அவனோ, “அம்மா ப்ளீஸ்!” அலுப்போடு சொல்லி, ‘போதும் நிப்பாட்டுங்க’ என்பதாகக் கை காட்டியிருந்தான்.
பேச்சை நிறுத்திவிட்டு முறைப்போடு, “என்ன?” என்றிருந்தார், நிவேதா.
இதனிடையே, ‘இதென்ன பெரிய கரைச்சலாக் கிடக்கு. இண்டைக்கு இவருக்கு’ என்று, எரிச்சலோடு அழைப்பை ஏற்று, ‘ஹலோ’ சொல்ல முயன்ற கவினிக்குக் கதைக்க வரவில்லை.
“அம்மா இதென்ன கரைச்சலாக் கிடக்கு.” அவள் சொல்ல இருந்த வசனம், சேந்தன் வாயிலிருந்து சினந்தபடி வந்து விழுந்திருந்தது.
“அவா…அதான் உங்கட ஃப்ரெண்ட்டின்ட மகள், ஏன் என்னோட பழகோணும்? கூட்டிக்கொண்டு வாங்கோ எண்டு நான் சொன்னனானா?” அவன் கேட்ட விதத்தில் அதிர்ந்தார், நிவேதா.
“அண்டைக்கே…லிங்கத்தில வச்சு என்ர முடிவைச் சொல்லிட்டன் அம்மா. அதை ஒரு பொருட்டா எடுக்காமல் நீங்களே கேள்வியும் பதிலுமா அதையிதைச் சொல்லிப் போட்டுப் போயிட்டீங்க. உங்கள் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு எண்டுறதுக்காக நான் கலியாணம் செய்யேலாதல்லா? உண்மையாவே எனக்கு அவாவில அப்பிடி ஒரு எண்ணமும் இல்ல. தயவு செய்து நீங்க நம்பிக்கை குடுக்க வேணாம். இப்பவே சொல்லி முற்றுப்புள்ளி வச்சிருங்க அம்மா! ப்ளீஸ்!”
அன்று மகன் சொன்னதை ஒரு பொருட்டாகவே எடுக்காத நிவேதா, வார்த்தைகள் வராது நின்றார். அதுவும் மகன் முகம் ஏதோவொரு தீர்மானத்தில் கதைப்பதாகச் சொல்லிற்று.
மகனைத் துளைக்கும் பார்வை பார்த்தார்.கோபமும் சேர்ந்திருந்தது.
“இதென்ன சேந்தன் உங்கட விசர்க்கதை? அண்டைக்கு ஆதவன் நீங்க எல்லாரும் பகிடி பகிடியா எல்லா இன்னும் பொம்பளைகள் பார்த்திட்டு முடிவெடுக்கலாம் எண்டு கதைச்சீங்க?”
“விசர்க்கதையா? ஓ அம்மா! அண்டைக்கும் இப்பயும் ஆதினி விசயத்தில ஒரு பகிடியும் இல்ல. உண்மையாத்தான் சொல்லுறன்.ப்ளீஸ்மா! இதோட இந்தக் கதையை விட்டிருவம்!” என்றுவிட்டு, ரிசோட்டினுள் நடந்தவன் அப்போதுதான் கவினி அழைப்பில் இருப்பதைப் பார்த்தான்.
சூட்டோடு சூடாக, உன்னைப் பிடித்திருக்கு உனக்குப் பிடித்திருக்கா என்று கேட்டுவிடும் முடிவுக்கே வந்துவிட்டான், சேந்தன்.
அந்தோ பரிதாபம்! “கவினி” என்றபடி கதைக்க ஆரம்பித்தவனுக்கு, “ நான் பிசியா நிக்கிறன், தயவு செய்து திருப்ப திருப்ப கோல் பண்ண வேணாம். பை!” வைத்துவிட்டாள், அவள்.
நீண்ட பெருமூச்சோடு பின்னால் திரும்பினான், சேந்தன். நிவேதா அதிர்வோடு அசையாது நின்றிருந்தார்.
