அவள் போய் இரண்டு நாட்களாயிற்று. பாழடைந்து கிடந்த அவனுடைய அறை அவனுக்கே பிடிக்காமல் போயிற்று! வீட்டுக்கு வரவே விருப்பமில்லை. எப்போதும் கசிந்த கண்ணீரைச் சேலைத்தலைப்பால் துடைக்கிற அம்மம்மா, சஹானாவோடான நினைவுகளை மீட்டுக்கொண்டே இருக்கும் சஞ்சனா, எப்போதும் இல்லாத வகையில் அமைதியாகவே இருக்கும் அம்மா, அவ்வப்போது ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிடுகிற அப்பா என்று எல்லோருமே அவனுக்கு அவளைத்தான் நினைவூட்டிக் கொண்டிருந்தனர்.
ஊர்ச் சேவைக்காகத் தோள் கொடுக்கும் அகிலன் தொடங்கி, “சஹி போனதுதான் போனாள். நீ இந்தப் பக்கம் வாறதே இல்லை.” என்று செல்லமாகக் கோபித்துக்கொள்ளும் ராகவி முதல், காலையில் பல்கலைக்கழகம் புறப்படுகையில் கண்டால், “சாப்பிட்டுப் போ சஞ்சு!” என்று வலியுறுத்திவிட்டுப் போகும் அரவிந்தன் வரை எல்லோருமே அவளின் நினைவுகளைத் தாங்கிக்கொண்டுதான் அவனின் முன்னால் வந்து நிற்கின்றனர்.
கொஞ்ச நேரமாவது அவளை மறந்துவிட்டு வேலைகளைப் பார்ப்போம் என்றால், புதிதாகத் திருமணமானவன் என்பதில் போகிற இடமெங்கும், “வைஃப் எப்பிடி இருக்கிறா?”, “எப்ப திரும்பி வருவா?” என்கிற கேள்விகள்.
‘யாருக்குத் தெரியும்?’ என்று கத்தவேண்டும் போலிருந்தது. போனவள் அழைத்து ஒரு வார்த்தை பேசினாளா? அன்றைக்கு மட்டும் அறைக்கு வந்தாள். அவ்வளவுதான் மனைவியாக அவள் அவனுக்குத் தந்த ஒரே ஆறுதல். சில நேரங்களில் அவள் சஞ்சனாவோடு கதைப்பது கேட்கும். அந்தக் குரலே அவனுக்குள் நுழைந்து உயிரையே என்னென்னவோ செய்யும். அவளைப் பார்த்துவிட அவளோடு ஒருவார்த்தை கதைத்துவிட மனம் ஏங்கும். ஆனாலும், ஒருவித வீம்புடன் அவளின் கண்ணில் படாமலேயே இருக்கிறான்.
‘என்னைத் தேடி எடுக்கவே இல்லையே’ என்று கவலைப்பட்டு, ‘எனக்கு எடுப்பாளா?’ என்று ஏங்கி, ‘எடுப்பாள்’ என்று நம்பி, ‘எடுக்கவேணும்!’ என்கிற பிடிவாதத்தோடு அவனுடைய நாட்கள் நகர்ந்துகொண்டு இருந்தது. அவனது பிரசன்னம் இல்லாத இந்த நாட்கள் அவளுக்குள் அவனுடைய நினைவுகளைத் தூண்டிவிடவும் கூடும் என்று நம்பினான்.
அன்றொருநாள் அவர்களின் வீட்டுக்கு வந்த அகிலன் தான், “என்னவாம் அண்ணா உங்கட மனுசி?” என்றான் அவனைச் சீண்டும் சிரிப்புடன்.
“அத நீதான் சொல்லோணும்!” கண்ணுக்கு எட்டாத முறுவலுடன் சொன்னான் சஞ்சயன்.
அகிலனின் கண்களில் குழப்பம். “உங்களுக்கு எடுக்கிறேல்லையா அண்ணா?” என்றவன் வேகமாகக் கேள்வியை மாற்றிக் கேட்டான். “போனதுக்கு எப்பவாவது எடுத்தவளா?”
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லப் பிடிக்கவில்லை சஞ்சயனுக்கு. ‘நீதான் என் உலகமாக மாறிப்போனாய்’ என்று அவன் நினைக்கிற அவளின் உலகில் அவன் துரும்பாகக் கூட இல்லை என்பதை எப்படிச் சொல்லுவான்? இதெல்லாம் மனதின் தேடல்கள், எதிர்பார்ப்புகள், தவிப்புகள். அதை இணையிடம் மட்டும் தானே பகிரமுடியும்? தன்னை நாயகனாகப் பார்க்கும் சின்னவனிடம் தன் நிலை கீழிறங்குவது பிடிக்காமல், “இத நீ அவளிட்டயே கேளு!” என்றுவிட்டு எழுந்துபோனான்.
சஞ்சனா அகிலன் இருவரின் முகத்திலும் மெல்லிய அதிர்ச்சி. அவர்களும் கவனிக்கவில்லையே. சஞ்சனாவுக்கு அண்ணாவின் வாடிக்கிடந்த முகத்தைக் கண்டு அழுகையே வந்துவிடும் போலாயிற்று. ஆத்திரத்துடன் சஹானாவுக்கு அழைப்பை எடுத்து, “நீ எல்லாம் என்ன ஆளடி? அண்ணாக்கு எடுத்து கதைக்க மாட்டியா? பிறகு என்னத்துக்குக் கல்யாணம் கட்டினாய்? அவரை வதைக்கவோ?” என்று கடிகடி என்று கடித்துவிட்டு பட்டென்று அழைப்பைத் துண்டித்துவிட்டிருந்தாள்.
