எல்லோரும் ஆவலோடு உணவை ஆராய்ந்து பரிமாறிக்கொள்ள, அமைதியாக ஒரு கதிரையை இழுத்து அமர்ந்தான், சேந்தன்.
அவனையேதான் கவனித்துக்கொண்டு நின்றாள், ஆதினி. முதல் நாள்தான் கதைக்க முடியவில்லை. அவளுக்கு ஆசையாக இருந்தாலும் வலியச் சென்று கதைக்க ஒருமாதிரியாக இருக்க, இயலோடு கதைத்தபடி இருந்துவிட்டாள். சற்று முன்னர் அவளைக் கடந்துதான் உணவுக் கூடத்தினுள் நுழைந்தான். காலை வணக்கத்தோடு கதைக்கத் தொடங்குவான் என்ற எக்கச்சக்க எதிர்பார்ப்போடு பார்த்து நின்று ஏமாந்தது தான் மிச்சம்.
இது சரிவராது என்றெண்ணிக்கொண்டே, காலை வணக்கத்தோடு அவனருகில் வந்தமர்ந்துகொண்டாள், ஆதினி. உண்மையிலும் பட்டுப்போன்ற குரல். அவளில் இருந்து வந்த வாசனைத் திரவிய நறுமணம் அருகிலிருந்தவன் நாசித் துவாரங்களைத் தழுவிச் சென்றது. நேர்த்தியான ஆடையாளங்கரங்களோடு அமர்ந்திருந்தாள். இவன் தலை அவள் புறம் திரும்பவே இல்லை. எதிர்புறமாகப் பார்த்தபடி, காலை வணக்கத்தை முணுமுணுத்திருந்தான். எதிர்ப்புறம் அமர்ந்திருந்த சூரியன் ஒருவிதமாகப் பார்த்ததைக் கூட அவதானிக்கவில்லை.
ஆதினியின் முகம் சிறுத்துப் போயிற்று. தன்னைச் சுற்றி விழிகளை சுழற்றியவளுக்கு அவமானமாகவும் இருந்தது. அன்று, லிங்கம் கூல் பாரில், கல்யாணத்தில் என்று சந்தித்திருந்தாலும் பிரத்தியேக சுவாரசியம் அவன் பார்வையிலோ வார்த்தைகளிலோ நடத்தடையிலோ வெளிவரவில்லை. இருந்தபோதும் நிவேதாவும் மற்றவர்களும் காட்டிய ஆர்வம் தந்த நம்பிக்கைதான் ஆதினியை இவர்களோடு வர வைத்திருந்தது.
‘பெரிய லெவல் பிடிச்ச ஆளோ! வெளிநாடு எண்டோன்ன கொம்பு முளைச்சிருக்கா என்ன?’ மனத்துள் எரிச்சல் ஊற அவனை முறைத்தாள், ஆதினி.
நிவேதா அவர்களையேதான் பார்த்திருந்தார்.உண்மையில் மகனில் வருத்தமாக இருந்தது. எக்காரணம் கொண்டும் ஆதினியைத் தவறவிட அவர் தயாராக இல்லை. எல்லாப் பொருத்தகங்களோடும் இப்படியொரு பெண் கிடைப்பது என்ன இலேசுப்பட்ட வேலையா?
அவர்களை நோக்கி நகர அடியெடுத்து வைத்தார்.
“என்ன சாப்பிடப் போறீங்க சேந்தன்? என்ர ஃபிரெண்ட் இங்க வந்து முதல் தங்கியிருக்கிறா. எல்லாமே நல்ல ருசியாக இருக்கும்.” கடைசி முயற்சியாக இழுத்துப் பிடித்த பொறுமையோடு கதைத்தாள், ஆதினி. அவளுக்கு வெளிநாட்டில் திருமணம் செய்யவே விருப்பம். அதுமட்டும் தான் அவள் விருப்பம். பொருத்தம் என்று வந்ததில் சேந்தனை மிகவும் பிடித்திருந்தது. அந்த ஒன்றுக்காக இவ்வளவுக்கு வளைய வேண்டியிருக்கே!
திரும்பி நிதானமாக அவளைப் பார்த்தான், சேந்தன்.
“நான் காலமேல லைட்டா தான் சாப்பிடுறது. இதெல்லாம் பகல் இரவுக்குச் சாப்பிடுற சாப்பாடா இருக்கு.” இயந்திரத்தனமாகச் சொன்னவன்,“நீங்க சாப்பிடுங்க.” பட்டென்று எழுந்துவிட்டான்.
அதே வேகத்தில் ஒரு வாழைப்பழமும் ஒரு கோப்பைக் கோப்பியுமாக வெளியேறியும் இருந்தான்.
எல்லோர் பார்வையும் ஆதினியில் தான். கண்கள் கலங்கிப் போனாள், அவள்.
“அண்ணா மட்டும் இல்லை, நாங்களும் காலச் சாப்பாடு இப்பிடியெல்லாம் சாப்பிடுறது இல்ல.” என்றபடி, தமையன் இருந்த இடத்தில் வந்தமர்ந்த இயல்தான் நிலைமையை வெகு இயல்பாக்கியிருந்தாள்.
