“பிரதாபன் அண்ணாவை யாதவி வீட்டுக்கு அனுப்பி வச்சதும் உங்கட அம்மாதான்.” என்றவரின் பேச்சில் அதிர்ந்து பார்த்தான் சஞ்சயன்.
“உண்மை தம்பி. உங்கட அம்மாக்குத்தான் சிவாண்ணா எண்டுறது சின்ன வயசில இருந்து போட்டிருந்த முடிச்சு. சிவாண்ணாவும் உங்கட அம்மாவ விரும்பினவர்.” என்றதும் அவனுக்கு இன்னுமே அதிர்ச்சியாயிற்று.
அப்பா அம்மாவை விரும்பினாரா? அதன் சாயலை இன்றுவரை கண்டதே இல்லையே! அவர் சொல்கிற ஒவ்வொரு விடயமும் அவன் மனதுக்குள் புயலைக் கிளப்பியது.
“அப்பிடி இருந்தும் பிரபாவுக்காக இவரோட கதைக்க வந்தவர். பாசமில்லாத எந்த அண்ணனாவது தன்ர குடும்ப வழக்கம் என்ன எண்டு தெரிஞ்சும் தங்கச்சின்ர விருப்பத்தை நிறைவேற்றி வைக்கோணும் எண்டு நினைப்பாரா?”
அதுதானே? இன்றுவரை சஞ்சனாவோடு அவன் எதற்காகப் போராடுகிறான்? அதே பாசம் அவருக்கும் அவரின் தங்கை மீது இருந்திருக்கிறது!
“உண்மையைச் சொல்லப்போனா அவர் கதைக்கக்கூட வரேல்ல. ‘நீ வேண்டாம் எண்டு சொல்லுற இடத்திலையா என்ர தங்கச்சி இருக்கிறாள்’ எண்டு சண்டை பிடிக்கத்தான் வந்தவர். தங்கச்சில அவ்வளவு பாசம். அப்பிடி வந்த இடத்திலதான் யாதவிய அவருக்குப் பழக்கமே வந்தது.” என்றவர், பிரபாவதி அரவிந்தனைக் காதலிப்பதாகச் சொன்னது, பிரதாபன் அதைப்பற்றிப் பேச வந்தது, பிரபாவதி பொய்யாக விசம் அருந்தியது, யாதவியோடு காதல் கொண்டது, அலைந்து திரிந்து பெண்பார்த்தது, டயரியை பார்த்தது, கடைசியாக எதுவுமே இயலாமல் போக சிவானந்தனிடம் பிரபாவதியைக் கட்டவேண்டும் என்று வாக்குப் பெற்றுக்கொண்டு நாட்டை விட்டே போனது என்று ஆதியிலிருந்து அந்தம் வரை ஒன்றுவிடாமல் சொல்லிமுடித்தார்.
கேட்டிருந்தவனுக்கோ தலையைச் சுற்றியது. அன்னையின் மீது மெல்லிய வெறுப்புக் கூட உண்டாயிற்று. கடவுளே, இன்னும் எத்தனை பாகங்கள் இப்படி அவன் அறியாத பக்கங்களால் நிரம்பிக் கிடக்கிறது?
“உங்கட தாத்தாவின்ர தயவில படிச்சவள் நான். அவர் வந்து என்ர மகளுக்கு அரவிந்தனை விட்டுக்குடு எண்டு கேட்டா என்னால என்ன செய்யேலும்(செய்ய முடியும்) சொல்லுங்கோ. நன்றிக்கடன் பட்டவள் நான். மாட்டன் எண்டு சொல்லுற உரிமை எனக்கு இல்ல. அந்தப் பயத்தில தான் அவசரம் அவசரமா எங்களுக்குக் கல்யாணம் நடந்தது. அது பிரபாவதிக்கு பெரிய பழி உணர்ச்சிய தூண்டும் எண்டு நாங்க நினைக்கேல்ல.”
சஞ்சயனால் அசையக்கூட முடியவில்லை. சிலையைப்போல் அமர்ந்திருந்தான்.
“தம்பி! இங்க பாருங்கோ, உங்கட மனதில வெறுப்பை வளக்கிறதுக்கோ உங்கட அம்மாவோட உங்களைச் சண்டை பிடிக்க வைக்கவோ இதையெல்லாம் சொல்ல இல்லை. இந்தக் குடும்பங்களின்ர அடுத்த தலைமுறையின்ர மூத்த பிள்ளை நீங்க. நீங்க சரியா நடந்தா தான் உங்களுக்குப் பின்னால வாறவையும் சரியா நடப்பினம்(நடப்பார்கள்). அத மனதில வச்சு நடவுங்கோ. தயவுசெய்து யாரிட்டையும் எதையும் கேட்கவேண்டாம். சரி பிழை கதைக்க வேண்டாம். எங்கட காலம் முடிஞ்சு போச்சுது. இளம் பிள்ளைகள் நீங்கள். எல்லாரும் ஒற்றுமையா சந்தோசமா இருங்கோ. அதுக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்ங்கோ!” என்றார் தன்மையாக.
அப்போது அலைபேசி சத்தமிட எடுத்துக் பேசினார்.
“பிள்ளை வெளிக்கிட்டாளா?”
“…”
“இன்னும் அழுதுகொண்டுதான் போறாளோ?” அவர் கேட்ட கேள்வியிலேயே இங்கே இருந்தும் அழுதுகொண்டுதான் புறப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்து உதட்டைக் கடித்தான் அவன்.
இத்தனை நாட்களாக அவளின் கண்ணீர், வேதனை, வலி அவனைப் பெரிதாகத் தாக்கியதில்லை. இன்று, அவன் காணாத அவளின் கண்ணீர் அவனைச் சுட்டது.
“ஆறுதல் சொல்லி அனுப்பினீங்களாப்பா? இதுக்கு அவள் அங்கேயே இருந்திருக்கலாம். நடந்தது எல்லாம் தெரிஞ்சா பிரதாபன் அண்ணா எப்பிடித் தாங்குவாரோ தெரியேல்ல. இந்தத் துன்பத்தையெல்லாம் அவள் அனுபவிக்கக்கூடாது எண்டுதானே இங்க வராமையே இருந்தவர்.” என்றவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவனை நோக்கியே அம்புகளாகப் பாய்ந்தன.
“சரி.. நீங்க கவனமா வாங்கோ என்ன.” என்றுவிட்டு வைத்தவர் எழுந்துபோய் அவனுக்குத் தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து கொடுத்தார். “நீங்க குடுத்த காச சஹி தொட்டும் பாக்கேல்லை தம்பி. ‘காசு பணத்தை பெருசா நினைக்கிற ஆக்கள் நாங்கள் இல்லையாம் எண்டு சொல்லிவிடுங்கோ அத்தை’ எண்டு சொல்லி உங்களுக்கே திருப்பிக் குடுக்கச்சொல்லி சொல்லிப்போட்டு போனவள்.” என்றார் அவர்.
அவன் முகத்தில் மெல்லிய கருமை படிந்தது. எந்த இடத்திலும் தன் தகப்பனின் ஆபத்தான நிலையைச் சொல்லி அனுதாபதத்தைச் சம்பாதிக்க விரும்பாதவள் இப்படித்தானே செய்வாள். “இருக்கட்டும்!” என்றுவிட்டு விடை பெற்றுக்கொண்டான் அவன்.