அறைக்குள் வந்ததுமே சஹானாவுக்குத்தான் அழைத்தான். பார்த்துக்கொண்டே இருந்தவள் உடனேயே அழைப்பை ஏற்றாள். “வந்திட்டனா எண்டுறதை எடுத்து கேக்க மாட்டியா? அதென்ன மெசேஜ் அனுப்புறது?” என்றான் அவளையே விழிகளால் விழுங்கிக்கொண்டு.
அவளுக்குப் பேச்சே வரவில்லை. நேற்று இதே அறையில் தன்னை அவன் கைச்சிறைக்குள் வைத்திருந்தவன் இன்றைக்கு எங்கோ தொலைவில் இருக்கிறான் என்பதை நம்ப முடியவில்லை. கண்ணைக் கரித்தது. மற்றவர்களின் முன்னால் நல்லபிள்ளையாக இடைவெளி விட்டு நிற்கிறவன் அவளின் அறைக்குள் வந்துவிட்டால் போதும், தன் கைகளுக்குள்ளேயேதான் வைத்திருப்பான். முத்தங்களால் மூச்சுமுட்ட வைப்பான். ‘நீ என் உயிர். நீயில்லாமல் என்னால் நொடியும் இருக்கமுடியாது’ என்று ஒரு பார்வையில், நெருக்கத்தில், அணைப்பில் உணர்த்திக்கொண்டே இருப்பான். இன்றோ.. அவன் தொலைவில் அவள் தனிமையில். பதில் சொல்ல இயலாமல் தொண்டை அடைத்துக்கொள்ள ஒரு கையால் ஃபோனைப் பிடித்துக்கொண்டு மறுகையால் மெத்தையைச் சுரண்டினாள்.
அவனுக்கும் பேச்சு நின்றுபோயிற்று. இவ்வளவு நேரமும் தெரியாதபோதும் இரவும் உறக்கமும் அவளின் அருகாமையைத்தான் சுமந்து வந்தது. “சஹி..” என்றான் மென்மையாக.
“..”
“சஹி, என்ன பார்.”
அவள் அவனைப் பார்க்க, விழிகளில் தானாகவே நீர் கோர்த்தது.
“என்னடா?”
“என்னையும் ஏன் நீங்க கூட்டிக்கொண்டு போகேல்ல?” கண்ணீரை அடக்கியபடி கேட்டாள்.
“அடிதான் வாங்கப்போறாய். வா வா எண்டு கெஞ்சக் கெஞ்ச திமிர் கதை கதைச்சுப்போட்டு இப்ப என்ன கதைக்கிறாய்?”
“நான் சொன்னா விட்டுட்டு போய்டுவீங்களா? உங்கட அம்மம்மாவும் தான் இங்கயே இருக்கச் சொன்னவா. இருந்தீங்களா? இல்லை எண்டு அங்க திரும்பப் போனீங்க தானே. அதே மாதிரி என்னையும் வாடி எண்டு கையோட இழுத்துக்கொண்டு போயிருக்கலாம் தானே?”
இவளை… இதுல என்ர அம்மம்மாவாம். தன்னைத் தேடும் அவளிடம் கோபத்தைக் காட்டவும் மனமில்லை. “சரி ஒண்டுக்கும் யோசிக்காத. நான் மாமாவோட கதைக்கிறன். பிறகு என்ன செய்றது எண்டு பாப்பம். சரியா?” என்றான் கனிவோடு.
“உங்களுக்கு நான் வேண்டாம் என்ன? இல்லாம அப்பாட்ட அப்பிடி சொல்லியிருக்க மாட்டீங்க தானே!” என்றாள். இங்கே அவனுடைய அறையில் வைத்து விவாக ரத்து என்ற சொல்லை அவள் எடுத்ததே வீம்புக்குத்தான். அந்தச் சொல்லின் பொருளை உணரவும் இல்லை அதைப்பற்றி யோசிக்கவும் இல்லை. அந்த நொடியில் அவனைச் சீண்டும் நோக்கில் உதிர்த்த வார்த்தை. அதையே அவன் கொஞ்சிக் குலாவி பாசத்தைப் பொழிந்துவிட்டு அவள் ஒன்று சொன்னதும் அப்படிச் சொல்வானாமா? அவளால் அதை ஏற்கவே முடியவில்லை.
