ஆனால், அவர் சொன்னவைகளே போதுமாக, கைகால்கள் எல்லாம் நடுங்க அங்கிருந்து ஓடியே போனாள் வானதி.
“என்னம்மா இந்த ஓட்டம் ஓடுறாள்?” அவன் கூப்பிட்டதைக் கூடக் கேட்காமல் ஓடுகிறவளைத் திரும்பிப் பார்த்தபடி கேட்டான் அவன்.
“உன்னைப்பற்றிக் கேட்டவள்.. சொல்லிக்கொண்டு இருந்தன்..” மகன் என்ன சொல்லுவான் என்று தெரிந்ததில் மெல்லிய தயக்கத்தோடு இழுத்தார்.
அவனுக்குள் மூண்ட கோபம் தாய் தன்னிடம் தயங்குவதா என்கிற கேள்வியில் அடங்கியது.
ஆயினும், “ஏனம்மா தேவையில்லாம அதையெல்லாம் அவளுக்குச் சொல்லிக்கொண்டு..” என்று சலித்தான் அவன்.
“நல்ல பிள்ளை தம்பி. ஒருத்தருக்கும் சொல்லமாட்டாள். மனதுக்க அடச்சுக்கொண்டு கிடக்கிறத அவளிட்ட சொல்லுறது எனக்கும் கொஞ்சம் ஆறுதல்!” என்றவர், ஆய்ந்த, இன்னும் ஆயாமல் கிடந்த முருங்கை இலைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு எழுந்து, சமையலறை நோக்கித் தளர்வாக நடந்தார்.
மிருணா இருந்திருக்க அவருக்கும் இவ்வளவு வேலைச் சுமைகள் இருந்திருக்காதே. வயதான காலத்தில், நோய்நொடிகள் ஒருபக்கம், வீட்டு வேலைகள் மறுபக்கம், இதில் ரூபிணியைப் பார்ப்பது என்பதும் இலகு அல்லதானே. அவனுக்கும் மனம் பாரமாயிற்று. அம்மா இருப்பது அவனுக்கு எவ்வளவோ ஆறுதல். ஆனால் அவருக்கு? இப்படி அவளிடம் கொட்டுவதுதான் ஆறுதல் போல.
மீண்டும் மாயமானாள் வானதி. இரண்டு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை.
கலைவாணி அம்மா எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போனார்.
“வானதி வந்தவளாம்மா? பூங்காவிலயும் ஆளைக் காணேல்ல. ரூபிணி தாரகனைத் தேடி அழுறாள்.” அன்று பூங்காவிற்குப் போய்விட்டு வந்த அதிரூபன் கேட்டான்.
“அங்கேயும் வரேல்லையா? நான் நினைச்சன் நேரமில்லாம இங்கதான் வரேல்ல எண்டு. ஒருக்கா போய்ப் பாத்துக்கொண்டு வா ஐயா. ஏதும் வருத்தமோ தெரியாது. ஆம்பிளைத் துணை இல்லாம தனியா இருக்கிறாள். அம்மா வீட்டுக்கே போ எண்டாலும் கேக்கிறேல்ல. பாசமா பழகின மனது என்னவோ ஏதோ எண்டு தவிக்குது.”
அவனுக்கும் யோசனைதான். எனவே அவளது நம்பருக்கு அழைத்தான்.
அழைப்புப் போனதே தவிர அவள் எடுக்கவில்லை. ஆனால், ‘வைபர்’, ‘வாட்ஸ் அப்’ புகளுக்கு அன்றும் வந்து போயிருக்கிறாள் என்று காட்டியது.
“வானதி எங்க நிக்கி றாய்? ஃபோன் பண்ணு!” என்று செய்தி அனுப்பியும் பதில் இல்லை.
“ஃபோனைப் பாத்துக்கொண்டு சும்மா இருக்காம, ஒரு எட்டுப் போய்ப் பாத்துக்கொண்டு வாவனப்பு. நாளைக்கு ஏதும் நடந்த பிறகு கவலைப்படுறதில எந்த அர்த்தமும் இல்லை!”
அவனுக்கும் மனம் சரியே இல்லை. அன்னையின் பேச்சும் சரியாகப் பட, புறப்பட்டுவிட்டான்.
ஒருநாளும் அவள் வீட்டுக்குப் போனதில்லை. ஒருமுறை விசாரித்தபோது வீதியின் பெயரைச் சொல்லியிருக்கிறாள். ராதா ஒழுங்கை என்று விசாரித்துக்கொண்டு அந்த வீதிக்குப் போய்விட்டான். அங்கே எங்கே என்று கேட்பது? பார்த்தால் ஒரு வீட்டின் முன்னே லொறி நிற்க, ஆட்களின் நடமாட்டம் தெரிந்தது.
அவர்களிடம் கேட்போம் என்று நெருங்கினால், அது அவளின் வீடு.
இவனைக் கண்டதும் அதிர்ந்து நின்றுவிட்டாள். அதைவிட, அவளின் வீட்டுப் பொருட்கள்தான் லொறியில் ஏற்றப்பட்டுக்கொண்டு இருந்தது.
“சொல்லாம கொள்ளாம அதுவும் இவ்வளவு அவசரமா எங்க போறாய்? ஏதும் பிரச்சனையா?” காரிலிருந்து இறங்கி அவளிடம் போய்க் கேட்டான். அவனுக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை.
அவளுக்கோ வார்த்தைகளே வராமல் நாக்கு வறண்டு போயிற்று.
“வானதி!” அவள் விழிப்பதைப் பார்த்து சற்றே அழுத்தி அழைத்தான்.
“இல்லையில்லை. ஒரு பிரச்சனையும் இல்ல. நீங்க வெளிக்கிடுங்கோ!” என்றாள் அவள்.
அவன் புருவங்கள் சுருங்கிற்று! எதற்கு இந்தப் பதட்டம். தடுமாற்றம்?
அவள் மீது கூர்மையுடன் படிந்தது அவன் பார்வை. அவளோ அவன் விழிகளைச் சந்திப்பதைத் தவிர்த்தாள்.
“அங்க… வீட்டுல ஆண்ட்டியும் ரூபியும் தனிய எல்லோ. அதுதான்…” தன் உளறலைப் பூசி மெழுகத் தெரியாமல் தடுமாறினாள் வானதி.
நட்டுவைத்த கம்பம் போல் அசையவே இல்லை அவன்.
“இங்க நீயும் தான் ஒண்டுமே சொல்லாம தனியா வெளிக்கிடுறாய்!” என்றான். “ஏதும் பிரச்சனை எண்டால் யோசிக்காம சொல்லு, என்ன எண்டாலும் சமாளிக்கலாம்.” இதமாய்க் கேட்டும் பார்த்தான்.
அவளுக்கு வியர்க்கத் துவங்கியது. “ஒண்டுமில்ல. எனக்கு நேரமாச்சு. நான் வாறன். நீங்க நடவுங்கோ.” என்றுவிட்டுக் கிளம்பினாள்.
அவளது உடல்மொழி நிதானமாய் இல்லை. ‘என்னவோ சரியில்ல..’ அவன் மனதில் பட்டது.
“சரி, எங்க போறாய் எண்டாவது சொல்லிப்போட்டு போவன்!” என்று நிறுத்தினான் அவன்.
விடுறான் இல்லையே.. கடவுளே..
“போய் மெசேஜ் பண்ணுறன்..”
“இப்ப சொல்லிட்டு போனா என்ன? அங்க அம்மா உனக்கு என்னவோ ஏதோ எண்டு கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறா. அவாட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம.. என்ன விசயம் வானதி?” அவளின் பதட்டம் கண்டு அவன் பார்வையில் இன்னுமே கூர்மை ஏறியது.