பிரதாபனோ மருமகனின் கோபத்தை ரசித்தார். “சரி! அவள் வேண்டாம். வேற யாரை பிடிச்சிருக்கு எண்டு சொல்லு. அவளையே கட்டிவைக்கிறன்.” என்று, வைப்பதே தெரியாமல் பொறியை வைத்தார் மனிதர்.
“எனக்கு இப்ப கட்டுற எண்ணம் இல்ல மாமா!” என்றான் அவன் அவரைப் பாராமல்.
“சரி. எப்ப உனக்கு விருப்பமோ அப்ப கட்டு. நிச்சயமாவது செய்துபோட்டுத்தான் போவன். அதுக்கு ஒரு பொம்பிளையைக் காட்டு!” என்றார் அவர் சிரிப்பை அடக்கியபடி.
என்ன சொன்னாலும் விடாது கிடுக்கிப்பிடி போடுகிறவரை முறைத்தான் அவன். வாய்விட்டே நகைத்தார் பிரதாபன். மருமகனின் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு, “என்ர பிள்ளையோட கோவமா?” என்றார் அவன் முகம் பார்த்து.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாமல், நெஞ்சுக்குள் எதுவோ அடைக்கப் பார்வையை விலக்கிக்கொண்டான். மனம் அலைபாய்ந்தது. முகத்துக்கு நேரே மறுத்தவளின் செய்கையில் அவன் காயப்பட்டது உண்மைதான். அதற்காகக் கோபமா? இல்லையே! தைரியமும் துணிவும் இருந்தும் என் இதயம் உன் காலடியில் கிடக்கிறதடி என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிற அவன் மீதுதான் அவனுக்குக் கோபம். அவளிடம் அவளின் பாசத்துக்குரிய பெரிய மச்சானாகவே அறிமுகம் ஆகமுடியாமல் போயிற்றே என்கிற கோபம்! எதையாவது செய்து அவளைத் தன் வசப்படுத்திவிட முடியாத இயலாமை தந்த கோபம் என்று எல்லாமே அவனுக்கு அவன் மீதுதான்.
“என்னப்பு? என்ர மகள் உனக்கு வேண்டாமா?”
வேகமாகத் திரும்பி அவரைப் பார்த்தான் சஞ்சயன். அவள் அவனை வேண்டாமெனத் தூக்கி எறிந்தபிறகும், அவள் மட்டும் தான் வேண்டும் என்று அழுதுகொண்டு இருக்கிற இதயத்தை வைத்துக்கொண்டு அவளை வேண்டாம் என்று எப்படிச் சொல்லுவான்.
“அவளுக்கு என்னைப் பிடிக்கேல்ல மாமா. பிறகு எதுக்கு விருப்பமில்லாத ரெண்டுபேர வலுக்கட்டாயமா சேர்த்துவைக்க நினைக்கிறீங்க?” என்றவனின் விழிகள் இலக்கற்றுப் புறவெளியில் அலைந்தது. “பிடிக்காத ரெண்டுபேர் வாழ்க்கையில இணைஞ்சா என்ன நடக்கும் எண்டுறதை பிறந்ததில இருந்து பாத்துப் பாத்து வளந்தவன் நான். அதே வாழ்க்கையை அவளுக்குக் குடுக்க விருப்பம் இல்ல மாமா.” என்றான் கண்ணை எட்டாத முறுவலோடு.
மாமனின் மனம் கரைந்து போயிற்று. ஒவ்வொரு தகப்பனும் தன்னைப்போலத் தன் பெண்ணைப் பார்த்துக்கொள்ளும் ஒருவனைத்தானே துணையாக்கத் தேடுவார்கள். அந்த நிமிடத்தில் அவரின் மனது சொன்னது அவன் இவன்தான் விட்டுவிடாதே என்று.
அவனின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுக்கொண்டு நடந்தார். “அவள் விருப்பம் எண்டு சொன்னா?”
“சொல்லமாட்டாள்.” உறுதியாக மறுத்தான். அதுதான் ஏற்கனவே சொல்லிவிட்டாளே. அவனாகக் கேட்டும் மூக்குடைபட்டானே.
“சொல்லிட்டாள்!”
“என்ன சொல்லிட்டாள்?”
