அவனுக்கும் அவனுயிரில் அவதரிக்கப்போகும் பிள்ளை மீது ஆசைதான். ஆனால், அவளோடான வாழ்க்கை இன்னுமே கொஞ்சம் நீண்டால் நன்றாயிருக்கும் என்றும் பிரியப்பட்டான்.
“இப்ப என்னத்துக்கு மிருணா? கொஞ்ச நாள் போகட்டும்!”
“எங்களுக்கே எங்களுக்கு எண்டு ஒரு குழந்தை வேணாமா? என்னை அம்மா எண்டு கூப்பிட உங்களை அப்பா எண்டு கூப்பிட?” கட்டிலில் சரிந்திருந்தவனின் மார்பில் தலை சாய்த்தபடி அவள் சிணுங்கியபோது அவன் மனதும் பெரிதும் ஏங்கித்தான் போயிற்று!
மனைவியை ஒற்றைக் கையால் அப்படியே அணைத்துக்கொண்டு கிடந்தான்.
“என்னப்பா ஒண்டும் சொல்லுறீங்க இல்ல?”
“உனக்கு நான்தான்டி முதல் குழந்தை. என்ன முதல் நல்லா கவனி!” அவள் காது மடல்களைத் தீண்டியபடி சரமாய்ச் சொன்னான் அவன்.
“ஓம்! எனக்கு என்ர புருசன் தான் முதல் செல்லம். ஆனா எனக்கு இன்னுமொண்டும் வேணும்!” அவளும் அவன் உதட்டினில் உதட்டினைப் பதித்துவிட்டுக் கெஞ்சியபோது மயங்கிப்போனான் அவன்.
“அடி விசரி! முதல் பிள்ளைக்கும் ரெண்டாவது பிள்ளைக்கும் வயது வித்தியாசம் வேணுமடி. இல்லாட்டி மூத்தது ஏங்கிப் போய்டும். அத இன்னும் ரெண்டு வருசத்துக்கு வளத்துவிட்டுட்டு ரெண்டாவதைப் பாரு. இல்லாட்டி நீ மூத்ததை மறந்துடுவாய்.” அவளை இறுக்கமாகக் கட்டிப்பிடித்தபடி, சரசமாக அவன் இயம்பியபோது, அவன் வாயிலேயே ஒன்று போட்டாள் அவள்.
“எத்தின பிள்ளை பிறந்தாலும் என்ர மூத்த செல்லத்தை மறப்பனா நான்? எனக்குக் குட்டிக் குட்டியா ஒரு செல்லக்குட்டி வேணும்.. ப்ளீஸ்!” அவள் கெஞ்சியபிறகும் அவனால் மறுக்க முடியுமா என்ன?
அவன் சம்மதித்து என்ன பயன்? ஆண்டவன் அருள வேண்டாமா? அதுவரை அவர்களாகத் தள்ளிப்போட்டதேயில்லை. அதன் பிறகும்தான். ஆனாலும் எதிர்பார்த்த வரம் கிட்டவேயில்லை. மிருணா மெல்ல மெல்ல மாறிப்போனாள். பிள்ளை வேண்டுமே வேண்டுமென்று நின்றாள். மூன்று மாதங்களுக்குமேல் அவள் பொறுமை பறக்க, அவனையும் இழுத்துக்கொண்டு வைத்தியரிடம் போனாள்.
இருவருக்கும் எந்தக் குறையுமில்லை என்றாலும், அவள் பலகீனமாக இருப்பதாகச் சொல்லி மருந்து மாத்திரைகள் கொடுத்தார் அவர். அதற்கும் அவளது பொறுமை ஆறு மாதங்களே. நெட்டில் தேடி அவளாகவே கண்டுபிடித்த அடுத்த வழி அவன் வாழ்க்கையையே மாற்றிப்போட்டது.
சட்டென்று தலையை உதறிக்கொண்டு திரும்பினான் அதிரூபன். நெஞ்சின் தவிப்பு அடங்க மறுக்க மகளைத் தூக்கி மார்பில் போட்டுக்கொண்டு கிடந்தான். அன்றைய இரவு அவனுக்குச் சிவராத்திரிதான்!
அதன்பிறகு யாழ்ப்பாணம் சென்று வந்தும் எந்தப் பிரயோசனமும் இல்லை. எல்லாமாய்ச் சேர்ந்து அவனை மீண்டும் முடக்கிப் போட்டது. கொஞ்ச நாட்களாக வானதியையும் காணவில்லை. அன்று அவன் கம்பஸ் முடிந்து வந்தபோது, புதிய பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள் ரூபிணி.
“எங்காளம்மா இது?”
“வானதி கொண்டுவந்தவள் தம்பி. பிள்ளைக்கு உடம்புக்கு இதமா நாலஞ்சு உடுப்பும் தச்சுத் தந்தவள். தையல் தானாமே அவளின்ர தொழில். நல்ல வருமானமும் வருதாம். நானும் என்ர சாரி பிளவுஸ் எல்லாத்துக்கும் கை கொஞ்சம் பிடிச்சுத் தச்சுத் தரச்சொல்லி குடுத்துவிட்டிருக்கிறன். இண்டைக்கு அவளோட கோயிலுக்கும் போய் வந்தது மனதுக்கு இதமாய் இருக்கப்பு!” உற்சாகமாய்ச் சொல்லிக்கொண்டு அவனுக்குத் தேநீர் கொண்டுவரப்போனார் அவர்.
