கத்தி முடிக்க முதலே அவளின் கன்னத்தில் பளார் என்று இறங்கியது அகரனின் கரம். அப்படியே சுழன்று சோபாவில் விழுந்தாள். கண்களில் பொறிப் பறந்தது. நம்பமுடியாத அதிர்ச்சியோடு தமையனைப் பார்த்தாள்.
“எல்லாத்துக்கும் பிடிவாதம். தொட்டதுக்கும் அடம்! கொஞ்சமாவது பொறுப்போட நடக்கிறியா? இப்பிடி எல்லாரின்ர உயிரையும் வாங்கி அப்பிடி என்ன காணப்போறாய்? உன்னையெல்லாம்..!” என்று கர்ஜித்தான் அகரன்.
ஆதினியின் தேகம் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது. வாய் அவனுடையதாக இருந்தாலும் வார்த்தைகள் அவனுக்கருகில் நிற்கிறவளுடையது. அவன் அறைந்ததை விடவும் அதுதான் இன்னும் வலித்தது. கண்முன்னே நிற்பவன் அவளின் தமையன் அல்ல. சியாமளாவின் வருங்காலக் கணவன். முகத்தில் அறைந்த அந்த உண்மையில் சிலையாகிப்போனாள்.
சந்தையைப்போல் இரைச்சலோடு இருந்த ஒரு இடம் திடீரென்று அப்படியே உறைந்துபோனால் எப்படி இருக்கும். அப்படி ஒரு மயான அமைதி அந்த வீட்டைச் சூழ்ந்தது. அப்போதுதான் தங்கையைக் கூர்ந்து பார்த்தான் அகரன்.
அவளிடம் அசைவே இல்லை. நம்ப முடியாத அதிர்வோடு அவனையே வெறித்திருந்தாள். அவசரப்பட்டுவிட்டது அப்போதுதான் புரிந்தது. காரியம் கையை மீறிவிட்டதில் தன்னையே நொந்துகொண்டான். உணவகத்தில் வைத்து, அவளின் பொறுப்பற்ற குணத்தைப்பற்றி, அஜய் தப்பிப்போகக் காரணமாக இருந்ததைப் பற்றி, அன்று எல்லாளனை நோக்கித் துப்பாக்கியை நீட்டியதைக் கண்டு அவள் பயந்ததைப்பற்றி எல்லாம் சியாமளா சொன்னபோது அவனுக்குள் ஒருவிதக் கோபம்தான் முகிழ்த்தது. ஆனால், திருமணமானபிறகும் அவள் இப்படியே இருந்தால், அண்ணாவின் நிலை என்ன என்று சியாமளா நயமாகக் கேட்டபோது, அவனிடம் பதில் இல்லாமல் போயிற்று. இத்தனை நாட்களாக ஆதினியின் அண்ணாவாக மாத்திரமே அனைத்தையும் யோசித்து நடந்திருக்கிறான். இன்று, தாய் தந்தையும் இல்லாமல், இருக்கிற ஒரே தங்கையைக் கட்டிக்கொடுத்துவிட்டுத் தனியாக இருக்கப்போகிற நண்பனின் இடத்திலிருந்து யோசித்தபோது, தங்கையின் செயல்கள் எல்லாம் பெரும் குறைகளாக எழுந்து நின்றிருந்தது.
அந்தக் கோபத்தோடுதான் வந்து அமர்ந்திருந்தான். அதற்குத் தூபம் போடுவதுபோல ஆதினியும் அடம் பிடிக்க, கோபம் வார்த்தைகளாகவும் செய்கையாகவும் வெடித்திருந்தது. இப்போது தங்கையின் நிலையைக் கண்டு தன் நெற்றியிலேயே அறைந்துகொண்டான்.
“டேய் ஆதிக்குட்டி, அது அண்ணா என்னவோ கோவத்தில..” வேகமாக அவளை நெருங்கியவனை அதைவிடவும் வேகமாகக் கைநீட்டித் தடுத்தாள் ஆதினி. என்னவோ, அனைத்துமே சிதறு தேங்காயாகச் சிதறிப் போனதுபோல் ஒரு உணர்வு. கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டாள்.
அகரனுக்கு அவளை அப்படிப் பார்க்க முடியவில்லை. அவள் கண்களில் தெரிந்த அந்நியத்தனம் கூர் வாளாக அவன் நெஞ்சை அறுத்தது. அவனுடைய தோள் அளவுக்கு வளர்ந்திருந்தாலும் அவனை விடவும் எட்டு வயது சின்னப்பெண். இன்னுமே சிறுபிள்ளைக் குணம் கொண்டவள். அவளை அப்படி வளர்த்ததில் பாதிப் பங்கு அவனைச் சேரும். பிறகு எப்படி அவளைத் தண்டித்தான்? “ஆதிம்மா..” மீண்டும் ஓரடி எடுத்துவைத்து அவளை நெருங்கினான்.
“உன்ன என்ர அண்ணா எண்டு நினைச்சன். ஆனா நீ..” என்றவள் சியாமளாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு குறுக்காகத் தலையை அசைத்தாள். “இல்ல. நீ என்ர அண்ணா இல்ல.”
திகைத்து நின்றான் அகரன்.
சியாமளாவைக் கையால் காட்டி, “உன்னட்டச் சொல்லி எனக்குப் பாடம் படிப்பிக்கிறன் எண்டு இவா இதே வீட்டில வச்சு இவவின்ர அண்ணாட்டச் சொன்னவா. அப்ப நான் அதப் பெருசா எடுக்கவே இல்ல. எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. அண்ணாட்டச் சொல்லுவியா, சொல்லிப்போட்டு நல்லா வாங்கிக்கட்டு எண்டு நினைச்சன். என்ர அண்ணா எங்கயும் என்னை விட்டுக் குடுக்கமாட்டான் எண்டு அவ்வளவு நம்பிக்கை. ஆனா நீ?” என்றவளின் முகத்தில் தன் நம்பிக்கை பரிதாபமாகத் தோற்றுப்போன வலியின் சாயல். “ஆனா, அவா கெட்டிக்காரி. சொன்னமாதிரி என்ர அண்ணான்ர கையால அடியே வாங்கித் தந்திட்டா. நீ அடிச்சதவிட அதுதான் கூட வலிச்சது.”
துடித்துப்போனான் அகரன். ஏற்கனவே திட்டம் போட்டுத்தான் அவனிடம் பேசினாளா? திகைப்புடன் திரும்பிச் சியாமளாவைப் பார்த்தான். அவன் விழிகள் அவளைப் பொசுக்கியது. அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் முகம் கன்ற நின்றிருந்தாள் அவள். அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள் வந்தார் இளந்திரையன். வெளி வாசலிலேயே ஆதினியின் கண்ணீர் குரல் கேட்டதில் வேக எட்டுக்களோடு வந்தவருக்கு நடப்பது ஒன்றுமே விளங்கவில்லை.
சியாமளாவுக்கு அவளும் தமையனும் கதைத்ததை ஆதினி கேட்டிருக்கிறாள் என்பதே பெரும் அதிர்ச்சி. இப்போது, இளந்திரையனும் வந்துவிட்டதில் இனி என்னாகுமோ என்று நடுங்கினாள்.
“என்னம்மா? என்ன தம்பி பிரச்சினை?” என்றபடி அவர்களிடம் வந்தவரின் புறம் திரும்பியது ஆதினியின் கோபம்.
“ஏன்பா, உங்களுக்கு நான் சுமையா போயிட்டனா? அதுதான் கழுத்தில கத்திய வைக்கிற மாதிரி அவரின்ர தங்கச்சின்ர வாழ்க்கையைக் காட்டி என்னக் கட்டிக்குடுக்க நினைச்சீங்களா? அந்தளவுக்கு நான் ஏதும் குறையுள்ள பிள்ளையாப்பா? இல்ல, இந்த அடங்காப்பிடாரிய, அகங்காரம் பிடிச்சவள எவனும் கட்டமாட்டான் எண்டு நீங்களும் நினைச்சிட்டீங்களா? ஏன்பா ஏன் இப்பிடிச் செய்தீங்க? ஏன் என்னைக் கேவலப்படுத்தினீங்க? என்னை எவனும் கட்டி வாழமாட்டானாம் எண்டு சொல்லுறா இவா. அப்பிடியா நான்? அதுதான் இப்பிடி ஒரு கலியாணத்தை எனக்குச் செய்ய நினைச்சீங்களா?” தான் பெற்றெடுத்த பெண்ணரசியின் கோபத்தைக் கண்டு திகைத்துப் போனார் இளந்திரையன். நடந்தவை தெரியாதபோதும் ஊகிக்க முடிந்தது. அவரின் விழிகள் சியாமளாவை ஒரு பார்வை பார்த்தது. அவளுக்குக் கைகால்கள் எல்லாம் வெளிப்படையாகவே நடுங்கிற்று. அவரை எதிர்கொள்ள அஞ்சி அகரனின் பின்னே மறைந்தாள்.
