மிகிந்தலையில் இருந்து ஹோட்டல் சிகிரியாவிற்கு வந்து சேர்கையில் இரவாகியிருந்தது. அங்கிருந்து பார்க்கையில் சிகிரியாக் குன்றும் அதன் சுற்றமும் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் தெரியுமாம். தான் முன்னர் இங்கு வந்திருப்பதாகச் சொன்ன ஆதினிதான் சொல்லிக்கொண்டே நடந்தாள். இயலோடு கலகலவென்று கதைத்தபடி சென்றவள், எதிர்ப்பட்ட சேந்தனின் முகம் பார்க்கவில்லை.
காலையில் அவன் தவிர்ப்பு, தொடர்ந்து தாயும் மகனும் விவாதித்துக்கொண்டது, நிவேதா கவலையோடு தோழிகளிடம் கதைத்தது என்று, உணவுக்கூட கண்ணாடி யன்னலூடாகப் பார்த்திருந்தவளுக்கு ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று அறிய முடியாதா என்ன?
அவளுள் சுறுசுவென்று கோபமும் சரிசமமாக அவமானமும். நம் மனம் நெருக்கமாக உணர்ந்துவிட்ட ஒருவரின் தவிர்ப்பென்பது உணர்த்தும் அவமான உணர்வை வார்த்தைகளால் வரையறுப்பது கடினம்.
இனியும் இவர்களோடு பயணப்படுவது எதற்காம்? அந்தளவுக்கு இளிச்சவாயா அவள்? அவளிடம் என்ன இல்லையென்று, தூசென்று தட்டிவிடத் துடித்த சேந்தன் தோளில் தொங்க நினைக்க வேண்டும்.
ஆதினியுள் கனன்ற எரிச்சலும் கோபமும், அன்று மதியத்துக்கு மேல் இனியும் பொறுக்கத் தயாராக இல்லை என்றளவுக்கு வந்துவிட்டிருந்தது. அந்தளவுக்கு, அவள் ஒருத்தி இருக்கிறாள் என்பது போல் காட்டிக்கொள்ளாது நடமாடினான், சேந்தன். அதேவேளை, வேண்டுமென்றே தவிர்க்கிறான் என்பது தெளிவாகவே தெரியும் படியே நடந்துகொண்டால்?
மிகிந்தலையில் இருந்த படிக்கட்டுகளில் ஒன்றுபோல் இலகுவாக ஏறி மிதிவிட்டுச் செல்ல நினைத்தானோ என்ன? அங்கிருந்தே தாய்க்குச் செய்தி அனுப்பிவிட்டிருந்தாள், ஆதினி.
‘எனக்குச் சேந்தனைப் பிடிக்கேல்ல அம்மா. உங்கட சினேகிதியிட்டச் சொல்லி விடுங்க!’ என்று வந்த செய்தியில் அவள் பெற்றோர் குழம்பி விட்டார்கள்.
தாமதியாது மகளுக்கு அழைத்திருந்தார்கள்.அவளாலோ, சேந்தன் தவிர்த்தான் என்று தாய் தந்தையிடம் கூடச் சொல்ல முடியவில்லை.
“எனக்கும் அவருக்கும் சரிவரும் போல இல்ல அம்மா. ஒரு நாளிலயே இப்பிடியொரு எண்ணம் வந்திட்டு எண்டா இதத் தொடருரதில ஒரு பிரயோசனமும் இல்ல. நான் நாளைக்கு மட்டக்களப்பில உள்ள ஜீவா பெரியம்மா வீட்ட போகவோ?” உறுதியாகவே சொல்லிவிட்டிருந்தாள்.
அதன் பிறகும் கூட, கைக்கு வந்த நல்ல மாப்பிள்ளையை நழுவ விடுவதா என்று எண்ணிய அவள் பெற்றோரோ, மகள் மனத்தைக் கரைக்க முயன்றார்கள். அவளோ அசையவில்லை.
“சரி, இண்டைக்கு மட்டும் அவேயோடவே போங்கம்மா, நாளைக்கு விடிய அங்க வாறம்.” என்றுவிட்டு வைத்திருந்தார்கள்.
‘விடிய வெள்ளன அப்பா வந்திருவார். என்ர மகளுக்கு உங்கட மகனப் பிடிக்கேல்ல எண்டுட்டு, என்னக் கூட்டிக்கொண்டு போகேக்க இந்தச் சேந்தன்ட முகம் எப்பிடிப் போகும்?’ என்று எண்ணிக்கொண்டவளுக்கோ அந்தக் காட்சியைக் கண்டு கழிக்கப் பேராவலாக இருந்தது.
