எல்லோரும் இலகுவாக முற்றத்தில் அமர்ந்திருந்தனர். பிரபாவதி மட்டும் வெளியே வரவில்லை. சஞ்சனா வேகமாக எல்லோருக்கும் தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து கொடுத்தாள். நேற்று இரவு தெய்வானை ஆச்சி செய்து வைத்திருந்த பனங்காய்ப் பலகாரத்தையும் பரிமாறினாள்.
எண்ணெய்ப் பலகாரம் பிரதாபனுக்கு அவ்வளவாக நல்லதில்லை என்று யாதவி தடுக்க, தகப்பனின் கண்ணில் மின்னிய ஆசையைக் கவனித்துவிட்டாள் சஹானா. “இங்க அடிக்கிற வெயிலுக்குக் கொழுப்பு எல்லாம் உருகி ஓடிப்போயிடும் அம்மா.” என்றுவிட்டு, அதை நன்றாகப் பேப்பரில் ஒற்றிக் கொடுத்தாள்.
“நீயும் ஒண்ட எடுத்துச் சாப்பிடு குஞ்சு.” அவளோடான பேச்சினை மெல்ல ஆரம்பித்தார் தெய்வானை. அவரின் அழுகையில் கோபம் பாதியளவாகக் குறைந்திருந்த போதிலும் அவர் சொன்னதைக் காதில் விழுத்தாமல் தகப்பனுக்கு ஒன்றை எடுத்து நீட்டினாள் சஹானா.
தன் பரம்பரைக் குருத்தின் பொருட்படுத்தாமையில் உள்ளம் கலங்கிவிட, “அப்பம்மாவில கோவமா குஞ்சு?” என்று தழுதழுத்தவரிடம் அப்போதும் பதில் சொல்லாமல் தன் தேநீரில் மிகுந்த கவனம் செலுத்தினாள் அவள்.
என்ன இருந்தாலும் மூன்று தலைமுறையைத் தாங்கும் பெண்மணி. மகள் இப்படிச் செய்வது சரியில்லை என்று உணர்ந்த யாதவி, “சஹி அவா உன்ர அப்பம்மா! கதை கேட்டா பதில் சொல்லவேணும்.” என்று கண்டித்தார்.
வேகமாக நிமிர்ந்து அன்னையை முறைத்தாள் பெண். “நான் அவவோட கதைச்சனான் அம்மா. இங்க இருக்கிற எல்லாரோடையும் கதைச்சனான். என்னோட கதைங்கோ எண்டு கெஞ்சினான். அப்ப இங்க இருக்கிற யாரும் என்னோட கதைக்கேல்ல. இதே வீட்டு வாசல்ல என்னை இழுத்துக்கொண்டுபோய் வீசினவே. அதுக்குப்பிறகும் கதைச்சனான். கோயில்ல என்ன தள்ளி விழுத்திப்போட்டு போனவா. அதுக்குப் பிறகு வந்தும் கதைச்சனான். கெஞ்சினான். மன்னிப்பு கேட்டனான். நான் என்ன பிழை செய்தனான் எண்டு கேட்டனான்? அப்ப எல்லாம் கதைக்காத மனுசரோட இப்ப எனக்கு என்ன கதை வேண்டிக் கிடக்கு?” அவளின் கேள்வியில் அங்கிருந்த எல்லோருமே வாயடைத்துப் போயினர்.
பிரதாபன் துடித்துப்போனார். இதெல்லாம் மேலோட்டமாக அவருக்குச் சொல்லப்பட்டவை தான். ஆனால் மனதில் குமுறலுடன் முகம் சிவந்து அழுகையை அடக்கியபடி அவள் சீறியபோது, அவள் மீது உயிரையே வைத்திருந்த மனிதர் நொருங்கிப் போனார்.
“அம்முக்குட்டி…”
“தயவு செய்து நீங்களும் ஏதும் சொல்லாதீங்கோ அப்பா. என்னை விடுங்கோ!” வெடுக்கென்று மொழிந்துவிட்டு கண்களுக்குள் நிறைந்துவிட்ட நீரினை அங்கிருக்கும் யாருக்கும் காட்டப்பிடிக்காமல் விருட்டென்று எழுந்து வீதிக்கு வந்து கால் போன போக்கில் நடந்தாள். அப்பாவைக்குறித்து அவன் என்ன வார்த்தை சொன்னான். அப்போதுகூடப் பேசாமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் எங்கிருந்து முளைத்ததாம் இந்தப் பாசம்?
அதுவரை இருந்த சந்தோசச் சூழல் சட்டென்று மாறியது. எல்லோருக்குமே சங்கடமாகிப் போயிற்று. தெய்வானை கலங்கிய விழிகளைச் சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டார். “அவள் சொன்னது உண்மைதான். கிழடி எனக்கே அவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா அவள் சின்னப்பிள்ளை என்ன செய்வாள்?” என்றார்.
அவரின் அருகில் சென்று அமர்ந்து, “கவலைப்படாதீங்கோ மாமி. சின்னப்பிள்ளை தானே, கொஞ்ச நாளில விளங்கிக்கொள்ளுவாள்.” என்று தேற்றினார் யாதவி.
