சேந்தனோ, அவர்கள் வந்து நின்றதை உணர்வதாயில்லை. சூரியன்தான், அவன் முதுகில் தட்டிவிட்டு முன்னால் சென்று அமர்ந்துகொண்டான். மனத்தில் நினைத்ததைக் கேட்க நினைத்தான். தெரிந்த பிள்ளையென்று பார்க்கிறேன் என்ற பதிலை அவனிடமிருந்து எதிர்பார்த்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆதினியும் கூட இருக்கையில் இவர் என்ன? கவினியை விரும்பிறாரோ! அதுதான் ஆதினியைத் தவிர்க்கக் காரணமோ என்ற எண்ணம் இனிதனுள். இவ்வெண்ணமே அவனுள் அவ்வளவு மகிழ்வைக் கொண்டு வந்திருந்தது. அவர்களின் மொத்த அன்புக்கும் உரியவள், கவினி. அவள் குடும்ப வாழ்வில் வசந்தம் மட்டுமே வீச வேண்டுமென்று எண்ணுபவன், அவன். சேந்தனோடு நேரடியாகவே கதைத்துவிட்டால் என்ன என்ற எண்ணத்தோடு அருகில் சென்றமர்ந்துகொண்டான்.
தெளிவுறத் தெரிந்தபின் தன் மனத்தை மறைக்க வேண்டுமென்ற எண்ணமில்லாத சேந்தனோ, அவர்கள் இருவரினதும் எந்தக் கேள்விக்கும் இடம் வைக்கவில்லை.
இருவரையும் ஆழ்ந்து பார்த்தவன் உதடுகளில் மெல்லிய முறுவல் வேறு. மடியில் கைப்பேசியை வைத்தவன் பார்வை அங்கு இடம் மாறியது. இரு கைகளாலும் தலைமயிரை அழுத்தமாகக் கோதிக்கொண்டான்.
அவளிடம்தான் முதலில் சொல்ல விரும்பினான். கேட்பவள் முகம் காட்டும் சிறுசிறு பாவனையையும் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்க எண்ணியுமிருந்தான்.
“பச்!” என்றபடி அவர்களைப் பார்த்தவன், வாய் திறந்திருந்தான்.
“எனக்கு உங்கட மச்சாளைப் பிடிச்சிருக்கு இனிதன். கலியாணம் செய்து தருவீங்களா?” அவன் கேட்டு முடியமுதல் சூரியன் குரல் இடையிட்டிருந்தது.
“இதெல்லாம் என்ன கதை சேந்தன்? ஆதினிக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? வெளில தெரிஞ்சா வீண் மனக்கசப்பு. இதெல்லாம் விளையாட்டா என்ன?” அதிர்வை மீறிய கண்டிப்போடு கேட்டிருந்தான். சேந்தன் அவன் சொன்னதைக் செவிமடுத்தானா என்ன? அவன் பார்வை இனிதனில்.
இனிதனோ, மனத்துள் இனிமையாக அதிர்ந்திருந்தான். அவனுக்குச் சேந்தனைப் பிடிக்கும் என்பதைக் கடந்து நல்ல மரியாதையுண்டு. தன் அன்பு மைத்துனியோடு இவன் வாழ்வு பிணைந்தால் அவள் நிச்சயம் மகிழ்வாக வாழ்வாள்.
விழிகள் கலங்குகிறோம் என்றன. ஒற்றை வார்த்தை உதிர்க்கவில்லை. அமர்ந்திருந்த கதிரையில் முன்னால் தள்ளியமர்ந்து, சேந்தன் கரமிரண்டையும் இறுகப்பொத்திப் பிடித்துக்கொண்டான். மகிழ்ச்சியில் அடைத்த தொண்டைக்குள்ளால் வார்த்தைகளை எடுக்கவியலாது தடுமாறினான்.
“ஓம் தானே?” என்று கேட்ட சேந்தன், “உங்கள் ஆருக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ, எனக்குக் கலியாணம் நடந்தால் அது கவினியோட தான். ” என்றவன், சூரியன் கதைத்தவற்றைக் காதிலும் வாங்கவில்லை என்றிருந்தான்.

