“ யார் யார் எல்லாம் இந்த வீட்டில் இருக்கிறீங்க? உங்கட சொந்த இடம் இதுதானா?”
“எங்களிண்ட சொந்த இடம் பரந்தன். மருமகளிட காணி இது. 2009 க்குப் பிறகு வவுனியா முகாமில இருந்து அப்பிடியே இங்க மட்டக்களப்பு வந்திட்டம். பழையபடி அதுக்கப் போய் …” என்றவருக்கு, கண்கள் குளமாகத் தொண்டை கமறியது. அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லவும் தடுமாற்றமாக இருந்தது. மாற்றங்கள் மாறாததுதான். ஆனால், காலம் அடித்த அடி, இக்கணம் வரை சுமந்திருக்கும் அதன் வலியும் வடுவும் ‘அழிவில்லை’ என்று நிரூபித்து நிற்கிறதே!
நெஞ்சை இறுக்கிக்கொண்டு வர, நரம்புக் கைகளால் தேய்த்து விட்டுக்கொண்டார்.
“அம்மா, இப்பிடி இருந்து கதைப்பம். “ அங்கு கிடந்த விறகுக் கட்டின் மேல் அமர்ந்து கொண்டாள், கவினி.
“பாத்தாச்சி பாத்து! பூச்சி பொட்டு இருக்கப் போகுது. எழும்புங்க ஒருக்கா, தட்டிட்டு இருக்கலாம்.” அவள் எழுந்து நகர, காலால் அப்படியும் இப்படியும் தட்டி அப்படியே உருட்டிச் சற்றே அரக்கிப் போட்டவர், அமரும்படி சைகை செய்தார்.
அவள் அமர்ந்ததும் சோர்வோடு மண்ணில் குந்திக்கொண்டார்.
“எனக்கு ஒரு மகனும் மகளும்தான் ஆச்சி. என்ர இவர் கடைசிச் சண்டை நேரம்…” என்றவர், மேலே வானத்தைக் காண்பித்தார். ஒட்டி உலர்ந்திருந்த கன்னமிரண்டிலும் கண்ணீர் கோடுகள். பிறங்கையால் துடைத்துக்கொண்டார்.
“மகன் இயக்கத்தில இருந்தவர், வீரமரணம். அவருக்கு மூண்டு பொம்பளைப்பிள்ளைகள் இருக்கினம். மருமகள், பிள்ளைகள் இங்கதான்.” வீட்டைக் காண்பித்தார்.
“மகளும் ரெண்டு பிள்ளைகளோட இங்கதான். அவவிட ரெண்டாவது மகன் வயித்துக்க இருக்கேக்கதான் கடைசிச் சண்டை நடந்து முகாமில வந்து இருந்தானாங்க. ஆமிக்காரன்கள் அங்க வச்சு மருமகனப் பிடிச்சவங்கள். இண்டுவரை இருக்கிறாரா இல்லையா எண்டு தெரியாது.” என்றுவிட்டு ஓவென்று அழுதார்.
அதேநேரம் பின்புறமிருந்து பெரும் அலறல் சத்தம் வந்திட்டு.
“எருமையன் ! எளிய நாய் ! இதோட எத்தின தடவ சொல்லியாச்சு? தறுதலையா அலையப் போறியோ? அதைப் பாக்கத்தான் நாயா பேயா அலைஞ்சு உங்களுக்குச் சோறு போட்டு வளக்கிறனாடா? 500 ரூவா உனக்குச் சின்னக்காசாடா நாயே ! எப்பிடி அந்தக் காசு வந்தது தெரியுமோ உனக்கு? சனியன்…எளிய நாய். எடுப்பியோ, இனிமேல் களவு எடுப்பியோ!”
முகத்தைப் பொத்திக்கொண்டு முழங்கால்களிடையே தலையைப் புதைத்தபடி குந்திவிட்ட மகனை உழக்கிக்கொண்டிருந்தாள், திரேசாவின் மகள். 35 வயது தான். பதினைந்து வயது மகன் உழக்குப்பட, பதினேழு வயது மகள் அழுதபடி தள்ளி நின்றிருந்தாள்.
கவினி எழுந்தோடினாள்.அந்தப் பெண்ணைப் பிடித்து அப்பால் விலக்கிவிட்டாள்.
“விடு என்ன, முதல் நீ ஆர்?” என்று தொடங்கிய அந்தப் பெண் அப்போதுதான் தாயருகில் நின்றவர்களைக் கவனித்தாள்.
கைகளைக் கூப்பிக்கொண்டு தொய்ந்து நிலத்தில் அமர்ந்தவள், தீனக்குரலில் அழுதாள்.
அச்சிறு தகர வீட்டினுள் இருந்து இன்னும் மூன்று பதின்ம வயதுப் பொம்பளைப்பிள்ளைகள் எட்டிப் பார்த்தார்கள்.ஒட்டி உலர்ந்த தோற்றத்தில் ஒரு பெண்ணும் வெளியில் வந்து நின்றாள். திரேசா சொன்ன மருமகளும் பிள்ளைகளும் என்று புரிந்தது.