மனதின் சிணுக்கத்தை முகத்தில் காட்டி நின்றவளைப் பார்த்து மெல்லச் சிரித்தான் சஞ்சயன். “எனக்கு நீ வேணும். நீ மட்டும் தான் வேணும். உனக்கு நான் வேணுமா தெரியாதே? இல்லாட்டி உன்ன தேடி அவ்வளவு தூரம் வந்தவனை ஒருக்கா கூட மச்சான் எண்டு கூப்பிடாம இருப்பியா?” என்றான் குறையாக.
“கூப்பிட்ட நேரமெல்லாம் கூப்பிடாத எண்டு கழுத்தைப் பிடிச்சுப்போட்டு இப்ப கூப்பிடு எண்டா எப்பிடி கூப்பிடுறது?” எனும்போதே அவளுக்குக் குரல் உடைந்துபோயிற்று.
“அத மறக்கவே மாட்டியா?”
“நினைவு வச்சிருக்க எனக்கும் விருப்பம் இல்லத்தான். ஆனா நினைவிலேயே நிக்குதே.” என்றவளிடம் அதை அவள் மறக்கிற வரைக்கும் பேசினான். அவர்கள் இருவருக்கும் மட்டுமேயான பிரத்தியேகப் பேச்சுக்கள். அந்தரங்கமான வார்த்தையாடல்கள். நெருக்கமான பார்வைப் பரிமாறல்கள். செல்லக் கொஞ்சல்கள் என்று அவளைச் சொக்கவைத்தான். இவன் இப்படியெல்லாம் கதைப்பானா என்று திகைத்தாள் சஹானா. சில நேரம் பேசுவது அவன்தானா என்று விழிகளை விரித்தாள். சில நேரம் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டாள். சில நேரம், ‘அடி வாங்கப் போறீங்க!’ என்று செல்லமாகச் சிணுங்கினாள். இருவரில் ஒருவரின் கைபேசி தன் உயிரை விடுகிற வரைக்கும் இரவுகள் அவர்களுக்காக விழித்திருந்தது. முத்தங்கள் இலங்கைக்கும் ஒல்லாந்துக்கும் பறந்து பறந்தே களைத்துப் போயின.
அவளைப் பிரிவது அவனுக்கும் இலகுவாயிருக்கவில்லை தான். ஆனால் முதல் போன்ற உயிரைக் கொல்லும் வேதனை வாட்டவில்லை. இருவருக்குமே மற்றவரின் மீது பிரியம் உண்டு, நேசம் உண்டு என்று தெரிந்துவிட்டது. அவள் தன்னிடம் வருவாள் என்கிற நம்பிக்கையும் வந்துவிட்டது. என்ன கொஞ்ச நாட்களுக்குப் பொறுக்க வேண்டும். அவ்வளவுதான். அதனால், அவளிடம் சொன்னதுபோலவே வீட்டினை அவளின் வசதிக்கேற்ப மாற்றியமைத்தான். அவளுக்கு ஏற்றாற்போல் கார் என்ன விலையில் இருக்கும் என்பதையும் பார்த்து வைத்துக்கொண்டான். முன் வீட்டின் தரை மார்பிளில் பளபளத்தது. சமையல்கட்டு வெளிநாட்டினைப்போலவே கிட்சன் செட்டுடன் அப்படியே மாறிப்போயிற்று. வோஷிங் மெஷின் புதிதாகக் குடிவந்தது. அவள் சொன்னதுபோலவே வீட்டோடும் அவர்களின் அறையோடும் பாத்ரூம் முளைத்தது. அதுவரை வீட்டுக்குள்ளேயே அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள், பயறு மூட்டைகள், கௌப்பி மூட்டைகள் எல்லாம் தனிக்குடித்தனம் போயின.
முழு வீடுமே புத்தாடை அணிந்துகொண்டபோது, அகிலனும் சஞ்சனாவும் அவனைக் கேலி செய்தே களைத்தனர். ஒரு சிரிப்புடன் கடந்தானே தவிரச் சட்டையே செய்யவில்லை. மனதில் மட்டும் சஞ்சுவுக்கும் இப்படியே எல்லாம் செய்துகொடுக்க வேண்டும் என்று குறித்துக்கொண்டான்.
தினமும் அவளோடு பேசினான். தன் தினப்படி வேலைகளை அவளிடம் பகிர்ந்துகொண்டான். அவளுக்குள் தன் நினைவுகளை இன்னுமின்னும் நிரப்பினான். அவளும் அவனும் கணவன் மனைவி என்பதை வார்த்தைகளின் நெருக்கத்தால் உணரவைத்தான். சஹானாவின் மனதின் காயங்களும் மெல்ல மெல்ல ஆறிப் போயிற்று. அகிலன், சஞ்சனாவோடான சண்டைகள் கேலிகள் எல்லாமே என் குடும்பம் அங்கேதான் என்கிற எண்ணத்தைத் தோற்றுவித்தது. இப்போதெல்லாம் அவனைச் சீண்டுவதற்கும் அவனிடம் செல்லம் கொஞ்சுவதற்கும் மட்டுமே நடந்தவற்றை வேண்டுமென்றே நினைவுகூர்ந்து கொண்டிருந்தாள். அவனுக்கும் புரியாமல் இல்லை. ஆனாலும் அவளுக்கேற்ப ஆடிக்கொண்டிருந்தான்.
கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்தான் சஹானா வருவதாக முடிவாயிற்று. அதற்கு முதலே பிரதாபன் அவளை மட்டுமே அனுப்பத் தயாராக, வேண்டாம் என்றுவிட்டான்.
“நான் வந்து ரெண்டு கிழமை நிண்டுட்டு வாறனே. ஏன் வேண்டாம் எண்டு சொல்லுறீங்கள்?” என்று குறைபட்டாள் சஹானா.
“ரெண்டு கிழமை என்னத்த காணும்? வந்தா இங்கயே நிக்கிறமாதிரி வா!”
“உங்களுக்கு என்னைப் பாக்கோணும் எண்டு ஆசையே இல்ல. அதுதான் இப்பிடிச் சொல்லுறீங்க! டிவோர்ஸ் தருவன் எண்டு சொன்ன ஆள்தானே நீங்க.”
“ஓமோம்! ஆசை இல்லாமத்தான் இங்க நான் பைத்தியமா அலையிறன்!”
“சும்மா பொய் சொல்லாதீங்க! வா வா எண்டு கூப்பிடுறது. வாறன் எண்டு சொன்னா வரவேண்டாம் எண்டுறது! எல்லாம் நடிப்பு!”
அவன் என்ன சொல்லுகிறான் என்று விளங்கிக்கொள்ளாமல் அடம் பிடித்தவளை முறைத்துவிட்டுக் கேட்டான் அவன்.
“பிள்ளை ஏதும் வந்தா என்னடி செய்வாய்?”
பிள்ளையா? அது எங்கே இருந்து வந்தது என்று விழித்தாள் சஹானா.
“இங்க என்ன என்னைச் சுத்திப் பாத்திட்டுப் போக வாறியா? வந்தா வாழவேணும். வாழ்ந்தா பிள்ளை வரும். அங்க மாதிரி இங்கயும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு காலத்தை ஓட்ட என்னால ஏலாது!” என்றான் அவன்.