பயணம் செய்த களைப்பு மாறக் குளித்து உடைமாற்றிக்கொண்டு வந்த சஞ்சயனும் அவள் பேசியத்தைக் கேட்டு முகம் இறுகிவிட அப்படியே நின்றிருந்தான்.
‘எங்கே போகிறாள்? இந்த ஊரில் என்ன தெரியும்?’ என்று பயத்துடன் பிரதாபன் பார்க்க, “அவளுக்கு இங்க சந்து பொந்து எல்லாம் தெரியும் மாமா. நீங்க கவலைப்படாதீங்கோ!” என்றாள் சஞ்சனா.
அப்போது சிவானந்தனின் மோட்டார் வண்டி வீட்டுக்குள் நுழைய, பார்த்த பிரதாபனின் முகம் சட்டென்று மலர்ந்து போயிற்று.
“டேய் சிவா! வாடா வாடா!” நண்பனை நோக்கி விரைந்த பிரதாபன், ஹெல்மெட்டை கழற்றி வண்டியில் வைத்துவிட்டு அளவான சிரிப்புடன் இறங்கியவரைக் கண்டு உள்ளூர அதிர்ந்து போனார். இருவருக்குமே ஒரே வயதுதான். ஆனால், பிரதாபனைக் காட்டிலும் பத்து வயது மூத்துத் தெரிந்தார் சிவானந்தன்.
“என்னடா? இப்பிடி ஆகிட்டாய்?” பொறுக்க முடியாமல் நண்பனை ஆரத்தழுவியபடி கேட்டார் பிரதாபன்.
“எங்க ஒரே வேலைதானே..” சம்பிரதாயமாகப் பதில் சொன்னவர், அதே சம்பிரதாயத்தோடு அவர்களின் நலனையும் விசாரித்துக்கொண்டார்.
ஆரம்பத்தில் உற்சாகமாக வீட்டு நடப்பு, வெளிநடப்பு, பழைய நண்பர்கள் என்று பேசிக்கொண்டு வந்த பிரதாபன், சிவானந்தனிடம் தெரிந்த விலகளையும் அளந்து வைத்துப் பேசுவதையும் மனதிலிருந்து சிரிக்கவில்லை என்பதையும் மெல்ல மெல்லத்தான் கவனிக்க ஆரம்பித்தார். அதற்குமேல் அவராலும் இயல்பாக உரையாடமுடியாமல் போக, மெல்ல மெல்லப் பேச்சுக் குறைந்து ஒரு கட்டத்தில் நின்றே போயிற்று.
யாதவியும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். மோட்டார் வண்டி வந்த சத்தம் கேட்காமல் இருந்திருக்காது. ஆனபோதிலும் பிரபாவதி வெளியே வரவில்லை. இந்தளவுதானா களைத்துப் பசியோடு வருகிற கணவருக்கு மனைவியிடம் இருந்து கிடைக்கிற கவனிப்பு?
அதன் பிறகும் சிவானந்தன் தான், “சஞ்சு, சாப்பாட்ட போடு பிள்ளை. விதை நெல்லு வாங்கப் போகவேணும்!” என்றுவிட்டு, “எல்லாரும் சாப்பிட்டாச்சோ?” என்று, பொதுவாக விசாரித்தார்.
பிரதாபனால் பேசமுடியவில்லை. இவனுக்கு என்னாகிற்று என்றுதான் ஓடியது. “இப்பதான் அண்ணா தேத்தண்ணியும் பனங்காய்ப் பலகாரமும் சாப்பிட்டனாங்கள். எங்களுக்குப் பசியில்லை. நீங்க சாப்பிடுங்கோ.” என்றார் யாதவி.
ஒரு பழைய சாரம், திறந்துவிட்ட ஷேர்ட், அதன் பாக்கெட்டில் பர்ஸ் இருந்ததில் அந்தப் பக்கம் தொங்கிக்கொண்டு இருக்கக் களைத்துத் தெரிந்த மனிதரைக் கண்டு ஒருவிதப் பரிதாபம் உண்டாயிற்று.
சிவானந்தனும், “உடம்பு கழுவிக்கொண்டு வாறன்!” என்றுவிட்டு எழுந்து போனார்.
தோட்டம், துறவு, விவசாயம் தான் அவர்களின் தொழில். நாளாந்தம் மண்ணுக்குள் நிற்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றாலும் ஒரு அசட்டைத் தன்மையும் எதிலும் அக்கறையற்ற உடல்மொழியும் ஏன்? போகிறவரையே பார்த்திருந்த யாதவிக்கு ஒன்றும் புரியவில்லை.
அங்கு மீண்டும் அமைதி. அந்த அமைதியின் கனம் தாங்க மாட்டாமல் வண்டியின் திறப்பை எடுத்துக்கொண்டு நடந்தான் சஞ்சயன்.
அவன் வெளியேறியதும், “ஏன் அம்மா சிவா இப்பிடி இருக்கிறான்?” என்று விசாரித்தார் பிரதாபன்.
“ஏன் அவருக்கு என்ன? நல்லாத்தானே இருக்கிறார்.” தெய்வானைக்கு மகனின் கேள்விக்குள் பொதிந்து கிடந்த உள்ளர்த்தம் பிடிபடவில்லை.