“இல்ல நீ போ!” என்றான் அவன். பதில் சொல்லாதது கோபமோ? என்று அவன் முகத்தைப் பார்த்தாள். அங்கே ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
“எல்லாரையும் கொண்டுபோய் விட்டுட்டு நான் வரவா அண்ணா?” என்ற அகிலனைக் கூட வேண்டாம் என்று அனுப்பிவைத்தான்.
வீடு வந்த சஹானாவுக்கு அந்த நேரத்தில் அவன் கேட்டதைச் சாதாரணமாக எடுக்க முடியவில்லை. அவனைப்போன்ற இறுக்கமானவர்கள் மனதிலிருப்பதை வெளியே சொல்லுவது என்பது மொட்டைத் தலையில் முடி பிடுங்குவதற்குச் சமனான காரியம். அப்படியிருக்க, தந்தையைப்பற்றி அவன் பகிர்ந்துகொண்டதே பெரிய விடயம். இதில் என்னுடனேயே இருந்துவிடு என்று கெஞ்சலாகக் கேட்டது?
பிரபாவதி அறையிலேயே முடங்கிக்கொண்டார். அழுகை வரவில்லை. ஆனால், ஒரு பரிதவிப்பு. வாழ்க்கையில் அனுபவித்தே இராத பயம் ஒன்று அவரைக் கவ்விக் பிடித்தது. ‘அவருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது’ என்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தார். இதில், என்னவோ அவரின் இந்த நிலைக்குத் தான்தான் காரணம் என்று சொல்லிவிட்டார்களே!
அன்று மாலை அகிலன் சஞ்சயனைப் பிடிவாதமாக வீட்டுக்கு அனுப்பிவைத்தான். குளித்து மீண்டும் தயாராகி வெளியே வந்தவனுக்குச் சஞ்சனா அவசரமாக உணவைக் கொண்டுவந்து கொடுத்தாள். சஹானாவின் விழிகள் யோசனையோடு அவனையேதான் தொடர்ந்துகொண்டிருந்தது. வேக வேகமாக உண்டுவிட்டுப் புறப்பட்டவன் அங்கேயே இருந்த அவளைக் கவனித்ததாகவே தெரியவில்லை.
அடுத்த நாள் சாதாரண வாட்டுக்கு மாற்றி மூன்று நாட்களின் பின் சிவானந்தனை வீட்டுக்கு விட்டனர். வீட்டில் கிடைத்த அளவுக்கதிமானக் கவனிப்பு அவருக்கு அந்தரமாக இருக்க, அடுத்த நாளே தோட்டத்துக்குப் புறப்பட்டார்.
“எங்க வெளிக்கிட்டீங்க?” என்றான் சஞ்சயன்.
இதென்ன புதுசா கேட்கிறான் என்று உள்ளே ஓடினாலும், “தோட்டத்துக்கு..” என்றார் வாசலுக்கு நடந்தபடி.
“அங்க ஒரு இடமும் போகத்தேவையில்ல. பேசாம வீட்டுல இருங்க!” அவரின் முகம் பாராமலேயே அதட்டிவிட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போனான் அவன்.
அப்படியே நின்றுவிட்டார் சிவானந்தன். பேசாத மகன் பேசுகிறான்; அதட்டுகிறான். இப்போது அவர் என்ன செய்வது? மகளைப் பார்க்க அவளோ சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்தாள்.
“அங்க வேல நிறைஞ்சு கிடக்கு. இவன் என்ன இப்பிடிச் சொல்லிப்போட்டுப் போறான்!” என்றவருக்கு அவன் சொன்னதை மீறிப் போகவும் மனதில்லை. முற்றத்தில் கிடந்த ஒரு பிளாஸ்ட்டிக் நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தார்.
ஓய்வில்லாமல் ஓடியே பழகிய கால்களைப் பேசாமல் இருக்கச் சொன்னால் எப்படி?
“பிள்ளை, ஒரு தேத்தண்ணி தாம்மா.” அதைக் குடித்தாலாவது என்ன செய்யலாம் என்கிற திட்டம் வருகிறதா பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டார். தண்ணீர் அற்று வறண்டுகிடந்த பாலைவனத்தில் மெல்லிய சாரல் வீசியதுபோன்று மெல்லிய குளிர்ச்சி நெஞ்சில் வந்து அமர்ந்தது.
