தன் வீட்டுக்கு வந்து, அங்கு உறங்க அறைக்குப் போயிருப்பான் என்று கணித்து அழைத்தாள். இந்த இடைவெளிக்குள் எடுக்காமல் விட்டுவிட்டோமே என்று தவித்துப் போயிருந்தவன் அழைப்பை ஏற்றான்.
இருவருக்கும் எப்படி ஆரம்பிப்பது என்கிற திணறல். இருவரும் அடுத்தவரின் இணைப்பில் இருக்கிறோம் என்கிற எண்ணத்திலேயே அகப்பட்டிருந்தனர். சஞ்சயன் நெருக்கமாக உணர சஹானா அந்தரமாக உணர்ந்தாள். அதைவிட அவள் வீடியோகோலை தவிர்த்திருந்தாள். ‘முகம் காட்டமாட்டாளாமா?’ பிடிவாதக் கோபத்தோடு வீடியோ பட்டனை அழுத்தினான் சஞ்சயன்.
முதலில் தயங்கிப் பின் ஏற்றாள் சஹானா.
இருவரின் விழிகளும் திரையில் கவ்விக்கொள்ளச் சஞ்சயனுக்குச் சற்றுநேரம் பேச்சே வரவில்லை. ஒரு பைஜாமா செட்டில் உச்சிக் கொண்டையோடு இருந்தவளின் தோற்றம் இவனுக்குள் என்னென்னவோ உணர்வுகளைத் தூண்டியது. கழுத்தில் கிடந்த மெல்லிய செயினைப் பதட்டத்தோடு அவள் வருடிக்கொடுத்ததும் இவனை மயங்கச் செய்தது. நொடியும் உன்னைப் பிரிய முடியாமல் மெழுகாகக் கரைந்துகொண்டிருக்கிறேனடி சஹி என்று வாய்விட்டுச் சொல்லத் தெரியாமல் அவளையே பார்த்திருந்தான்.
“முதலும் எடுத்தனான்.” தயக்கத்துடன் ஆரம்பித்தாள் சஹானா.
“ம்.. கொஞ்சம் வேல..”
“இப்ப ஃபிரியா?”
“ம்..”
இனி என்ன பேசுவது?
“சாப்பிட்டீங்களா?”
“அது முடிஞ்சுது.”
அழைப்பை அவள்தான் ஏற்படுத்தினாள் என்பதாலேயே அவளே பேச்சுக்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததாள் சஹானா. மனதின் தாகம் தீர இன்னும் அவளைப் பார்த்து முடித்திராத சஞ்சயன் கேள்விக்கு மட்டும் சுருக்கமாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
வேறு என்ன கதைப்பது? “நான் வைக்கவா?” என்றாள்.
அப்போதுதான் அவன் விழித்துக்கொண்டான். “ஏன் இவ்வளவு நாளும் எடுக்கேல்ல?”
அவளிடம் பதில் இல்லாத கேள்வி. சஹானா ஒன்றும் சொல்லாமல் பார்வையை வேறு எங்கோ அலையவிட்டாள்.
“என்னைப் பார் சஹி!” அவனின் அதட்டலில் வேகமாகத் திரும்பி அவனைப் பார்த்தாள்.
“என்னோட கதைக்கேக்க என்னை மட்டும் பாத்துக் கதை!”
“ம்..” இவன் சாதாரணமாகவே பேசமாட்டானா?
“அறைக்கு வந்து போயிட்டு வாறன் எண்டு சொல்லிப்போட்டுப் போனவளுக்கு நல்லபடியா போய் சேர்ந்திட்டன் எண்டு சொல்லவேணும் எண்டுறது தெரியாதா?” அவனின் மனக்குறையை அவளிடம் கொட்டினான்.
“இல்ல.. அது அகில்தான் சொன்னவன்..” சிந்திக்காமல் வாயை விட்டாள் சஹானா.
“என்ன சொன்னவன்?” அவன் புருவங்கள் சுருங்கிற்று!
“போயிட்டு வாறன் எண்டு உங்களிட்ட சொல்லச் சொல்லி!”
