என்ன குண்டு வெடிக்குமோ என்கிற பதைப்போடு அவன் காத்திருக்க, எந்நேரமும் அவன் மார்பிலேயே சாய்ந்திருந்தாள். அவனால் அவளின் அமைதியைச் சகிக்கவே முடியவில்லை. எப்படி இருந்தவள். அந்தக் குழந்தைக்காக எவ்வளவு ஆவலாக இருந்தாள்? மனம் தாளாமல், ஆறுதல் வார்த்தைகள் சொல்லியபடி ஒருநாள் அவன் வருடிக்கொண்டு இருக்க முற்றிலுமாக உடைந்தாள் மிருணா.
“ஏனப்பா ஏன்? ஒரு குழந்தை வரம் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா? அந்தளவுக்கு யாருக்கு என்ன பாவம் செய்தனான்?” அவன் மார்பிலேயே கதறித் தீர்த்தவளை ஆறுதல் படுத்தப் பெரும் பாடுபட்டுப் போனான் அதிரூபன்.
ஒருவாரம் கடந்திருக்க, “வாங்கப்பா டாக்டரிட்ட போயிட்டு வருவம்!” என்று மீண்டும் வந்து நின்றாள் மிருணா.
திக் என்றது அவனுக்கு. மறுபடியுமா? நொந்துபோய் இருக்கிறவளிடம் மறுக்க மனமில்லாமல் அவளோடு இழுபட்டான்.
“எனக்கு குழந்தை பிறக்க வழியே இல்லையா டாக்டர். எதையும் மறைக்காம உண்மையைச் சொல்லுங்க.” சங்கரியிடம் நேரடியாகக் கேட்டாள் மிருணா.
அவர் முகத்தில் இவர்களைக் கண்டதும் சங்கடம். குற்றவுணர்ச்சி குத்தியது. “எவ்வளவு தேடியும் கிடைக்கிறாள் இல்ல. இப்படிச் செய்வாள் எண்டு நினைக்கவே இல்லை.” மிகவுமே வருந்திச் சொன்னார்.
நம்பிக்கையான குடும்பம்; நல்ல பெண் என்று வீட்டிலேயே வைத்திருந்தார். தப்பிப்பாள் என்று எதிர்பாராததில் அவரும் கண்காணிக்க நினைக்கவில்லை. அதற்கான முகாந்திரங்கள் எதுவுமில்லையே! திருமணமாகாத பெண்ணை வாடகைத்தாயாக்குவது சட்டப்படியும் பிழை என்பதில் அவரால் சட்டத்தை நாடவும் முடியவில்லை.
அவரின் தர்மசங்கடத்தை உணர்ந்தாளோ இல்லையோ, கலங்கிய கண்களைச் சட்டென்று துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள் மிருணா. “அந்தக் கதையை விடுங்கோ டாக்டர். விட்டுட்டு என்னைப்பற்றி மட்டும் சொல்லுங்கோ.” என்றாள் பட்டென்று.
“முதலே சொன்னதுதான், உனக்கு எந்தக் குறையும் இல்லை மிருணா. கர்ப்பப்பை பலகீனமா இருக்கு. தொடர்ந்து மெடிசின்ஸ் எடு. நம்பிக்கையோட இரு சரியா வரும்.” என்றார் சங்கரி.
அவரையும் குற்ற உணர்ச்சி தாக்கியதில் எப்படியாவது அவளுக்கு ஒரு குழந்தை உருவாக முழுமையாக முயற்சி செய்யவேண்டும் என்று முடிவு செய்துகொண்டார்.
தலையாட்டியவள் அன்றிலிருந்து மீண்டும் மருந்துகளின் வசமானாள்.
மருந்துகளின் பலனா, அல்லது கலைவாணி அம்மாவோடு சேர்ந்து அவன் இருந்த விரதமா இல்லை இப்படித்தான் அமையவேண்டும் என்று இருந்த விதியா? ஆண்டவன் மட்டுமே அறிவான். சரியாக நான்காவது மாதம் அவள் வயிற்றிலும் குழந்தை தரித்தது. ஆனால், அவளின் கற்பப்பை முற்றிலுமாக பலம்பெற்றிருக்கவில்லை.
“கொஞ்சம் ரிஸ்க்தான் அதிரூபன். இந்தக் குழந்தை வேணுமா எண்டு யோசிங்கோ. மிருணாக்கு ஆபத்து வரவும் சந்தர்ப்பம் இருக்கு.” என்று அவளின் உடல்நிலையை எடுத்துரைத்தார் சங்கரி.
