மறுநாள் …
ரிசோர்ட்டிலேயே காலையுணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். யோகனும் பூங்குன்றனும் தயாராகிக் கீழே சென்றிருக்க, “நேரமாகுது இனிதன், வெளிக்கிட்டாச் சாப்பிட வாங்கோ. அலுவல்கள முடிச்சிட்டு நேரத்துக்கே வெளிக்கிட்டிருவம்.” கீழேயிருந்து குரல் கொடுத்தார், மதிவதனி.
“நாங்க வெளிக்கிட்டுட்டம் மாமி. சூரியன் குளிக்கிறார்,நீங்க சாப்பிடுங்கோ வாறம்.” என்றான், இனிதன். தன் பொருட்களைப் பயணப்பைக்குள் வைத்துக்கொண்டு நின்றவன் பார்வை பால்கனிக்குச் சென்று வந்தது.
சந்தித்த குறுகிய காலத்தில் சேந்தனோடு நல்லதொரு நட்பு உருவாகியிருந்தது. அதுவே, கையிலுள்ள தேனீர்க் கோப்பையோடு வெளியே வெறித்தபடியிருந்தவனை யோசனையாகப் பார்க்க வைத்தது.
கல்யாண வீட்டில் நன்றாகத்தான் இருந்தான். நேற்றைய பயணத்தின் போது அவ்வளவாகக் கதைக்கவில்லைதான். எல்லோருமே களைப்போடு இருந்ததில் இவனும் அதைப் பெரிது பண்ணவில்லை. ஆனால்…
“குட் மோர்னிங் சேந்தன்!” என்றபடி, அவனருகில் கிடந்த மூங்கில் இருக்கையை நிறைத்தான், இனிதன்.
“வெளிக்கிட்டிட்டீங்களா?” என்று கேட்டவனோ, தேனீரின் கடைசிச் சொட்டை உறிஞ்சினான். அவன் முகத்தை ஆராய்ந்தான், இனிதன்.
கண்மடல்கள் வீங்கிச் சோர்ந்து போயிருந்தான். நெற்றிச் சுருக்கம், பலமான யோசனையோடு இருக்கிறான் என்றது. கீழிருந்து ஆதினியின் சிரிப்புச் சத்தம் கேட்க இனிதன் முகத்தில் முறுவல்.
திருமணம் பேசி பெரியவர்கள் மட்டில் முற்றாகிவிட்டார்கள். வாழப் போகிறவர்கள் முழுச் சம்மதம் சொல்ல வேண்டுமென்ற ஒன்றுக்காகவே, கதைத்துப் பழக இதுவொரு நல்ல சந்தர்ப்பம் என்றுதான் ஆதினியையும் அழைத்து வந்திருந்தார்கள். அதுபார்த்தால், ‘ஆள் என்ன தனிமையில் பலத்த யோசனை?’ இவன் மனத்தில் யோசனை ஓடியது.
“இரவும் நிறைய நேரமா இங்க இருந்தீங்க போல?” மெல்ல விசாரித்தான்.
“ஆங்! அது சும்மா இனிதன். புது இடம், பெரிசா நித்திரை வரேல்ல, அதான்.”
“ஓ! அவ்வளவும் தானே சேந்தன், பிரச்சினை ஒண்டும் இல்லையே?” ஆராய்ச்சிப் பார்வையோடு கேட்டவனைப் பார்த்தான், சேந்தன்.
அக்கணம், ‘உங்கட மச்சாள வரச் சொல்லிக் கேட்கேலுமா? நீங்க கேட்டா கட்டாயம் வருவா.’ வார்த்தைகள் நா நுனியில் வந்து நின்றன. ஏதோவொன்று தடுத்தது. சேந்தன் மிகவுமே தடுமாறிப் போனான்.