அவளை விட்டுவிட்டுத் தரையில் விழுந்த மீனாகத் துடிக்கும் மகளின் புறம் திரும்பினார் இளந்திரையன். “நான் அவனிட்ட கேட்டனான்மா. அவன் ஓம் எண்டு..” என்றவரைப் பேசவிடாமல், “என்னெண்டு கேட்டிங்க?”என்று வெடித்தாள் அவள். “என்ர மகளை உனக்குப் பிடிச்சிருக்கா எண்டு கேட்டீங்களா? இல்ல, என்ர மகளைக் கட்டினாத்தான் உன்ர தங்கச்சிய மருமகளா ஏற்பன் எண்டு சொல்லிக் கேட்டீங்களா? எப்பிடிக் கேட்டீங்க?” அவளின் ஆவேசம் கண்டு அதிர்ந்து நின்றார் அவர்.
மறைமுகமாக அவளை மணக்கும் நிலையில் அவனை அவர் நிறுத்தியது உண்மைதான். ஆனால், அதன் பின்னே மறைந்திருந்தது நல்லவன் ஒருவனைத் தவற விட்டுவிடாமல் தன் செல்லப் பெண்ணுக்குத் துணைவனாக்கிவிடும் வேகம் தானே தவிர, அவள் சொன்ன பொருள் அல்லவே.
“என்ன இருந்தாலும் இந்தச் சியாமளா குடுத்து வச்சவா. அவவின்ர சந்தோசத்துக்காகத் தன்ர வாழ்க்கையையே பலிகடாவா குடுக்கிற அண்ணா, அவா ஒரு வார்த்த சொன்னதும் தங்கச்சியையே அடிக்கிற அளவுக்குப் பாசமான காதலன், மகள் மாதிரிப் பாக்கிற மாமனார் எண்டு அவாவைச் சுத்தி இருக்கிறது முழுக்க அவாவைத் தாங்கிற மனுசர். ஆனான் நான்? இந்த வீட்டின்ர இளவரசி எண்டு சொல்லிச் சொல்லியே வேலைக்காரிய விட மோசமான நிலைல கொண்டுவந்து விட்டுடீங்க எல்லாரும். அம்மா இல்லாம போயிட்டா. அதுதானே எல்லாரும் என்னைப்போட்டு இந்தப்பாடு படுத்துறீங்க?” என்றவளின் பேச்சில் இளந்திரையன் முற்றிலுமாக உடைந்து போனார்.
எந்தக் குறையும் தெரியக்கூடாது என்று பொத்தி பொத்தி வளர்த்தாரே. கடைசியில் தோற்றுப் போனாரே. “என்ர பிள்ளைக்கு என்னடா செய்தனி?” தாங்க முடியாமல் மகனிடம் சீறினார்.
அகரனுக்குத் தகப்பனின் முகம் பார்க்க முடியவில்லை. கண்கள் கலங்கிவிட, “அப்பா.. தெரியாம..” என்றவனைப் பேசவிடாமல் சியாமளாவின் முன்னே சென்று நின்றாள் ஆதினி. கடந்த நாட்களாக அடக்கி வைத்திருந்த மனதின் புழுக்கங்கள் அத்தனையும் தொடர் குண்டுகளாக அவளிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.
“என்ன சொன்னீங்க? என்னைக் கட்டி எவனும் வாழமாட்டானா? இப்ப நான் சொல்லுறன் உங்களுக்கு. அண்ணன் தங்கச்சிக்கு இடையில சண்டையை மூட்டிவிட்டு, சந்தோசப்படுற உங்கள மாதிரிக் கேவலமான ஒருத்தின்ர அண்ணாவைக் கட்ட எனக்கு விருப்பம் இல்ல. நான் இந்த வீட்டின்ர இளவரசி. நீதிபதி இளந்திரையன்ர ஒரே மகள். என்னைக் கட்டுறதுக்கு உங்கட அண்ணாக்குத்தான் தகுதி இல்ல. நீங்க என்ன என்னை வேண்டாம் எண்டு சொல்லுறது? நான் சொல்லுறன், எனக்கு வேண்டாம் அவன். அவனுக்கு உங்கள மாதிரி குடும்பத்துக்கச் சண்டையை மூட்டி விடுற ஒருத்தியப் பாத்துக் கட்டி வைங்க. அதுதான் அவனுக்கும் பொருந்தும். உங்கட குடும்பத்துக்கும் பொருந்தும்!” என்று சொன்னவள், விறு விறு என்று படியேறிச் சென்றாள்.
அவமானத்தில் முகம் சிவந்துவிட தலையை நிமிர்த்தும் தைரியமற்று நின்றிருந்தாள் சியாமளா.