‘இனியும் எப்படி கேக்காத மாதிரி இருக்கிறது?’
பாவமாக அவள் கலைவாணி அம்மாவைப் பார்க்க, உதட்டில் எழுந்த சிரிப்பை மறைக்க முடியாமல், “போய் என்ன எண்டு கேட்டுக்கொண்டு வாம்மா!” என்றார் அவர்.
‘கடவுளே.. மானத்த வாங்குறாரே.. இவரை என்ன செய்யிறது?’
சென்று வாசலிலேயே நின்று, “என்ன?” என்று எட்டிப் பார்த்தாள். அறைக்குள் நுழையவில்லை.
“ஏன், கிட்சனுக்க நிண்டே கேளன், சொல்லுறன்!” என்றவன், ஒரே இழுப்பில் அவளை உள்ளுக்குக் கொண்டு வந்திருந்தான்.
“கண்ணிலேயே படாம எங்க ஓடி ஒளியிற? நானா வந்தாலும் பிள்ளைகளை பாதுகாப்புக்கு வச்சிருப்பியா நீ?”
அன்றைக்கும் இதையேதான் கேட்டான். “நான் ஓடவும் இல்ல ஒளியவும் இல்ல!” வெடுக்கென்று பதில் சொன்னாலும் அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாள்.
“அத என்னைப் பாத்துச் சொல்லுறது?” மெதுவாக அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டுவந்தபடி சொன்னான்.
“ஐயோ ஆன்ட்டி நிக்கிறா.”
தப்பித்தவறி கண்டுவிட்டால் எவ்வளவு வெட்கம். அவனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை போலும்!
“அதென்ன ஆன்ட்டி? மாமி எண்டு சொல்லு.”
மாமி என்றால் கணவனாக அவனை வரித்துக்கொண்டதாக அர்த்தமாகாதா?
“ம்ஹூம்!” வெட்கத்தோடு அவன் முகம் பாராமல் மறுத்தாள்.
“என்ர பிள்ளைகளுக்கு நீ அம்மா எண்டால் நான் யாரு உனக்கு?” அவன் முதலில் இருந்து ஆரம்பித்தான்.
அவனது சேட்டையில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.
“விடுங்கோ ரூபன். பிள்ளைகள் வந்தாலும். ரூபிணி எழும்பப் போறாள்!”
“அப்ப வேகமாச் சொல்லு! போகலாம்!”
அவளின் இடையை அவன் கரங்கள் வளைக்க ஆரம்பிக்க, “அச்சோ என்ன செய்றீங்க? விடுங்கோ!” என்று பதறித் தடுத்தாள் அவள்.
அந்த வலிய கரங்கள் வளைக்கரங்களில் அடங்குமா என்ன?
“நீ முதல் சொல்லு!” அவன் அதிலேயே நின்றான்.
“உங்களுக்குத் தெரியாதா?”
“எனக்குத் தெரியுமா தெரியாதா எண்டு நான் கேக்கேல்ல. உன்னை சொல்லு எண்டு சொல்லுறன்.”
விடமாட்டான்! நெஞ்சில் அச்சாக்கப் பதிந்துபோன உறவுதான். வாய்விட்டுச் சொல்ல முடியாமல் வெட்கத்தில் முகம் சிவக்க உதட்டைக் கடித்தாள்.
சிவந்த அந்தக் கன்னம் தடவி, “சொல்லனடி!” என்றான் ஆசையாக.
“என்ர மனுசன்!” என்றவள் வெட்கத்தில் அவன் மார்பில் முகத்தை மறைக்கப்போக, தடுத்து, ஆசையாக நோக்கி, அவள் இதழ்களில் தன் இதழ்களைப் பதித்து எடுத்தான் அதிரூபன்.
ஆனந்தமாய் அதிர்ந்து, அவள் வெட்கமும் குழப்பமுமாக அவனைப் பார்க்க, ‘என்ன?’ என்றான் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி. ஒன்றுமில்லை என்றவள் அவனிடமிருந்து விடுபட்டு ஓடமுயல, அப்போதும் விடவில்லை அவன்.
“இந்தத் தாலிய திரும்பக் கட்டுவமா?”
“ம்ம்..!”
“இனி என்ர அம்மாவை என்னெண்டு கூப்பிடுவாய்?”
“மாமி எண்டுதான்!” வெட்கம் வந்தாலும் சந்தோசமாகச் சொல்லிவிட்டு ஓடிவிட்டாள் அவள்.
அவன் உதடுகளில் புன்னகை பூத்தது.
தயாராகி வெளியே வந்தவன், “ஒரு நல்ல நாளா பாருங்கம்மா.” என்றுவிட்டுச் சாப்பிட அமர்ந்தான்.
அவனை முறைத்தாள் வானதி. இதை அவள் இல்லாத நேரமாகப் பார்த்துச் சொல்லக் கூடாதா? அவளுக்கு கலைவாணி அம்மாவின் முகமே பார்க்க முடியவில்லை. சிவந்துவிட்ட முகத்தை எங்கே கொண்டுபோய்ப் புதைக்க என்று தெரியாமல் தடுமாறினாள்.
அவருக்கோ அவ்வளவு சந்தோசம். வானதியைப் பாசத்தோடு அணைத்துக்கொண்டார்.
“நீண்ட காலத்துக்கு நாலுபேரும் சந்தோசமா இருக்கவேணும்!” வாழ்த்தியவர், அவர்களுக்கு இடம்விட்டு அகன்றுகொண்டார்.
“சாப்பாட்டை போடு!” அவள் ஆசையோடு பரிமாற அவன் வயிறும் மனமும் நிறைய உண்டான்.
அதற்குள் எழுந்துவிட்டிருந்த ரூபிணி அப்பம்மாவின் கையினால் முகம் கழுவிக்கொண்டு வந்து, அருகிலிருந்த கதிரையில் பெரும் பாடுபட்டு ஏறி, அங்கிருந்து மேசைக்குத் தாவி, தகப்பனின் தட்டின் முன்னே அமர்ந்து தட்டில் கைபோட்டு விளையாட ஆரம்பித்தாள்.
“அப்பாவைச் சாப்பிட விடவேணும்!” என்று அவளைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள் வானதி.
அவன் சாப்பிட்டு முடிய, அவளை இடுப்பிலே வைத்துக்கொண்டு தேநீர் கொண்டுவந்து கொடுக்க வாங்கிப் பருகினான் அவன்.
சின்னவளும் கையில் பிடித்துப் பால் அருந்திக்கொண்டிருந்தாள்.
“பின்னேரம் ரெடியா இரு. கடைக்குப் போயிட்டு வருவம்!”
தலையை ஆட்டிச் சரி என்றாள்.
அருந்திய தேநீர் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, “வரட்டா..?” என்றவன், முகத்தை அவளருகே கொண்டுவரவும், “ஐயோ மாமி நிக்கிறா!” என்று பதறினாள் அவள்.
அவளை நிதானமாகப் பார்த்துக்கொண்டே மகளின் குண்டுக்கு கன்னத்தில் முத்தமிட்டான் அவன்.
‘அடப்பாவி..!’ அவள் அசந்துபோய்ப் பார்க்க, உதட்டில் வழிந்த விசமச் சிரிப்புடன், “ரூபிக்கு முத்தம் குடுக்கேக்கையுமா அம்மா நிக்கக் கூடாது?” என்று கண்ணடித்துவிட்டுப் புறப்பட்டான் அவன்.
அவளால் வெட்கச் சிரிப்பை அடக்கவே முடியாமல் போயிற்று!
தாயிடம் சொல்லிவிட்டு, கண்ணால் விடைபெற்றுத் தலையசைத்தவனின் நேசப் பார்வையில், இனிமையான கனவுகளில் சஞ்சரிக்கத் துவங்கியது அவளிதயம்.