அவன் வீட்டினர், தமக்குப் பிடித்த ஆதினியை இவனும் அறிமுகம் செய்துகொள்ள வேண்டும், வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள வேண்டும் என்றதற்காக அழைத்து வந்தார்கள் என்றால், இவனோ, இந்தப் பத்து நாட்களில் கவினியோடு நன்றாகப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்வில் அல்லவா புறப்பட்டிருந்தான்.
தான், அவளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதைக் காட்டிலும் அவள், தன்னைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றதொரு ஆசை. அவளுடைய தாயாரின் சினேகிதி மகன் என்றில்லாது, சேந்தன் என்பவனை அவள் நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவா அவனுள்.
தலைகோதிக்கொண்டே மெல்ல முறுவலித்தான், சேந்தன்.
“பிரச்சினை எண்டு ஒண்டும் இல்ல இனிதன். உங்களிட்டச் சொல்லுறதில என்ன இருக்கு?” என்றுவிட்டு நிதானித்தவன் தடுமாறுகிறான் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. நெற்றி சுருங்கப் பார்த்திருந்தான், இனிதன்.
“இல்ல, வலு ஆர்வமா இந்தப் பயணம் வெளிக்கிட்டனான். உண்மையா இந்தமுறை உங்கள் எல்லாரோடும் சேர்ந்ததில் பொழுது போறதே தெரியேல்ல. இப்ப, ஏதோ ஒரு பஞ்சிக்குணம். பச்! விடுங்க பாப்பம், நீங்க பெரிசா ஒண்டும் யோசியாதீங்க!” என்றுவிட்டு எழுந்து உள்ளே சென்றவனைப் பார்வை தொடர, திகைப்போடு இருந்தான், இனிதன்.
என்னவோ தான் யோசித்துக் குழம்பி நிற்பது போலல்லவா ஆறுதல் சொல்லிச் செல்கிறான். எதையோ சொல்ல வந்துவிட்டு மாற்றிச் சமாளித்துவிட்டுச் செல்கிறானா? என்ன பிரச்சினை?ஆதினியைப் பிடிக்கவில்லையோ? மனத்தில் எழுந்த கேள்விகளால் திணறிப்போனான், இனிதன்.
முதல் நாள் பயணத்தின் போது, ஆதினியின் அருகில் அமரும் படி நிவேதா சொன்னார். சேந்தனோ,கேளாத பாவனையில் இவனருகில் வந்தமர்ந்திருந்தான். இனிதன், அதை இப்போது நினைத்துப் பார்த்தான். நன்றாகவே குழம்பிவிட்டான். எல்லோரும் சினேகிதர்கள். என்ன என்றாலும் பிரச்சினைகள் வராது ஒரு முடிவெடுத்தால் சரி!
சூரியனும் தயாராகி வர மூவரும் கீழே இறங்கினார்கள்.
காலையுணவே பல வகைகளில் இருந்தன. ஒரு துண்டு வாட்டிய பாணும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை வாட்டியெடுத்து கொஞ்சமாக மிளகுத்தூள், உப்புத்தூள் தூவி உண்பதோடு காலையுணவை முடிப்பவன் சேந்தன். மேலதிகமாகச் சுட சுட சீனி சேர்க்காத பால் தேனீர் அல்லது கோப்பி. ஒரு பழம். பதின்ம வயதில் பழகிய பழக்கத்தை அவ்வளவு இலகுவாக விடமுடியவில்லை.
பால் சோறுடன் கட்டைச் சம்பல், குழல் பிட்டோடு தேங்காய்ச் சம்பல், இடியப்பத்தோடு சொதி, றோஸ் பாண், தேநீர், கோப்பி, குளிர்பானங்கள் என்று, தாராளமாகவே பரப்பி வைக்கப்பட்டிருந்த உணவு மேசையைப் பார்த்தவனுக்கு எதையுமே உண்ணத் தோன்றவில்லை. மனத்தின் மந்தநிலை பசியை உணர விடவில்லையோ என்னவோ!