யாதவியும் சஹானாவும் வார்த்தைகளால் வடிக்க முடியாத ஒரு மோனநிலையில் இருந்தனர். பிரதாபனை நாளைக்குத்தான் பார்க்கலாம் என்று சொன்னாலும் ஆபத்தைக் கடந்து வந்துவிட்டதில் ஆழ்மனது மிகுந்த அமைதியாயிற்று. இனித் தேறி நல்லபடியாக வீட்டுக்குத் திரும்பிவிடுவாரே! அத்தனை நாட்களாக அவர்களை அழுத்திக்கொண்டிருந்த ஏதோ ஒன்று அகன்றுபோயிற்று. பெரும் கண்டத்தைத் தாண்டி இருக்கிறார்களே. கடந்தவை இரண்டு வாரங்கள் தானா என்று மலைத்தனர்.
அடுத்தநாள் அதிகாலையில் பொழுது விடிவதற்கு முதலே ரட்ணம் குடும்பத்தினர் பெட்டிகளோடு நேரே இங்கேதான் வந்திறங்கினர். சந்தித்துக்கொண்ட பெரியவர்கள் மூவரினதும் விழிகளிலும் கண்ணீர். யாரை யார் தேற்றுவது? யாரின் துன்பத்தை யார் வாங்கிக் கொள்வது? யாரிடம் யார் மன்னிப்பை வேண்டுவது? கண்ணீரும் கவலையுமாக நடந்தவற்றைப் பரிமாறி வேதனையைப் பாதியாகக் குறைத்துக்கொண்டனர்.
நல்லது செய்ய நினைத்து ஏற்கனவே இருந்த விரிசலைப் பெரிதாக்கிவிட்டோமோ என்று கவலையுற்ற ரட்ணமும் நிவேதாவும் தெய்வானை ஆச்சி சமாதானமாகிவிட்டதை அறிந்து மிகவுமே மகிழ்ந்து போயினர்.
வீட்டுக்குள் வந்ததுமே நித்திலன் விறுவிறு என்று மாடியேற அவனின் பின்னால் ஓடினாள் சஹானா. ரட்ணம் நிவேதாவை எதிர்கொள்ள மிகவுமே பயந்தாள். அவர்களின் கண்களைப் பார்த்தால், அதில் சொட்டும் அன்பில் நிச்சயம் உடைந்துவிடுவோம் என்று தெரிந்ததால் அதைத் தவிர்த்தாள்.
அவளின் அறைக்குள் வந்ததும் வராததுமாகக் கட்டிலில் விழுந்தான் நித்திலன். மனது, உடம்பு, மூளை என்று எல்லாமே களைத்துப் போயிருந்தது. பாதுகாப்பான இடத்துக்கு வந்துவிட்டேன் என்கிற எண்ணமா அல்லது அலுப்பா கட்டிலில் விழுந்த கொஞ்சத்திலேயே உறங்கிப்போனான்.
சஞ்சயனை விட மாதத்தால் மூத்தவன். ஆனபோதிலும் சஹானாவைப்போல்தான் அவனும். நல்ல பெற்றோருக்கு ஒற்றை மகன். சகல வசதிகளும் நிறைந்த வாழ்க்கை, சிரமமற்ற கல்வி, வறுமை இல்லாத சூழல், கற்று முடிந்ததும் வேலை என்று வாழ்வில் எந்தக் கரடுமுரடான பகுதிகளையும் சந்தித்ததே இல்லை. அப்படியிருக்கையில்தான் சூறாவளியாக வாழ்க்கை அவனைச் சுழற்றி அடித்துவிட்டிருந்தது.
அவனை அமைதியாக உறங்கவிட்டாள் சஹானா. கீழே போக மனமற்று மேலேயே இருந்துகொண்டாள்.
நல்ல உறக்கம் வந்திருந்தாலும் இன்னுமே ஆழ்மனது அமைதியாகி இருக்காததாலோ என்னவோ, விரைவிலேயே விழித்துக்கொண்டான் நித்திலன். அதுவரை தன் கூடை நாற்காலிக்குள் கால்களைத் தூக்கி வைத்துக்கொண்டு கைபேசியை நோண்டிக்கொண்டு இருந்தவள், ஏதோ உணர்வில் அவனைப் பார்க்க அவனும் விழித்திருந்து அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
இருவராலும் பேசிக்கொள்ள முடியவில்லை. ஒரு அதிர்ந்த நிலை. என் வேதனையை நீயும் உன் வேதனையை நானும் வாங்கிக்கொள்வோம் என்பதுபோல் விழிகள் மட்டும் பேசிக்கொண்டன. சஹானாவின் கண்களில் மெல்ல மெல்ல நீர் பெருகியது. பார்த்திருந்த நித்திலானால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வா என்று கைகளை விரித்தான். அடுத்த நொடியே கோழிக்குஞ்சாக அவன் கைகளுக்குள் அடங்கி இருந்தாள் சஹானா.
ஆறுதலாக அவளின் தலையை வருடிக்கொடுத்தான். சொல்லாமல் கொள்ளாமல் போனதில், “என்னில கோவமா?” என்றான் தொண்டை அடைக்க.
அவளின் தலை இல்லை என்று ஆடியது. அந்த மறுப்பு அவனுக்குள் சினத்தைக் கிளறியது. “இங்க பக்கத்து ஊருக்குப் போறது எண்டாலே உனக்கு நான் வேணும். உன்னை ஆரடி(யாரடி) அங்க தனியா வரச் சொன்னது?” என்று எரிந்து விழுந்தான்.
