“நாளைக்குத் திரும்ப இவன இங்க கூட்டிக்கொண்டு வந்தா எடுத்துக்கொண்டு வருவான். மாதத்தில ஒருநாள் இந்தக் கூத்து நடக்கும். ஒருநாளைக்குப் பாருங்கோ மாமாட்ட போட்டு குடுக்கிறனா இல்லையா எண்டு. இவனால அப்பாக்கு நான் பொய் சொல்லுறது!” என்றவளின் திட்டுக்களை அவன் செவியில் வாங்கவே இல்லை.
“சஹி! உன்ர மச்சான் முழுப் பழமா இருக்கிறான்டி. ஒரு இது இல்ல. இதுவும் இல்ல.” மது அருந்துவதும் புகைப்பதும் போல் செய்கையில் காட்டிச் சொன்னான் நித்திலன்.
“அவரை என்ன உன்னை மாதிரி உதவாக்கரை எண்டு நினைச்சியோ? அவர் அப்பிடித்தான் நல்லவர்.” சினத்துடன் சீறினாள் சஹானா.
“அஹா!” கோணல் சிரிப்புடன் ராகமிழுத்தான் நித்திலன். “புருசனுக்கு வக்காலத்து! அவன் உன்ன நிறையத் திட்டியிருக்கிறான், நோகடிச்சிருக்கிறான். மறந்திடாத!” என்று நினைவூட்டினான் அவன்.
“அத நீ சொல்லாத! குடிகாரா! உன்ர வயசுதான் அவருக்கும். ஊர்ல வந்து பார் எத்தனை பேருக்கு எவ்வளவு செய்திருக்கிறார் எண்டு. ஆனா நீ.. இனியாவது அவரைப் பாத்து திருந்தடா!” என்றவளின் பேச்சில் இனிமையாக அதிர்ந்தான் சஞ்சயன்.
“ஊர்ல அத்தனை பேருக்கு அவ்வளவு செய்தவன்தான் என்னையும் அம்மா அப்பாவையும் அடைச்சு வச்சவன். அவனைப் பாத்து நான் ஏனடி திருந்தோணும்? அவனைத் திருந்தச் சொல்லு. என்னை மாதிரி வாழ்க்கையை அனுபவிக்கச் சொல்லு!”
சஞ்சயனுக்குத் திக் என்றது. மறந்திருக்கிறவள் திரும்பவும் மலையேறிவிடப்போகிறாளே என்று அவளைக் கவனித்தான்.
“உன்ன மாதிரியோ? அவர் மாறவே வேண்டாம். எனக்கு இப்பிடி இருக்கிறவரைத்தான் பிடிச்சிருக்கு!” அவனுக்குப் பதில் கொடுக்கும் வேகத்தில் தன் மனதை உரைத்துக்கொண்டிருக்கிறாள் என்பதைக் கவனிக்கவே இல்லை சஹானா. சஞ்சயனோ, அந்த நாட்டின் பனி பொழியாமலேயே நனைந்துகொண்டிருந்தான்.
அவர்களின் வீட்டுக்கு வந்ததும் சஹானா தன்னிடம் இருந்த திறப்பினாலேயே திறந்தாள். “படம் ஏதும் பாப்பமா?” என்றவனை, “ஒண்டும் வேண்டாம் நீ படு! நேரமாச்சு.” என்று அழைத்துப்போய்க் கட்டிலில் போட்டான் சஞ்சயன். அவனை நிமிர விடாமல் பிடித்துக்கொண்டான் நித்திலன். அவன் கட்டிலில் குறுக்காக மல்லாந்து படுத்திருக்க இவன் அவன் மீது குனிந்தபடி இருந்தான். நிமிர விடவில்லை நித்திலன். ஆணும் பெண்ணுமாய் இருந்திருக்க இந்தக் காட்சியின் பொருளே வேறாகியிருக்கும் என்று சஞ்சயன் நினைக்கையிலேயே, “ஐ லவ் யுடா மச்சான்!” என்றான் நித்திலன்.
தான் நினைத்ததற்கும் அவன் சொன்னதற்கும் இருந்த ஒற்றுமையில் சத்தமில்லாமல் நகைத்தான் சஞ்சயன். “சரி படு!” என்று அவன் எழ, “உண்மையாவே லவ் யூடா!” என்றான் அவன். “உன்ன கன்னம் கன்னமா வெளுக்கிற கோபம் இருந்தது எனக்கு. எவ்வளவு தைரியம் இருந்தா என்ர அம்மா அப்பாவை அடைச்சு வச்சிருப்பாய். ஆனா நீ சஹிக்கு நல்ல புருசனா இருப்பாய் எண்டுற நம்பிக்கை வந்திட்டுது. அதால நான் உனக்கு லவ் யூ!” என்று உளறினான் அவன்.
‘இத அவள் சொல்லோணுமடா’ என்று நினைத்தாலும் இன்று அவனின் கோபத்தையும் புரிந்துகொண்டான். மனம் இலகுவாயிற்று. “சரி படு! நாளைக்குப் பாப்பம்.” என்றுவிட்டு விளக்கை அணைத்து அறைக்கதவைச் சத்தமில்லாமல் சாற்றிவிட்டு வந்தான்.
“தடியன் படுத்திட்டானா?”
