அன்று முழுக்க சஹானா இயல்பாகவே இல்லை. காரணமும் பிடிபட மறுத்தது. இமைக்க மறந்து தன்னையே ஆசையாகப் பார்த்த சஞ்சயன், அவள் வைக்கிறேன் என்றதும் வேகமாகப் பேசிய சஞ்சயன், அகிலன் சொல்லித்தான் அறைக்கு வந்தேன் என்றதும் அவன் முகத்தில் வந்த கோபம் என்று அவனே நினைவில் நின்று குடைந்துகொண்டிருந்தான்.
என்றுமில்லாமல் அன்று அவனுடைய அறைக்குள் வைத்து அவன் அணைத்ததும் முத்தமிட்டதும் சேர்ந்து நினைவில் வந்தது. அன்று உதட்டினில் உரசிய மீசை இன்று அவளை என்னவோ செய்தது. அவன் கைகளில் இருந்த நடுக்கம், கண்களில் தெரிந்த பரிதவிப்பு என்று புதுவித உணர்வுகள் அவளைப் பந்தாடின.
‘என்னை மறக்க மாட்டியே?’ என்று கேட்டானே. ‘கெதியா(விரைவா) வந்திடு’ என்றானே.
சஹானாவின் இரவின் உறக்கங்கள் தொலையத் தொடங்கிற்று. தனிமைகள் மெல்ல மெல்ல அவனால் நிறைந்தன. இப்போதெல்லாம் அவளின் சிந்தனையின் பெரும்பகுதியை சஞ்சயன் பிடித்துக்கொள்ளத் துவங்கினான். அப்படி யோசிக்க யோசிக்கத்தான், அவனுக்கு ஏதோ ஒரு வகையில் தன்னைப் பிடித்திருக்கிறது என்பதையே கண்டுபிடித்தாள். அன்றைக்கு வைத்தியசாலையில் வைத்தும் அவன் சும்மா சொல்லவில்லை. இல்லாமல் அவள் புறப்படுகிறபோது அப்படித் தவித்திருக்க மாட்டான்.
அவளாகத் தன்னைத் தேடிவராமல் அகிலன் சொல்லித்தான் வந்தாள் என்கிற கோபமும் அதனால் தான் என்று விளங்கியபோது சின்னச் சிரிப்பு அவள் இதழினில் உதயமாயிற்று. வீட்டுக்குள்ளேயே வரக்கூடாது என்று சொன்னவனின் இதயத்துக்குள்ளேயே அவளா? விரட்டி விரட்டி அடித்தானே. இனி என்ன செய்யப் போகிறானாம்? உதட்டின் புன்னகை விரிந்தது.
ஒரு உற்சாகமும் துள்ளலும் பொங்க மிகுதியான அவளின் நாட்கள் மிக அழகாயிற்று. காதலிக்கிறோம் என்பதை விடக் காதலிக்கப்படுகிறோம் என்பது அதுவும் அவனைப்போன்ற முழுமையான ஒரு ஆண்மகனால் நேசிக்கப்படுகிறோம் என்பது நம்மை நமக்கே புதிதாகக் காட்டும் அல்லவா. அதை அனுபவித்துக்கொண்டிருந்தாள் சஹானா. இருந்தும் அவளாக அவனுக்கு அழைக்கவில்லை. அவனும் இவளோடு பேசவில்லை.
அங்கே, அவனுடைய நாட்கள் ஒவ்வொன்றும் நரகமாகக் கழிந்தன. அவனால் அந்த அறைக்குள் உறங்கவே முடியவில்லை. இரவுகளில் பிந்தி வீடு வருகிறவன் நடுச்சாமம் வரையிலும் வெளிவாசலில் கிடந்த சாக்குக் கட்டிலில் முழித்துக் கிடந்தான்.
நீ வேண்டும் என்று நான் உன்னைக் கேட்கவே இல்லை. நீயாகத்தான் வந்தாய். நீயாகத்தான் என்னையும் எடுத்துக்கொண்டாய். பிறகும் ஏனடி என்னைப்போட்டு வதைக்கிறாய்? என் உலகம் எப்போதும்போல என்னோடுதான் இருக்கிறது. நான் மட்டும் நானாக இல்லாமல் தொலைந்து போனேனே. தன் வீட்டு முற்றத்தில் அவனுக்குத் துணையாக வந்து நின்ற நிலவுப் பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தான் அவன்.
