வீடே கனத்த மௌனத்தில் ஆழ்ந்திருந்தது. தன்னெதிரில் அமர்ந்திருந்த சங்கரியின் பார்வை தன் மீதுதான் என்று தெரிந்தும் தலை நிமிரவில்லை, வானதி.
பயம், ஏமாற்றம், கண்ணீர் அனைத்தும் அதிரூபனின் ஒற்றைச் சத்தியத்தில் ஓய்ந்திருந்தாலும், சங்கரி இன்னும் என்ன சொல்வாரோ என்கிற பயம், அவளை அழுத்திக் கொண்டிருந்தது.
சங்கரிக்கும் பெரும் கோபம் தான். உயிராய் நேசித்துச் செய்யும் தொழிலுக்கு மிகப் பெரிய அடியைப் போட்டுவிட்டாளே. ஆனால், அவள் வாழ்வின் சிக்கலில் தனக்கும் பங்கிருப்பதாய் எண்ணியதில், அதைத் தீர்க்கவேண்டியது தன் பொறுப்பும்தான் என்று நினைத்தார்.
“இங்க நடந்ததை நான் எப்பிடி எடுக்கிறது அதிரூபன்?” அன்று தொலைபேசியில் அவ்வளவு சொல்லியும் திருமணத்துக்குச் சம்மதியாதவனின் செயலுக்கு விளக்கம் கேட்டார், அவர்.
“அவளும் தாரகனும் இங்கதான் இருப்பீனம்!” வானதியின் மீதே பார்வையைப் பதித்துச் சொன்னான் அதிரூபன்.
வேகமாய் நிமிர்ந்து அவனைப் பார்த்த வானதியின் கண்கள் கலங்கியது. நன்றி சொல்வாளா அல்லது இப்படி அடைக்கலம் தேடும் நிலையிலிருக்கும் தன்னிலையை எண்ணி வருந்துவாளா?
“நல்ல முடிவு! ஆனா, அவள் ஆர் இந்த வீட்டுல? உங்களுக்கு என்ன உறவு? உங்கட அம்மாவுக்கு? இந்தப் பிள்ளைகளுக்கு ஆர் அவள்? சும்மா வச்சு வேலை வாங்குறது சரியில்ல அதிரூபன்?”
அவன் நெஞ்சைக் குத்திக்கொண்டிருக்கும் கேள்விகள்! இதற்கான பதிலைக் கொடுக்க முடியாமல் தானே போராடிக்கொண்டு இருக்கிறான். அவன் விழிகள் அவளிடம் செல்ல, அவளும் திகைப்போடு என்ன சொல்லப்போகிறான் என்று அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
நிதானமாக அதை உள்வாங்கிக் கொண்டவன், “சகலதும் அவள்தான் இந்த வீட்டுக்கு!” என்று வெகு நிதானமாக, விழிகளை அவளிடமிருந்து அகற்றாமல் சொல்லி முடித்தான்.
“அப்ப எப்ப திருமணம்?”
அவர் கேட்டு முடிக்க முதலே, “இல்ல! வேண்டாம்!” என்று அதிரூபனை முந்திக்கொண்டு வேகமாகச் சொன்னாள் வானதி.
“நீ வாயைத் திறக்கப்படாது சொல்லிப்போட்டன்! செய்றதையும் செய்துபோட்டு பேச்சு வேற!” அவர் அதட்டிய அதட்டலில் வேகமாகத் திரும்பி அதிரூபனைத்தான் பார்த்தாள் வானதி. தயவுசெய்து சம்மதித்துவிடாதே என்று இறைஞ்சியது அவள் விழிகள்.
அதிரூபன் பதில் ஒன்றும் சொல்லாமல் நின்றான். விழிகள் மட்டும் அவளின் உணர்வுகளை எடைபோட்டுக் கொண்டிருந்தது.
சம்மதிக்காதே என்று செய்தி அனுப்பி, அவன் பதிலில்லாமல் இருக்க, சம்மதித்துவிடுவானோ என்று பயந்து, பின் கசங்கிய முகத்தோடு தலையைக் குனிந்துகொண்டாள்.
அவனுக்கும் இதில் விருப்பமில்லை என்று எப்படிச் சொல்வான்? சம்மதிக்காதே என்று கெஞ்சும் அவள் உள்ளம், அதையே அவனும் சொன்னால் எப்படிக் காயப்படும் என்று தெரியாதா?
“இப்போதைக்கு அவளும் மகனும் இங்கதான் இருப்பீனம் டொக்டர்!” முதலில் சொன்னதையே மீண்டும் சொன்னான்.
