பூவே பூச்சூட வா 3(1)

வானதிக்கு அவனோடு கதைப்பதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ‘இவனிடம் அளவோடு பழகவேண்டும்’ என்று உணர வைக்கும் விதமாய் அவன் பழகவும் இல்லை. விலகி விலகிப் போகிறவனை இழுத்துவைத்துக் கதைக்க வைத்துக்கொண்டிருந்தாள் வானதி என்றுதான் சொல்லவேண்டும்.

அவனது சோகமுகம் அவளுக்குள் பரிதாப உணர்வைத் தூண்டிக்கொண்டிருந்தது. பேச்சுக்கொடுத்துத் தேற்ற முயன்றுகொண்டிருந்தாள்.

அன்றைக்கும், “உங்கட பெயர்ல இருக்கிற ரூபனை எடுத்தா ரூபிணி எண்டு வச்சீங்க?” என்று பெயர் ஆராய்ச்சியில் இறங்கினாள் வானதி.

அவன் பதில் சொல்வதற்குள் இடையில் புகுந்தான் தாரகன். “இல்லம்மா. ரூபி தான் மாமாக்கு ரூபன் எண்டு வச்சவள். என்ன மாமா?” பதில் சொல்லிவிட்ட பெருமையில் அதிரூபனையும் தனக்குச் சார்பாய் அழைத்தான் அவன்.

அதிரூபனிடத்தில் புன்னகை அரும்பியது. அவனுக்கும் சின்னப்பெண்ணான அவளையும் அவளின் குறும்புகள் நிறைந்த மகனையும் நிறையவே பிடித்திருந்தது. “உன்ன மாதிரியே இருக்கிறான் உன்ர மகன். வாயும் அதேதான்!” தாரகனின் தலையைக் கலைத்துவிட்டுச் சொன்னான்.

அவன் சொன்னது என்னவோ கேலியாகத்தான். அவள் கண்களில் சட்டென்று ஒரு வலி. முகம் வாடிப்போயிற்று.

“அவன்ர அப்பா மாதிரி வரவேணும் எண்டு ஆசைப்பட்டுத்தான் பெத்தனான். ஆனா… ” தொடரமுடியாமல் பேச்சை நிறுத்திவிட்டவளை விளங்காமல் பார்த்தான் அதிரூபன்.

கலகலவென்று இருப்பவள் அவளைப் பற்றிய விசயங்களில் மட்டும் விளங்காத விடுகதையாகிப்போகிறாள்.

“ஆர(யாரை) மாதிரி இருந்தா என்ன. சுகமா ஆரோக்கியமா இருந்தா சரிதானே.”

“எண்டாலும் அவரை மாதிரிப் பிறந்திருக்கலாம்.” கலங்கிவிட்ட விழிகளைக் காட்ட மனமற்று சட்டென்று பார்வையைத் திருப்பிக்கொண்டாள் வானதி.

“கவலைப்படாத. எல்லாம் நல்லதா நடக்கும்!”

“அதுக்குச் சான்ஸே இல்லை!” அவனைப்பார்த்துச் சொன்னவளின் உதடுகள் இப்போது சிரித்துக்கொண்டிருந்தது.

நெஞ்சில் பாரமேற அவளைப் பார்த்தான். எவ்வளவு வேகமாகத் தன்னை மறைத்துக்கொண்டாள்? மனப்பக்குவம் இல்லாமல் அது முடியாதே!

“எங்க அவர்?”

“எங்கேயோ இருக்கிறார். நிச்சயம் நல்லாத்தான் இருப்பார்.” வேண்டுதல் போல் அவசரமாகச் சொன்னவளின் குரலில் அத்தனை கலக்கம்.

அந்த அவனைப்பற்றிய ஒவ்வொரு பேச்சிலும் அவள் மனக்கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறாள் என்று கண்டுகொண்டான் அதிரூபன்.

“அதென்ன எங்கேயோ?” அவள் விசயத்தில் மூக்கை நுழைகிறோம் என்று விளங்கினாலும், சின்னப்பெண் குழந்தை வேறு, சிந்திக்காமல் அவசர முடிவுகளை எடுத்துக்கொண்டு பிரிந்து வந்துவிட்டாளோ என்றெண்ணி வினவினான்.

