பிரபாவதி குறிப்பிட்ட வயதுவரை அப்பாவின் செல்ல மகள். அதன்பிறகு அன்னையின் பரிதாபத்துக்கும் பாசத்துக்கும் உரிய மகள். மகன் தலையெடுக்கத் தொடங்கியபிறகு அந்த மகனின் மிகுந்த அன்புக்குரிய அன்னை. அந்தப் பதவிதான் மற்றைய எல்லாவற்றையும் விட அவரின் தலையில் கிரீடம் ஏற்றியிருந்தது. அவனின் தைரியத்தில் தான் எதற்கும் அசைந்துகொடுக்காமல் நான் என்று வாழ்ந்தார். அந்த மகனே எங்கோ தொலைவுக்குப் போய்விட்டபோது பித்துப் பிடித்துப் போயிற்று. கூடவே, அவரிடமிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாகச் சத்தமே இல்லாமல் ஒதுங்கியபோதுதான் தனக்கு என்ன வேண்டும், தன் வாழ்வின் ஆதாரம் என்ன என்பது மெல்ல மெல்லப் புரியலாயிற்று. அதை உணர்ந்தபோதுதான் தமையனைப் பிரிந்து இத்தனை வருடங்களாகத் தன் தாய் அனுபவித்த துயரையும் உணர்ந்தார்.
இதையெல்லாம் வெளியே காட்டிக்கொள்ளவோ, அன்னையிடம் சொல்லி மன்னிப்புக் கேட்கவோ, அல்லது எல்லோருக்கும் நல்லவராக மாறி அனுசரணையாக நடக்கவோ பிறப்பிலிருந்தே வந்த ‘நான்’ என்கிற அந்தக்குணம் விடாதபோதும் மௌனமாகி நடப்பவற்றை ஏற்கின்ற அளவுக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டார். இப்போது, மகன் வருகிறான் என்றால் பின்னால் மருமகளும் வருவாள். அவளோடு கூடவே தமையனும் வருவார். அவர்களோடு உறவாட அரவிந்தன் குடும்பமும் வந்துபோகும். இதையெல்லாம் தவிர்க்க முடியாது. ஏற்று வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கு யோசித்தும் வைத்துக்கொண்டார்.
அவனைப் பார்த்தாலே போதும் என்று தவித்துக்கொண்டு இருந்தவர் வாசலில் கண்ட நொடியில், “தம்பி!” என்று ஓடிவந்து அணைத்துக்கொண்டார். அவரின் நடுங்கிய கரங்களும் கலங்கிவிட்ட விழிகளும் இறுகிய அணைப்புமே தன்னைப் பிரிந்து அன்னை அனுபவித்த துன்பத்தை அவனுக்கு உணர்த்திற்று!
சஞ்சனாவுக்குப் பேச்சே வரவில்லை. தமையனைக் கண்டதுமே ஓடிப்போய்க் கட்டிக்கொண்டு அழுதாள்.
சஞ்சயனும் வார்த்தைகள் வராமல் அவளின் தலையை வருடியபடி நின்றான். “அதுதான் வந்திட்டன் தானே. பிறகேன் அழுறாய்?” என்று தேற்றினான். சிவானந்தன் பெண்களைப்போலக் கண்ணீர் விடவில்லை, வாசலுக்கே ஓடிவந்து வரவேற்கவில்லை. ஆனால், அவனின் வரவுக்காக முற்றத்திலேயே நாற்காலியைப் போட்டுக்கொண்டு காத்திருந்தார். வந்தவனை விழியாகற்றாமல் தலைமுதல் கால்வரை பார்த்துக்கொண்டார்.
“பயணம் சுகமா இருந்ததா?” என்ற அவரின் விசாரிப்பில் மறைந்துகிடந்த பாசத்தை இன்றைக்குக் கண்டுகொண்டான் அவன். “உங்கட உடம்பு எப்பிடி இருக்கு? மருந்து மறக்காம போடுறீங்க தானே. நான் இல்லாம வேல கூட என்ன?” என்றான் வருத்தத்தோடு.