“மலைபோல இருந்த மூண்டு ஆம்பளைகளையும் இழந்திட்டம். இவன் ஒருத்தன் தானே எல்லாருக்கும் விடிவு. சொல்வழி கேக்கிறதே இல்ல. இப்பக் கொஞ்ச நாளாச் சரியான மோசம்!” புலம்பிக்கொண்டே பேரனருகில் சென்றார், திரேசா.
“ஏனய்யா இப்பிடித் தத்தாரியா நடக்கிற? உதவிக்கு எண்டு வந்திருக்கிற மனுசரும் தறிகெட்ட மனுசர் எண்டு ஓடிருவினம் ஐயா. இனிமேல்பட்டு இப்பிடி நடக்காத என்ன? தின்ன வழியில்லாவிட்டாலும் நாங்க களவு, பொய் இல்லாமல் வாழ்ந்த மனுசர் ராசன். எழும்பு, போய் முகத்தக் கழுவிட்டு வா!” கையால் அவன் முகத்தைத் துடைத்துவிட்டார்.
முதலில் அவர் கைகளைத் தட்டிவிட்டான், அவன். அவர் பிடிவாதமாக உடலில் ஒட்டிய மண்ணையும் தட்டத் தொடங்க எழுந்து வீட்டினுள் ஓடிவிட்டான்.
மூன்று பெண்களுமே கூலி வேலைக்குச் செல்பவர்கள். மருமகளின் மூத்த பிள்ளை கூட ஒரு அரச தாதியின் வீட்டில் பிள்ளை பார்க்கும் வேலை பார்க்கிறாளாம். நால்வரும் கொண்டுவரும் வருமானம் ஏறிவிட்ட விலைவாசியில் அந்த எட்டுப் பேருக்கும் ஒரு வேளைக்கு ஆமான உணவு போடவே காணாது. அதில், இந்தக் கொட்டிலை ஒழுக்கில்லாது ஆக்குவது எப்பிடி?
அரசிடம் இருந்து கிடைத்த சொற்ப உதவியில் மூன்று அறைகள் உள்ளதாக நிலத்தில் சீமெந்து போட்டு இழுத்திருந்தார்கள். வீட்டின் சுவர்கூட வைத்தாயிற்று. அதன் பின் ஒற்றை ரூபா மிச்சப்படுத்த முடியாதததால் கூரைக்குத் தகரம் அடித்துவிட்டு அப்படியே விட்டிருந்தார்கள். கதவுகளாகத் தென்னோலைத் தட்டிகள், யன்னலுக்கு குறுக்கு மறுக்காக பனைமட்டைகள் என்றிருந்த வீட்டைப் பார்வையிட்டாள், கவினி. வீடியோ எடுத்தும் கொண்டார்கள்.
மூக்கை உறிஞ்சியபடி அறையின் வாசலில் நின்றான், பெடியன். பெயர் தமிழரசனாம். அவன் கரம் பற்றி வெளியில் அழைத்து வந்து அவன் பள்ளிப் படிப்புப் பற்றி எல்லாம் விசாரித்தாள். கெட்டிக்காரன் தான். நல்ல வழிநடத்தல் இருந்தால் நிச்சயம் நன்றாக வருவான்.
பெண் பிள்ளைகளோடும் கதைத்தாள். முடிவில், புலம்பெயர் தேசத்தில் வாழும் ஒருவரின் உதவியாக ஒரு இலட்சம் இலங்கைப் பணத்தை திரேசா அம்மாவிடம் கையளித்தாள்.
வீட்டை அறுக்கையாகத் திருத்தவும், நிரந்தர வருமானம் தர, அவர்கள் விருப்பப்படி மெயின் ரோட்டில் ஒரு சாப்பாட்டுக் கடை வைக்கவும் உதவுவதாக வாக்குறுதி கொடுத்தவளுக்கு சேந்தன் நினைவுதான். அவனிடம் சொல்லி இந்தப் பிள்ளைகளின் படிப்புச் செலவைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.
எங்கள் பார்வை எப்போதுமே உங்களில் இருக்கும் என்றவகையில் கதைத்துவிட்டு வெளியே வந்தவள் மனம் கனத்துக் கிடந்தது. அக்கணம் தனக்கும் தாயுக்குமான பிணக்குகள் எல்லாமே ஒன்றுமில்லாதவையாக இருந்தது.
எப்போதுமே இப்படியான வீடுகளுக்குப் போய்வந்தால் மனம் மிகவுமே கனத்திருக்கும். இன்றும் அப்படித்தான். களைப்போடு தங்கியிருந்த இடத்துக்கு வந்தால், வாணன் வந்திருந்தான்.
சில மணித்தியாலங்களின் பின்னர் இருவருமாகச் சேர்ந்து யூ டியூப் சோர்ட்ஸ் சிலதுகளையும் எடுத்துக்கொண்டவர்கள் வழமைபோலவே கலகலவென்று தம் நேரத்தைக் கடத்தினார்கள்.