அடுத்தநாள் பொங்கல்! காலையில் நான்கு மணிக்கே எழுந்து தலைக்குக் குளித்துவிட்டு, முற்றத்தில் பெரிதாகக் கோலமிட்டுக் கரும்பினை நான்கு மூளைக்கும் வைத்து, ‘தமிழர் திருநாள் வாழ்த்துகள்!’ என்றும் எழுதிவிட்டாள்.
சத்தமேயில்லாமல் அதிரூபன் எழுந்துவிட முதல் செய்ய எண்ணி, இரவே அதிரூபனைக்கொண்டு வரவேற்பறையில் போட்டிருந்த மேசையில் பொங்கலுக்குத் தேவையான எல்லாவற்றையும் ஓடி ஓடி எடுத்து வைத்தாள். கடைசியாகக் கழுவிய பானையையும் கொண்டுவந்து வைத்துவிட்டுத் திரும்பியவள் அறையிலிருந்து வெளியே வந்த அதிரூபனைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள்.
தலைக்குக் குளித்து, அவள் வாங்கிக்கொடுத்த சிவப்புக் கரையிட்ட வெள்ளை வேட்டியும் சிவப்பு பட்டுச் சட்டையும் அணிந்திருந்தான். அதைவிட அவன் முகம். தாடியற்றுப் பளபளத்த கன்னங்கள், அளவாக நறுக்கிவிடப்பட்ட மீசை, காற்றிலாடிக் கண்ணைப் பறித்த கேசம். அவளால் பார்வையை அவன் முகத்திலிருந்து அகற்றவே முடியவில்லை. அதைவிட இப்படிக் கண்ணகற்றாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் என்பதோ, அவளை உணர்ந்தவனாக அவன் மெல்லியதாய் நகைக்கிறான் என்பதோ அவள் கருத்தில் படவேயில்லை.
எவ்வளவு கம்பீரமான முகம். திடீரென்று பத்து வயது குறைந்து தெரிந்தான்.
“தைப்பொங்கல் வாழ்த்துகள் வானதி!” சட்டையின் கையை முழங்கை வரை மடித்துவிட்டுக்கொண்டு சொன்னான் அவன்.
செவிகளை நனைத்த கம்பீரக் குரல் தேகத்தையும் நனைக்க சிலிர்த்தது அவளுக்கு.
அப்போதுதான் வானதி என்கிற சிலைக்கு உயிர்வந்தது. “வாழ்த்துகள்.. உங்களுக்கும்.. பொங்கல் வாழ்த்துகள்!” என்றவள் விழுந்தடித்துக்கொண்டு உள்ளுக்கு ஓடியே போனாள்.
வீட்டின் பின்னால் ஓடியவள் சற்றுநேரம் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டாள். அந்தளவுக்கு அவன் தோற்றம் அவளுக்குள் புகுந்து பாடாய்ப் படுத்தியது. வேட்டி சட்டையில், அதிகாலைக் குளியலின் புத்துணர்ச்சி கலையாமல், பளபளத்த கன்னங்களோடு கண்ணுக்குளேயே நின்றான் அவளின் நெஞ்சுக்குள் நிறைந்தவன்.
கலைவாணி அம்மா எழுந்த அரவம் கேட்கத்தான், தன்னைச் சமாளித்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தாள். அதன்பிறகு பிள்ளைகளை எழுப்பி அவர்களை ஒவ்வொருவராகக் குளிக்க வைத்து, புத்தாடை உடுத்தி, அருந்தப் பால் கொடுத்து என்று வேலைகள் அவளைப் பிடித்துக்கொண்டதில் மெல்ல மெல்ல சமநிலைக்கு வந்திருந்தாள். அப்போதும் அப்பாவும் மகனும் ஒரேமாதிரி வேட்டி சட்டையில் நின்றதைக் காணக் காணத் தெவிட்டவில்லை. மகளைத் தூக்கிவைத்திருந்தபோது இன்னுமே நெஞ்சை அள்ளினான்.
அதிரூபன் பானையை ஏற்ற அவனுக்குத் தேவையானவைகளை எடுத்துக்கொடுத்துக்கொண்டு அருகிலேயே நின்றாலும், தன் கண்கள் அவன் மேலே ஒட்டிக்கொள்வதை தடுப்பதற்குப் பெரும் பாடுபட்டாள் வானதி.
