நீ தந்த கனவு 1(2)

எல்லாளனுக்கும் இருக்கிற பிரச்சனைகள் போதாது என்று இவளுமா என்று சினம்தான் வந்தது. அதைவிட, பொது இடங்களில் வைத்து, மற்றவர்களின் முன்னே இப்படியெல்லாம் அழைத்துப் பழகாதே என்று எத்தனையோ முறை சொல்லிவிட்டான். கேட்பதே இல்லை. அந்த எரிச்சலில், “ஏய்! எழும்பிப் போடி!” என்று, வாய்க்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

அப்போதும், மங்காத சிரிப்புடன் மறுத்துத் தலை அசைத்தாள் அவள். அதற்குள், அவளின் லைசென்ஸ், ஹெல்மெட்டுடன் வந்து சேர்ந்தார் நாயகம்.

“சிலுக்குக்கு ஒண்டும் நடக்கேல்லையே?”

“இல்லமா, கவனமாத்தான் ஓடினான்.” என்றபடி, அவளின் சிலுக்கை மிகக் கவனமாக மரத்தின் கீழே நிறுத்திவிட்டு, கொண்டுவந்தவற்றைப் பெரும் பணிவுடன் அவளிடம் நீட்டினார்.

“அதுதான் எல்லாம் வந்திட்டுது தானே. அவளை அனுப்பி வைங்க!” அவளைப் பாராது கதிரவனுக்கு ஆணையிட்டான் எல்லாளன்.

“சேர், ஃபைன்..”

“அனுப்புங்க கதிரவன்!” அவன் வார்த்தைகளை அழுத்திச் சொன்ன விதத்தில் தனக்குள் பதறினான் கதிரவன். “சரி, நீங்க போகலாம்!” என்றான் அவள் மீதான தன் எரிச்சலை மறைத்துக்கொண்டு.

“நான் போகோணும் எண்டா நீங்க எனக்குச் சல்யூட் அடிக்கோணுமே கதிரவன்!” என்றாள் அவள்.

கதிரவனுக்கு மீண்டும் சினம் உச்சிக்கு ஏறியது. எல்லாளனாலும் அதை அனுமதிக்க முடியாது. அதில், “விளையாடம எழும்பி நட, ஆதினி!” என்றான் கண்டிப்புடன்.

“நான் சொன்னது நடக்காம அசையமாட்டன்!” என்றாள் அப்போதும்.

எல்லாளனுக்கு அவளைப் பற்றித் தெரியும். கதிரவனுக்குச் செக் வைத்துவிட்டாள் என்று புரிந்தது. அதைவிட, இந்தப் பிரச்னையை வளர்க்கவோ அங்கு மெனக்கடவோ அவனுக்கு நேரமில்லை. அன்றைய நாளுக்கான வேலைகள் விரட்டிக்கொண்டிருந்தது. அதில், பேசாமல் திரும்பி கதிரவனை ஒரு பார்வை பார்த்தான்.

அதன் பொருள் புரிந்து, “சொறி சேர்! என்ர மேலதிகாரிகளைத் தவிர்த்து வேற ஆருக்கும் நான் சல்யூட் அடிக்க மாட்டன்!” என்றான் அவன் விறைப்புடன்.

எல்லாளனின் முகம் கடுத்தது. “எனக்குப் பாதுகாப்பு முக்கியம் கதிரவன். உங்கட கட்டுப்பாட்டுக்கு கீழ இருக்கிற இந்த ஏரியாவில ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்திச்சு… அதுக்குப் பிறகு தெரியும்!” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டுப் போனான்.

அவனுடைய ஜீப் வீதியில் சீறிப்பாய்ந்த வேகத்திலேயே அவன் கோபம் புரிய, கதிரவனுக்கு நெஞ்சுக்கூடே ஒரு முறை நடுங்கிற்று. அதைவிட, சுண்டு விரலைக் கூட அசைக்காமல் ஏசிபியைக் கூட ஆட்டிவைக்கும் அதிகாரம் கொண்ட இவள் யார் என்கிற கேள்வி எழுந்தது.

எவளாக இருந்தாலும் அவளுக்கு அவன் அடிபணிவதா என்கிற வீம்பு அவனை இறங்கி வர விடமாட்டேன் என்றது.

அதில், “ஏசிபி சேரே சொன்னபடியாத்தான் ஃபைன் இல்லாம விடுறன்! நீங்க போகலாம்!” என்று அவளைப் பாராமல் சொல்லிவிட்டு, வாகனங்களைக் கவனிக்க வீதியின் பக்கமாக வந்து நின்றான்.

அவள் புறப்படவில்லை.