“ம்ம்..”
நாளை புது மாதம் தொடங்குவதில் அவர்களின் வெற்றிக்கோப்பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் சஹானா.
சஞ்சயன் கேள்வியாகப் பார்க்க அதன் சரித்திரத்தை அவனுடனும் பகிர்ந்துகொண்டாள். கேட்டவனுக்கு அவர்கள் ஒருவர் மீது மற்றவர் கொண்டிருக்கும் பற்றும் பாசமும் புரிந்தாற்போல் இருந்தது.
“இதைப் பாத்திட்டு ஓவர் குடிகாரன் எண்டு நினைச்சிடாதீங்கோ. மாதத்தில ஒருநாள். நெருங்கின பிரண்ட்ஸ்க்கு பிறந்தநாள் எண்டால் மட்டும் தான்.”
அவனைத் தான் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதால் சொல்கிறாள் என்று புரிந்தது. “ம்ம்” என்றான் அவன் வேறு பேசாமல்.
“குடிக்கிறது கொஞ்சம். ஆனா நிறைய அலட்டுவான்.” என்றாள் நித்திலனை எண்ணிச் சிரித்தபடி.
அதனால்தான் அவன் மனதில் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது என்று எண்ணிக்கொண்டான் சஞ்சயன்.
வீட்டுக்கு வந்தபிறகுதான் இருவருக்குமே முதல்நாள் போட்ட சண்டை மீண்டும் நினைவு வந்தது. அமைதியாக உடைமாற்றிக்கொண்டு கட்டிலில் விழுந்தவளை நெருங்கி அணைத்துக்கொண்டான் அவன். சற்றுமுன் காருக்குள் வைத்து அவள் சொன்ன செய்தி மனதினில் இதம் பரப்பியதில் உடலும் உள்ளமும் அவளின் அருகாமையை நாடிற்று!
நேற்று முகத்தைத் திருப்பிக்கொண்டு படுத்துவிட்டு இன்று என்ன என்பதுபோல் பார்த்தாள் சஹானா. அதற்குப் பதில் சொல்லாமல் அவள் விழிகளில் முத்தமிட்டான் அவன். அப்போதும் அவள் அவனையே பார்க்க ஒரு சிரிப்புடன் கன்னக்கதுப்புகளில் தன் உதடுகளை அழுத்திப் பதித்தான். மீசை தீண்டி மேனி சிலிர்த்தபோதும் சிரிப்பை அடக்கியபடி இன்னும் அவனையே பார்க்க அவனும் குறும்புச் சிரிப்புடன் அவளின் இதழ் நோக்கிக் குனியவும் வேகமாகத் திரும்பி அவன் மார்புக்குள் தன் முகத்தை ஒளித்துக்கொண்டாள் அவள். மௌனச்சிரிப்பில் உடல் குலுங்க அவளைத் தனக்குள் வாகாக அணைத்துக்கொண்டது சஞ்சயனின் வலிய கரங்கள்.
நாட்கள் கடுகி விரைந்துகொண்டிருந்தன. தீர்வு காணப்படாமல் சண்டையில் முடிந்த விடயம் அப்படியே நின்றது. அதை ஆரம்பிக்க இருவருமே தயங்கினர். ஆனால், இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே கடத்துவது என்று சஞ்சயனுக்குப் புரியவே இல்லை.
அவன் ஹொலண்ட் வந்து ஒரு மாதமாயிற்று. போட்டிங் போனார்கள், சைக்கிள் ஓடினார்கள், இரு குடும்பமும் பார்க்கில் அமர்ந்து பார்பிகியூ போட்டு உண்டார்கள், டென்னிஸ் விளையாடினார்கள். தலைநகரான அம்ஸ்டர்டாம் போய்வந்தார்கள். என்ன செய்தாலும் ஒட்டாத மண்ணாகத் தனித்து நின்றான் சஞ்சயன்.
தூய்மை யாழ்ப்பாணம் தூய்மை ஆகாமலேயே இடையில் நின்றது. அவனுடைய இளவல்கள் அண்ணா இனி வரமாட்டீங்களா என்றார்கள். அகிலன் கூடத் தன்னை மீறி, ‘நீங்க இல்லாம விசரா இருக்கு அண்ணா.’ என்றான். சஞ்சனா கசியும் விழிகளைத் தமையனிடம் காட்டாமல் இருப்பதிலேயே காலத்தைக் கழித்தாள். தெய்வானை ஆச்சி பார்த்துக்கொண்டு இருக்கவே பாதியாகிக்கொண்டிருந்தார். பிரபாவதி கூட, “அம்மாவில் இருக்கிற கோபத்தாலையா தம்பி அங்கேயே போய்ட்டாய்?” என்றார் கண்ணீரோடு. சிவானந்தன் இவனோடு கதைப்பதில்லையே தவிர, இவன் பேசிக்கொண்டிருந்தால் அங்கேயேதான் இருப்பார். சாதாரணமாகப் பார்ப்பதுபோல் மகனைக் கண்ணுக்குள் நிரப்பிக்கொள்வார். நெஞ்சம் கனத்துக்கொண்டே போயிற்று அவனுக்கு. மனைவியா குடும்பமா என்று மனம் அல்லாடிக்கொண்டிருந்தது.