கேட்காமல் அவன் வாயருகே கொண்டுவந்து, “ஒருக்கா சாப்பிட்டுப் பாருங்கோவன். பிடிக்கும்!” என்றாள் அவள்.
கீழே பேப்பர் இருக்க அதில் விழுந்துவிட்டாலும் என்று, அவள் கையை அந்தப்பக்கமாகத் தள்ளி, “வேண்டாம் எண்டால் விடு வானதி! வேலையை குழப்பாத!” என்றான் அதட்டலாக.
“இதமட்டும் சாப்பிட்டுப் பாருங்கோவன். பிறகு விடமாட்டிங்கள். வானதியின்ர கைப்பக்குவம் அப்படி!” பெருமையாகச் சொன்னபடி அவள் அங்கேயே நின்றாள்.
“நீ முதல் இங்க இருந்து போ! வேலையை கெடுத்துக்கொண்டு!” என்று கடுப்போடு அவன் சீறியதில் அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.
“இந்தக் கிழடு கட்டையளோட மனுசர் படுற பாடு இருக்கே! ஒண்டும் தெரியாது!” என்று அவள் சொல்ல, பேனையைப் போட்டுவிட்டு முறைத்தான் அவன்.
“என்ன முறைப்பு? வயசான ஹோம்ல கொண்டுபோய் விட்டுடுவன் சொல்லிப்போட்டன். ஒரு மங்கா கேட்ச் பிடிக்கத் தெரியாது, ஒரு மாங்கா துண்டு சாப்பிடத் தெரியாது, இதுல எல்லாத்துக்கும் முறைப்பும் அதட்டலும்! ஹா!” என்று தலையைச் சிலுப்பிக்கொண்டு திரும்பியவள் எட்டிப் பிடித்தான் அவன்.
“என்னையாடி வயசான ஹோம்ல கொண்டுபோய் சேர்ப்ப? உனக்கு நான் கிழவனோ..?” கேட்டுக்கொண்டு அவளை நெருங்கியவனின் பார்வை, நல்ல உறைப்பாக(காரமாக) உண்டதில் மூக்கும் முகமும் சிவந்துபோய் நின்றவளைக் கண்டு மாறிப்போயிற்று.
ஆகா.. ஆரம்பிக்கப்போறான் என்று அவளுக்குள் மணியடித்தது.
“விடுங்க விடுங்க! பிள்ளைகளுக்கும் நான் குடுக்கோணும்!” அவன் முகம் பாராமல் சொல்லிவிட்டு ஓடமுயன்றவளை வளைத்தது அவன் கரங்கள்.
“சிவனே எண்டு இருந்தவனை கிழவன் எண்டு சொல்லிச் சீண்டி விட்டுட்டு போகோணுமா? நான் கிழவனா குமரனா எண்டு உனக்குத் தெரியவேணாமா?” என்றபடி இன்னும் நெருங்கினான் அவன்.
“ரூபன்.. பிள்ளைகள் நிக்கிறாங்க.” வழமைபோல் ஆரம்பித்தாள் அவள்.
“நிக்கட்டும்!”
“மாமி நிக்கிறா”
“நிக்கட்டும்..”
“விடுங்கோ..”
“நீதான் குமரியாச்சே. இந்தக் கிழவனிட இருந்து விடுபட்டுக்கொண்டு போ.”
“சரி சரி நீங்க கொஞ்சமே கொஞ்சம் குமரன் தான்..” என்றவளின் உதடுகளை வேகமாகத் தன் உதடுகளால் மூடியிருந்தான் அவன்.
மூடிய வேகத்திலேயே எடுத்தும்விட்டான். “என்னத்தையடி சாப்பிட்ட? ஒரே உப்பும் உறைப்பும்!” என்றவனின் முகத்தைச் சுளிக்க, அவளுக்குச் சிரிப்புப் பொங்கிக்கொண்டு வந்தது.
“ஹாஹா.. அவசரப்பட்டா இப்படித்தான்..” கையிலிருந்த துண்டையும் வேகமாக வாய்க்குள் போட்டுக்கொண்டு சிரித்தாள். இனி முத்தமிட மாட்டான் என்கிற தைரியம்!
அவனோ அசையும் உதடுகளின் மீதே பார்வை பதிய அவள் முகத்தை அருகே கொணர்ந்து வெகு நிதானமாய் நெருங்கினான்.
விழிகள் விரியப் பார்த்தாள் அவள். “உன்ர உதட்டிலேயே நான் டேஸ்ட் பாக்கிறன்.” என்றவன் வெகு நிதானமாக ருசி பார்த்தான்.
நீடித்த நொடிகளின் பின்னே அவன் விடுவித்தபோது, செக்கப் சிவந்து நின்றவள் வெட்கத்தோடு அவன் மார்பிலேயே முகத்தை மறைத்துக்கொண்டாள்.
அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான் அவன். “இதுக்குத்தான் சீண்டாத எண்டு சொல்லுறது!” என்றான் ஆசையாக அவள் காதோரம்.
“பரவாயில்ல.. பிடிச்சுத்தான் இருக்கு!” என்றவள் எம்பி அவன் கன்னத்தில் உதடுகளைப் பதித்துவிட்டு ஓடிவிட்டாள்.
அன்று முழுக்க ரகசியச் சிரிப்பில் மின்னிய கண்களோடு அவளைச் சீண்டிக்கொண்டே இருந்தான் அதிரூபன்.
அவளுக்கும் இனிமையான படபடப்பு! அவனை அன்று முழுவதுமே நன்றாகச் சீண்டிவிட்டோம் என்று உணர்ந்துதான் இருந்தாள்.
அன்றிரவு, அவன் அறைக்குள் வரமுதலே உறங்கிவிட்ட பிள்ளைகளுக்குப் பக்கத்தில் விழுந்தடித்துப் படுத்துக்கொண்டு தலைவரைக்கும் போர்த்திக்கொண்டாள். உள்ளே வந்தவனுடைய உதடுகளில் உல்லாசப் புன்னகை.
‘அச்சோ.. அவன் அப்படியே போய்ப் படுத்திடோணும்..’ என்று வேண்டியபடி இருந்தவளை அப்படியே அள்ளியது இரு வலிய கரங்கள்.
அத்தனை நடிப்பும் கலைய அதிர்ந்துபோய்ப் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்தான்.
அப்படியே தூக்கிக்கொண்டு வந்து மறுபக்கம் கிடத்தினான். கிடத்திவிட்டு நிமிராமல் இருபுறமும் கையை ஊன்றியபடி தன்னையே பார்த்திருந்தவனை இமைக்கவும் மறந்து பார்த்தாள் அவள்.
“நீ பயப்படுற அளவுக்கு ஒண்டும் நடக்காது. ஆனா, பக்கத்தில நீ வேணும். சரியா?” என்றான் கள்ளச்சிரிப்போடு.
‘அப்பாடி..’ வேக வேகமாகச் சரியென்று தலையை ஆட்டினாள் வானதி.
கொடுப்புக்குள் சிரித்தபடி அவளை நெருங்கிப் படுத்தான் அவன். சிலிர்த்தது அவளுக்கு. வெற்று மார்பில் அழுந்திய முகம், சுருண்டிருந்த மார்பு முடிகள் மோதிச் சிலிர்த்தது. அப்படியே அந்த மார்புக்குள் புகுந்து பூனைக்குட்டியாக அவனுக்குள் சுருண்டுகொள்ள எழுந்த ஆர்வத்தில் மிரண்டுபோனாள். தனக்குள்ளேயே இப்படியொரு வேகம் வரும் என்று நினைக்கவில்லை அவள். அவனும் அவளின் இடையைச் சுற்றிக் கைகளைப் போட்டுத் தன்னோடு இறுக்கிக்கொண்டான்.
அவள் இறுக்கமாகக் கண்களை மூடிக்கொள்ள, “என்ன நடந்திடும் எண்டு நடுங்கிறாய்?” என்றான் காதுக்குள்.
படக்கென்று விழித்துக்கொண்டவள் பாவமாக அவனைப் பார்த்தாள். அந்தப் பாவத்தில் நெஞ்சம் மயங்க, “செல்லமடி நீ!” என்றபடி அவளை இறுக்கி அணைத்து மாம்பழக் கன்னத்தை பற்கள் படக் கடித்தான்.
செங்கொழுந்தாகச் சிவந்தது அவள் முகம். ஆசையோடு நோக்கியவனின் பார்வையில் வேறு தேவையும் இருந்தது. தன் ஈரம் படிந்திருந்த கன்னத்தைத் தடவியவனின் விரல்கள் மெல்ல மெல்ல முகமெங்கும் வருடிச் சதைப்பற்றான இதழ்களில் வந்தபோது, அவள் உதடுகள் துடிக்கத் துவங்கியிருந்தது.
மயக்கத்தில் இறுக்கி மூடிக்கொண்டிருந்த இமைகளின் படபடப்பு அவனை அழைக்க, ஒரு வேகத்துடன் அவளின் இதழ்களை முற்றுகையிட்டான்.
இதழில் ஆரம்பித்த அவனது ஆட்சி, மெல்ல மெல்ல அவள் தேகமெங்கும் ஆக்கிரமிக்க ஆரம்பிக்க, அவளும் கூச்சத்தின் மத்தியிலும் சிணுங்களின் மத்தியிலும் மெல்ல மெல்லத் தன்னை அவனிடம் கொடுத்தாள்.
முற்றும்!