அவள் வாங்கிக்கொடுத்தவைகளை அணிந்துகொண்டு அவன் பொங்கிய காட்சி நெஞ்சில் இன்னுமே நேசத்தை வளர்த்துக்கொண்டு போயிற்று! அதுவும் அவன் எதற்காகவாவது வேட்டியை மடித்துக்கட்டும் போது, அது தானாக அவிழும்போது, பானையை அவனுடைய வலுவான கரம் பற்றும்போது, முழங்கை வரை மடித்திருந்த சட்டைக்கையும் வலுவான மணிக்கட்டில் கட்டியிருந்த மணிக்கூடும் என்று அவள் விழிகள் அவனின் ஒவ்வொரு அங்குல அசைவையும் உள்வாங்கிக்கொண்டே இருந்தது.
அவளை உணர்ந்துதான் இருந்தான் அதிரூபன். அவன் பார்வையும் அடிக்கடி அவளிடம் ஓடிக்கொண்டே இருந்தது. திருமணம் வேண்டாம் என்று விழுந்தடித்துக்கொண்டு சொன்னவள், அந்த வீட்டுப் பெண்ணாகவே மாறி எல்லாவற்றையும் ஓடி ஓடிச் செய்துகொண்டு இருந்தாள்.
மூன்று பக்கமும் சுழன்று எரிந்த நெருப்பில் பொங்கல் பொங்கித் ததும்பவும் குழந்தைகளோடு சேர்ந்து வெடி கொழுத்திப்போட்டு, “பொங்கலோ பொங்கல். பொங்கலோ பொங்கல். பொங்கலோ பொங்கல்..!” என்று ஆரவாரமாகக் கொண்டாடியவளைக் கண்டு தாய் மகன் இருவர் முகத்திலும் பெரிய புன்னகை.
கலைவாணி அம்மாவுக்கு மனம் நிறைந்துபோயிருந்தது!
நால்வரையும் பார்த்து, ‘அழகான குடும்பம்! தெய்வமே இந்தச் சந்தோசத்தை இந்த நாலுபேருக்கும் நிலைக்க வச்சிடு!’ என்று வேண்டிக்கொண்டார்.
பொங்கல் முடிவதற்குள், அந்தப்பக்கமாக உளுந்து வடை, பருப்புவடை, கடலை அவித்து வெங்காயத்தில் பிரட்டி, மோதகம் செய்து என்று பெண்கள் இருவரும் பம்பரமாகச் சுழன்று வேலையை முடிக்க, படையலிட்டான் அதிரூபன்.
எல்லோரும் ஒன்றாக நின்று சுவாமி கும்பிட்டது எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு நிறைவு. பிள்ளைகளுக்கு என்னவோ பெரும் விசேசம் போல பெரும் குதூகலம். அவிழும் வேட்டியைப் பிடித்தபடி தாரகன் ஒருபக்கம் என்றால் நிலத்தைக் கூட்டும் பாவாடையோடு ரூபிணி ஒரு பக்கமாக பார்க்கப் பார்க்க அவ்வளவு அழகு! பொங்கலைக் குழந்தைகளுக்கும் போட்டுக்கொடுத்து, கலைவாணி அம்மாவுக்கும் கொடுத்து, அதிரூபனுக்கும் கொடுத்தாள் வானதி.
“நீயும் போட்டுக்கொண்டு வா!” என்றான் அவன்.
ஒன்றாக அமர்ந்திருந்து பொங்கலைச் சாப்பிட்டது இன்னுமே சந்தோசமாயிருந்தது.
காலையிலேயே எழுந்து எல்லாம் செய்து, போதாக்குறைக்கு பொங்கலையும் சாப்பிட்டது பெரும் அயற்சியாக இருக்க சோபாவில் தளர்வாக அமர்ந்துகொண்டார் கலைவாணி. அதிரூபனுக்குமே உண்டது மயக்கியது. ஆனாலும் வெளியே வாசலில் பிள்ளைகளோடு சேர்ந்து வானதி கரும்பு தின்னும் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
இவள் சாப்பிடக் காட்டிக்கொடுக்க, குழந்தைகள் இருவர் வாயிலும் கரும்புச் சாறு ஓடியது. ரூபிணி தான் வாய்க்க போட்டுக் குதப்பியதை அவளிடம் கொடுக்க, தாரகன் பல்லால் கடித்து மெல்ல மெல்ல சாப்பிடப் பழகிக்கொண்டு இருந்தான்.
வானதியின் மீதே அதிரூபனின் பார்வை நிலைத்திருப்பதை உணர்ந்து மெல்ல எழுந்து அறைக்குள் சென்றுவிட்டார் கலைவாணி.
அதை உணரவில்லை அவன். தாரகனுக்கும் அவனுக்கும் சிவப்பில் எடுத்தவள் ரூபிணிக்கும் சிவப்புப் பட்டாடை எடுத்தவள், கலைவாணி அம்மாவுக்குக் கூட மெல்லிய ஊதா கலந்து எடுத்தவள் தனக்கு மட்டும் சிவப்பே இல்லாமல் கவனித்து எடுத்திருக்கிறாள் என்று முதலில் கவனிக்காவிட்டாலும், இப்போது விளங்கியது அவனுக்கு.
என்ன சொல்ல வருகிறாள்? நீங்க வேற நான் தனி என்றா? மெல்லிய கோபமே வந்தது அவனுக்கு. எந்த உறவும் வேண்டாம் என்று அனைத்துச் செய்கையிலும் உணர்த்துகிறாள். ஆனால், அந்த வீட்டுப் பெண்ணாக குழந்தைகளுக்கு அம்மாவாக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அனைத்தையும் செய்கிறாள்.
அவளுக்கும் அந்தக் குழந்தைகளுக்கும் எந்த உறவுமே இல்லை. சொல்லப்போனால் தாரகனுக்கும் அவளுக்கும் கூட உறவில்லை. அவர்கள் அவனுக்கும் மிருணாவுக்கும் மட்டுமே பிறந்தவர்கள். தாரகனுக்கு வாடகைக்குத் தன் கருவறையைக் கொடுத்திருந்தாள். வெறுமனே பத்து மாதங்கள் சுமந்த பாசம்.
அதற்காகத் தான் பாதுகாப்பாக வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறி, தன்னந்தனியாக வந்திருந்து, பிறந்த குழந்தையோடு யாரின் துணையும் இல்லாமல், வாழ்க்கையையும் ஓட்டி, இன்றைக்கு அவன் வீட்டில் எந்த உறவும் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு ஆனால் எல்லோருக்கும் என்னென்ன வேண்டும் என்று ஓடி ஓடி கவனித்துக்கொண்டு இருக்கிறாள். என்னமாதிரியான பெண் இவள்? என்னவிதமான பாசம் இது? தாய்மைக்கு எதுவும் ஒப்பில்லை என்று முன்னோர் சும்மாவா சொன்னார்கள்?
சிந்திக்கச் சிந்திக்க வியந்துகொண்டே போனான் அதிரூபன். மிருணாவுக்கு அவன் மீது இருப்பதும் அவனுக்கு மிருணா மீதிருப்பதும் வாழ்ந்த பாசம். கணவன் மனைவி நேசம். பிள்ளைகள் அவர்களது உயிரில் உருவானவர்கள்.
அவளுக்கும் இந்தப் பிள்ளைகளுக்குமிடையே ஓடும் பாசம் எதனால்? கலைவாணியை எந்தப் பாசத்தின் அடிப்படையில் கவனிக்கிறாள்? உண்மையிலேயே கண்மறைவில் அவனைப் பார்த்துக்கொள்வதும் அவள்தான். இல்லாவிட்டால் ஒரு முறை தும்மியதற்கு ரசம் வருமா? இதோ, இன்று அந்த வீட்டின் ஆண்மகன் பொங்கலுக்குப் புத்தாடை எடுக்கும் எண்ணமே இல்லாமல் தானே இருந்தான். அவள்தானே இன்றைய நாளைச் சிறப்பாக்கிக் கொடுத்தாள்.
இதற்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறான்? மனதிலோர் பாரமேறியது. வானதியையே பார்த்தபடி, அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் உள்வாங்கியபடி அப்படியே அமர்ந்திருந்தான் அதிரூபன்.


