ஐந்தாம் தடவையாக அழைப்புப் போய்க்கொண்டிருந்தது. மிகவுமே புதியதான தவிப்பான உணர்வுப் பிடியில் அகப்பட்டு நின்ற சேந்தனின் பொறுமை அடியோடு விடைபெற்றிருந்தது.
ஒருத்தி, உன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று உணர்ந்தும் ‘வலிய வலிய நெருங்க நினைக்கிறியோ சேந்தன்?’ இப்போது மனம் கோபமாகக் கேட்டுத் தொலைத்தது. இருந்தும் அடங்கிய அழைப்புக்கு ஆறாவது தடவையாக உயிர் கொடுத்தான், அவன்.
திடுமென்று நித்திரைக் கலக்கம் கலந்த குரல் வந்து மோதியது. அவள் சொன்ன, “ஹலோ” அவன் இதய ஆழம் வரை சென்று சோர்வை, தவிப்பை விரட்டிவிட்டுச் சட்டென்று எழுந்து நிற்கச் செய்தது.
உடலுள் பாய்ந்த புத்துணர்வு, மனத்தின் மகிழ்வு அவன் மட்டில் அவளின் தேவையைத் தெள்ளத் தெளிவாகவே உணர்த்தியது. பதில் சொல்லவில்லை, அந்த ஒற்றைச் சொல்லை அணுவணுவாக ரசித்தபடி நிலாவைப் பார்த்தான், சேந்தன்.
முறுவலில் சுருங்கிய விழிகள் தாங்கிய அவள் முகம் அருகில் வருவது போலிருந்தது. இவன் உதடுகளில் முறுவல் தவழ்ந்தது.
“சேந்தன்… லைனில் இருக்கிறீங்களா? என்ன இந்த நேரம்? இன்னும் தூங்கேல்லையா? இனிதன் பக்கத்தில இருக்கிறாரா? பயணம் எல்லாம் எப்பிடி? அறைகள் வசதியா இருக்கோ?” எதுவுமே நடக்கவில்லையாம். அக்கறையாக விசாரிக்கிறாளாம். அவன் என்ன மனநிலையில் இருக்கிறான், இவள் என்ன கேட்கிறாள்?
“ஏன் நான் போட்ட மெசேஜ் ஒண்டுக்கும் பதில் போடேல்ல கவினி?” இறுகிக் கிடந்த ஆழ்ந்த குரலில் அவ்வளவு நெருக்கம். அதில் பொதிந்து கிடந்த, எப்பிடி நீ பதில் சொல்லாது தவிர்க்கலாம் என்ற கேள்வியை நன்குணர்ந்தாள், கவினி. சட்டென்று பதிலிறுக்கவும் வரவில்லை.
“கவினி”
“ஏனெண்டு இயலிட்டச் சொன்னனே. உண்மையாவே வேல இருக்குச் சேந்தன். வேற ஆரிட்டையும் பொறுப்பாக் குடுக்கக் கிடைச்சா வரலாம் எண்டுதான் நினைச்சனான். ஆனா, அப்பிடி ஆரும் அம்பிடேல்ல. ” எவ்வித உணர்வையும் வெளிக்காட்டாத அமைதியான குரலில் பதில் சொன்னாள்.
“பொய்!” சிடுசிடுப்போடு சொல்லியிருந்தான், அவன். அவளுக்கும் சேர்த்து உணர்வுகளைக் கொட்டியது அவன் குரல்.
“என்ன பொய்? வேலை இருக்கு எண்டதோ?” நக்கலைக் கையில் எடுத்திருந்தாள், அவள்.
அவள் கேள்விக்குப் பதிலிறுக்கவில்லை, அவன். “உம்மட அம்மாவோட ஏதாவது பிரச்சினையா கவினி?” கூர்மையாகக் கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திருந்தான்.
சட்டென்று அவளுள் இதம் பரவியது. அவள் அப்பம்மா இப்படித்தான், அவர் கேட்கும் தொனியே அவள் மனச்சுணக்கத்தைப் போக்க உதவிடும். நீ எனக்கு முக்கியம், உனக்கு நானிருக்கிறேன் என்பதை முகமே பார்க்காது வார்த்தைகளால் கடத்துவது என்பது …மிகப்பெரிய ஆசீர்வாதம் அது! ஆனாலும், ‘இதையெல்லாம் விசாரிக்க இவன் ஆர்?’ என்ற எண்ணம் இடையிட்டிருந்தது. சும்மா எல்லாம் இல்லை, ‘என் நண்பிகள் குடும்பங்களோடு உனக்கு நட்பு எதற்கு? விலகி நில்!’ என்று எச்சரித்த தாயின் குரல் எழுப்பியிருந்த எண்ணம் அது.
சேந்தன் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.
அமைதியாக இருப்பது வீண் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கலாம். தொண்டயைச் செருமிக்கொண்டு நேராக அமர்ந்தாள், கவினி.
“ஏன் அப்பிடிக் கேட்கிறீங்க சேந்தன்? அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்ல. நாங்க என்ன குழந்தைகளா அடிபிடிப்பட?” பகிடியாகச் சொல்லிச் சிரிக்க, இவனிலும் நகைப்புத் தொத்திக்கொண்டது .