அதற்கு மாறாக, அவனருகில் தானும் வந்து நின்றுகொண்டாள். அவன் மறிக்கிற வாகனத்தை எல்லாம், “நிக்காம போங்க போங்க!” என்று அனுப்ப ஆரம்பித்தாள். அவளை அறிந்த இளவட்டங்கள், “நன்றி தல!”, “தேங்க்ஸ் தல!” என்றபடி கதிரவனைப் புறக்கணிக்க, அறியாதவர்கள் கதிரவன் சொல்வதைக் கேட்பதா, இல்லை, அவள் சொல்வதைக் கேட்பதா என்று, வாகனத்தை வைத்துக்கொண்டு தடுமாற, “ஏய் என்னடி? செல்வாக்கான வீட்டுப் பிள்ளை எண்டு திமிரா உனக்கு? மரியாதையா போயிடு, இல்ல காலத்துக்கும் கவலைப்படுற மாதிரி எதையாவது செய்திடுவன்!” என்று அவளின் முகத்துக்கு முன்னே வந்து சீறினான் அவன்.

“நீங்க ஒரு சல்யூட் அடிச்சா நான் போகப்போறன் கதிரவன். அதை விட்டுப்போட்டு ஏன் இவ்வளவு கோவம்?” என்றாள் அவள் மங்காத சிரிப்புடன்.

அதற்குள், “டிஜிபி லைன்ல நிக்கிறார்.” என்றபடி ஓடிவந்தார் நாயகம். வேகமாகச் சென்று அவரோடு பேசினான் கதிரவன். யாழ். மேல் நீதிமன்றத்தின் நீதிபதி குழந்தைவேலு இளந்திரையன், தன் வீட்டில் இருந்து நீதிமன்றத்துக்குப் புறப்பட்டுவிட்ட அறிவுறுத்தலை வழங்கிவிட்டு, அவருக்கான பாதுகாப்புக் குறித்தும் அறிவுறுத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தார், அவர்.

இன்னுமே பதட்டமானான் கதிரவன்.

எதற்கும் அஞ்சாமல், எதைப்பற்றியும் யோசிக்காமல், யாருக்கும் எந்த அதிகாரத்துக்கும் அடிபணியாமல், நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் மாத்திரமே தீர்ப்புச் சொல்லும் அவருக்கான ஆபத்து, எப்போதுமே அவரைச் சுற்றியிருக்கும். அப்படியிருக்க, இன்றைக்கு அவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற அச்சத்தினாலேயே இன்றைய பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. காரணம், இன்று அவர் சொல்லப்போகும் தீர்ப்பு அத்தகையது.

அப்படியிருக்க, அவன் அவருக்கான பாதுகாப்பைக் கவனிப்பானா, இல்லை, பக்கத்தில் இருக்கும் தொல்லையைக் கவனிப்பானா? அவர் வருகிறபோது இவள் ஏதும் குரங்குச் சேட்டை காட்டிவிட்டாள் என்றால் அவன் கதி என்னாவது? வேகமாகச் சென்று அவளின் முன்னே நின்று, “அம்மா தாயே, சல்யூட் என்ன உன்ன நான் கையெடுத்தே கும்பிடுறன். தயவு செய்து போ! எனக்கு ஒரு நல்ல மனுசனின்ர உயிரை காப்பாத்துற வேல இருக்கு!” என்றான் மெய்யாகவே கையெடுத்துக் கும்பிட்டபடி.

“சல்யூட்?” என்றாள் சிரிப்புடன்.

அவனும் விறைத்துநின்ற தேகத்துடன் அவள் முன்னே சல்யூட் அடித்தான்.

“இது நல்லபிள்ளைக்கு அழகு!” என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டாள் ஆதினி.

“அந்த றோட்டால போய்ப் போ! இதால இப்ப நீதிபதின்ர கார் வரும்!” என்று எதிரில் தெரிந்த குறுக்கு வீதிக்குள் அவளை அனுப்பியபிறகே நிம்மதியானான் அவன்.

ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “இவள் ஆரு நாயகம்? நீங்க இந்தப் பம்மு பம்முறீங்க. ஏசிபி சேர் கூட ஒண்டுமே சொல்லாமப் போறார்.” என்று, ஆற்றாமையும் சினமுமாகக் கேட்டான்.

“ஆருக்குப் பாதுகாப்பு குடுக்கிறதுக்காக இந்த உச்சி வெயிலுக்க நிக்கிறீங்களோ அவரின்ர மகள்!” என்றார் நாயகம் அமைதியான குரலில்.

“என்ன?” என்று அதிர்ந்து திரும்பினான் அவன்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock