அத்தியாயம்-1
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலா… இதுதான் காதலா..?
காதலா.. இதுதான் காதலா…?
நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம்
நீ தந்த காற்று!
நீயின்றி வாழ்ந்திட இங்கு
எனக்கேது மூச்சு!
ஆகாயம் நீர் நிலம் யாவும்
அழகே உன் காட்சி!
அலைபாய்ந்து நான் இங்கு வாழ
அவைதானே சாட்சி!
நீயில்லாத நானே
குளிர் நீரில்லாத மீனே..!
நீர் ஓடை போல….
அதற்குமேல் அவள் எழுதவில்லை. கடைசி வரியை முடிக்காமலேயே இடையில் நிறுத்திவிட்டிருந்தாள். அந்த மடலின் மறுபக்கத்ததைத் திருப்பி மீண்டும் படிக்கும் தெம்பு கூட அதிரூபனுக்கு இல்லை.
பூப்போன்ற கையெழுத்தில் பூகம்பத்தையே கிளப்பி அவனது தலையெழுத்தையே மாற்றியவளின் வரிகளவை! அந்தக் கடிதம் அவன் கைக்குக் கிட்டி இரண்டு வருடங்கள் இருக்குமா? இரண்டு மூன்று மாதங்கள் இன்னும் கூடுதலாகவே இருக்கும். அவனது மொத்த நிம்மதியையும் பறித்துக்கொண்டல்லவா அந்த மடலைப் பரிசளித்திருந்தாள்.
நீ விளையாட என் வாழ்க்கை தானா கிடைத்தது? எங்கிருந்துகொண்டோ அவள் விளையாடும் விளையாட்டுக்கு அவன் பலியாகிக் கொண்டிருக்கிறான். அல்லது ஆரம்பித்து வைத்ததில் அவன் பங்கும் உண்டுதானோ? நெஞ்சில் வலி எழ, ஆழ மூச்சை இழுத்துவிட்டுவிட்டு, கடிதத்தை எடுத்துச் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான்.
அறை வாசல்வரை வந்தவனின் கால்கள் அதைத் தாண்டி நகரமாட்டேன் என்று அசைவற்று நின்றுவிட்டது. அது அவனது அன்பு மனைவி மிருணாளினியோடு வாழ்ந்த அறை. பசுமையான பல நினைவுகளை அவனைப்போலவே தனக்குள் நிரப்பி வைத்திருந்தது. காற்றில் கரைந்து கற்பூரமாகிவிட்டவள், தன் நினைவுகளை மட்டும் அவன் நெஞ்சுக்குள் அச்சாகப் பதித்துவிட்டு, எங்கோ தொலைவிலிருந்து அவனது துன்பங்களை எல்லாம் பார்த்துச் சிரித்துக்கொண்டு இருக்கிறாளோ?
நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. அந்த அறையைக் கட்டிக்கொண்டு ஒருமுறை கதறினால் இந்த மனப்பாரம் குறையுமோ? அவளின் நினைவுகளில் இருந்து அவனால் மீளவே முடியவில்லை. அவள் மறைந்து ஒரு வருடம் பூர்த்தியாகியும் கூட, இன்றும் அவனுள்ளம் அவளின் அருகாமைக்காகத் துடிக்கிறதே. அவளின் கலகல சிரிப்பொலி காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அவளின் வாசனை அவனை ஆரத்தழுவிக்கொண்டே இருக்கிறது. அவள் மட்டும் இல்லை என்றால் எப்படி?
‘ஏனடி உனக்கு இவ்வளவு அவசரம்?’ எல்லாவற்றிலும் அவளுக்கு அவசரம் தான். காதலில், கல்யாணத்தில், குழந்தை வேண்டுமென்பதில், கடைசியில் கடவுளிடம் போவதற்கும்.
“தம்பி…!” தாயின் அழைப்பு கனத்த குரலில் கேட்கவும், எதிலிருந்தோ தப்பிப்பவன் போன்று அங்கிருந்து வேகமாகத் தாயிடம் விரைந்தான்.
வயதானவர். அவரையும் சுகர், பிரஷர் என்று இருக்கும் அத்தனை நோய்களும் பிடித்துச் சித்திரவதை செய்துகொண்டிருந்தது. அதோடு, அவனது வாழ்க்கையில் நடந்துவிட்ட சோகங்கள் அவரையும் முற்றாகச் சாய்த்துப் போட்டிருந்தது.
