சஞ்சயன் புறப்படுவதற்கான அத்தனை ஆயத்தங்களும் முடிந்திருந்தது. விசாவும் சரி வந்திருந்தது. பயணத்துக்கான நாளைக்குறித்து டிக்கட் போடுவது மாத்திரமே எஞ்சி இருந்தது.
அவளைப் பார்க்கப்போகிறோம், அவளோடு நாட்களைக் கழிக்கப்போகிறோம் என்பது மனதுக்கு இரகசியச் சந்தோசத்தைத் தந்தாலும் அவள் அங்கே சாதாரணமாக இருக்கத் தான் மட்டும் அவளின் நினைவில் வாடித் தேடிப் போகிறோமே என்பது மனத்தைக் குடைந்துகொண்டே இருந்தது. இதில், அவனுடைய பயணத்துக்கான அத்தனை காரியங்களையும் முழுமூச்சாக நின்று செய்வித்த அம்மம்மா நாள் நெருங்கிவிட்டதில் கசியும் விழிகளைத் துடைத்தபடி நடமாடியது வேறு அவனை வாட்டியது.
கடைசிக் காலத்தில் பேத்தியையும் பக்கத்திலேயே வைத்துக்கொள்வோம் என்று ஆசைப்பட்டுத்தான் திருமணத்தை விரைந்து நடத்தினார். இப்போதானால், பேத்தியைப் பார்க்கப் போகிற பேரனும் அந்த ஊர் பிடித்து அங்கேயே இருப்பதாகச் சொல்லிவிடுவானோ என்று நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் வழிந்தது அவருக்கு.
மூன்று மாதங்களுக்கு மட்டும்தான். திரும்பி வந்துவிடுவான். அவனால் அங்கு இருக்க முடியாது என்பதெல்லாம் நன்றாகவே புரிந்திருந்தாலும், நின்றுவிடுவானோ வராமல் இருந்துவிடுவானோ என்று தோன்றுகிற பயத்தைத் தடுக்கவே முடியவில்லை. இப்படித்தானே மகனும் போனான். கொஞ்சக் காலத்தில் திரும்பி வந்துவிடுவதாக நினைத்ததாகச் சொன்னானே. வரமுடிந்ததா என்ன? வெளிநாட்டுக்குப் போன யார்தான் திரும்பி வந்திருக்கிறார்கள்?
இல்லை! நான் இப்படி நினைக்கக் கூடாது! எங்கட வாழ்க்கை முடிஞ்சு போச்சு. இளம் குருத்துகள் தங்களுக்குப் பிடிச்சமாதிரி வாழட்டும், தடுக்கக்கூடாது என்று தன்னைத் தானே தேற்ற முயன்றுகொண்டிருந்தார் அவர். ‘எனக்காவது மகள், மருமகன், இன்னொரு பேத்தி இருக்கு. இங்க எத்தனை தாய்மார் பிள்ளைகள் நல்லாருக்கோணும் எண்டு எல்லாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பிப்போட்டு அனாதைகளா நிக்குதுகள்.’ என்று தன்னைத் தேற்றிக்கொள்ள முயன்றார்.
சஞ்சயனும் தன் நிம்மதியை இழந்திருந்தான். அவளைப் பார்க்காமலும் இருக்க முடியாமல் குடும்பத்தைப் பிரியவும் முடியாமல் ஏன் இந்தக் காதல் அவனுக்குள் வந்தது? ஏன் அவனைப் போட்டு நெருப்பாக எரிக்கிறது? உயிராக நேசிக்கும் அவனுடைய உலகத்திலிருந்து அவனைப் பிரிக்கும் வல்லமை கொண்ட நேசமாக அது ஏன் அவனுக்குள் வளர்ந்தது? கடைசி நொடியில் போகவா வேண்டாமா என்று இரு மனம் கிடந்து அடிக்க, “போயிட்டு வரட்டாப்பா?” என்றான் தகப்பனிடம்.
