அவ்வளவாகப் பேச்சு வார்த்தைகள், கலகலப்பு இன்றியே உலகின் எட்டாவது அதிசயம் என்று சொல்லப்படும் ஏறக்குறைய 180 மீற்றர் உயரமுள்ள சிகிரியாவினுள் உள்ளிட்டு இருந்தார்கள்.
மத்திய மாகாண தம்புள்ள நகரின் வரலாற்றுச் சிறப்புக் கொண்ட தொல்பொருள் சின்னமாக மட்டுமன்றி, இலங்கையின் பழம் பெரும் அடையாளமாகவும் விளங்கும் பாறைக் கோட்டையான சிகிரியா, அந்தக் காலைப் பொழுதில் சுறுசுறுப்பாக இருந்தது .
இலங்கையருக்கு ரூபாயில் வெளிநாட்டினருக்கு டொலரில் என்று, நுழைவுச்சீட்டு வாங்கினார்கள்.
கீழே ரோயல் கார்டன், மேலே ரோயல் பலஸ்.
1200 க்கு மேல் ஸ்டெப்ஸ். மனம் நிலையில்லாது இருந்ததில் மலைப்பாக ஏறிட்டார், நிவேதா.
“நான் கீழ நிக்கிறன், நீங்க போயிட்டு வாங்கோ!” என்றும் சொல்லிவிட்டார்.
“அம்மா என்ன இது?” தாயருகில் வந்து அவர் கரத்தைப் பற்றிய மகனை முறைத்தார். கதைக்கவில்லை.
“நான் என்னம்மா செய்தன்?” ஏதுமறியாத பாவனையில் கேட்டவன், மனத்துள்ளோ, ஆதினி சென்றுவிட்டதில் அப்பாடா என்ற நிம்மதியுணர்வு. இல்லையோ, கொழும்புவரை பயணப்பட்டு, பின், தன் மறுப்பையும் கேட்டுக்கொண்டு போகையில் அப்பெண்ணின் மனம் நோகுமே. இந்தத் தவிப்பை வெளியில் காட்டவில்லையென்றாலும் அவன் சுமந்து கொண்டுதான் நடமாடினான். அவளோடு இயல்பாக, நட்பாக ஒரு கதை சிரிப்பு என்றுகூட வைத்துக்கொள்ளாததன் காரணமும் அதுதான்.
உதடுகளில் நெளிந்த முறுவலோடு நின்ற மகன், நிவேதாவினுள் எக்கச்சக்க எரிச்சல் உண்டு பண்ணினான்.
“நீங்க ஒண்ணுமே செய்யேல்ல என்ன? தயவு செய்து என்னோட கதைக்க வேணாம் சேந்தன்.” என்றுவிட்டு, விசுக்கென்று நண்பிகளோடு இணைந்து கொண்டார், நிவேதா.
“கடவுளே!” தலையில் கைவைத்த தமையனை,ஒரு சாதியாகப் பார்த்தபடி ஏறிய இயலின் கைக்குள்ளிருந்த பேசியில் தெரிந்த முகம்?
“கவினியா என்ன?” எட்டிப் பார்த்திருந்தான், சேந்தன்.
சிறு சிரிப்போடு திரையில் தெரிந்தது அவள் தான். இவன் முகத்தில் சிடுசிடுப்பு. எத்தனை தடவைகள் அழைத்துவிட்டான். எடுக்க மாட்டாளாம். இப்போ இயலோடு கதைக்கிறாளே! மனம் சுணங்கினாலும் தங்கை அருகிலேயே நடந்தான். கடைக்கண் பார்வை அப்பப்போ தெரியும் கைப்பேசித் திரையில்.
பொதுவாகக் கதைத்துவிட்டு வைத்துவிட்டாள்,கவினி. ஆனாலும் இடையிடை அவள் பார்வை தன்னில் பட்டதை உணர்ந்தான், சேந்தன்.
சிகிரியா ஏறியிறங்க ஒரு மணித்தியாலம் பிடிக்கும். இவர்கள் நின்று நின்று ஏறியதால் இரண்டு மணித்தியாலமாக மாறிவிட்டிருந்தது.
‘நான் ஒருத்தன் கலைச்சி கலைச்சி கோல் எடுத்தா கதைக்கேலாது. ஆளுக்கு அந்தளவுக்கு வேல! மற்றவேக்கு எடுக்க நேரம் இருக்கு என்ன? அம்பிடாமல் போகப்போறீரா என்ன? எல்லாத்துக்கும் சேத்து வச்சி நல்லா வாங்கப் போறீர் இருந்து பாருமன்.’ என்று, அன்றிரவு வெகு உரிமையாகக் கோபித்துக் குறுந்தகவல் அனுப்பினான், சேந்தன்.
கவினி அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் மிகவுமே புதுவிதமாகத் தவித்திட்டு. அவள் கட்டுப்பாட்டை மீறி நடக்க விளையும் உள்ளத்தை என்னதான் செய்வது?
அவனை, அவன் தன்னை நெருங்கி வருவதைத் தள்ளி நிறுத்த முனைந்தாலும் முடியாது, அவளிதயத்துள் நுழைந்திருந்தான், சேந்தன். அதையுணர்ந்தவள் மகிழ்வுக்குப் பதில் இரும்பாக இறுகிப்போனாள்.
என் சினேகிதிகள், பிள்ளைகளோடு உனக்குக் கதை பேச்சு வேண்டாம். தள்ளி நில் என்று எச்சரித்த தாய் நினைவுக்கு வந்தார்.
‘பச்! நானாகவா கதைக்கப் போனன்… ஒதுங்கிப் போக நினைச்சாலும் விடாமல் வந்தா என்ன செய்யிறது?’ என்று எண்ணியவள், தாய் பற்றிய எண்ணத்தை ஒதுக்கிவிட்டுவிட்டாள்.
ஆனால், நிவேதா? முகமனுக்காகச் சிரித்து, ஓரிரு வார்த்தைகளோடு விலகிவிடுபவர் ஆயிற்றே! இவளை, மகனின் மனைவியாக ஏற்பாரா? இதுதான் முதல் எண்ணமாக, மிகப்பெரிய கேள்வியாக அவளுள் உருவெடுத்திருந்தது.
வீட்டின் விருப்பு வெறுப்புக்கு மதிப்புக்கொடாது தன்னை அவன் மணக்கும் தருவாயில் எதிர்காலம்? நெஞ்சம் கசந்து வழிந்தது. மனம் உணர்ந்த இறுக்கம் அவளில் புலப்பட்டது. சிந்தனை, மெல்லுணர்வுகளின் பிடியிலிருந்து பட்டென்று விடுபட்டுப்போயின.
“என்ர பிள்ளைகளுக்கு என்ர நிலை வரக் காரணமாக இருக்க மாட்டன்.” திட்டமாக முணுமுணுத்துக்கொண்டாள். அதன் பின்னர், என்னதான் நேசத்தை அவன் உணர்த்த முயன்றாலும் பயன் ஏதாம்? அவன் மீதான விருப்பை மதிக்க முனையாது விட்டுவிட்டாள், கவினி.