இல்லை என்பதாகத் தலையசைத்தார் பிரதாபன். கூடவே இருந்தவர்களுக்குச் சிறுகச் சிறுக நடந்த மாற்றம் கண்ணுக்குத் தெரியவில்லை போலும். வருடங்கள் கழித்துப் பார்த்த பிரதாபனுக்கு அது பளிச்சென்று தெரிந்தது. “பிரதி என்ன செய்றாள் அவனுக்குச் சாப்பாடு குடுக்காம?”
“சஞ்சு போட்டுக் குடுப்பாள் தம்பி. அவள்தான் எல்லாம் பொறுப்பா கவனிக்கிறது.” தன் பேத்தியைப் பற்றிப் பெருமையாகச் சொன்னார் தெய்வானை.
என்ன இது என்று பிரதாபன் மனைவியை நோக்கினார். ‘அமைதியாக இருங்கோ’ கண்ணால் அமைதிப்படுத்தினார் யாதவி. இன்றுதானே வந்திருக்கிறார்கள். மெல்ல மெல்லத்தான் சூழ்நிலைகளை உள்வாங்கிக்கொள்ள முடியும்.
அங்கே வண்டியில் சென்றுகொண்டு இருந்தவனின் விழிகள் அவளைத் தேடி அலைந்தது. வெகு தூரம் போயிருக்க மாட்டாள் என்று நினைத்ததற்கு மாறாகப் பல உள்வீதிகளைக் கடந்திருந்தாள் அவள். ஒருவழியாகக் கண்டுபிடித்து அவளின் முன்னால் வண்டியைக் கொண்டுபோய் நிறுத்தினான். அது வரையிலும் மனம் பொருமித் தள்ள நடந்துகொண்டு இருந்தவள் அவனை முறைத்துவிட்டு நடக்க கையைப் பிடித்து நிறுத்தினான்.
அவள் அப்போதும் முறைக்க, “ஏறு!” என்றான் வேறு பேசாமல்.
“வந்த எனக்குத் திரும்பிப் போகவும் தெரியும். விடுங்கோ!” கையை உருவ முயன்றாள் அவள்.
“உனக்குத் தெரியாது எண்டு யார் சொன்னது. வீணா எதுக்கு நடக்க? ஏறு!”
“மாட்டன்!”
“இப்ப ஏறப்போறியா இல்லையா?” அந்த ஒற்றை அதட்டலில் ஏறி அமர்ந்து இருந்தாள் அவள்.
சின்ன அதட்டலுக்கே அடங்கிப் போனவள் மீது கண்ணுக்குத் தெரியாத பாசமும் பற்றும் உருவாகிற்று. “கவனமா பிடிச்சுக்கொள்ளு!” என்றவனின் குரல் அவனையும் மீறிக் கனிந்து ஒலித்தது.
இவனைப் பார்க்கவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அமர்ந்து வந்தவளைச் சமாதானப்படுத்திவிடு என்று மனது உந்தியது. ‘நான் செய்தது தவறுதான். என்னை மன்னித்துவிடு’ என்று சொல்ல நினைத்தான். ‘கோபமாக இருக்காதே. என்னோடு கதை’ என்று கேட்கவும் எண்ணினான். எங்கே, முடிந்தால் அல்லவோ? வாகனத்தில் வைத்துப் பேசியதே அவனளவில் மிகப்பெரிய காரியம்.
வரும்போது நிறையநேரம் பிடித்த பயணம் போகும்போது படக்கென்று முடிந்திருந்தது. கேட் அருகில் நிறுத்துவான் என்று எதிர்பார்க்க அவனோ கேட்டின் குறுகிய வழியிலும் லாவகமாகச் செலுத்தி முற்றத்தில் அமர்ந்திருந்தவர்களின் முன் கொண்டுவந்து நிறுத்தினான்.
அவர்கள் இணைந்து வந்த காட்சி வாழ்க்கையிலும் இணைத்துவைத்தால் என்ன என்று தெய்வானை ஆச்சியை யோசிக்கத் தூண்டியது.
பிரதாபன் இங்கே வா என்று தலையசைத்தார். அவரின் மடியில் சென்று அவள் அமர்ந்துகொள்ள, “கோவம் வந்தா இப்பிடித்தான் வீட்டை விட்டுப் போறதோ? ம்?” என்றார் அவர்.
இவர் கடிகிறாரா கொஞ்சுகிறாரா என்று யாராவது ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டான் சஞ்சயன்.
