KK – 1(2)

ஆர் ஜெ  ஐயா உதட்டில் முறுவல். சேந்தனுள்ளும் சுவாரசியம். அந்தக் குடும்பத்தைச் சந்திக்க ஆயத்தமானான்.

தென்னோலைக் கூரையோடு இருந்த சிறு  மண் வீடு, அது. முன்புறம் இருபக்கமும் சிறு குந்துகள், அதிலொன்றில் சிறு உருவம் அமர்ந்திருப்பது தெரிந்தது.

அருகில் சென்று பார்த்தால்,  முழங்கால் வரை கால்கள் இல்லாத ஒருவர் சூம்பிய மேற்கால்களோடு அமர்ந்திருந்தார். இவர்களைக் கண்டதும் அவர் உடல் மொழியில் பரபரப்பு வந்துவிட்டிருந்தது. மின்னலாக அருகில் கிடந்த துவாயை எடுத்தவர் தன் கால்களில் போர்த்திக்கொண்டார். அதேவேகத்தில் வணக்கம் சொன்னார்.

கணமும் தாமதிக்கவில்லை, உட்பக்கமாகத் திரும்பி, “ராசாத்தி இங்க  ஓடி வா!” குரல் கொடுத்தார்.

“என்னப்பா? இந்தா வாறன்.” என்ற குரல் வந்த சில நொடி வேறுபாட்டில், உள்ளிருந்து ஒரு தலை எட்டிப் பார்த்தது. அந்தப் பெண்மணியின் முகத்தைக்  கிட்டே காட்டினார்கள்.

“வாங்க வாங்க… தங்கச்சி!” முன்னால் இறங்கி வரவேற்றவரின்  வலது கண் இருந்த இடம் சுருங்கி, கறுத்துச் சூம்பிப்போயிருந்தது. அவர் அணிந்திருந்த சாயம் போன சீத்தைச் சோட்டியின் வலக்கைப் பக்கம் காற்றில் பறந்து கொண்டிருந்தது. இடக்கையில் ஈரத் துவாய். அந்தப் பெண்மணியின் சோட்டியைப் பிடித்து நின்ற சிறுமியின் தலைமயிரில் ஈரம் வழிந்தது. அப்போதுதான் தோய்ந்து இருப்பாள் போலும். பின்னால் நெளிந்தபடி வந்து நின்ற சிறுவனின் இடக்கை,  வழிந்த மூக்குச் சளியை கன்னத்தால் தேய்த்து இழுக்க, வலக்கையோ வழுவிய பெரிய களிசானைப் பற்றிப்  பிடித்திருந்தது.

அவர்களோடு அளவளாவினாள், கவினி. பின்னால் திரும்பிக் கைநீட்ட ஒரு பெரிய வெள்ளை நிற பொலித்தின் பை அவள் கைக்கு வந்திருந்தது. பிள்ளைகளிடம் நலம் விசாரித்துவிட்டு, பிஸ்கட், இனிப்பு வகைகள், பழங்கள் அடங்கியிருந்த அந்தப் பையை அவர்களிடம் கொடுத்தவள் பார்வை இப்போது பெரியவர்களிடம் வந்திருந்தது.

“இப்ப எல்லாம் மூண்டு வேளையும் வயிறு நிறையச்  சாப்பிடுறம் தங்கச்சி.  நீங்க அமைச்சுத் தந்த கோழிக்கூடு சோறு போடுது. சின்னதா மரக்கறித்  தோட்டம் போட்டிருக்கிறன். எங்கட தேவைக்கு எடுத்திட்டு அதிலயும் நாலு காசு வருது. இந்த ஒரு வருசமா சேர்த்த காசில ஒரு ஆடு வாங்கி விட்டிருக்கிறம். நல்ல காலம் மழை தொடர்ந்து பெய்யேல்ல. இல்லையோ எல்லாம் வெள்ளத்தில மூழ்கியிருக்கும். ” கரம் கூப்பியபடி, மாறி மாறிக் கதைத்த கணவன் மனைவி இருவர் குரலிலும் அவ்வளவு நம்பிக்கை. 

உடலில் ஊனம் ஏற்பட்டிருந்தாலும் மனங்கள் நம்பிக்கையோடு நிமிர்வாக நிற்பதை அவர்கள் முக பாவனையும் பேச்சும் துல்லியமாக வெளிப்படுத்தி நின்றன.

 சேந்தனிடம் திரும்பினார், ஆர் ஜெ.

 “எங்கள் மூலமாச் செல்லுற  உதவிகள் ஒண்டு ஒண்டும் இப்படியானவேக்குப் போய்ச் சேரோணும் எண்டுறதுதான் எங்கட முக்கிய நோக்கம் சேந்தன்.நீங்க யாழ்ப்பாணம் போன பிறகு வசதிப்படுற நேரம் சொன்னீங்கள் எண்டா, கவினிட்டையும் சொல்லி விடுவன். நான் தெரிவு செய்து வச்சிருக்கிற இந்த  மூண்டு குடும்பங்களில அல்லது வேறு ஆர் எண்டாலும்  நீங்க செய்யப்போற உதவி தேவையானவேக்குப்  போய்ச் சேருற மாதிரியான எல்லா ஒழுங்கும் கவினி செய்து தருவா. இதிலயே அவவிட வட்ஸ் அப் நம்பர் எழுதி இருக்கிறன்.” அவன் புறம் ஒரு அட்டையைத் தள்ளினார்.