“எங்க இருக்கிறார் எண்டு தெரியாது. ஆனா நல்லா இருப்பார் எண்டு மட்டும் தெரியும். நல்லா இருக்கோணும் எண்டுதான் ஒவ்வொருநாளும் கடவுளைக் கும்பிடுறன். பாவம் அவர்.. கடவுள் ஒரு குறை..யும் வைக்கக் கூடாது. பிறகு… என்னாலேயே என்னை மன்னிக்கேலாது!” சொல்லிக்கொண்டு வந்தவள் சட்டென்று உடைந்தாள். கண்ணீரை அவனுக்குக் காட்டாமல் அங்கிருந்து எழுந்து ஓடிப்போனாள்.

பார்க்கவே பரிதாபமாய்ப்போயிற்று அதிரூபனுக்கு. நெஞ்சு நிறையக் காதலை வைத்துக்கொண்டு எதற்குத் தனியாக வந்திருக்கிறாள்? இவ்வளவு தூரத்துக்கு அவனை நேசிக்கிறவள் எதற்குப் பிரிந்திருக்கிறாள்? போனவள் வரட்டும் என்று பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

சற்று நேரத்தில் தண்ணீர் அடித்துக் கழுவிய முகத்தில் சிவந்திருந்த விழிகளோடு சிரித்துக்கொண்டு வந்தாள். ஒருமுறை அவள் முகத்தை ஆராய்ந்துவிட்டு ஒன்றும் கதைக்காமல் அமர்ந்திருந்தான் அதிரூபன்.

“இதுதான் நிரந்தரம். தம்பி வயித்தில வந்து கொஞ்ச நாளிலேயே நானே எடுத்த முடிவுதான். எண்டாலும் சிலநேரங்கள்ல தாங்க முடியிறது இல்ல.” விளக்கம் போல் மீண்டும் ஒன்றைச் சொன்னாள் வானதி.

பிள்ளைகள் மீது பார்வை இருக்க, தலையை மட்டும் அசைத்துக் கேட்டுக்கொண்டான் அதிரூபன். நெடிய மூச்சு ஒன்று மட்டும் அவனிடமிருந்து வெளியேறியது.

“உங்கட மகள் ஆரை மாதிரி? அவவின்ர அம்மா மாதிரியா? உங்கட சாயலைக் காணவே இல்ல.” கேள்வியும் அவளே பதிலும் அவளேயாக ஒரு கேள்வியைக் கேட்டாள் வானதி.

“அப்படியே அச்சு அசல் அவளின்ர அம்மா மாதிரி.”

“அவா எங்க? எப்பவும் நீங்க மட்டும்தான் வாறீங்க.”

“இல்ல. அவள்.. இல்லை.” எங்கோ பார்த்துக்கொண்டு இயந்திரத்தனமாய்ச் சொன்னான்.

நம்ப முடியாத அதிர்ச்சியில் வானதிற்குப் பேச்சே வரவில்லை. தன்னைப்பற்றிய பேச்சு நெஞ்சுக்குள் தவிப்பை உருவாக்கி விட்டதில் அதை மாற்றத்தான் அவனைப்பற்றி விசாரித்தாள். ஆனால் தாடிக்காடு மறைத்த முகத்தில் அப்பிக் கிடக்கும் சோகத்துக்குக் காரணம் இதுதானா? கண்கள் கலங்கிப் போயிற்று அவளுக்கு!

“சிலநேரம்.. அவள் இந்த உலகத்தில இல்லை எண்டு இப்ப கூட என்னால நம்ப முடியிறேல்ல வானதி. என்னைவிட்டு எப்படிப் போனாளோ தெரியாது. நான் கூட ஒண்டு ரெண்டு நாள் செமினார் அது இது எண்டு போய்வருவன். ஆனா அவள்.. அவளின்ர அம்மா வீட்டை கூடப் போகமாட்டாள். இப்ப..” அதிரூபனின் விழிகள் சூன்யமாய்த் தெரிந்த வான்வெளியில் தன் மனைவியைத் தேடியலைந்தது.