இத்தனைக்கும் சேந்தனோ மனத்தால் வேறெங்கோ நின்றான். கூட வந்த எவருமே அவனைப் பாதிக்கவில்லை. அப்பப்போ கதை கேட்ட இயலும் தான். தொலைவில் இருந்த ஒருத்தியின் வால் பிடித்து பின்னால் ஓடிக்கொண்டிருந்தான், அவன்.
‘எத்தனை தடவைகள் சொன்னாலும் இந்தாளுக்கு ஏன் விளங்குதே இல்ல. விசர்தான் வருது. மனசில என்ன நினைச்சுக்கொண்டு இப்பிடிக் கரைச்சல் தாறார்’ என்று, கவினியைச் சினக்க வைத்தபடி, விடாக்கண்டனாக மீண்டும் அவளுக்குத்தான் அழைத்துக்கொண்டிருந்தான் .
“எந்த நேரமும் ஃபோனில ஆரோட? கதைக்கிற மாதிரியும் தெரியேல்ல. ஏதாவது பிரச்சினையா சேந்தன்?” என்று கேட்டிருந்தான், சூரியன். “நானுமே கேக்க நினைச்சனான்.” என்றான் இனிதன்.
“சே சே அப்பிடியெல்லாம் இல்ல, வேலையிடத்தில…” என்று அப்போதைக்குச் சமாளித்துவிட்டான்.
அன்று, இவனோடு இனிதனும் சூரியனும் அறையைப் பகிர்ந்து கொண்டார்கள். முதல் ஆளாகக் குளித்துவிட்டு வந்தவன் பால்கனியைச் தஞ்சம் அடைந்துவிட்டான்.
ஓரொரு சமயம் அவனுக்கே அவனை நினைக்க எரிச்சலாகவும் இருந்தது. அந்தளவுக்குச் சூடு சுரணையற்று மீண்டும் மீண்டும் அவளுக்கு அழைக்கிறான் என்று தன் மீதே கோபப்பட்டவன் விரல்களோ, கைப்பேசியினை உயிர்ப்பித்திருந்தது.
அந்நேரம், யூ டியூப் நோட்டிபிகேசன் வந்து விழுந்தது. அதுவும் கவினியின் சேனல்.
பரபரப்போடு திறந்து சென்றால்…ஒரு ஷோர்ட் (Short) போட்டிருந்தாள்.
பின்புறக் காட்சியாய், நீர் நிலையும் சற்றே காய்ந்துபோன சுற்றமும் தான். அதில், மொத்தக் குளிர்மையையும் வாரியிறைத்தபடி அவள்.
என் நண்பனே என்னை ஏய்த்தாய்… ஓ …
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
உன் போலவே நல்ல நடிகன்… ஓ …
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்
நல்லவர்கள் யாரோ… தீயவர்கள் யாரோ
கண்டுகொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே
கங்கை நதியல்ல கானல் நதியென்று
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ?
மீண்டும் மீண்டும் ஓட்டினான். அவ்வளவு பாவங்கள்! ஒவ்வொரு சொல்லுக்கும் காதல் தோல்வியில் துடித்துப் போனவளாக அவள் காட்டிய பாவங்களில் கட்டுப்பட்டு இழுப்பட்டான், சேந்தன்.
இடையில், அப்பாடலின் ஆண்குரலோடு வந்தான் , வாணன்.
அவன் குரலுக்கும் பாவங்களுக்கும் இவனும் இரசிகன் தான். ஆனால் இன்றோ, பொறாமையாக மிகவுமே பொறாமையாக இருந்தது.
அதுவும்,
காதல் என்பது கனவு மாளிகை
புரிந்து கொள்ளடி என் தோழியே
உண்மைக் காதலை நான் தேடிப்பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே
என்று, அவள் தோள் பற்றி வாணன் பாடுகையில் இவன் ஒற்றைக்கை அழுத்தமாகத் தலை கோதிக்கொண்டது.
அவர்களின் தத்ரூபமான நடிப்பைத் தாண்டி, “அடேய் தள்ளிப் போடா!” முணுமுணுத்துக் கொண்டவனுள் அவர்கள் நண்பர்கள் மட்டும் தானா என்ற பெரிய சந்தேகம் வேறு முளைத்து விட்டிருந்தது.
இருந்தும் மீண்டும் மீண்டும் பார்த்தான். பின்னால் வந்து நின்ற சூரியனும் இனிதனும் என்ன நடக்கிறது என்று சைகையால் கதைத்துக்கொண்டார்கள்.