அவன் சொல்லித்தான் இவள் வந்தாளா? அவளையே வெறித்தான் சஞ்சயன். வார்த்தைகள் எதுவும் வரமறுத்தது. இதற்கு அவள் அழைக்காமல் இருந்திருக்கலாம். அந்த ஒற்றை நாளில் தான் அவளோடு வாழ்ந்தான். அந்த ஒற்றை நாளை நினைத்துக்கொண்டு தான் இத்தனை நாட்களையும் வாழ்ந்தான். இனி அந்த நாளைக்கூட நினைத்து ஆறமுடியாமல் செய்துவிட்டாளே!
“இண்டைக்கும் அவனா சொன்னவன்?” அவனுடைய கூர் புத்தி காலையில் அகிலன் கேட்டதையும் இப்போது அவள் பேசுவதையும் முடிச்சிட்டது.
என்னவோ தவறாகச் சொல்லிவிட்டோம் என்று அவன் முகம் உணர்த்த, அது என்ன என்று பிடிபடாததில் தடுமாறி, “ஓம்.. அது..” என்று அவள் உளறும்போதே அழைப்பைத் துண்டித்திருந்தான் சஞ்சயன்.
அவனால் அந்த அறைக்குள் இருக்கவே முடியவில்லை. இந்த அறைக்குள் தானே என் கைகளுக்குள் கரைந்தாள் என்று நினைவினில் அந்த நொடிகளை எத்தனை முறை திரும்பத் திரும்ப வாழ்ந்திருப்பான். அந்த நொடிகள் தானே அவனை இன்றுவரை சுவாசிக்க வைத்துக்கொண்டு இருப்பதும். இப்போது அதையெண்ணி மனம் கிடந்து புழுங்கியது! கையை ஓங்கிச் சுவரில் குத்தினான். என்ன வாழ்க்கையடா இது! அவன் இவனைக் கவனித்து என்ன செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுத்து அனுப்பி அதை வந்து இவள் செய்து.. ச்சேய்! அந்தளவுக்கா இவளுக்காக அலைகிறோம்? அன்றைய உறக்கமே அவனுக்குத் தொலைந்து போனது!
சஹானாவுக்கோ பேசிக்கொண்டு இருக்கையிலேயே அவன் துண்டித்ததில் முகம் சுருங்கிப் போயிற்று. அவன் தன்னை அவமானப்படுத்திவிட்டதாக உணர்ந்தாள். அப்படி என்ன செய்தோம் என்று எவ்வளவு யோசித்தும் பிடிபடவில்லை. எல்லாம் இந்த நித்திலானால் வந்தது. சினத்துடன் அவனுக்கு அழைத்தாள்.
“என்னவாம் உன்ர ஆள்?”
“கையில கிடைச்சியோ உன்ன கொல்லுவனடா!” அவன் மீதிருந்த கோபத்தை இவனிடம் காட்டினாள்.
“ஆறுதலா கொல்லு. இப்ப நடந்தத சொல்லு!” கூலாக வினவினான் அவன்.
அன்றும் இன்றும் அகிலன் சொல்லி தான் செய்ததை அவள் சொல்லச் சொல்ல ம் கொட்டிக் கொட்டிக் கேட்ட நித்திலனுக்குச் சிரிப்பை அடக்குவது பெரும் பாடாயிற்று.
“அவருக்கு ஆகத்தான் திமிர்! கதைச்சுக்கொண்டு இருக்கேக்க கட் பண்ணுறார். இனி நான் எடுக்க மாட்டன் பார்!” என்று சீறினாள் சஹானா.
“சரி! இனி நீ எடுக்காத!” என்றான் அவனும்.
“என்னடா?”
“அதுதான், கதைச்சுக்கொண்டு இருக்கேக்க கட் பண்ணினவன் எல்லா. அதால நீ எடுக்காத!” சொல்லிவிட்டு வைத்தவனுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
‘டேய் சஞ்சயா நீ பாவமடா! எண்டாலும் உனக்கு இது வேணும். என்ர குடும்பத்தையே அடைச்சு வச்சனி(வைத்தாய்) தானே.’ நித்திலனுக்குள் மெல்லிய சந்தோசம் சிரிப்புடன் பூத்தது.