“அப்பிடியெண்டா நாளைக்கு விடிய ஒன்பதுக்கும் பத்துக்கும் இடையில மிகிந்தலைக்கு வாறீர். நான் உங்கட ஹெட், ஆர் ஜெ ஐயாவோட கதைக்கிறன்.” விடாக்கண்டன் நான் என்று அவளுக்கு உணர்த்தினான்.
“ஓ கடவுளே! ப்ளீஸ் சேந்தன் என்ன நீங்க? அதெல்லாம் சரி வராது!” என்றவள் குரலில் அவ்வளவு அழுத்தம். அதுதான் கவினி. அதை அவனுக்கு மறைக்க விரும்பவில்லை.
அவன் முகம் இறுகீற்று. “உமக்கு எங்களோட வர விருப்பமே இல்லை எண்டாலும் எவ்வளவு ஆசையாக் கூப்பிடுறன் எண்டதுக்காக, ஒரு சின்ன மரியாதைக்குச் சரி வரலாம் கவினி.” என்றவனுக்குப் பதில் சொல்லாது இருந்துவிட்டாள். அழைப்பைத் துண்டிக்க எவ்வளவு நேரம் ஆகும்? ஏனோ, முகத்தில் அடித்தாற்போன்று அப்படிச் செய்யவும் மனம் வரவில்லை.
“ப்ளீஸ் கவினி, விடிய வெளிட்டு வாரும் சரியா? இல்லையோ, நாளைக்கு இனிதனோட அங்க வந்திருவன்.” கோபத்தை மறைக்காது சீறினான்.
காதே கேளாதவள் போல், “மணியப் பாருங்க, தூங்குங்க சேந்தன். எனக்கும் இங்க விடியவே வெளிக்கிடோணும். தகப்பன், தமையன்,கணவன் என்று மூன்று ஆம்பிள்ளைகள் காணாமல் போன குடும்பம் ஒண்டப் (ஒன்றைப்) பேட்டி எடுக்கிற வேலை இருக்கு. அந்தக் குடும்பத்துக்கும் நீங்க உதவி செய்யலாம். நாளைக்கு நேரில கதைச்சிட்டு விபரம் சொல்லுறன் சரியா. இயலிட்டையும் சுகம் சொல்லிவிடுங்க. குட் நைட்! ” ஒரே மூச்சில் கதைத்தவள், பதிலுக்குக் காத்திராது வைத்துவிட்டாள்.
கணமும் தாமதியாது திருப்பி அழைத்தான்.
கைப்பேசியைப் பார்த்தவளோ, “இதென்ன வம்பாக் கிடக்கு!” அலுப்போடு சொல்லிக்கொண்டாலும் அவளையும் மீறியே மனத்துள் மகிழ்வுக் குமிழ்கள். அவள் பிடிவாதம் பற்றி வீட்டில் தெரியும். அதுவே, வெளிக்கிட்டவளோடு மல்லுக்கட்டவே செல்லவில்லை.
“என்ன சேந்தன்?”
“பெரிசா ஒண்டும் இல்லை, நாளைக்கு நீர் வரேல்லையோ கட்டாயம் நான் வருவன்.” என்று அவன் சொன்னது மனத்தில் இருந்த மகிழ்வுக் குமிழ்களைப் பட்டுப் பட்டென்று போட்டுத் தாக்கிவிட்டிருந்தது.
“எனக்கு வர வசதிப்படாது. நீங்க இங்க வந்தும் பிரயோசனம் இல்லை. விடியவே நாங்க வேற இடத்துக்குப் போயிருவம்.அக்காட ரிசப்சனில சந்திப்பம். பை!” அழுத்தமாகச் சொன்னவள் வைத்துவிட்டாள்.
கதைத்துப் பேசிப் பழகி வராத நெருக்கமும் எக்கச்சக்க எதிர்பார்ப்பும் தொனிக்கக் கதைத்தவனோடு, வெட்டொன்று துண்டு இரண்டெனக் கதைத்துவிட்டு அழைப்பைத் துண்டித்த வேகத்தில் கைப்பேசியை அணைத்துவிட்டாள் , கவினி.
தாயின் ஏச்சும் பேச்சும் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கையில், என்னதான் இயலும் அவனும் நட்போடு அவளை நெருங்கினாலும் அவளால் அதை ஏற்க முடியவில்லை.
யோசிக்கையில், சேந்தன் இந்தளவுக்கு உரிமை எடுத்து அணுகுவதும் பிடிக்கவில்லையோ! அவளுள் ஒருவிதமான குழப்பம். இது தேவையா உனக்கு? மனத்தை அதட்டிவிட்டு விழிகளை அழுந்த மூடிக்கொண்டாள். சற்று நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்துவிட்டாள்.
சேந்தனோ, கைப்பேசியையே பார்த்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான். வண்ண நிலவு அவன் பார்வையை விட்டு மறைந்து கொண்டிருக்க, உறக்கம் தொலைத்த இரவை நெட்டித் தள்ளிக்கொண்டிருந்தான், அவன்.