“அது சரியா வராது அதிரூபன். அவளுக்கு உங்கட மகனைச் சொந்தம் கொண்டாட எந்த உரிமையும் இல்லை. அதைவிட, வாடகைத்தாய்க்கு எண்டு கொண்டுவந்த பெண்ணை இப்பிடி உங்கட வீட்டுல முறையில்லாம வச்சிருக்க நான் சம்மதிக்கமாட்டன். ஒண்டில் நீங்க அவளைத் திருமணம் செய்யவேணும் இல்ல மகனை வாங்கிக்கொண்டு அனுப்பவேணும். ரெண்டுல ஒரு முடிவை விரைவா எடுங்கோ!” என்றவர்,
அவளிடம் திரும்பி, “இனியும் எங்கயாவது ஓடுறன் ஒளியிறன் எண்டு வெளிக்கிட்டாய் எண்டு வை, நடக்கிறது நடக்கட்டும் எண்டு உன்ர போட்டோவைப் போட்டு எல்லா பேப்பர்லயும் விளம்பரம் போட்டுடுவன் சொல்லிப்போட்டன்!” என்று ஒரு போடு போட்டுவிட்டுப் புறப்பட்டார்.
அவர் போனபிறகு புயலடித்து ஓய்ந்த அமைதிதான் அந்த வீட்டில். அதிரூபன் சுவரில் சாய்ந்து கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு எங்கோ தொலைதூரத்தில் பார்வையைப் பதித்திருக்க, கலைவாணி அம்மா கண்களை சேலைத் தலைப்பால் துடைத்தபடி இருக்க, அப்படியே சிலைபோல அமர்ந்திருந்தாள் வானதி.
எப்போதுமே, விளையாடிவிட்டு வந்ததும் குளிக்கவைத்து உணவூட்டும் அன்னையின் கவனிப்பு இல்லாமல் போனதில் சிணுங்கிக்கொண்டு வந்த ரூபிணி, வானதியின் கையைப் பற்றி இழுக்க, அவளைத் தூக்கி மடியில் அமர்த்த முனைந்தாள் வானதி. அவளோ மறுத்து இவளை வா என்று இழுத்துக்கொண்டு இருந்தாள்.
வானதிக்கு அதிரூபனின் முன்னே எழுந்து நடக்கக் கால்களே வரவில்லை. திருமணத்தைப் பற்றிச் சங்கரி இழுத்துவிட்டதில் ஒருமாதிரி அவமானமாக உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் அனுப்பிய கடிதம் அவன் கைக்குச் சேராமல் இருக்கச் சந்தர்ப்பம் இல்லை. சேர்ந்ததற்கு அடையாளமாக எந்தக் குறிப்பையும் அவன் உணர்த்தவுமில்லை. அப்படியிருக்க, திருமணப் பேச்சும் வந்துவிட்டதால் அன்றைக்குத் தான் எழுதியவை எல்லாம் நினைவில் வந்து அவன் முகத்தைப் பார்க்கவிடாமல் செய்துகொண்டிருந்தது.
வெட்கமே இல்லாமல் என்னென்னவோ எழுதி.. கடவுளே..
மகளின் சிணுங்களில் சிந்தனை கலைந்தவன் வானதியைப் பார்த்தான். அவள் அசையக் காணோம் என்றதும், “பிள்ளையைப் பார் வானதி!” என்றான் அதட்டலாக.
அதிர்ந்து அவனைப் பார்த்தாள் வானதி. இதென்ன இவ்வளவு உரிமையான அதட்டல்? ஆன்ட்டி என்ன நினைப்பார் என்று அவரைப் பார்க்க அவரோ இவளைக் கவனித்ததுபோலில்லை. மகன் தன் வாழ்க்கைக்குள் எந்த மாற்றத்தையும் அனுமதிக்கிறான் இல்லையே என்கிற வேதனையில் உழன்றுகொண்டிருந்தார்.
திரும்பவும் அவனைத்தான் பார்த்தாள். அவளின் அதிர்வை உணர்ந்தபோதிலும் காட்டிக்கொள்ளாமல், “போ! பிள்ளைகளைக் கவனி!” என்றான் மீண்டும். ரூபிணியைத் தூக்கிக்கொண்டு ஒரே ஓட்டமாக அறைக்குள் ஓடிவிட்டாள் வானதி!
எதுவும் கேட்காமல் சொல்லாமல், அவ்வப்போது கலங்கும் கண்களைத் துடைத்தபடி, அப்படியே அமர்ந்திருந்த தாயை அவனால் பார்க்க முடியவில்லை. ஒரு பெருமூச்சுடன் தன் அறைக்குள் புகுந்துகொண்டவனின் விழிகள், அவனுடைய மேசையில் பிரேமுக்குள் சிரித்துக்கொண்டிருந்த மனைவியிடம் தவிப்புடன் ஓடின!