மகனின் பாசம் மிகுந்த இயல்பான விசாரிப்பில் பதில் சொல்லத் தடுமாறிப் பின் சமாளித்து, “எனக்கு என்ன? நல்லாத்தான் இருக்கிறன். களைச்சுப்போய் வந்திருக்கிறான். சாப்பாட்டைப் போட்டுக்குடு!” என்று மனைவியை ஏவிவிட்டு அங்கிருந்து அகன்றார் மனிதர். மெல்லிய வியப்புடன் தங்கையைப் பார்த்தான் சஞ்சயன். இந்த மாற்றம் எப்படி வந்தது? தமையனை உணர்ந்தவளாகச் சஞ்சனா மெல்லப் புன்னகைத்தாள்.
அன்றைக்குச் சண்டையிட்ட பிறகு சஞ்சனா அன்னையை விடவில்லை. அதுவும் சஞ்சயனும் புறப்பட்டுவிட்டதில் அப்பாவின் வேலைகளை அவரே பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டாள். பிரபாவதி மகளுக்கு அடங்கிப்போவதா என்று உள்ளே திமிறினாலும் அவள் இன்னும் என்னவெல்லாம் கேட்பாளோ என்கிற பயமும் கூடவே கணவருக்கு ஏதும் ஆகிவிடுமோ என்கிற கலக்கமும் தானாகவே கவனித்துக்கொள்ள வைத்திருந்தது.
தோட்டம் நோக்கி நடந்த சிவானந்தனுக்கு மனதில் இனம்புரியாத துள்ளல். மகன் வந்துவிட்டானே! இனி எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொள்வான்! அவரின் பழைய தெம்பும் நிமிர்வும் மீண்டிருந்தது.
இப்படி, அவன் வந்தபோது அவனோடு சேர்ந்து அந்த வீட்டின் உயிர்ப்பும் மீண்டிருந்தது.
சஞ்சயனிடம் நெடுந்தூரப் பயணத்தின் களைப்பின் சாயலே இல்லை. ஒரு துள்ளல். மனதுக்குள் உற்சாகம். அந்தந்தத் துண்டுகள் அதனதன் இடத்தில் பொருந்தினால் மட்டுமே பஸிலின் காட்சி தெளிவாவதுபோல, அவன் இந்த மண்ணில் மட்டும்தான் பொருந்திப்போனான். வேகமாகக் குளித்து உணவையும் முடித்துக்கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தபோது, அவனின் ராஜகம்பீரம் திரும்பியிருந்தது.
சஹானா அவனுக்கு அழைக்கவில்லை. போய்ட்டீங்களா என்று மெசேஜ் மட்டும் வந்திருந்தது. ‘இத எடுத்துக் கேக்கமாட்டாளாமா?’ கொழும்பிலிருந்து வருகிறபோது பார்த்துவிட்டுப் பதில் போடவில்லை. அவன் பார்த்தும் பதில் இல்லை என்று தெரிந்ததும் அவளின் கைபேசியில் இருக்கிற அத்தனை கோப ஸ்மைலிகளையும் அனுப்பித் தீர்த்திருந்தாள் அவள்.
இவனைக் கண்டதுமே, வைத்தியசாலையின் வோட் கட்டிலில் அமர்ந்திருந்த தெய்வானை, “என்ர குஞ்சு! வாய்யா வாய்யா. என்ர ராசன பாக்காம கண்ணே பூத்துப் போச்சுதடா!” என்று முகம் வருடி அழுதார். அந்த முதிய விழிகள் அவனைக் கண்ணார கண்டு தீர்த்தது. கண்ணீராகக் கொட்டித் தீர்த்தார். எதுவும் பேசாமல் அவரையே பார்த்தான் சஞ்சயன்.