என்றுமில்லாமல் தன்னிடம் பிரச்சனையைக் கொண்டுவந்த மகனைத் திகைப்புடன் நோக்கினார் சிவானந்தன். இதில் அப்பா என்று வேறு சொல்கிறானே. என்னவோ தொண்டைக்குள் அடைத்துக்கொண்டது. புதிதாக மகன் பிறந்து மார்பில் உதைக்கும் சுகத்தில் அவரின் விழிகள் தளும்பப் பார்த்தது. இதுநாள்வரையில் அந்த வீட்டிலேயே வாழ்ந்தாலும் அங்கிருப்பவர்களுக்கு அவர் மூன்றாம் மனிதர். அப்படித்தான் நடத்தினார்கள். அப்படித்தான் அவரும் நடந்துகொண்டார். இன்றோ என் வீட்டு மனிதன் என்கிறான் மகன். திடீரென்று அதற்கேற்றாற்போல் மாறிக்கொள்ள முடியாமல், “உன்ர விருப்பம் போலச் செய்!” என்றுவிட்டுப் போனார் அவர்.
அவனின் விருப்பமா? அது அவளை நோக்கித்தான் அவனை இழுத்துக்கொண்டிருக்கிறது. கசந்த சிரிப்பு ஒன்று உதட்டோரம் பிறந்து மடிந்தது.
“இதுக்குத்தான் அந்தக் கூட்டத்தின்ர சங்காத்தமே வேண்டாம் எண்டு தலையால அடிச்சனான். கேட்டீங்களா? இப்ப பாத்தீங்கதானே தாய்க்காரி மாதிரி மகளும் என்ர மகனைப் பிரிக்கப்பாக்கிறாள். இனி நானும் உங்களை மாதிரி மகன் எங்கயோ நான் எங்கயோ எண்டு வாழ வேணுமே?” என்று கத்தித் தீர்த்தார் பிரபாவதி. “எங்க இருந்துதான் வாறாளவையோ தெரியாது. கண்ணில படுற ஆம்பிளைகளை எல்லாம் சுருட்டி முடியிறாளவே!” மகனின் பிரிவு அவரையும் போட்டு வதைத்தது.
சஹானா இல்லாமல் வாழவும் முடியாமல் அவர்களைப் பிரிந்து போகவும் முடியாமல் தமையன் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடிப்பதை சஞ்சனாவால் பார்க்க முடியவில்லை. “நீங்க போங்கோ அண்ணா. தூர இருந்தாப்போல நீங்க எங்களுக்கு இல்லை எண்டு ஆகிடுமா என்ன? திரும்பவும் ஒரு சண்டை, பிரிவு, மனக்கசப்பு வேண்டாம் அண்ணா.” என்றாள் கண்ணீரோடு.
அவளைத் தோளோடு சாய்த்து வருடிக்கொடுத்தவனுக்கும் வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை.
இந்தப் பயணம் சஞ்சயனுக்கு பிரதாபனை இன்னுமே விளங்கிக்கொள்ள ஏதுவாயிற்று. குடும்பங்களை நேசிக்கிற எந்த ஆணாலும் அந்தக் குடும்பத்தை விட்டு வெளியேற முடியாது. அப்படியும் அவன் போகிறான் என்றால் அந்த முடிவை எடுப்பதற்குள் தனக்குள் எத்தனை முறை துடித்துப் போயிருப்பான் என்று இன்று புரிந்தது. எனவே புறப்பட முதலே அவரிடம் மனதார மன்னிப்பை வேண்டிக்கொண்டான்.
யாதவிக்கு அவனைப் புரிந்தது. எனவே, “சஞ்சு! அதெல்லாம் முடிஞ்ச கதை. ஒரு மூண்டு மாதம் தான். டூர் எண்டு நினைச்சுக்கொண்டு வா. வந்து அவளோட முதல் பழகு. அவளுக்கு உன்னை விளங்கவை. நீயும் அவளை விளங்கிக்கொள்ளு. பிறகு நீ கூப்பிடாமலேயே அவள் வருவாள். அதுதான் சஹானா. பாசம் வச்ச மனுசர் துளியளவு துன்பப்பட்டாலும் தாங்கமாட்டாள்.” என்று, விரக்தியின் எல்லையில் நின்றவனைத் தன் வார்த்தைகளால் நிலைப்படுத்தியது யாதவிதான்.