“மிக்க நன்றி ஐயா. அப்பாவும் அதுதான் சொன்னவர். இங்க ஒவ்வொரு பெனியும்  சிரமப்பட்டுத்தான் உழைச்சு எடுக்கிறம். அது தேவையானவேக்குச் சரியாப் போய்ச் சேரோணும். ” என்றவன்,  அவர் கொடுத்த அட்டையைப் பத்திரப்படுத்திக்கொண்டு விடைபெற்றுக்கொண்டான். 

தான் பணிபுரியும் வங்கிக்குள் நுழைந்த சேந்தனின் கவனம் அதன் பிறகு அங்கிங்கு செல்லவில்லை. அதுவும் மாத இறுதி, ஒரு மாதம் விடுமுறை வேறு எடுக்க இருக்கிறானே! 

மாலை வேலை முடிந்து வீடு சென்றான், சேந்தன். அப்போதுதான் தாய் நிவேதாவும் வேலையிலிருந்து வந்திருந்தார் போலும்.

“இயல், அண்ணாவும் வந்திட்டாரம்மா, ரெண்டு தேத்தண்ணியாப்  போடன!” களைப்போடு சாய்ந்தமர்ந்தவர், “என்ன தம்பி லேட்? டிராஃபிக்கில மாட்டிட்டீங்களா?” மகனைப் பார்த்துக் கேட்டார்.

 அவனோ, “உங்கட ஃபிரெண்ட் மதிவதனி அன்ரிட ஹஸ்பண்ட் பெயர் பூங்குன்றனா அம்மா?” என்ற கேள்வியோடு எதிரில் அமர்ந்துக்கொண்டான்.

“ஓம் தம்பி, ஏன், என்ன விசயம்?”  

“ஓ! சாரலுக்குத்  தங்கச்சி இருக்கிறாவோ? கவினி பூங்குன்றன் எண்டு ?” மீண்டும் கேள்விதான், கேட்டான்.

நிவேதாவின் நெற்றி சுருங்கியது.  மகனைக் கேள்வியாகப் பார்த்தபடி கதைத்தார்.

“ஓம் தான் தம்பி. ஏன் திடீரெண்டு அவவப் பற்றிக் கேட்கிறீங்க?” என்றவர், மகன் பதிலுக்குக் காத்திருக்கவில்லை. 

“அவா ஒரு சொல்லுக் கேட்காத பிள்ளை போல! பொறுப்பே இல்லாமல் என்னவோ மீடியா அங்க இங்க எண்டு  திரியிறாவாம்.  அவவ நினைச்சு மதிவதனி எப்பவுமே வருத்தப்படுறவள். தாய மதிக்கிறதும் இல்லையாம். பெத்த தாயே இப்பிடிச் சொல்லுறது எண்டா எப்பிடிப்பட்ட பிள்ளையா இருக்கும்! எங்கட ஆதவனுக்குப் பாத்திருக்கிற தமக்கை சாரல் தங்கமான பிள்ள!” முகச் சுளிப்போடு அசிரத்தையாகச்  சொன்னார். 

“நீங்க என்னதான் சொல்லுங்கோ அம்மா, உங்கட ஃப்ரெண்ட் அந்த மதிவதனி அன்ரிய எனக்குக் கொஞ்சமும் பிடிக்கேல்ல. நீங்க ஃப்ரெண்டா இருந்தாலும்  பெத்த மகளப் பற்றி இப்பிடிக் கதைக்கிறது ஒரு அம்மாக்கு வடிவா என்ன?” சிடுசிடுத்தபடி தேனீரைப் பரிமாறினாள், இயல்.

 தேனீரை எடுத்து உறிஞ்சிய சேந்தனுக்கு, கவினி  தொடர்பாக ஆர் ஜெ ஐயாவின் பாராட்டுத் தான்  நினைவிலாடியது.

“சரி சரி, நேர்ல சந்திச்சே இராத பெட்டைக்கு நீங்க இங்க   வக்காலத்து வாங்க வேணாம், விடுங்க!” மகளிடம் சொல்லிவிட்டு, “நீங்க ஏன் தம்பி திடீரெண்டு அவவப் பற்றிக் கேட்டனீங்க?” மகனிடம் வினவினார், நிவேதா.

“இல்ல, ஆர் ஜெ ஐயாட்டப் போனனான் அம்மா. தமிழ் முரசில தான் அவா வேலை செய்யிறாவாம். அவவப் பற்றிச் சொன்னவர். அதான் கேள்விப்பட்ட  பெயரா இருக்கே எண்டு கேட்டனான்.” என்றவன், “சரியம்மா, ஃப்ரெஷ் அப் செய்திட்டு வாறன்.” எழுந்து சென்றுவிட்டான்

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock