண்டு வெதும்பிப்போய் நிற்பவனாச்சே! அவர் சொன்னதையெல்லாம் கேட்டவனின் உதட்டோரம் சின்னதாய் வளைந்தது. கண்களில் ஒருமுறை பெரும் சினமே வந்து போயிற்று. உண்மைதானா என்று பார்ப்பதற்குள் மறைத்திருந்தான்.
“எனக்கு உங்கட அம்மா அப்பாவை பாத்து கதைக்கவேணுமே?” கபடு அறியாத ரட்ணம் தன் ஆவலையும் அவனிடம் பகிர்ந்தார்.
“ஓ.. தாராளமா கதைக்கலாமே!” என்றவனின் பேச்சில் இருந்த பொருளை அவர் அறியவே இல்லை. அவர் மட்டுமில்லை அவரின் துணைவியும் தான்.
“போவமா?”
“வீட்டுக்கா தம்பி?” ஆவலோடு கேட்ட நிவேதாவுக்கு,
“வீடு அடுத்த ஊர். அதைவிட எனக்கு ரெண்டு மூண்டு நாளைக்கு இங்கதான் அலுவல். அதால இப்ப கூட்டிக்கொண்டு போறது சிரமம். நான் போகேக்க கூட்டிக்கொண்டு போறன். இப்ப வாங்கோ சாப்பிடலாம்.” என்று அழைத்துச் சென்று உணவு கொடுத்து ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கவும் வைத்தான்.
அவர்களை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு வேலையாக வெளியே சென்று வந்தவன் வரும்போது இன்னொருவனையும் அழைத்துவந்தான். அதுவரை எல்லாமே நன்றாகத்தான் இருந்தது.
நிதானமாக வந்து நிவேதாவின் கையையும் வாயையும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் அவன் கட்டியபோதுதான் திகைத்தனர்.
கடினமுகம் காட்டி இருந்தாலோ, சிடுசிடுத்து இருந்தாலோ, அல்லது ஒரு மரியாதையின்மையைக் காட்டி இருந்தாலோ ரட்ணம் கவனமாக இருந்திருப்பாரோ என்னவோ. அதுகூட உறுதியில்லை. பிரதாபனின் மருமகன் என்கிற அடையாளத்தைக்கொண்ட ஒருவன் இப்படியான காரியங்களைச் செய்வான் என்று அவரால் எண்ணிக்கூடப் பார்க்க முடியாது.
தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டோமோ என்று அப்போதுதான் ஓடியது. “என்ன தம்பி இதெல்லாம்?” இயலாமையோடு கேட்டார்.
“நீங்க சத்தமில்லாம இருக்கிற வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்ல. சத்தம் போட்டா நடக்கிறதுக்கு நான் பொறுப்பு இல்ல. நீங்க தெரிவு செய்ற பாதை தான் உங்களுக்கான விளைவுகளையும் தரும்! இவன் இங்கேயே தான் இருப்பான். என்ன தேவையோ சொல்லுங்கோ செய்வான். சாப்பாடு, தண்ணி, தேத்தண்ணி எல்லாம் எந்தக்குறையும் இல்லாம வரும்.” என்று உரைத்தவன், “உங்களை வருத்திறது என்ர நோக்கமில்லை. எனக்குத் தேவை உங்கட நண்பர் இங்க வரவேணும்! அவரை வரவைக்க வேணும்! அதுக்கு ஒத்துழைச்சா ஒரு பிரச்சினையும் இல்லாம இருக்கலாம்.” என்று நிதானமாகச் சொன்னவனை இன்னுமே நம்ப முடியாமல் நோக்கினார் அந்த அப்பாவி மனிதர்.
அவன் விழிகளில் தென்பட்ட அழுத்தம் உண்மைதான் என்று அறிவுறுத்த, “தம்பி விளையாடாம விடுங்கோ! உங்கட அம்மா அப்பாவைக் கண்டு கதைச்சிட்டு என்ரபாட்டுக்கு நான் போய்டுவேன்.” என்றவரின் பேச்சைப் பொருட்படுத்தாமல், “அவா இங்க இருக்கட்டும் நீங்க வாங்கோ!” என்றான் அவன்.
பதறிப்போனார் அவர். “இல்ல நான் வரமாட்டன்!”
“பயப்படவேண்டாம். பக்கத்தில இருக்கிற வங்கிக்குத்தான்.” அழைத்துச் சென்றவன் அவரின் வங்கி அட்டையைக்கொண்டே பணத்தை எடுப்பிக்கவும் கசப்புடன் அவனை நோக்கினார் ரட்ணம்.
“நானோ பிரதாபனோ இங்க இருந்து போகேக்க சொத்துச் சுகம் எண்டு எதுவும் கொண்டு போகேல்ல தம்பி. அப்பா அம்மா சேத்து வச்ச சொத்தும் இருக்கேல்ல. கடும் குளிருக்கையும் பனிக்கையும் கிடந்து கடினமா உழைச்சுச் சேர்த்த காசுதான் இதெல்லாம். அதைக் கொள்ளையடிக்கப் பாக்கிறீங்களா?” கண்கள் கலங்கக் கேட்டார் அவர்.