குழந்தை முதல் முதல் அசைந்தபோது, மனைவி ஆசையாசையாக அவன் கையை எடுத்து வயிற்றில் வைத்தபோது, குழந்தையும் அப்பாவை உணர்ந்து அசைந்தபோது உணர்ச்சி மேலீட்டால் அவளை அணைத்துக்கொண்டவனின் எண்ணங்கள் அவளிடம் ஓடின.
மிகக் கொடுமையாகக் கழிந்தது அவன் நாட்கள். ஒருநாள் பிள்ளைப்பேற்று வலியும் வந்துவிட வைத்தியசாலைக்குக் கொண்டு ஓடினான்.
மொத்தக் குடும்பமும் அருகிருந்து, அவனது கையைப் பிடித்துக்கொண்டு கதறிய மனைவியைக் கண்டு கண்களில் கண்ணீர் வழிந்தது அவனுக்கு. கூடவே அவளை எண்ணி நெஞ்சில் இரத்தம் வடிந்தது. தனியாக எப்படிச் சமாளித்திருப்பாள்? கடவுளே நன்றாக இருப்பாளா? இறந்து.. ஐயோ.. இல்லை இல்ல.. சின்னப்பெண் பிள்ளைப்பேற்றைத் தாங்காமல் எழுதி இருந்தாளே.. நான் இறந்துவிட்டால் டாக்ட்டரிடம் குழந்தையை ஒப்படைப்பதாக. பதற்றத்தோடு டாக்டருக்கு அழைத்துக் கேட்டான். “டாக்டர்.. அந்தப் பெண்ணைப் பற்றி ஏதாவது விபரம்?”
“இந்த நேரத்தில இதென்ன கேள்வி?” சற்றே சினம் துளிர்க்கக் கேட்டார். அவரே மிருணாவை எண்ணிப் பெரும் பதட்டத்தில் இருக்கையில் அவன் இப்படிக் கேட்டால்?
“இல்ல டாக்டர். இவளே இந்தத் துடி துடிக்கிறாள். அது சின்னப்பிள்ளை? எந்த அனுபவமும் இல்லாம, யாரோட துணையும் இல்லாம.. என்ன நரக வாழ்க்கை டாகடர் இது? அவளுக்கு ஏதாவது எண்டா குழந்தைய உங்களிட்ட கிடைக்கிற மாதிரி செய்றன் எண்டு சொன்னாள். அதுதான் கேக்கிறன்.” என்றான்.
அவருக்கும் புரிந்தது அவனது மனநிலை.
“இல்ல.. எந்தத் தகவலும் வரேல்ல. அவ திடகாத்திரமான தைரியமான பெண். சமாளிச்சிருப்பாள்.” என்றார் அவர்.
நிச்சயமாகத் தைரியசாலிதான். இல்லாவிட்டால் கன்னிப்பெண் ஒருத்தி தாயாகத் துணிந்ததுமல்லாமல், அந்தக் குழந்தையைத் தனியாக வளர்க்கிறேன் என்று கிளம்பி இருப்பாளா?
‘எங்க இருந்தாலும் நல்லா இருக்கோணும்.’ மனதின் ஆழத்திலிருந்து வேண்டிக்கொண்டான்.
“டாக்டர் ப்ளீஸ், நான் காசு தாறன் குடுத்து விடுறீங்களா?”
“என்ன.. என்னை ஆழம் பாக்குறீங்களா?” சட்டெந்று கோபம் வந்துவிட்டது சங்கரிக்கு.
“டாக்டர் ப்ளீஸ். என்ர நிலமையையும் கொஞ்சம் விளங்கிக்கொள்ளுங்கோ. அது என்ர குழந்தை. மிருணா மாதிரி அவளின்ர குழந்தை எண்டு என்னால பாக்க முடியேல்ல. அது என்ர ரத்தம். தூக்கி வளக்கிற பாக்கியம் தான் கிடைக்கேல்ல எண்டாலும் எங்கயாவது கஷ்டமில்லாம நல்லா இருக்கோணும் எண்டு நினைக்கிறதும் பிழையா? நீங்களும் நினைக்கலாம், அவளும் பிள்ளையும் வந்தா எங்கட குடும்பத்துக்கு சிக்கல் எண்டு. அதனாலேயே மறைக்கலாம் தானே.” கண்ணோரங்கள் நீரில் நனைந்துவிட அவன் சொன்னபோது, அவனது கரத்தைத் தட்டிக்கொடுத்தார் அவர்.
“சத்தியமா எனக்குத் தெரியாது அதிரூபன். தெரிஞ்சாலும் நீங்க சொன்னமாதிரி அவள் எங்க இருக்கிறாள் எண்டு சொல்லமாட்டன். ஆனா, குழந்தையக் கட்டாயம் வாங்கித் தருவன். கவலைப்படாதீங்கோ. வாங்கோ இப்ப மிருணாவை பாப்போம்.” என்று தேற்றி அழைத்துப் போனார்.
மறுஜென்மப் போராட்டம் மிருணாவுக்கு ஆரம்பித்திருந்தது. அவளை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே அவளுக்காக அதிரூபனும் போராட ஆரம்பித்திருந்தான்.
ஆனால், அவ்வளவு வலியிலும் உள்ளே போகமுதல் அவன் கரத்தைப் பற்றி, “என்ன இது பொம்பிளை மாதிரி அழுதுகொண்டு? என்ர மகள் உங்கட அழுத முகத்தையா முதன் முதலா பாக்கிறது? தைரியமா சிரிச்சுக்கொண்டு நில்லுங்கோ, கொஞ்சத்துல மகள் வந்திடுவாள்.” என்று அவனைத் தேற்றிவிட்டுப் போனாள்.