அவள் மீது மிகுந்த கோபம் இருந்தது. மிகுந்த மனத்தாங்கல் இருந்தது. அப்படியென்றால் அவன் அவளை வெறுக்கவேண்டும். அதுதானே நியதி. மாறாக இனி எப்போது வருவாள் என்று காத்துக் கிடக்கிறான். என்னோடு பேசுவாளா இணக்கமாக இருப்பாளா என்று ஏன் தவிக்கிறான்? அவளை யாராவது என்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிடுங்கள். இல்லையோ என்னைக் கொண்டுபோய் அவளிடம் கொடுத்துவிடுங்கள் என்று வாய்விட்டுச் சொல்லமுடியாமல் தனக்குள்ளேயே வைத்து வைத்து அழுத்திக்கொண்டிருந்தான்.
இப்படி இரவிரவாக இவன் முழித்துக் கிடப்பதை தெய்வானை ஆச்சியும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். அவருக்கும் உறக்கமே இல்லை. மகன் எப்போது இங்கேயே நிரந்தரமாக இருக்க வருவான் என்று ஏங்கிக்கொண்டு இருந்தார். எல்லாச் சந்தோசங்களில் இருந்தும் தன்னைச் சுருக்கித் தனிமைப்படுத்திக்கொண்டு வாடும் பேரனின் அருகில் மெல்ல வந்து அமர்ந்தார். அந்த நிசப்தமான நேரத்தில் அவரை எதிர்பாராது, “அம்மம்மா.. என்ன?” என்றவனுடைய குரல் சத்தமில்லாமல் கனத்து ஒலித்தது.
“இந்த நேரம் நித்திரை கொள்ளாம இங்க இருந்து என்னய்யா செய்றாய்?”
அவளை நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று எப்படிச் சொல்வான். வானத்து மதியில் பார்வை இருக்க, “நித்திரை வரேல்ல அம்மம்மா.” என்றான் முணுமுணுப்பாக.
“ஏன் ஐயா? என்ர பேத்தியை நினைச்சுக்கொண்டு இருக்கிறியா?” என்றார் இதமான குரலில்.
ஆம் என்று சொல்ல முடியாமல் அமைதி காத்தான். தெய்வானைக்கு அவனைத் தெரியும் தானே. எனக்கு இதுதான் வேண்டும் என்று வாய்விட்டுச் சொல்லத்தெரியாத முரட்டுக்குழந்தை.
“உன்னோட கதைக்கிறவளே?”
அவள் ஏன் என்னுடன் கதைக்கப்போகிறாள்? இங்கே நான்தான் கரைந்துகொண்டிருக்கிறேன்.
“சின்னப்பிள்ளை தானே. அவளுக்கு இன்னும் எங்களில இருக்கிற கோபம் போகேல்ல. அதுதான் கதைக்காம இருக்கிறாள். நீ கவலைப்படாத!” என்றார் அவனின் தோள்களைத் தடவிக்கொடுத்தபடி.
அவளின் கோபம் எப்போ போகும்? எப்போது அவனுக்கு மோட்சம் தருவாள்? அவன் மெழுகாகக் கரைந்துவிடமுதல் அவள் வந்து காப்பாற்றிவிட்டால் நல்லது. இதையெல்லாம் அவளிடமே அவனால் சொல்லமுடியுமா தெரியாது. அப்படியிருக்க அவரிடம் எப்படிச் சொல்லுவான்?
சற்று நேரத்தைத் தானும் அமைதியில் கழித்துவிட்டு, “நீ ஒருக்கா அங்க போயிட்டு வாவன்!” என்றார் எதேர்ச்சையாக.
திகைத்துப்போய் அவரைப் பார்த்தான் சஞ்சயன். அவன் மனமும் அதற்குத்தான் ஏங்கியது. ஆனால், இப்போது தான் வருத்தமாக இருந்து எழுந்த அப்பா, பொறுப்பே இல்லாத அம்மா, வயதான அம்மம்மா தாத்தா, தங்கை எல்லோரையும் விட்டுவிட்டு எப்படிப் போவான்?
“ஓடிப்போய்ப் பாத்துக்கொண்டு வாறதுக்கு அவள் என்ன பக்கத்திலையா இருக்கிறாள்? அதெல்லாம் சரிவராது அம்மம்மா.” என்றான் கசந்த குரலில்.
ஆக அவனுக்கும் அந்த விருப்பம் இருக்கிறது. எங்களுக்காகப் பேசாமல் இருக்கிறான். தெய்வானையின் மனது கரைந்து போயிற்று.
“எங்களைப் பற்றி யோசிக்காத தம்பி. இப்பதான் அரவிந்தன் இருக்கிறான். அகிலன் உன்னை மாதிரியே அருமையான பிள்ளை. அவன் இருக்கிறான். இல்லாட்டியும் நாங்க என்ன வேற எங்கேயோவா இருக்கிறோம். பிறந்து வளந்த சொந்த ஊர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வாறதுக்குச் சுத்திவர சொந்தம் இருக்குத்தானே. நீ போயிட்டு வா! அவளும் சந்தோசப்படுவாள்.” என்றார் முடிவாக.