வீடு சென்று தன் அறைக்குள் புகுந்தவளுக்கு ஏன் என்றில்லாமல் அழுகை வந்தது. என்னவோ வனவாசம் சென்றுவந்த உணர்வு! அடக்கிக்கொண்டாள்.
குளித்துத் தயாராகி வந்து உணவை முடித்துக்கொண்டு அம்மாவும் மகளுமாகத் தந்தையிடம் விரைந்தனர். அங்கே சத்திர சிகிச்சைக்குத் தயார் நிலையில் இருந்த தகப்பனை கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு பார்த்தவளுக்குக் கண்ணீர் பெருகிற்று.
“என்னம்மா இது? இப்பிடி மெலிஞ்சு இருக்கிறார்?”
“இவ்வளவு நாளும் மருந்து மாத்திரை மட்டும் தானேம்மா சாப்பாடு. ஒப்பரேஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்தபிறகு நாங்க கவனிச்சா போச்சு. பழைய அப்பா திரும்ப வந்திடுவார்!” என்று தேற்றினார் அன்னை.
அவருக்காக அவள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டதே என்றுதான் விமானப்பயணம் முழுவதிலுமே துடித்துக்கொண்டிருந்தாள். அப்படியில்லை. வெற்றிதான் என்று வந்து இறங்கியபோது புரிந்தாலும் அந்த வெற்றி அவளுக்குள் எந்தச் சந்தோசத்தையும் உண்டாக்க மறுத்தது.
ஆனால் அப்பாவுக்குச் சந்தோசமாக இருக்கும். அதுதானே அவளுக்கு வேண்டியது. மனத்தைத் தேற்றிக்கொண்டு இருவருமாகப் பிரதாபனைச் சத்திரசிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
தெய்வானை ஆச்சி நேராகச் சென்று சுட்டிபுரம் அம்மனின் காலடியில் அமர்ந்துகொண்டார். ‘இந்த நேரம் என்ர பிள்ளையை அறுவைச் சிகிச்சைக்குக் கொண்டு போயிருப்பாங்கள்..’ மனமெங்கும் பரிதவிப்பு. அவன் நல்லபடியாக வந்துவிட வேண்டும் என்று இடைவிடாது பிரார்த்தித்துக்கொண்டே இருந்தார். ‘நான் போய்ச் சேருறதுக்குள்ள அவனை ஒருக்கா எண்டாலும் பாத்திட வேணும்!’ தாய்மனம் ஊமையாக அழுதது.
நடுவில் வந்த யாரோ ஒருத்திக்காகப் பெற்று வளர்த்த அம்மா அப்பாவை விட்டுவிட்டு ஓடிப்போனானே என்பது மாறாத காயமாகத்தான் நெஞ்சில் இன்னுமே இருந்தது. அதற்காக அந்த ஆண்டவன் அவனுடைய உயிரோடுதான் விளையாட வேண்டுமா?
ஆத்திரத்தில் அன்னையின் வாய் எந்த வார்த்தைகளையும் யோசிக்காமல் உதிர்க்கும். அதுவே பிள்ளைக்கு ஒன்று என்கையில் தெய்வத்தையே நிற்க வைத்துக் கேள்வி கேட்கும். அந்த நிலையில் தான் அவர் இருந்தார். அவனுக்கு ஒன்றுமில்லை. நல்லபடியாக ஒப்பரேஷன் முடிந்தது என்று கேட்கிறவரை சுட்டிபுரத்து அம்மனை அவர் சும்மா விடப்போவதில்லை.
சஞ்சயனுக்கும் மனதில் அமைதியில்லை. சஹானாதான் நினைவு முழுவதிலும் நின்றாள். அப்பா என்றால் அவளுக்கு உயிர். அவருக்குச் சத்திர சிகிச்சை நடந்துகொண்டிருக்கும் இந்த நேரம் எதையெல்லாம் நினைத்துப் பயப்படுகிறாளோ? அவன் சொன்ன வார்த்தையை நினைத்துத் துடிப்பாளோ? தப்பித்தவறி நடக்ககூடாத எதுவும் நடந்துவிட்டால் எப்படித் தாங்குவாள்? அவளின் கண்ணீர் முகம் கண்ணுக்குள்ளேயே நின்று அவனைப் பைத்தியமாக்கிக்கொண்டு இருந்தது.
அவளை மறக்கத் தன்னை வலுக்கட்டாயமாக வேலைகளில் தொலைத்தான். தேவையற்ற வேலையைக்கூட இழுத்துப்போட்டுச் செய்தான். களைத்துப்போய் அவன் வீடு வந்து சேர்ந்தபோது தெய்வானை ஆச்சியும் வீட்டுக்கு வந்திருந்தார்.
“அங்க கதைச்சனீங்களா அம்மம்மா? அவருக்கு என்னவாம்?” இல்லாவிட்டால் தானே அழைக்கலாம் என்கிற எண்ணம் உள்ளுக்குள் இருந்தது.
“ஓம் அப்பு. சஞ்சு எடுத்துத் தந்தவள். ஒப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சுதாம். இனி நாளைக்குத்தானாம் அவேயே(அவர்களே) பாக்கலாமாம். எனக்கு கண்ணாடிக்கால யாதவி காட்டினவள். எங்க எல்லாம் இருட்டா கிடந்தது. என்ர பிள்ளையை ஒழுங்கா தெரியவே இல்ல.”
‘ஓ..’ அவனுக்குள் ஒரு ஏமாற்றம் படர்ந்தது. அவள் முகத்தையாவது பார்க்கலாம் என்று நினைத்தானே. என்றாலும் அதைக் கடந்தான். ‘அவளோட கதைச்சீங்களா?’ என்று கேட்க மனது உந்தியது. எப்படியிருக்கிறாள், சமாளித்துக்கொண்டாளா என்று அறிய நினைத்தான். முடியவில்லை. பேசாமல் சென்று குளித்துவிட்டு வந்தபோது அவனுக்கான உணவினைப்போட்டு மேசையில் மூடி வைத்திருந்தாள் சஞ்சனா. சுர் என்று ஒரு கோபம் தலைக்கு ஏற சாப்பிடாமல் போய்விடலாமா என்று நினைத்தான். வேண்டாம்! இந்தக் கோபம் தானே எல்லாவற்றுக்கும் காரணம்! அடக்கிக்கொண்டு அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்து போனான்.
கவனியாததுபோல் கவனித்துக்கொண்டிருந்த சஞ்சனாவுக்கு மிகுந்த கவலையாகப் போயிற்று. அவளின் அண்ணாவுக்குக் கூடவே நின்று போட்டுக்கொடுக்க வேண்டும். அவன் சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் அங்கேயே இருந்து ஏதாவது பேசிக்கொண்டு இருப்பாள். அவனுக்கு அதுவும் மிகவும் பிடிக்கும். அப்போதுதான் விரும்பிச் சாப்பிடுவான். அவளுக்குத் தெரியும். இருந்தாலும், ஒரு வீம்பில் தான் அப்படிச் செய்தாள். என்ன சொல்லப்போகிறாரோ என்ன செய்யப் போகிறாரோ என்கிற பதைப்பு மனதில் இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. அவன் அமைதியாகச் சாப்பிட்டுப் போனது மனத்தைத் தைத்தாலும் அடக்கிக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டாள். பின்னே, அவன் செய்தவைகள் சாதாரணக் காரியங்களா?
அறையில் சென்று படுத்துக்கொண்டவனுக்குச் சஞ்சனாவின் கோபமும் சஹானாவின் நினைவைத்தான் கிளறிவிட்டது.
பூப்புனித நீராட்டு விழாவில் வைத்து அவளைப் பார்த்தபோது, சோர்ந்திருந்த அந்த முகமும் தன்னை அவள் தவிர்த்த விதமும் அவனுக்குள் சுருக்கென்று தைத்ததுதான். ஆனால், கடைசியாகப் போகமுதல் அன்னையைப்பற்றி அவள் பேசியது அதிகப்படி என்கிற கோபத்தில் தான் விளக்கைப் பறித்தான். கொடுத்துவிட்டு, ‘அவர்’ சொல்வது சரி என்று அமைதியாகப் போனது இன்றைக்குச் சுட்டது. பாவம் சின்னப் பெண். மனமொடிந்திருப்பாள். போதாது என்று உணவுக்கூடத்தில் அவன் செய்தது பெரும் கொடுமை!
ஆத்திரம் கண்ணை மறைக்க அறிவிழந்து அவன் ஆற்றிய செய்கைகள் இன்று அவனையே கூறுபோட்டுக் கொண்டிருந்தது. இருக்கிறபோது வெறுத்தவளை விலகிச் சென்றபின் நினைத்துக்கொண்டே இருந்தான்.