“என்னடி இது, சேந்தனுக்கு விருப்பம் இல்லையோ!” சினேகிதியின் காதருகில் முணுமுணுத்தார், விமலா.
நிவேதாவின் முகம் இறுகியது. விளையாடும் விடயமா இது? விறுவிறுவென்று மகனைத் தேடிச் சென்றார்.
எந்தவிடயமென்றாலும் சவ்வு முட்டாய் போல் இழுத்துக்கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்காது. ஏன், அவர் கணவர் பிள்ளைகளுக்கும் தான். ஆனால், ஆதினி விசயத்தில் கழுவும் மீனில் நழுவும் மீனாக சேந்தன் நடந்து கொள்கிறானோ!
இப்படி எண்ணியவருக்கு, “உண்மையாவே ஆதினியைப் பார்க்கேக்க எனக்கு அப்பிடி ஒரு எண்ணம் அவவில வரேல்லம்மா! இனி இந்தக் கதை வேணாம்.” என்று, மகன் சொல்லிவிட்டதெல்லாம் நினைவிலில்லை. அவர் அதைக் கருத்திலேயே எடுக்கவில்லை, பிறகெப்படி நினைவில் தங்கும்?
சேந்தனைப் பிடித்திருப்பதை வெளிப்டையாகச் சொல்லிவிட்டே ஆதினி அவர்களோடு வந்துள்ளாள். அவனுக்குப் பிடிக்காமல் போகக் காரணமே இல்லை என்றதிலேயே பிடிவாதமாக நின்றார், நிவேதா. இப்போது இயலை, ஆதினி இடத்தில் நிறுத்திப் பார்த்த நிவேதா, உறுதியானதொரு முடிவு தெரிய வேண்டும் என்ற தீர்மானத்தோடு மகனை நாடிச்சென்றார்.
தம் வாகனத்தடியில் வந்து நின்ற சேந்தனின் ஒரு கையில் உரித்த வாழைப்பழம், ஒரு கடி கடித்தபடி. மறு கையில் இருந்த கைப்பேசியில் கவினிக்கு அழைப்புப் போய்க் கொண்டிருந்தது.
இது நாள் வரை, இப்படி எந்த விசயத்திலும் சிக்குப்பட்டு நின்றதாக அவனுக்கு நினைவில்லை. இப்போதோ, கவினி என்பவளைத் தாண்டி எதையும் சிந்திக்க முடியவில்லை. அந்தளவுக்கு, உரமாகப் பின்னப்பட்ட சிலந்தி வலையாக அவள் சார்பான சிறுசிறு நினைவுகளுள்ளும் மாட்டுப்பட்டு நின்றான்,அவன்.
கையெட்டும் தூரத்தில் இருப்பவளை எட்டாத தொலைவுக்குச் செல்ல அவனால் அனுமதிக்க முடியாது. அதுவே, அவள் மறுப்பும் ஒதுக்கமும் கருத்தில் பதிந்தாலும் மிக இலகுவாக ஒதுக்கிவிட்டு மீண்டும் மீண்டும் அவளையே நாட வைத்திட்டு.
அசராத விக்கிரமாதித்தனாக, தொடர்ந்து நாலைந்து தடவைகள் அழைத்தும் பதிலில்லை. மீண்டும் அழைத்தான்.
அப்போது, “தம்பி ஏன் ஒண்ணும் சாப்பிடேல்ல?”என்றபடி வந்தார், நிவேதா. அதோடு நிறுத்தவில்லை. தொடர்ந்து அவர் கதைத்ததில் மிகுந்த எரிச்சல் கொண்டான், சேந்தன். அதுவே கைப்பேசியில் அழைப்பு ஏற்கப்பட்டதையும் உணரவில்லை.
“அந்தப் பிள்ள ஆதினி எங்களோட என்னத்துக்கு வந்தவா தம்பி? இப்பிடிச் சுற்றிப்பாக்க வசதியில்லாத பிள்ளையோ அப்பன்? இல்லையே! கிடைக்கிற நேரத்தில கதைத்துப் பேசி ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சு கொள்ளத்தானே வந்தவா. அது உங்களுக்கு நல்லாத் தெரியும் எல்லா? அப்பிடி இருக்க, எந்த நேரமும் ஃபோன ஃபோன நோண்டிக்கொண்டு இருக்கிறீங்க. நீங்களாப் போய்க் கதைக்கிறது இல்ல, அந்தப் பிள்ள ஆசையாக் கதைக்க வந்தா முகத்துக்கு நேர உதாசீனம் செய்யிற மாதிரிக் கதைச்சிட்டு எழும்பி வாறீங்க. இதெல்லாம் நல்லா இருக்கோ? முதல் என்ன நினைச்சு இப்பிடிச் செய்யிறீங்க? திரும்பவும் சொல்லுறன் சேந்தன், வடிவுக்கு வடிவு, படிப்பு, குணநலன், நல்ல குடும்பம் எண்டு இப்படியொரு பொம்பள உங்களுக்குக் கிடைக்காது சொல்லிட்டன். அதால இனிச்சரி…”
படபடவென்று கதைத்துக்கொண்டு சென்றவர், மகன் முகம் சுருங்கியதை அவதானிக்காதும் இல்லை. இருந்தாலும் விடுவதாக இல்லை.