அப்போதுதான் என்ன சொல்லவருகிறான் என்று புரிந்துவிட விழிகளை விரித்தவளுக்குச் சிரிப்பை அடக்கவே முடியாமல் போயிற்று! அவள் அந்தளவு தூரத்துக்கெல்லாம் யோசித்ததே இல்லை. ஏன் எதைப்பற்றியும் யோசித்ததில்லை. அவனையும் அவன் பேசியவைகளையும் மட்டுமே மனதில் சுமந்தபடி கனவுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அவனானால் எல்லாவற்றையும் யோசித்துத் திட்டம் போட்டுச் செய்கிறான். அந்தப் பொறுப்பான குணம் நெஞ்சத்தைக் கவர்ந்தாலும் கண்களில் குறும்பு மின்ன, “இந்த ரெண்டு கிழமை சும்மா உங்களைச் சுத்திப் பாத்திட்டு வாறன். பிறகு நிரந்தரமா வரேக்க பிள்ளையைப்பற்றி யோசிப்பம். என்ன அவசரம்?” என்று வேண்டுமென்றே சீண்டினாள்.
“வந்தா என்ர பிள்ளைக்கு அம்மாவாத்தான் போவாய். அதால வந்திடாத!” அதைக் கேட்டவளுக்கு வெட்கத்தில் பூத்த சிரிப்பை மறைக்கவே முடியாமல் போயிற்று. பிறகு அவன் பேசியவை எல்லாம் கணவனின் மனைவிக்கான ரகசியக் காதலாயிற்று!
இந்தப் பேச்சுகளின் இடையில் அம்மம்மாவோடோ அம்மா அப்பாவோடோ கதை என்று அவன் கேட்கவேயில்லை. முதலில் அதை அவளாகச் செய்யட்டும் என்று நினைத்தான். இல்லாவிட்டால் இங்கு வந்தபிறகு அவளாக மாறுவாள் என்கிற நம்பிக்கை இருந்தது.
ஒரு வருடத்தின் பின்னர் அவள் இங்கேயே நிரந்தரமாக இருப்பதாகவும் பிரதாபனும் யாதவியும் தேவையின் படி போய்வருவதாகவும் முடிவாயிற்று.
அடுத்த வாரம் அவள் வரப்போகிறாள் என்றானதும், “உயிர், பொருள், ஆவி எல்லாம் உனக்காகத் துடிக்குது சஹி. கெதியா வா.” என்றான் ஏக்கத்தோடு. இவ்வளவு நாட்களையும் எப்படியோ கடத்தியவனுக்கு அவள் வரப்போகிறாள் என்றதன் பின்னான நாட்களைக் கடத்தவே முடியவில்லை.
அவனின் தேடல் புரிந்தபோதும் அந்த வார்த்தைகள் முற்றிலுமாக விளங்கவில்லை. “என்ன சொல்லுறீங்க? உயிர் துடிக்குதா?” என்றாள்.
அவளை முறைத்துவிட்டு, “இங்க வந்ததும் ஒழுங்கா ‘அ’னா ‘ஆ’வன்னா படிக்கப் போ! என்ர மனுசிக்குத் தமிழ் தெரியாது எண்டுறது பெரும் கேவலம்!” என்றான் அவன்.
“அப்ப நான் உங்களைப் படிக்க வேண்டாமா? அவசரம் இல்லையா?”
“அது நைட் கிளாஸ். இது பகல் கிளாஸ். நீ ஏன் ரெண்டையும் போட்டுக் குழப்புறாய்?” சிரிப்புடன் சொன்னான் அவன்.
அவளுக்கும் சிரிப்பை அடக்குவது சிரமமாயிருந்தது. எதுவுமே விளங்காதவள் போன்று நடித்தபடி, “ஆனா ஆவன்னா நீங்க சொல்லித் தரமாட்டீங்களா?” என்று கேட்டாள்.
“ஆனா ஆவன்னா என்ன அம்மா அப்பா விளையாட்டே சொல்லித்தாறன். நீ முதல் இங்க வாடியப்பா!” என்றான் அந்த நொடியே அவள் வேண்டும் போல் எழுந்த துடிப்பில்.
அவளின் நிலையும் அதேதான். இருவருக்கும் இடைவெளிதான் தூரமாயிருந்ததே தவிர இதயங்கள் இணைந்து கிடந்தன. அவனுக்குள் எப்படி அவள் துளித்துளியாக இறங்கினாளோ அப்படியே அவனும் அவளின் உயிரின் ஆதார சுதியாகிப் போயிருந்தான்.