ஒரேயொரு மகன். சிரமப்பட்டு உழைத்து, ஒற்றைத் தாயாக நின்று வளர்த்து, ஆளாக்கி, யாழ் பல்கலையின் ஆங்கில விரிவுரையாளனாக அழகுபார்த்து, சீரும் சிறப்புமிகு பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். அவர்கள் நேசமும் பாசமுமாய் வாழ்வதைக் கண்டு, தான் பட்ட துன்பங்களுக்கெல்லாம் பலன் கிடைத்துவிட்டது என்று ஆறி இருந்தவரை வந்து தாக்கிய புயலில் முற்றிலுமாக உடைந்தே போனார்.
வாழ்ந்த வீட்டைவிட்டுப் பிரியப்போகும் துயரோடு, கண்களில் நிரம்பியிருந்த கண்ணீரோடு, பேத்தி ரூபிணியைக் கையில் வைத்தபடி நின்றிருந்தார் கலைவாணி அம்மா.
“என்னட்ட தாங்கம்மா..” ஒருவயதும் சில மாதங்களும் கடந்துவிட்ட மகளை வாங்கி அணைத்துக்கொண்டான்.
அப்படியே உரித்து வைத்து அன்னையைக் கொண்டு பிறந்திருந்தாள். மனைவியின் பிரிவைத் தாங்கும் வலுவற்று, இந்தப் பெண் குழந்தையை எப்படி வளர்க்கப்போகிறேன் என்கிற மலைப்பை, அவனுக்குள் நொடிக்கொரு தடவை விதைப்பவள்.
நெஞ்சோடு அணைத்துக்கொண்டு வாசலுக்கு நடந்தான் அதிரூபன்.
அங்கே, அந்த வீட்டில் இனி வாடகைக்குக் குடியிருக்கப் போகிறவர்கள் காத்திருந்தார்கள். அவர்களிடம் திறப்பைக் கொடுத்தவனுக்குத் தொண்டை அடைத்தது. அவன் பிறந்து, வளர்ந்து, மணந்து, இன்புற்று வாழ்ந்த வீடு. அவனைத் தேற்றும் வலுவற்றுத் தோற்றுப்போனதில் அதைவிட்டே ஓடுகிறான். மனைவியின் பிரிவு அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்வதில், சிலநேரங்களில் நெஞ்சழுத்தம் காரணமாக தனக்கும் ஏதும் நடந்துவிடுமோ என்று அவனுக்கே பயம் வந்துவிடும். பிறகு மகளின் நிலை என்னாகும்?
அந்தப் பயத்தில் தான் அந்த வீட்டிலிருந்து, அந்த ஊரிலிருந்து ஓடுகிறான்.
“கவனமா பாத்துகொள்ளுங்கோ.” சொல்லிவிட்டு, வீட்டுத் தளபாடங்களை ஏற்றிய வாகனத்தைப் பின்தொடரச் சொல்லிவிட்டு, காரை எடுத்தவனின் பயணம், யாழில் இருந்து வவுனியாவை நோக்கி நகரத்துவங்கியது.
அவன் ஆங்கில விரிவுரையாளன் என்பதில் வவுனியா வளாகத்திலும் இலகுவாக வேலை மாற்றி எடுத்துக்கொண்டான்.
புது ஊர், முற்றிலும் அந்நியமான மனிதர்கள், யாரோ ஒருவரின் வாடகை வீடு என்று எல்லாமே புதிது. முன்பை விடவும் பெரும் தாக்கத்தைதான் உருவாக்கியது. அங்கிருந்திருந்தாலாவது அவளோடு வாழ்ந்த பொழுதுகளை நினைவலைகளில் மிதக்க விட்டபடி, அந்த அறையில் அடைந்து கிடப்பதே ஒருவித சுகமான சோகமாய் இருந்திருக்கும் போல. இது என்னவோ அவளைத் தனியாக விட்டுவிட்டு பிரிந்துவந்து இருப்பதுபோல தவித்துப்போனான் அதிரூபன்.
அங்கே ஓடவேண்டும் போல், அவனும் அவளுமாக வாழ்ந்த அறைக்குள் அப்படியே முடங்கவேண்டும்போல் ஒரு வேகம் எழும். பல்லைக் கடித்து அடக்கிக்கொள்வான். ஒருமுறை முடியாமல் கம்பசுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு யாழ்ப்பாண வீட்டுக்குப் போய்விட்டான்.
அறைக்குள் ஒருமுறை போகட்டுமா என்று கேட்டபோது, அசூசையோடு அவர்கள் மெல்லத் தலையசைப்பதை உணர்ந்து உள்வாங்கினாலும், நாகரீகம் பார்க்கும் நிலையில் அவனில்லை. தவித்த மனதோடு பாய்ந்து சென்றவன், முற்றிலும் மாறிப்போய் அந்நியப்பட்டுக் காட்சியளித்த அறையைக் கண்டு அப்படியே நின்றுவிட்டான். இது அவர்கள் வாழ்ந்த அறையல்ல. மனம் அறைந்துசொல்ல ஓடி வந்துவிட்டான்.
எங்கும் நிம்மதி இல்லை. இனி அங்கு போவதிலும் அர்த்தமில்லை என்று அறிந்ததில், மகள் மட்டுமே ஆறுதலாகிப்போனாள்.
என்றோ பிரிந்துபோன கணவரின் ஞாபகங்கள் தொடங்கி மருமகளின் மறைவு, பிரிந்துவந்த ஊரின் நினைவுகள் என்று துன்பம் அரிக்கத் துவங்கியதில் கலைவாணி அம்மாவும் முற்றிலும் துவண்டு போனார்.
சத்தமே இல்லாத வீடு. மிருணாளினி இல்லை என்பதை ஒவ்வொரு கணமும் அறைந்து சொல்லிக்கொண்டே இருந்தது. ரூபிணி கூட எப்போதும் அப்பம்மாவின் மடியிலேயே சுருண்டுகொண்டிருந்தாள்.
வேலை முடிந்து சோர்வுடன் வந்தவனைக் கண்டுவிட்டு, பிஞ்சுப் பாதம் வைத்து ஓடிவந்த மகளைத் தொண்டை அடைக்க அள்ளி அரவணைத்துக் கொண்டான்.
“பிள்ளை பாவமய்யா. என்ர மடியிலேயே கிடக்கிறாள். தலையைச் சுத்தி விழுந்திடுவேனோ எண்டுற பயத்தில நானும் வெளில கொண்டு போறேல்ல. நீயும் வேலை முடிஞ்சா டியூஷன், வீடு எண்டு இருந்தா எப்பிடியப்பு? ஓடி ஆடி வளரவேண்டிய வயசெல்லோ. ஒருக்கா வெளில கூட்டிக்கொண்டு போப்பு!” உடல் கழுவி, வெளியே செல்ல வேற்றுடை மாற்றிக்கொண்டு வந்தவனுக்கு உண்ணக் கொடுத்துவிட்டுச் சொன்னார், கலைவாணி.
மகளைப் பார்த்தான் அதிரூபன். அப்பம்மாவைக் கட்டிக்கொண்டு அவர் மார்பில் சாய்ந்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்தக் கண்களில் பெரும் ஏக்கம். எப்போது அவனிடம் தாவுவோம் என்கிற ஆவல். நெஞ்சில் எதுவோ அடைக்க, ‘வா!’ என்று வாயால் கூப்பிடாமல் தலையை அசைத்து அழைத்தான். ஒரே தாவலில் அவள் தாவி வந்த வேகத்தில் கத்தி அழவேண்டும் என்றாயிற்று அவனுக்கு.
மனைவி இல்லாமல் அநாதரவாக அவன் அலைவதுபோல, அப்பா அவனிருந்தும் குழந்தை ஏங்கி இருக்கிறாளே. ஒருகையால் மகளை நெஞ்சோடு அணைத்தபடி உண்ணத் துவங்க, அவளோ அவன் தட்டில் கையைப்போட்டு உணவை அளைந்தாள்.
“அப்பாவைச் சாப்பிட விடம்மா.” கலைவாணி அம்மா சொல்லவும், “விடுங்கம்மா.” என்றுவிட்டு, கண்கள் பனிக்க மகளுக்கு ஒரு வாய் கொடுக்க முனைய, சரக்கென்று தலையைத் திருப்பிக்கொண்டு மறுத்தாள் அவள்.
அவளின் வேகத்தில் எத்தனையோ நாட்களுக்குப் பிறகு சின்னதாய்ப் புன்னகை அரும்பியது அவனுக்கு.
சத்தமாக அழுதுவிடப் பார்த்தார் கலைவாணி. எவ்வளவு நாட்களுக்குப் பிறகு மகன் முகத்தில் இந்தளவேனும் ஒரு புன்னகை. ‘கடவுளே.. என்ர மகன் மெல்ல மெல்ல இந்த இழப்பில இருந்து வெளில வந்திடவேணும்!’ மனமார வேண்டிக்கொண்டார்.