அவன்தான் அம்மாவுக்கும் சந்தோசமாயிருக்கும் என்று ஒருநாள் வலிந்து வீட்டுக்கு அழைத்துவந்து அறிமுகம் செய்துவிட்டிருந்தான். இப்படி அவ்வப்போது வந்துபோவாள் தான். ஆனால், இந்தச் சில நாட்களாக அவன் இல்லாத வேளைகளில் வந்துபோகிறாள்.
மீண்டும் பூங்காவுக்குச் செல்லத் துவங்கியபோதும் வானதியைக் காணவில்லை. என்னாயிற்று? அவன் தரப்பில் ஏதும் செய்ததாக அவனுக்கு நினைவில்லை.
அன்றும் விளையாடிக்கொண்டிருந்த மகள் ஓடிவந்து, “தாருண்ணா” என்று காட்டிச் சிணுங்கவும், திரும்பிப் பார்த்தான். அவள் காட்டிய திசையில் வானதி தாரகனை அழைத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தாள். இவள் ஏன் இங்கே வரவில்லை?
“வானதி!” அவன் சத்தமாக அழைக்க நின்றாள். முகத்தில் மட்டும் ஒருவித இறுக்கம்.
“கொஞ்ச நாளா ஆளையே காணேல்ல. வீட்ட மட்டும் வந்திட்டுப் போறியாம் எண்டு அம்மா சொன்னா. தாரகனுக்கு ஏதும் உடம்பு சரியில்லையா?” தாரகனிடம் விளையாட நழுவிய மகளை இறக்கி விட்டபடி கேட்டான்.
“அப்படி வருத்தம் ஏதும் வந்திடக் கூடாது எண்டுதான் வரேல்ல!” இறுக்கமாகச் சொன்னாள் அவள்.
கேள்வியாக அவன் ஏறிட, குழந்தைகள் விளையாடப் போய்விட்டார்கள் என்பதைக் கவனித்துவிட்டு, “நீங்க பத்திப்போட்டு வருவீங்க. வந்து ரூபியையும் தூக்கிக் கொஞ்சுவீங்க. உங்களுக்கு உங்கட அம்மா மகள் மேல அக்கறை இல்லை எண்டுறதுக்காக நானும் என்ர மகன் எதையும் சுவாசிக்கட்டும் எண்டு விட ஏலாது.” என்றாள் அவள்.
முகம் கறுத்து இறுகிப்போனது அவனுக்கு. “நான் ஒண்டும் நெடுக பத்துறேல்ல. இப்ப கொஞ்ச நாளாத்தான்..” வாக்கியத்தை முடிக்காமல் எங்கோ பார்வையைப் பதித்தான்.
“வாற வருத்தம் கொஞ்ச நாளா பத்திற ஆட்களைச் சுத்தி இருக்கிற ஆட்களுக்கு வராதோ?”
நக்கலாக அவள் கேட்க சுட்டுவிட்டது அவனுக்கு.
“இனி நான் உனக்கும் உன்ர பிள்ளைக்கும் பக்கத்தில வரேல்ல.” என்றவன் மகளைத் தூக்கப் போக, “ஹல்லோ பொஸ்! பொறுங்க பொறுங்க! எதுக்கு இவ்வளவு கோவம்? உங்கட நல்லதுக்குச் சொன்னா கேக்க மாட்டீங்களா?” என்று ஓடிவந்தாள் அவள்.
அவனுக்கும் புரிந்ததுதான்!
“சில நேரம் தவிர்க்க முடியிறேல்ல வானதி!” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.
“அதென்ன சிலநேரம்?” அவன் சொல்வது விளங்கினாலும் விடாமல் கேட்டாள்.
“அதெல்லாம் உனக்கு விளங்காது.”
“உங்கட மகளுக்கு விளங்குமோ? இல்ல உங்கட மனுசிக்கு? அவதான் நான் இல்லாட்டி பத்துங்கோ எண்டு சொன்னாவோ.”
அவளிருந்தால் அவன் ஏன் அதன் அருகாமையை நாடப்போகிறான்? அவள்தான் அப்படி நாட விட்டுவிடுவாளா? மடி சாய்த்து, தலைகோதி, என்ர செல்லக் கண்ணனுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு, அத்தனையையும் தீர்த்துவிட மாட்டாளா என்ன?
மகளைத் தூக்கிக்கொண்டு அவன் போக முயல, “கவலை, துன்பம் எல்லாருக்கும் இருக்குத்தான். அதுக்காக ஆளாளுக்குத் தண்ணி சிகரெட் எண்டு ஆரம்பிச்சா என்னாகும்? உங்கட அம்மாவும் தான் ஒருகாலத்தில மனுசனை இழந்து தனிச்சுப்போய் நிண்டவா. அவாவும் சிகரெட் பத்தினவாவோ? சும்மா, நீங்க செய்ற பிழைக்குச் சாட்டுச் சொல்லாதீங்கோ. உங்கட மகள்? இந்த வயசில அம்மா இல்லாம நிக்குது. அப்ப அந்தக் குழந்தை என்ன குடிக்கவேணும் எண்டு நினைக்கிறீங்க?” விடாமல் அவள் கேட்க, முறைத்துவிட்டு விறு விறு என்று நடந்துவிட்டான் அவன்.