தெய்வானை அம்மாவுக்கு மனது சரியே இல்லை. பேசாமல் கணவரின் அருகில் சென்று அமர்ந்துகொண்டார். ‘நீங்க திடமா இருந்திருக்க எல்லாத்தையும் நீங்க பாத்திருப்பியல். இப்ப பாருங்கோ என்ன செய்ய ஏது செய்ய எண்டு ஒண்டும் விளங்குது இல்ல. அந்த மனுசன் வருத்தத்தில கிடந்து எழும்பி இருக்கு. இன்னும் அனுசரணையா நடக்காம திரியிறாள் உங்கட மகள். பேரப்பிள்ளைகள் ஆளுக்கொரு திசையில நிக்கிறாங்கள். நான் என்னப்பா செய்ய?’ மனதோடு கணவரோடு உரையாடியபடி இருந்தவரின் அருகில் வந்து அமர்ந்தார் பிரதாபன்.
“ஏன் அம்மா ஒருமாதிரி இருக்கிறீங்க?”
“நீ போறதுக்கிடையில சுட்டிபுரத்து அம்மனுக்கு ஒரு படையல் போடோணும் அப்பு. ஆருக்குச் செய்த பாவம் என்ர குடும்பத்தைப் போட்டு ஆட்டுதோ தெரியேல்ல. ஒருத்தர் மாத்தி ஒருத்தரை படுத்தி எழுப்புது.” என்றார் கவலையோடு.
“சரியம்மா. நீங்க நினைக்கிற மாதிரியே சிறப்பா அம்மனுக்குப் பொங்குவம். அதுக்கு ஏன் பாவம் அது இது எண்டு கதைக்கிறீங்க. நீங்களும் அப்பாவும் எத்தனை குடும்பத்தை வாழ வச்சு இருப்பீங்க சொல்லுங்கோ. அந்தப் புண்ணியம் தான் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போன கதையா பயப்படுற மாதிரி ஒண்டும் நடக்கேல்ல. அதைவிட, எல்லாருக்கும் வயசாகுது தானேம்மா. இனி இப்பிடித்தான். வருத்தம், மருந்து, மாத்திரை எண்டுதான் வாழ்க்கை போகும். அதுக்குச் சும்மா உங்களைப் போட்டு வருத்தி உடம்பக் கெடுக்காதீங்கோ.” என்று அன்னையைத் தேற்றினார் அவர்.
தெய்வானைக்கு மகனின் வார்த்தைகள் மிகுந்த பலத்தைக் கொடுத்தது. எல்லோரையும் எல்லாவற்றையும் புரிந்து அனுசரித்துப் போகும் அருமையான பிள்ளை. இவனோடு சேர்ந்திருந்து நிறையக்காலம் வாழ அவருக்குக் கொடுத்துவைக்காமல் போயிற்றே. யார்மீது சரியோ பிழையோ அவருக்கும் கணவருக்குமான இழப்பு என்பது பேரிழப்பு. எண்ணங்கள் கவலையை உண்டாக்கிக் கண்ணீரை வரவழைத்தது. அதைக் கண்டு, “திரும்பவும் என்னம்மா? ஏன் கவலைப் படுறீங்கள்? ஒருத்தருக்கும் ஒண்டும் நடக்காது. எல்லாரும் நிறையக்காலத்துக்கு நல்லாருப்போம்!” என்றார் பிரதாபன்.
“அது.. என்ர பேரன். அவன் எங்களில வச்ச பாசத்துக்காகத்தான் அப்பிடியெல்லாம் செய்தவன் அப்பு. கடைசில கெட்ட பெயர் வாங்கிக்கொண்டு நிக்கிறான்.” சும்மாவே திருமணம் என்றாலே வெறுத்து ஓடியவன். இனி என்ன செய்வானோ எப்படி மாறுவானோ என்று அந்த முதிய உள்ளம் கிடந்து அழுதது.
பிரதாபனுக்கும் புரிந்தது. சஹானாவுக்கும் நெளிவுசுளிவான வாழ்க்கை பழக்கமில்லை. விட்டுக்கொடுப்பாள்; இரக்கம் பார்ப்பாள்; மற்றவரின் மனம் நோகாமல் நடப்பாள். அதேபோல வெடுக்கென்று பேசாதபோதும் கதைக்கவேண்டி வந்தால் எதையும் முகத்துக்கு நேராகவே கதைத்துவிடுவாள். அதுதான் அன்றும் நடந்திருந்தது. அது நிச்சயம் சஞ்சயனைப் பெருமளவில் காயப்படுத்தியிருக்கும்.
“நீங்களும் அங்க வரமுதல் அவனோட கதைச்சிருக்க வேணும் எல்லோம்மா. இப்ப பாருங்கோ எல்லாருக்கும் வீண் சங்கடம். விருப்பம் இல்லாத பிள்ளைகளை வலுக்கட்டாயமா இணைக்கிறதும் நல்லது இல்லை தானேம்மா.”
‘முதலே தெரிஞ்சிருந்தா தடுத்திருப்பன்’ என்று அவன் சொன்னதைக் கருத்தில் கொண்டு அன்னைக்குப் புரியும்படி எடுத்துரைத்தார் பிரதாபன்.