“அப்பான்ர ஆசை அதுதான் எண்டு தெரிஞ்சும் அங்க போகாம இருந்தா என்னைவிடச் சுயநலம் பிடிச்சவள் வேற யாரு நித்தி?” என்று அவனிடமே கேட்டாள் சஹானா.
இப்போது அவனால் அவளைக் கடிய முடியவில்லை. மாமாவின் மனம் தெரிந்ததால் தானே அவனின் அப்பாவே அங்கே போனார். மெல்ல மெல்ல தூண்டித் துருவி இங்கே நடந்தது அங்கே நடந்தது என்று எல்லாவற்றையும் அவளின் வாயில் இருந்து பிடுங்கினான். சஹானாவுக்குமே, சஞ்சனாவிடம் பகிர முடியாததை, அன்னையிடம் வெளிக்காட்ட முடியாததை எல்லாம் நண்பனிடம் மட்டுமே சொல்ல முடிந்தது.
கேட்டிருந்த நித்திலனுக்குச் சஞ்சயனைப் பிடித்து அறையும் வெறியே வந்தது. ஒரு சின்னப்பெண்ணைப் போட்டு என்னவெல்லாம் படுத்தி எடுத்து இருக்கிறான். அதுசரி! ஒரு குடும்பத்தையே கூண்டோடு தூக்கியவனுக்கு இதெல்லாம் ஒரு விடயமா என்ன?
அவனைப்பற்றிப் பேசி அவளின் துன்பத்தைப் பெருக்க விரும்பாமல், “குளிக்கோணும் சஹி உடுப்பில்ல!” என்றபடி கட்டிலின் குறுக்காக மல்லாந்து விழுந்தான்.
அப்படிச் சொன்னவனின் கையிலேயே ஒன்று போட்டாள் சஹானா. “நான் உனக்கு வாங்கித் தந்தது எல்லாம் என்னட்ட தானே கிடக்கு. மறந்திட்டியா?”
“ஓம் என்ன!” என்று துள்ளிக்கொண்டு எழுந்தவன் அவளின் கப்போர்ட்டை திறந்து உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் ஓடினான்.
அவன் தயாராகி வரட்டும் என்று கீழே இறங்கி வந்தாள் சஹானா. நிவேதாவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு மடியில் முகம் புதைத்துக்கொண்டாள். யாதவியைக் கேள்வியாக நோக்கினாலும் அவரின் கைகள் அதுபாட்டுக்கு அவளின் தலையை வருடிக்கொடுத்தது.
சின்னவர்கள் இருவரும் உணவை முடித்ததும் எல்லோருமாக வைத்தியசாலைக்குப் புறப்பட்டனர். அங்கே சாதாரண அறைக்கு மாற்றப்பட்டிருந்தார் பிரதாபன். அதுவே ஆயிரம் உபகரணங்கள் சூழ்ந்திருந்து எல்லோரையும் பயமுறுத்தியது. அவரைக் கதைக்க விடவேண்டாம் என்று வலியுறுத்தினார் வைத்தியர்.
பார்த்த எல்லோரின் விழிகளிலும் கண்ணீர். பிரதாபனின் நிலையும் அதுதான். மனைவி, நண்பன் மனைவி, நண்பன், நண்பனின் மகன் என்று வலம் வந்த அவரின் விழிகள் தன் பெண்ணைக் கண்டதும் மேலதிகமாகப் பாசத்தில் கசிந்தது. அவளோ கண்ணீரைக் கண்களுக்குள்ளேயே பிடித்து வைத்துக்கொண்டு உதடு துடிக்கக் கைகால்கள் நடுங்க நின்றிருந்தாள்.
அவரின் விரல் மட்டும் அசைந்து அவளை அருகில் அழைத்தது. ஓடிப்போய் கரத்தைப் பற்றியவளிடம் கண்களை மூடித்திறந்து, ‘அப்பாக்கு ஒண்டுமில்ல. அழக்கூடாது’ என்றார் சிரிக்க முயன்றபடி.
இந்த நிலையிலும் தனக்காகப் பார்க்கும் அப்பாவை எண்ணி உதடு பிதுங்க, “நான் அழ இல்ல அப்பா. அது சும்மா கண்ணீர் வருது.” என்று சிரிக்க முயன்றவளுக்கு முடியவில்லை.
அவரின் முகம் கசங்கத் தொடங்கவும் சட்டென்று சூழ்நிலையைத் தன் கையிலெடுத்தார் ரட்ணம். “டேய் மச்சான் என்னடா இது? எல்லாரையும் நல்லா பயப்படுத்திப் போட்டாய் என்ன?” என்றார் சிரித்துக்கொண்டு.
கண்கள் கசிய, ‘எங்கயடா போனனீ?’ என்று வாயசைத்தார் பிரதாபன். “கதைக்காத! நீ கதைக்காத. எல்லாம் சந்தோசமான விசயம் தான். என்ன ஏது எண்டு விவரமா பிறகு சொல்லுறன். நீ அமைதியா இருந்து உடம்பை தேத்து சரியோ. எங்கட எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து போச்சுது.” என்றார் அந்த ‘எல்லாப் பிரச்சினை’ என்பதை அழுத்தி.