அவளுக்கு ஏதும் நடந்துவிடுமோ என்று அஞ்சி அவன் வேண்டாம் என்க, மிருணாவோ வேண்டுமே வேண்டும் என்று தலைகீழாக நின்றாள். கிடைக்கவே கிடைக்காது என்று இருந்த வரம் கிடைத்தபோது தவறவிட அவள் தயாராயில்லை.
என்றுமே அவளது பிடிவாதம் தானே வென்றிருக்கிறது!
பலகீனமாக இருக்கிறாள் என்று சொன்னபோது, அவர் சொன்ன மருந்துகள், மாத்திரைகள், உணவுகள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி என்று எல்லாவற்றையும் மிகக் கவனமாக ஒன்றைக்கூட தவறவிடாமல் செய்தாலும் கொஞ்சமும் அவள் பயப்படவே இல்லை. தனக்கு ஏதும் நடந்துவிடுமோ என்கிற எண்ணமே அவளுக்கு இல்லை.
“இப்ப எல்லாம் கர்ப்பமா இருக்கிற பெண்கள் வீக்கா இருக்கிறாங்க எண்டு சொல்றதை டாக்டர்ஸ் எல்லாரும் ஒரு பேஷனா வச்சிருக்கீனம். அதுக்கெல்லாம் பயப்படக் கூடாது. பாருங்கோ எனக்கு சுகப்பிரசவம் தான் நடக்கும். ரெண்டு நாள்ல நானும் பிள்ளையும் வீட்ட வந்திடுவம்.” என்று கணவனை அவள் தேற்றினாள்.
“கொஞ்சம் பொறுமையா இருந்திருக்க, ஒரு பிரச்சனையும் வந்திருக்காது என்னப்பா?” என்றாள் ஒருநாள் கண்ணீரோடு. “எல்லாம் என்ர அவசரக் குணத்தால வந்தது..”
அவன் மனதிலும் அதுதான். அந்தக் குழந்தை என்ன ஆனதோ? எப்படி இருக்கிறதோ என்கிற நினைவுதான். மனைவி தாயாகியிருக்கிறாள் என்று மகிழ முடியாமல் அந்தக் குழந்தையின் நினைவு வாட்டியது. என்றாலும் அதை மறைத்து, “விடுடா. சும்மா எதையாவது யோசிச்சு உன்னை கெடுக்காம நிம்மதியா சந்தோசமா இரு!” என்றான் குரல் கரகரக்க.
“சரி பரவாயில்ல விடுங்க. அது அவளின்ர குழந்தை அவள் வளக்கட்டும். நமக்கு நம்ம ரத்தத்திலேயே வரப்போகுது பிள்ளை. நாங்க எங்கட பிள்ளையை வளப்பம்.” என்றவளை அதிர்வோடு பார்த்தான் அவன்.
இலகுவாகத் தீர்வு கண்டுவிட்டாள். ஆனால், அவன் உயிரில் உதித்த குழந்தையை அவளைப்போல விட முடியவில்லை அவனால். என்ன இருந்தாலும் அவனின் மூத்த பிள்ளை.
அதிரூபன் தன் நிம்மதியை இழந்தான். உறக்கத்தை இழந்தான். சந்தோசத்தை இழந்தான்.
மனைவியின் முன்னே சாதாரணமாகவும் நடிக்கவேண்டி இருந்தது. எவ்வளவோ பாடுபட்டுக் குழந்தையைத் தாங்கி இருப்பவளை அவன் மனக்கவலை பாதித்து விடக்கூடாதே.
எங்கே போயிருப்பாள். என்னமாதிரி இருக்கிறது அவள் வாழ்க்கை? குழந்தையின் நிலை என்ன? மனைவியைப்போல அவனால் தூக்கிப்போட முடியவில்லை. ஒரு சிறுபெண்ணின் மனதில் எத்தனை பெரிய மாற்றங்களை உருவாக்கிவிட்டான். அவளது கடிதவரிகள் வேறு நெஞ்சுக்குள்ளேயே நின்று வாட்டின. நிம்மதி இழந்து தவித்தான். மனைவி கருவுற்ற சந்தோசத்தை கூட முற்றாக அனுபவிக்க முடியாமல் அவளின் நினைவுகள் அவனை அலைக்கழித்தது.
அதுவும் ஒவ்வொரு மாதமும், “இங்க பாருங்க என்ர வயிறு பலூன் மாதிரி வந்திட்டுது.” சந்தோசப் பூரிப்புடன் சொல்கையில் அவளின் நினைவு ஓடி வந்தது. இப்படித்தானா அவளும் உணர்ந்திருப்பாள்.