‘எங்கயடி போய்ட்ட?’ நிம்மதியிழந்து அலைந்துகொண்டிருந்த அவனுடைய உயிரும் உள்ளமும் ஓலமிட்டது!

அழுத்தி மூடிக்கொண்ட உதட்டோரம் துடித்தது. ஏறி இறங்கிய தொண்டைக் குழியின் அசைவில் துக்கத்தை விழுங்குகிறான் என்று தெரிந்ததில், வானதியிடமிருந்து கேவல் ஒன்று வெடித்தது.

அதிர்ந்து திரும்பினான் அதிரூபன்.

“ஹேய்.. நீ என்னத்துக்கு அழுகிறாய்?”

“உங்களுக்கு எவ்வளவு கவலையா இருந்திருக்கும் என்ன?” கேவிக்கொண்டே கேட்டாள். எங்கோ நன்றாக வாழ்கிறான் என்கிற நம்பிக்கையுடன் இருப்பவளுக்கே சிலநேரங்களில் தாங்க முடிவதில்லை. மனைவி இனி இல்லவே இல்லை என்கிற நிஜத்தை விழுங்குகிறவனின் நிலை?

என்ன சொல்வான்? அவனாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

“மகள் அவவை மாதிரி இருக்கிறதால அவவை மறக்கேலாம இருக்கா?”

வறண்ட புன்னகை ஒன்று அவன் உதடுகளில் தவழ்ந்தது.

“மறக்கிறதா.. அவளை மறக்க என்னால ஏலுமா என்ன?” என்றபடி ரூபிணியைத் தூக்கி அவளின் பஞ்சுக் கன்னங்களில் தன் இதழ்களைப் பதித்தவனின் விழியோரங்கள் என்ன முயன்றும் முடியாமல் கசிந்துபோயிற்று! ரூபிணியைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

விழிகள் அகல அவனையே பார்த்திருந்தாள் வானதி. எத்தனை ஆழமான காதல்! திடமான ஆண்மகனை முற்றாக உடைத்துப் போட்டிருக்கிறது அந்தக் காதல் என்றால் அந்தப் பெண் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்? இப்படிக்கூட நேசிக்கப்பட முடியுமா?

அவள் இழந்து நிற்கும் சொர்க்கத்தின் அளவு பாரியளவில் தெரிய, மனைவிக்காகக் கலங்கிப்போய் நின்ற அவனது தோற்றம் அவளுக்குள் மிக ஆழமாய்ப் பதிந்தது.

அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து, சின்னக் கூச்சத்துடன் வேகமாகத் தன் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

“அவாட போட்டோ ஏதும் இருக்கா..?” அவனை இத்தனை தூரத்துக்குத் துடிக்கவைக்கும் அவளைப் பற்றி அறிந்தே ஆகவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

ஃபோனை ஓன் பண்ணிக் காட்டினான்.

அது ஒரு செல்பி. இருவருமே இளமையுடன் இருந்தனர். அவன் ஒரு மரத்தின் கீழே அரைக்கட்டு ஒன்றில் அமர்ந்திருக்க, அவனருகில் நின்று ஃபோனை உயர்த்திப் பிடித்து அந்தச் செல்பியை அவள்தான் எடுத்திருந்தாள். அழகி என்பதை விடப் பார்த்தவுடன் கவரும் முகம். பளீர் சிரிப்பு. குதூகலம் மின்னும் கண்கள். அந்த முகத்தில் ஏதோ ஒரு காந்தம் இருந்தது.

அந்தப்பெண் உயிருடன் இல்லை என்பதை அவளாலும் நம்ப முடியவில்லை.

“காதலிச்சுத்தானே கட்டினீங்க?” அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை. அத்தனை மலர்ச்சி இருவர் முகத்திலும். அதிரூபன் வெகு இளமையாக, இளைஞனாக, அழகான புன்னகையோடு ஃபோஸ் கொடுத்துக் கொண்டிருந்தான்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock