அடுத்தநாள் காலையிலேயே பேரனை அழைத்துக்கொண்டு அரவிந்தனின் வீட்டுக்கு வந்திருந்தார் தெய்வானை. அன்றைக்கு எதையும் கவனிக்கும் நிலையில் அவர் இல்லை. இன்று விசாலமான நிலப்பரப்பில் மாடியுடன் கூடிய பெரிய வீட்டினைக் கண்டு மலைத்துப்போனார். வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஆராய்ந்து, ‘பெரிய தொகைதான்’ என்று தனக்குள் கணக்குப் போட்டுக்கொண்டார். நிலபுலன்களைக் கையாளுகின்ற பெண்மணிக்கு இது தெரியாதா? ‘அனாதைகள், குலம் கோத்திரம் தெரியாததுகள்’ என்று தான் தூற்றியவர்கள் தமக்கானதைத் தாமே உருவாக்கிச் சுயம்புகளாக எழுந்து நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்.
அரவிந்தன் பல்கலைக்குச் சென்றிருந்தார். அகிலன், கிளிநொச்சியில் அமைந்திருக்கும் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தான். ராகவியும் யாதவியுமாகச் சேர்ந்து இருவரையும் உபசரித்தனர். “உடம்பு என்னய்யா செய்யுது? மருந்து மாத்திரை எல்லாம் மறக்காம எடுத்தனியோ?” பாசத்துடன் மகனை நலன் விசாரித்துக்கொண்டார் தெய்வானை.
கறி ரொட்டியும் தேநீரும் பரிமாறினார் யாதவி. தெய்வானையின் விழிகள் யாரும் அறியாமல் மருமகளை ஆராய்ந்தது. மெல்லிய தேகம். அணிந்திருந்த பைஜாமா செட்டும் தோள்வரை வெட்டி காதோரமாக ஒதுக்கியிருந்த கற்றை முடியும் வெளிநாட்டின் சாயலைப் பூசியிருந்தாலும் அவரின் செயல்களில் மிளிர்ந்த சுறுசுறுப்பும் பக்குவமும் பண்பட்ட பெண்மணி என்று உணர்த்திற்று. பிரபாவதியிடம் போன்று அசட்டைத்தனம் இல்லை. அசமந்த செயல்கள் இல்லை. இன்னுமே சின்னப்பெண் போன்று எல்லோரையும் கவனித்துக்கொண்டிருந்தார் யாதவி.
கணவருக்கும் ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டு, “என்ன மாமி யோசனை? தேத்தண்ணியைக் குடிங்கோ. ஆறப்போகுது.” என்ற யாதவியின் குரலில் சிந்தனை கலைந்து தான் பேசவந்ததை ஆரம்பித்தார் தெய்வானை.
“உன்ர பங்கு சொத்துப்பத்து எல்லாத்தையும் சஹிக்கு மாத்தவேணும் தம்பி. அப்பிடியே சொந்தத்த விடாம பிடிச்சு வச்சாலும் நல்லம் போலக்கிடக்கு.”
அன்னை என்ன சொல்ல வருகிறார் என்று முழுமையாக விளங்காமல் கேள்வியாகப் பார்த்தார் பிரதாபன்.
“என்ன பாக்கிறாய்? என்ர பேத்திக்கும் பேரனுக்கும் ஒரு கலியாணத்தைச் செய்து வைக்கப்போறன். முறைதானே. சொந்தமும் விட்டுப் போகாது. சொத்தும் வெளில போகாது. இவ்வளவு காலமும் நீ அங்க இருந்தது காணும். இனியாவது சாகிற வரைக்கும் என்ர குஞ்சுகளோட சந்தோசமா இருந்துபோட்டுச் சாகப்போறன்.”
மீண்டும் பிரிந்துவிடாமல் இருக்கப் பலமான முடிச்சாகப் போட நினைக்கிறார் என்று அங்கிருந்த எல்லோருக்குமே புரிந்தது. பிரதாபனுக்குச் சந்தோசம் தான். அவரது ஆழ்மனதின் விருப்பமும் அதுதானே. அம்மாவாகக் கேட்டதும் பெரும் மகிழ்ச்சி. யாதவியைக் கேள்வியாகப் பார்த்தார். யாதவிக்கும் கணவரின் விருப்பம் தெரியும் என்றாலும் மகளை எண்ணிப் பேசாமல் நின்றுகொண்டார்.
முக்கியமானது பேசப்போகிறார் என்று சஞ்சயன் எதிர்பார்த்தான் தான். அதில் அவனின் திருமணமும் அடங்கும் என்று நினைக்கவில்லை. அவனுக்கும் இது ஒரு இனிமையான அதிர்ச்சி. இதுவரை அவன் இப்படி யோசித்தது இல்லை. ஆனால் அம்மம்மா சொன்ன செய்தி கசப்பாகவும் இல்லை. இனித்தது. மிக மிகத் தித்திப்பாக இனித்தது. அவன் மீது கடும் கோபத்தில் இருக்கிற அவள் சம்மதிப்பாளா? மச்சானை மச்சாள் மணப்பது என்பது வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் வழக்காயிற்றே என்று உள்ளே பலதும் ஓடினாலும் அவன் விழிகள் சஹானாவைத்தான் அளந்தது.