சஹானா திரும்பத் திரும்ப அழைக்கச் சஞ்சனா ஏற்கவே இல்லை. உடனே அவள் அகிலனுக்கு எடுக்க, “என்னட்ட தரவேண்டாம். நான் கதைக்க மாட்டன்! என்ர அண்ணா வேணாம் எண்டா நானும் அவளுக்கு வேண்டாம்!” என்று சீறியவளை, ‘பேசாமல் இரு!’ என்று பார்வையால் அதட்டிவிட்டு, அழைப்பை ஏற்றபடி விலகி நடந்தான் அகிலன். அவனுக்கும் கோபமே. ஆனால், சஞ்சனாவைப்போல் திட்டாமல், நீ செய்வது சரியா என்று யோசி என்று மெதுவாகப் புத்திமதி சொன்னான்.
அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்தார் சிவானந்தன். கைகால் முகம் அலம்பிக்கொண்டு வந்து, “சாப்பாட்டைப் போடு பிள்ளை!” என்றார் பசிக்களையோடு.
வயலில் களை எடுத்துக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு என்று பார்த்து வெயில் அடித்துக் கொளுத்தியது. மேற்பார்வை தான் பார்த்தார். வேலை செய்யச் சஞ்சயன் விடுவதே இல்லை. அதற்கே அகோரப் பசி பசித்தது.
சஞ்சனாவுக்கு இருந்த சினத்துக்கு, ‘இது எல்லாம் அம்மாவால்’ என்கிற எண்ணம் தலைக்கு அடிக்க, அவரின் முன்னால் வந்து நின்று, “எழும்புங்க அம்மா. அப்பாக்குச் சாப்பாட்டை போட்டுக் குடுங்க. அத்தைய பாத்தீங்க தானே மாமாவை எப்பிடி கவனிக்கிறா எண்டு. நீங்களும் அப்பிடி செய்ங்க. எழும்புங்க!” எதைப்பற்றியும் யோசிக்காமல் படபடத்துவிட்டுப் போனாள் சஞ்சனா.
இதை எதிர்பாராத பிரபாவதி திகைத்து, முற்றத்தில் அமர்ந்திருந்த கணவரைப் பார்த்தார். மனைவியை உணர்வுகள் அற்று வெறித்தார் சிவானந்தன். இதைவிடவுமா பெற்ற மகளிடம் சிறுமைப்பட்டு நிற்க முடியும்? பேசாமல் எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.
சாப்பிடாமல் போறாரே.. சாப்பிட்டா தானே மருந்து(மாத்திரை) போடலாம்.’ திரும்பவும் அவருக்கு ஏதும் ஆகிவிடுமோ என்கிற நினைப்பே பிரபாவதிக்கு நடுக்கத்தை உண்டாக்கியது. ஆனால், கூடவே பிறந்திருந்த வீம்புக்குணம் அப்போதும் அசையவிடவில்லை. புதுசா நான் ஏன் போட்டுக் குடுக்கோணும்? இவளவு நாளும் நானா செய்தனான்? என்னவோ சாப்பிட வேண்டாம் எண்டு சொன்ன மாதிரி போறார். போகட்டும்! எனக்கென்ன? என்று அமர்ந்திருந்தார்.
தகப்பனின் வண்டி புறப்படும் சத்தம் கேட்டு ஓடிவந்து எட்டிப் பார்த்தாள் சஞ்சனா. அவரும் இல்லை வண்டியும் இல்லை என்றதும் வந்ததே ஒரு கோபம்.
“ஒரு சாப்பாடு போட்டுக்குடுக்க ஏலாதா உங்களுக்கு? நீங்க மட்டும் இருந்த இடத்திலேயே இருந்து நல்லா சாப்பிடுவீங்க. ஆனா அவரைக் கவனிக்க மாட்டீங்க. உங்கட குணத்துக்கு அப்பா உங்களை விட்டுட்டுப் போயிருக்க வேணும்!”
நடுங்கிப்போனார் பிரபாவதி. “ஏய்! என்னடி கதைக்கிறாய்? கிழட்டு கதை கதைச்சாய் எண்டு வை! செவிட்டிலேயே போட்டு விட்டுடுவன்!” என்று கையை ஓங்கிக்கொண்டு வர சஞ்சனா அசையவே இல்லை.
“அடிங்க! ஏன் நிக்கிறீங்க? நல்லா அடிங்க. இது மட்டும் தானே உங்களுக்குத் தெரியும். எப்ப பாத்தாலும் அப்பாவோட சண்டையைப் பிடிக்கிறது. அவரைப் பிழையா எங்களிட்ட சொல்லி அழுகிறது. அண்ணா அப்பாவை வெறுக்க காரணமே நீங்கதான். அண்ணா இப்பிடியெல்லாம் நடக்கிறதுக்குக் காரணமும் நீங்கதான். உங்களால தான் எங்களுக்குக் காலியாண வாழ்க்கையே வெறுத்துப் போனது. இனியும் நீங்க ஒழுங்கா இருக்கேல்லையோ நான் எங்கயாவது போய்த் துலைஞ்சிடுவன். சொல்லிப்போட்டன்!” என்று வாயில் வந்ததை எல்லாம் பொரிந்துவிட்டுத் திரும்பியவளுக்கு, அங்கே ஆட்டுக்குக் குலைகள் வெட்டிக்கொண்டு வந்த தெய்வானை திகைத்துப்போய் நிற்பதைக் கண்டதும் அழுகை வந்தது.