“உன்னைக் கட்டுறதுக்கு ஓம் எண்டு சொல்லிட்டாள்.”
நடையை நிறுத்திவிட்டு அவரை முறைத்தான் அவன். “அப்பாவும் மகளும் என்ன என்னோட விளையாடுறீங்களா? ஒருக்கா மாட்டன் எண்டுவாள் ஒருக்கா ஓம் எண்டுவாள். என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க ரெண்டுபேரும்.”
அவன் கோபத்தைக் கண்டு பெரிதாகச் சிரித்தார் பிரதாபன். “பின்ன? பொம்பிளை வீடு எண்டு சொன்னா சும்மாவா?”
அவனால் அவரைப்போன்று அதை இலகுவாக எடுக்க முடியவில்லை. “இல்ல மாமா. இது நீங்க என்னவோ செய்து இருக்கிறீங்க. உங்களுக்காகத்தான் அவள் சம்மதிச்சு இருக்கிறாள். அப்பிடி வேண்டாம்!” என்றான் தீவிரமான குரலில்.
கெட்டிக்காரன்! மனதில் மெச்சிக்கொண்டார். “சரி! நீ நினைக்கிற மாதிரி ஏதோ ஒண்டு நடந்ததாகவே இருக்கட்டும். ஆனா, என்ர பிள்ளையின்ர சந்தோசம் எனக்கு முக்கியம் இல்லை எண்டு நினைக்கிறியா? அவளுக்காகவே முப்பது வருசமா இங்க வராம இருந்தவனடா நான். அப்பிடியான நான், அவள் சந்தோசமா இருக்கமாட்டாள் எண்டு நினைக்கிற ஒரு கலியாணத்தை அவளுக்குச் செய்வன் எண்டு நினைக்கிறியா?” என்று அவனிடமே கேட்டார் அவர்.
அவனை நம்புகிறாரா மனிதர்? தன் மகளை அவன் சந்தோசமாக வாழவைப்பான் என்று நினைக்கிறாரா? ஏதோ ஒரு விதத்தில் அவரின் வாதம் அவன் இதயத்தை ஆற்றுப்படுத்தியது. காயங்களுக்கு மருந்திட்டது. அதில் மறுத்து எதுவும் சொல்லாமல் அவரையே பார்க்க, அவன் தோளில் தட்டிக்கொடுத்து, “தம்பி இங்க பார்! என்ர மகளை உன்னை நம்பி உன்னட்ட தாறன். அவளைச் சந்தோசமா வச்சிருந்து அவள் சொன்னது பொய் எண்டு காட்டு! அவ்வளவுதான். சரியோ!” என்று பேச்சை முடித்துக்கொண்டார் பிரதாபன்.
இதை அறிந்ததும் தெய்வானை துள்ளிக்கொண்டு எழுந்தார்.
“பிறகு என்ன? இனியும் சும்மா கதைச்சுக்கொண்டிருக்க நேரமில்லை. முதல் வாற நல்ல நாளிலேயே கல்யாணத்தை வைப்பம். அப்ப நான் ஐயாவை பாத்துக்கொண்டு வாறன். அம்மாடி யாதவி நீ எல்லாருக்கும் உடுப்பு எடுக்கிற வேலைகளை பார். பிரபாவதி, பலகார வேல உன்ர பொறுப்பு. பிரவன், பெரிய கோலாகலம் எல்லாம் வேண்டாமப்பு. இண்டைக்கே எங்கட சொந்தங்களுக்கு மட்டும் நானும் நீயுமா போய் கூப்பிடுவோம். சரியோ?” என்றவர், சஞ்சயனையும் விட்டுவைக்கவில்லை. “தம்பி, மோட்டச் சைக்கிளை எடு! ஐயா வீட்டுக்கு போகமுதல் கோயில்ல வச்சுப் பிடிக்கவேணும்.” என்று அவனை விரட்டினார்.
அந்தத் திருமணத்தை நடத்திவிட அவர் எவ்வளவு ஆவலாயிருக்கிறார் என்று புரிந்ததில் பாத்திருந்த எல்லோர் முகத்திலும் புன்னகை. அவரின் உற்சாகம் அவர்களையும் தொற்றியது.