போனவள் வெளியே வரவேயில்லை. பிள்ளையின் அழுகுரல் கேட்டப்போது குழந்தை பிறந்துவிட்டது என்று ஆனந்தம் கொண்டதை விட, அவளின் வலிகள் முடிந்துவிட்டது என்றுதானே ஆறுதல் கொண்டான்.
அதன் பிறகு நடந்தவைகள்? அவனால் நினைக்கக் கூட மாட்டாதவைகள். பிள்ளைப்பேற்றைத் தாங்க முடியாமல் அவன் மனைவியின் உயிர் பிரிந்து போயிற்றாம். பிள்ளையைக் காப்பாற்றியதே பெரும் பேறாம் என்று என்னென்னவோ சொன்னார்கள். என்னென்னவோ செய்தார்கள். மொத்தத்தில் அவன் மனைவி அவனுக்கு இல்லை என்றார்கள்.
மீண்டும் அவன் கண்டது அவளின் உயிரற்ற உடலைத்தான்.
“ஆம்பிளை பிள்ளையா இருந்தா மிருணன் பொம்பிளை பிள்ளையா இருந்தா ரூபிணி.” என்று பெயரைக்கூடத் தெரிவு செய்துவிட்டுப் போனாளே!
குழந்தைக்கான பொருட்களை, உடைகளை பிள்ளை பிறந்தபிறகுதான் வாங்கவேண்டும் என்று சொன்னபோது, “எங்கட சனத்துக்கு விசர். என்ர பிள்ளைக்கு நான்தான் வாங்கிப்போடவேணும். பிறகு எனக்கு முடியாம இருக்கும். நீங்க ரசனையே இல்லாம வாங்கி வருவீங்க.” என்று எல்லாவற்றையும் பிள்ளைக்காகச் செய்துவிட்டுப் போனவள் அந்தப் பிள்ளைக்காகக் கூடித் திரும்பி வராமல் விட்டுவிட்டாள்.
‘கொஞ்சத்தில் மகள் வந்திடுவான்.’ என்றவள் ஏன் நானும் வருவேன் என்று சொல்லவில்லை.
அவளின் மன தைரியம் ஏன் உடலுக்கு இல்லாமல் போனது?
அவள் தந்த தைரியத்தில்தான் அவன் திடமாக இருந்தான். அதுதான் உண்மை. அவன் ஆண், கணவன் என்று எப்படிச் சொன்னாலும் உண்மையிலேயே அவனுடைய தைரியமாக, நம்பிக்கையாக அவள் தான் இருந்தாள். அவளின் முதல் பிரசவத்தை, வலியை கண்ணால் கண்டும் அவன் தாங்கியது கூட அவள் தந்த தைரியத்தில் தானே. அவள் துடித்தபோதெல்லாம் அவன் கலங்கித் தவித்தபோது, அவ்வளவு வலியிலும், “இதெல்லாம் நார்மல் அப்பா. சும்மா இருங்கோ. என்ர மகள் சாதாரணமா வருவாளா?” என்றுவிட்டு அல்லவா உள்ளே சென்றாள்.
துறுதுறுப்பாக, துடிதுடிப்புடன் துள்ளித் திரிந்த மனைவியின் அசைவுகள் அத்தனையும் அடங்கிப் போயிருக்க, அமைதியாக உறங்கி கொண்டிருந்தவளை நம்பவே முடியாமல் பார்த்தான். அவனது மிருணாளினியின் உடலில் உயிர் இல்லை என்பதை கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தபோதும் அவனால் நம்ப முடியவில்லை.
ஹாஸ்ப்பிட்டல் வரமுதல் அவளுக்கு அவன் இட்டுவிட்ட திருநீறு கூட கொஞ்சமே கொஞ்சம் அந்த நெற்றியில் இருந்தது. அவள் எப்போதும் வைத்துக்கொள்ளும் வகிட்டுக் குங்குமம் கூட அழியவேயில்லை. நடுங்கும் கரத்தால் மெல்லத் தொட்டுப் பார்த்தான். தேகம் மட்டும் ஐஸ் கட்டியாகக் குளிர்ந்தது.
சற்றுமுன் வரையிலும் அவன் கையைப் பிடித்துக்கொண்டிருந்த ஒருத்தி இனி அவனுக்கு இல்லையா? இரவு கூட அவனருகில் தானே உறங்கினாள். காலையில் அவனுக்கு ஒரு வாய் ஊட்டிவிட்டாளே, அவள் இனி இல்லையா?
அவள் இல்லாத உலகில் பிள்ளைப் பாசம் கூட அற்றுப் போனதுபோலாயிற்று. அவன் உலகத்தையே அழித்துவிட்டுப் பிறந்த குழந்தையைக் கையில் கொண்டுவந்து தந்தபோது கொஞ்சக்கூட முடியாமல் வெறித்திருந்தான். ரோஜா முகம், சின்னச் சிவந்த செப்பு இதழ்கள். கறுத்த கம்பி முடி என்று அப்படியே தன் சாயல்கள் அத்தனையையும் மகளுக்குக் கொடுத்துவிட்டுப் போயிருந்தாள்.
நெஞ்சு கனக்க கண்கள் கசிய மகளை ஒருமுறை அணைத்தகணம் அவன் உடைந்தான். மொத்தமாக உடைந்து கதறியவனிடம் இருந்து பயந்துபோய் நர்ஸ் வேகமாகக் குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
அழுதாலும் புரண்டாலும் மாண்டவர் வரப்போவதில்லையே! அவனுடைய மிருணாவும் வரவேயில்லை!