அவனுக்கே ஒரு மாதிரியாகி இருந்தது. மீண்டும் தாயை நோக்கிச் சென்றவன், “ப்ளீஸ் மா, குறையா நினைக்காதீங்க. எனக்கு உண்மையா அவாவில் அப்படி ஒரு ஃபீல் வரேல்ல.சொறியம்மா!” அழுத்தமாகச் சொல்பவனிடம்
என்ன கதைப்பது? உணவு தொடங்கி ஆடை வரை, ‘உன் விருப்பப்படி செய்திரலாம்’ என்று சொல்லி சொல்லியே வளர்த்துவிட்டு, வாழ்க்கைத் துணை எங்கள் விருப்பில் இருக்கட்டும் என்று எப்படிச் சொல்வது?
இல்லாவிட்டாலும், உணவும் உடையும் எங்கள் விருப்புக்கு ஏற்றுக்கொண்டாய் தானே, வாழ்க்கைத் துணையையும் எங்கள் விருப்புக்குத்தான் தெரிவு செய்வோம் என்று மல்லுக்கு நிற்க முடியுமா என்ன? அடித்தாலும் குத்துப் பட்டாலும் கொஞ்சிக்கொண்டாலும் வாழப்போவது அவர்கள். அதில் முக்கியமானது அவர்கள் விருப்பே என்று தெள்ளத்தெளிவாகப் புரிந்தாலும் தமக்கென்று வருகையில் ஏற்பது கடினமாக இருந்தது.
இப்போ பெருமூச்செறிவது நிவேதா முறையானது.
“நிவி முதல் வந்து சாப்பிடு ..பிறகு கதைக்கலாம்.” என்றபடி வந்தார் விமலா. பின்னால் மதிவதனியும் வர, சிறு முறுவலோடு ரிசோர்ட்டினுள் நுழைந்துகொண்டான், சேந்தன்.
மகன் சொன்னதைச் சினேகிதிகளிடம் சொன்னார், நிவேதா. அவர்களுக்கும் அதிர்வுதான். எதிர்பார்க்கவே இல்லையே!
“அருமையான பிள்ள ஆதினி, சேந்தனுக்கு ஏன் பிடிக்கேல்ல? நான் ஒண்டு சொல்லவா நிவி. நீ அவரக் கரைச்சல் படுத்தாத. இந்த ட்ரிப் முடியவிட்டு அவரிட எண்ணம் மாறலாம். மாறும். நீ யோசியாத!” சமாதானம் செய்வித்தார், விமலா.
“அப்பிடி இல்ல எண்ட பட்சத்தில ஆதினி வீட்டில எப்பிடிக் கதைக்கிறது சொல்லு? நாங்க அவ்வளவு நம்பிக்கையாக் கதைச்சனாங்க.” கவலையோடுதான் காலையுணவைக் கொறித்தார், நிவேதா.
அதன் பிறகு நின்று நிதானிக்காது, முதன்முதலில் பௌத்தம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இடமான மிஹிந்தலைக்குப் புறப்பட்டிருந்தார்கள்.
1840 கிரனைட் படிக்கட்டுகள், உயரே ஏற ஏற மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகான இயற்கைக் காட்சிகள், மற்றும் துறவிகளுக்கான வீடுகளுடன் பல விகாரைகள் என்று பார்த்துக்கொண்டே ஏறினார்கள்.
இனிதன், சூரியனோடு ஏறிக்கொண்டிருந்த சேந்தன் பார்வை சுற்றத்தை அலசி வந்தாலும் அங்கு வந்து போவோர் ஒவ்வொருவரையும் பார்த்தது. தவிப்போடு அலைந்து திரிந்தது. வந்திருப்பாளோ, வந்திருக்க வேண்டும் என்று, மனம் வெகுவாக எதிர்பார்த்தது.
இடையிடை அவர்களை நிதானிக்க வைத்து அங்குமிங்குமாக நடைபயின்று தத்தி தாவின குரங்குகள். சேந்தன் மனமோ, உயரே இருந்த மரக்கொப்பில் இறுகப் பிடித்தபடி காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் குரங்கினைப் போலானது.
அவனையும் அறியாதே மீண்டும் அவளுக்கு அழைத்துமிருந்தான். அவளோ மௌனம் சாதித்தாள்.