அவளும், “அப்பிடித்தான் செய்வன்!” என்றபடி அவரின் தோளில் சாய்ந்துகொண்டாள்.
அவரோ மகளின் செல்லப் பிடிவாதத்தில் மலர்ந்து சிரித்தார்.
பார்த்திருந்த தெய்வானைக்கு இப்படிச் செல்லம் கொஞ்சும் பெண் எப்படியெல்லாம் தன் தகப்பனுக்காகத் தங்களிடம் வாதாடினாள் என்று வியப்பாக இருந்தது.
“அரவிந்தன் மாமா வீட்டை போவமா அப்பா?” அவளுக்கு எல்லோரும் தன்னையே பார்ப்பது போன்ற அந்த உணர்வு ஒருவித அசூசையை உருவாக்கிற்று.
“ஏன்? இங்கயே தங்கலாமே தம்பி.” தெய்வானைக்கு மகனைப் பிரியவே மனமில்லை. இத்தனை வருடங்கள் பிரிந்து இருந்தது போதாதா?
“இங்கதான் தங்குவன் அம்மா. அங்கேயும் போகவேணும் தானே. இண்டைக்கு போயிட்டு நாளைக்கு இங்க வாறன்.” என்று முடித்துக்கொண்டார் பிரதாபன்.
உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டுவிட்ட சிவானந்தன், இன்னுமே வெளியில் வராத பிரபாவதி என்று அவர் மனது நெருடிக்கொண்டே இருந்தது. வந்த வாகனத்திலேயே அவர்கள் புறப்பட்டதும் அன்னையிடம் தான் வந்து நின்றான் சஞ்சயன்.
“என்னம்மா இதெல்லாம்?”
அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்து இருந்தார்.
“ஏன் இப்பிடியெல்லாம் செய்றீங்க? அவ்வளவு தூரத்தில இருந்து வந்த மனுசரை வாங்கோ எண்டு ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களா?”
சரக்கென்று திரும்பியவரின் முகத்தில் மிகுந்த ஆத்திரமும் அகங்காரமும். அவன் வண்டியில் அவளைக் கொண்டுவந்து இறக்கியதைப் பார்த்தாரே!
“பாத்தியா! நான் சொன்ன மாதிரியே வளைச்சிட்டாளாவே. என்ர மகனையே எனக்கு எதிரா திருப்பிட்டாள். அண்டைக்கு என்ர அண்ணா. இண்டைக்கு என்ர மகன். அப்பிடி என்னத்தைக் காட்டுவாளவையோ தெரியாது. சுண்டைக்காய் மாதிரி இருந்துகொண்டு உன்ன மயக்கிட்டாள்! நீயும் பின்னால..” என்றவரிடம், “அம்மா!” என்று இரைந்தான் அவன்.
“உங்கட அண்ணா குடும்பத்தைக் கவனிக்க மாட்டீங்களா எண்டுதான் கேட்டனான். தேவையில்லாம அவளைப்பற்றிக் கதைக்காதீங்க!”
“கதைச்சா என்னடா செய்வாய்? அவளைப்பற்றிக் கதைச்சா உனக்கு ஏன் புதுசா கோபம் வருது? நான் கதைப்பன்!”
“கதைக்கக் கூடாது அம்மா! அவளைப்பற்றிக் கதைச்சா நான் கேப்பன். பிறகு நீங்கதான் கவலைப்படுவீங்க!” நிதானமாகச் சொல்லிவிட்டுப் போகும் பேரனை தெய்வானையின் விழிகள் யோசனையோடு தொடர்ந்தது.
இதுவரை அந்த வீட்டுப் பெண்கள் மூவரையும் தவிர்த்து வேறு பெண்களை அவன் வண்டியில் ஏற்றியதில்லை. அப்படி ஏற்றினால் அது தங்கை, அத்தை, சித்தி, பெரியம்மா இப்படி உறவுமுறையாகத்தான் இருக்கும். இன்றைக்கு சஹானாவை ஏற்றி வந்திருக்கிறான். அதுவும் அவர்களின் முன்னிலேயே கொண்டுவந்து வண்டியை நிப்பாட்டினான். கூடவே இந்தக் கோபம்? அது பாசத்தையும் தாண்டியது என்று அவரின் அனுபவக் கண்கள் சொல்லிற்று!
அவரின் மனதில் ஏற்கனவே விழுந்த விதை இப்போது துளிர் விடுவது போலிருக்க அடுத்துத் தான் செய்யவேண்டிய காரியத்திற்குத் தயாராகிக்கொண்டார் அவர்.