எப்போதுமே தன் வெள்ளிக்கம்பிகளை எள்ளுருண்டைக் கொண்டையாக்கி இருப்பார். நெற்றி நிறையத் திருநீறு பூசி புருவங்களுக்கு இடையிலும் உச்சியிலும் குங்குமம் பெரிதாக இட்டிருப்பார். காதில் பெரிய குண்டலங்கள் தொங்கும். தொட விடவே மாட்டார். கேட்டால், “அது என்ர பிரியன் முதன் முதலா வாங்கித் தந்தவரடா!” என்பார் பெருமையோடு. புருசன் வராது. பிரியன்தான்.
“உங்கட பிரியன் எல்லாம் ஒரு ஆள் எண்டு..” என்று இவன் சீண்டினால், “அவரைப்பற்றிக் கதைச்சியோ பேரன் எண்டும் பாக்காம கால முறிப்பன்!” என்றபடி தென்னை மட்டையைத் தூக்கிவிடுவார். அந்தளவுக்கு இந்த வயதிலும் மனதில் உரம் மிகுந்தவர். அப்படியானவர் இந்த ஒரு மாதத்துக்குப் பாதியாகி இருந்தார். தன் பிரிவு வீட்டில் ஒவ்வொருவரையும் எப்படியாக்கி வைத்திருக்கிறது என்பதும் அவர்களுக்குத் தான் எத்தனை இன்றியமையாதவன் என்பதும் விளங்கிற்று.
“என்னப்பு ஒண்டுமே கதைக்காம இருக்கிறாய்? அம்மம்மாவில கோவமோ?”
“கோவிக்காம? திரும்பி வருவன் எண்டு சொல்லிப்போட்டுத்தானே போனனான். பிறகும் இப்பிடி கவலைப்பட்டு உடம்பக் கெடுத்து வச்சிருக்கிறீங்க எண்டா என்னை நம்பேல்ல எண்டுதானே அர்த்தம். மகனை மாதிரி பேரனும் அங்கேயே நிண்டுடுவான் எண்டு நினைச்சீங்களா?” அவனின் கோபம் கூட அந்த மூதாட்டிக்குக் கற்கண்டாக இனித்தது.
“சரி ஐயா. என்ர குஞ்சு கோவப்படாத. அதுதான் வந்திட்டாய் தானே. அந்த டாக்குத்தர்(டொக்டர்) அறுவானிட்ட சொல்லு; எனக்கு ஒண்டுமில்லையாம் வீட்டை விடட்டாம் எண்டு. கண்ட கண்ட கருமாந்திர குளுசை(மாத்திரை) எல்லாம் தந்து விழுங்கச் சொல்லுறான்!” பழைய தெய்வானை திரும்பியிருக்க அவரின் அடாவடி ஆரம்பித்திருந்தது.
“நான் சொல்ல மாட்டன். உங்கட வாய்க்கொழுப்புக்கு இன்னும் பத்து நாளைக்கு இருந்திட்டு வாங்கோ! என்ன சொன்னீங்க, உங்கள காடு வாவா எண்டு கூப்பிடுதோ?” என்று அவரைக் கலங்கடித்தாலும், வைத்தியரைச் சந்தித்துப் பேசி கையுடனேயே அவரைக் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிட்டுத்தான் தன் வேலைகளைப் பார்க்கப் போனான்.
தோட்டத்தைப் பார்த்து, நண்பர்களைச் சந்தித்துப் பிளாஸ்ட்டிக் இல்லா யாழ்ப்பாணத்தின் நிலை அறிந்து, அப்படியே வைத்தியரைச் சந்தித்துத் தாத்தாவைப் பற்றி விசாரித்து, அழைத்த ராகவியிடமும் போயிருந்து சற்றுநேரம் பேசிவிட்டு அவரிடமே உணவையும் முடித்துக்கொண்டு அவன் வீடு வந்தபோது இரவாகியிருந்தது.