தலை சாய்க்க அவள் மாடி வேண்டும் போலிருந்தது. உள்ளத்தின் உணர்வுகளை அடக்க முடியாமல் எட்டி எடுத்து அழுத்தமாய் அவளின் முகமெங்கும் முத்தங்களை வேகவேகமாகப் பதித்தான்.
“என்னவோ உன்ன விட்டுட்டு நிறையத் தூரமா போகப்போற மாதிரி இருக்குடா..” கண்களில் நீர் நிறைய, கரகரத்த குரலில் மொழிந்தவனின் முத்தம் மட்டும் ஓயவேயில்லை.
“உன்ன மறந்திடுவன் எண்டு நினைக்கிறியா?” அவளிடமே கேட்டான்.
“அதுக்கு நான் சாகோணும்!” தொண்டை அடைக்கச் சொன்னான்.
“ஆனா இப்ப நீ இருக்கிற இதயத்தில இன்னொருத்தியையும் தூக்கி வைக்கவேண்டி இருக்கு. விளங்குதா உனக்கு.. என்ர நிலைமை?” பரிதவிப்போடு கேட்டான்.
அவள் தன் நிலையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று இதயம் துடித்தது.
“உனக்கு துரோகம் செய்யேல்லடா.. உனக்கு என்னைத் தெரியும் தானே?” என்னவோ குற்றமிழைக்கப் போகிறவன் போல் அவன் உள்ளம் படாதபாடு பட்டது.
“சொறி.. சொறி சொறிடா செல்லம்மா.. சொறி சொறி சொறி!” மார்போடு அப்படியே அவளை அழுத்திக்கொண்டான். கண்ணோரம் கண்ணீர் கசிந்தது.
“செய்றதை எல்லாம் செய்திட்டு என்ர மிருணாவாவே நீ போய் சேர்ந்திட்ட. ஆனா நான்? இன்னொருத்திக்கு புருசனா மாறோணும். என்னை என்ன செய்யச் சொல்லுறாய்?” அவளோ அவன் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு குறும்புடன் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.
“ஒரு குழந்தைக்காக நாங்க என்ன பாடுபட்டோம். அப்பிடித்தான் அவளும். தாரகன்தான் அவளுக்கு உயிர். அது தெரிஞ்சும், என்ர பிள்ளையைத் தா எண்டு வாங்கிட்டு அவளை எப்பிடி அனுப்புறது சொல்லு? உன்ர புருசனுக்கு அந்தளவுக்கு கல் நெஞ்சு இல்லாம போச்சடி!” அவள் தன்னைச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தான், மனைவி மீது உயிரையே வைத்திருக்கும் அந்தக் கணவன்.
அவளைப் பார்க்கப் பார்க்க உயிரின் ஆழம் வரை வலித்தது. அவள் அவனுக்கு இல்லை. இனி அவனும் அவளுக்கு இல்லை என்று ஆகப்போகிறதா?
“இல்ல..!” அவன் உதடுகள் அழுத்தமாய் உச்சரித்தது!
மனைவியின் உதட்டினில் மிக ஆழமாய் ஒரு முத்தம் பதித்தான். “எந்த உறவும் நம் பந்தத்தை மாத்த முடியாது மிருணா! நீயும் நானும் வாழ்ந்த வாழ்க்கையை இல்லையெண்டு ஆக்கவும் முடியாது. உன்ர நினைவை என்னட்ட இருந்து அழிக்கவும் முடியாது!” முடிவாகச் சொன்னவன், மென்மையாக அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, பனித்த விழிகளுடன் மீண்டும் மேசையில் அவளை வைத்தான்.
ஒவ்வொரு உறவும் இன்னொரு உறவுக்கு ஈடாகாது. ஒருவரின் இடத்தை இன்னொருவரால் என்றைக்குமே நிரப்பவும் முடியாது. அவரவர் அவரவர்தான். அவர்களின் தனித் தன்மைகளுடன் அவரவர் இதயத்தில் நீக்கமற நிறைந்திருப்பார்கள். அப்படித்தான் மிருணாவும் அதிரூபனுக்கு. என்றென்றும் அவன் இதயத்தில் அவள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பாள். அவளுடனான இனிய நினைவுகளும் நிகழ்வுகளும் என்றும் அவனைச் சூழ்ந்துதான் இருக்கும்.
தெளிவு பெற்றவன் அறையை விட்டு வெளியேறினான்.