“அவனுக்கு அவளைப் பிடிச்சு இருந்ததாலதான் அப்பு நான் கலியாணப் பேச்சை எடுத்ததே.” என்றார் தெய்வானை.
“என்னம்மா சொல்லுறீங்க?”
“நீ கவனிக்கேல்லையா தம்பி? இந்த ஊரை சுத்தி அவனுக்கு நிறைய மச்சாள்மார் இருக்கிறாளவே. ஒருத்திய கூட இதுவரைக்கும் அவன்ர பைக்ல ஏத்தினது இல்லை. உன்ர மகளை மட்டும் தான் ஏத்தி இருக்கிறான். எங்களுக்கு முன்னாலேயே கொண்டுவந்து இறக்கியும் விட்டவன். அண்டைக்கு நீ போனபிறகு அவளைப்பற்றிப் பிழையா கதைச்சதுக்குத் தன்ர தாயோட சண்டை பிடிச்சவன். அண்டைக்கு நடந்ததையும் நல்லா யோசிச்சுப்பார். அவனுக்குப் பிடிக்காட்டி நான் கல்யாணப்பேச்சை ஆரம்பிச்ச நிமிசமே தடுத்திருப்பான். ஆனா அவன் என்னைக் கதைக்க விட்டவன். அவள் என்ன சொல்லுறாள் எண்டு தெரியிற வரைக்கும் அமைதியாத்தான் இருந்தவன். அவள் வேண்டாம் எண்டு சொன்னபிறகுதான் கோபப்பட்டவன்.” என்றவருக்குப் பேரனின் வாழ்க்கை இப்படியே ஒற்றையிலேயே போய்விடுமோ என்று அச்சமாயிற்று. பிரதாபனின் கையைப் பயத்தோடு பற்றினார். அன்னையின் விழிகள் மகனிடம் எதையோ யாசித்தது.
“என்னம்மா? எதை நினைச்சுக் கவலைப்படுறீங்க? என்ன எண்டு சொல்லுங்கோ.” தாயின் தவிப்பைத் தாங்க முடியாமல் பதட்டப்பட்டார் பிரதாபன்.
“என்ர அப்பு. அவனுக்கு அவளையே கட்டிக் குடடா தம்பி. கல்யாணமே வேண்டாம் எண்டு நிண்ட பிள்ளை உன்ர மகளில ஆசைப்பட்டுட்டானடா. அவன் நேரத்துக்கு ஒண்டு தேடுற ஆள் இல்ல. இனியும் இன்னொருத்தியை கட்டுவான் எண்டுற நம்பிக்கை எனக்கில்லை. என்ர பேரனை தனிமரமா விட்டுடாத ராசா. உன்னட்ட நான் வேற ஒண்டும் கேக்கேல்லை. எனக்காக இதை மட்டும் செய்து தாய்யா. அம்மா அவனுக்காகக் கதைக்கிறன் எண்டு நினைக்காத. என்ர பேத்தியும் நல்லா இருப்பாள். அவன் சந்தோசமா வச்சிருப்பான். கோவக்காரன் தான். ஆனா குணம் கெட்டவன் இல்லையப்பு.” பரிதவிப்புடன் கெஞ்சியவரின் கையைப் பற்றித் தட்டிக்கொடுத்து அவரை அமைதிப்படுத்தினார் பிரதாபன்.
அன்னைக்காக இதைச் செய்துகொடுக்கச் சொல்லி மனம் உந்தியது. அவனுக்கும் மகளில் விருப்பம் இருக்கிறது என்பது இனிமையான அதிர்ச்சிதான். ஆனால் மகள்.. அவளிடம் எப்படிப் பேசுவார். அவர் சொன்னால் தட்டமாட்டாள்தான்..
“என்னப்பு என்ன யோசிக்கிறாய்? நீ யோசிக்கிறது பாத்தா எனக்குப் பயமா இருக்கே. பாவமையா அவன். நீ இருந்து வளத்திருந்தா அவன் இப்பிடி கோவக்காரனா வளந்திருப்பானா சொல்லு? பெத்ததுகள் ரெண்டும் ஆளுக்கொரு திசையில நிக்குதுகள். நீயும் கை விட்டுடாத..” என்றவரின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
“அச்சோ அம்மா! கொஞ்சம் பேசாம இருங்கோ. சஹி என்ர சொல்லு தட்டமாட்டாள்தான். எண்டாலும் நான் அவளோட கதைச்சுப்போட்டுச் சொல்லுறன்.” என்றார் அன்னையின் கையை அழுத்தி.
சுருங்கிப்போயிருந்த அந்த வயோதிப முகம் நொடியில் மலர்ந்து விகசித்தது.