என்ன சொல்லப் போகிறாள்?
அவள் தன் தகப்பனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“என்னய்யா? இப்பிடி பேசாம இருந்தா என்ன அர்த்தம்? இதுக்கும் ஓம் எண்டு சொல்ல மாட்டியா?”
அன்னையின் வார்த்தைகளில் இருந்த வருத்தம் பிரதாபனைச் சுட்டது. “என்னம்மா கேள்வி இது? அவே உங்கட பேரப்பிள்ளைகள். அவே ரெண்டு பேரையுமே கேளுங்கோ. அவேக்கு பிடிச்சிருந்தா எனக்கும் சந்தோசம் தான்.” என்றார் அவர்.
எல்லோரின் பார்வையும் இப்போது சஹானாவிடம் திரும்பிற்று. என்றும்போலப் பெண்ணின் விருப்பம் அறிகிறவராக, “என்னடாம்மா செய்வம்?” என்று கேட்டார் பிரதாபன். இப்படித் திடீர் என்று இந்தப் பேச்சு வந்ததில் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றாள் அவள். “உனக்கு விருப்பம் இல்லாத எதையும் அப்பா செய்யமாட்டன். உன்ர மனதில என்ன இருந்தாலும் அதைச் சொல்லு!” என்று ஊக்கினார் தகப்பன்.
இதுவரையில் தன் திருமணம் குறித்து யோசித்துப் பார்த்தது இல்லை. அன்று வைத்தியசாலையில் வைத்து, ‘சஹி விரும்பினா சொந்தத்திலேயே கட்டிவைக்கலாம்’ என்று அம்மா சொன்னதற்கு அப்பா மகிழ்ந்ததில், ‘அப்பாக்குப் பிடிச்சமாதிரியே செய்தா போச்சு.’ என்று போகிற போக்கில் நினைத்திருக்கிறாள். இப்போதும் அதில் மாற்றமில்லை தான். ஆனால் அது அவன் என்பதுதான் அவளுக்குப் பிடிக்கவில்லை.
நேரடியாகக் கேட்டபிறகும் பதில் தராமல் நின்றவளின் அமைதியில் அவனுக்குள் ஒரு பதட்டம் எழுந்தது. எனக்கு இதனால் ஒன்றுமில்லை என்று காட்ட முயன்றபடி அமர்ந்திருந்தான். இருந்தாலும் அவளின் மௌனம் நீண்டுகொண்டே போக அவனுக்குள் ஒரு கொந்தளிப்பு. அவனை மணப்பதற்கு இவ்வளவு பெரிய யோசனையா? அந்தளவில் சோடைபோனவனா? அவளின் கையில் அவனுடைய தராதரம் ஊசலாடிக்கொண்டிருப்பதாகப் பட்டது.
அவனைக் கவனிக்கும் நிலையில் சஹானா இல்லை. ஆம் என்று சொல்ல விருப்பமில்லை. மறுக்க மனமில்லை. காரணம் அப்பா.
தெய்வானை ஆச்சிக்கு அருகில் அமர்ந்திருந்த பேரன் கைக்காப்பை இழுத்துவிடும் வேகத்திலேயே அவனது மனது இன்னும் தெளிவாகிவிட, எப்படியாவது இவர்களைச் சேர்த்துவைத்துவிட வேண்டும் என்று இன்னும் உறுதியாக எண்ணிக்கொண்டார். அந்தக்காலத்து மனுசியான அவருக்கு மச்சானை மச்சாள் முடிப்பது தவறாகவே படவில்லை. மாறாக அதை விரும்பி ஆதரித்தார்.
“இப்பிடி ஒண்டும் சொல்லாம நிண்டா எப்பிடி சஹி?” என்றார் யாதவி. அவருக்கு இதை சஞ்சயனையும் வைத்துக்கொண்டு பேசியிருக்க வேண்டாம் என்று தோன்றிற்று.
“எனக்கு இதுல பெருசா விருப்பம் இல்லை அம்மா.” தெளிவாகச் சொன்னாள் சஹானா.
அந்த நிராகரிப்பில் விறைத்து நிமிர்ந்தான் சஞ்சயன். சரக்கென்று உயர்ந்த அவனுடைய கைக்காப்பு தசைகைகளைத் துளைத்துக்கொண்டு மேலெழும்பத் துடித்தது. கறுத்தமுகம் இன்னும் கருத்துப்போக, கையிலிருந்த கைபேசி நொறுங்குவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தது.
இந்தப் பதிலைப் பிரதாபனும் எதிர்பார்க்கவில்லை. “ஏன் அம்மாச்சி?” என்றார் கவலையோடு.