அதன் பிறகுதான் தெளிந்தான் சஞ்சயன். மூன்று மாதத்தில் வந்துவிடுவோம் தானே என்கிற நினைப்பு அவனைத் தேற்றியது.
இப்போதெல்லாம் அப்பாக்களுக்கு ஓய்வைக் கொடுத்துவிட்டு அவர்களின் நிறுவனத்தை நித்திலனும் சஹானாவும் கவனித்துக்கொள்ள ஆரம்பித்து இருந்தனர். தொழில் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாதபோதும் படித்துப் பட்டம் பெற்ற பிள்ளைகள் தானே. பெற்றவர்களின் வழிகாட்டலில் இயங்கிக்கொண்டு இருந்தனர்.
அன்று, வேலை முடிந்து வீடு வந்த சஹானா, அவர்களின் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்த சஞ்சயனைக் கண்டு அப்படியே நின்றுவிட்டாள். வந்துவிட்டானா இவன்? நம்பவே முடியாமல் விழிகளை விரித்தாள். வார்த்தைகளில் விவரிக்க முடியாத இன்பப் படபடப்புத் தொற்றிக்கொண்டது. அவன் வரப்போகிறானாம் என்று தெரியும். தனக்காகத் தன்னைத் தேடி வருகிறானாம் என்கிற எண்ணம் கொடுத்த இனம் புரியாத ரகசியச் சந்தோசத்தைச் சுமந்துகொண்டு திரிந்தவளுக்குத் திடீர் என்று அவனை வீட்டில் கண்டதும் ஆனந்த அதிர்ச்சி தாக்கிற்று.
அப்போதுதான், ‘இன்று மாமாவோடு ஒரு டீலரைச் சந்திக்கப் போகிறேன். அலுவலகம் வரமுடியாது.’ என்று நித்திலன் சொன்னது நினைவில் வந்தது.
அகிலன் கூட ஒரு வார்த்தை சொல்லவே இல்லையே! நெருப்புப் பார்வையை நித்திலனின் மீது வீச, அவனோ, உதட்டோரச் சிரிப்புடன், ‘எப்படி?’ என்று சஞ்சயனைப் புருவங்களால் காட்டிக் கேட்டான்.
‘இவன…’ கையில் இருந்த ஹாண்ட் பாக்கை ஒரே எறியாக அவன் மீதே எறிந்தாள். “எரும! ஏனடா முதலே சொல்லேல்ல!” கைகளாலும் அவனுக்கு மொத்தியவள், சஞ்சயனும் தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்கிற எண்ணம் தந்த கூச்சத்தில் அடிப்பதை நிறுத்திவிட்டு நித்திலனை இடித்துக்கொண்டு அமர்ந்தாள். காரணமற்று முகம் சூடாயிற்று.
“நீங்க வாறீங்க எண்டு எனக்குத் தெரியாது. இவன் சொல்லேல்ல.” தவறு செய்துவிட்டவள் போன்று விளக்கம் சொன்னாள் சஹானா.
“ஆஹா!” என்றான் நித்திலன். பிரதாபன் சிரிக்க, “அப்பா! நீங்களும் சொல்லேல்ல எனக்கு!” என்றவளுக்கு, அங்கிருந்த அன்னை, ரட்ணம் மாமா, மாமி எல்லோர் மீதும் கோபம் வந்தது.
“எல்லாரும் கள்ளர் கூட்டம். சொல்லவே இல்ல!”
“இப்ப தானம்மா கூட்டிக்கொண்டு வந்தனாங்க.” என்ற பிரதாபனின் குரலை மீறிக்கொண்டு, “சொல்லியிருந்தா?” என்று வேண்டுமென்றே கேட்டான் நித்திலன்.