மறுநாள், புத்தரின் பல் பாதுகாக்கப்பட்டு வரும் தலதா மாளிகை செல்வதாக ஏற்பாடு. இவ்விகாரை முன்னாள் கண்டி இராச்சியத்தின் அரச அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. சிகிரியாவிலிருந்து இரண்டரை மூன்று மணித்தியால ஓட்டம்தான்.
எப்போதும் போல் எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள், இருவரைத் தவிர.
நிவேதாவுக்கு எதிலுமே ஆர்வம் செல்லவில்லை. ஆதவன் கல்யாணத்திற்கென்று இலங்கை வந்திருந்தாலும் மகன் திருமணத்தை முடிவாக்கிவிட வேண்டும் என்ற விருப்பம் இருந்ததே! அதை இப்படியா கலைத்து விடுவான்?
இலண்டனில் வைத்து ஆதினி பற்றி ஆர்வமாகவே விபரங்கள் கேட்டறிந்தானே! நேரில் சந்தித்துக் கதைத்த பின்னர் மேற்கொண்டு பார்ப்போம் என்றதே முடிவாக இருந்தது.
இப்போ, எதைக் கண்டு அவளைத் தவிர்த்தான். மனத்தைக் குடையும் கேள்வியிது. பிடிக்கவில்லை, வருங்கால வாழ்க்கைத் துணையென்ற உணர்வு வரவில்லை என்றால் சரியா? தன் வாழ்வுக்கு எது பொருத்தமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியாதவனா அவன்? மகன் மீது மிகுந்த கோபம், அவருக்கு.
ஆதினியை முதன் முதலில் லிங்கம் கூல் பாரில் சந்தித்த போதிருந்தே இவன் நடந்துகொண்ட முறையை மீட்டுப் பார்த்தார். அப்பட்டமாகவே அவளைத் தவிர்த்தான் தான். எண்ணியவர் முகம் இறுகியது.
அது அவளுக்கும் விளங்கி இருக்கு. மனம் எப்படி வலித்திருக்கும்? இருந்தபோதும் இங்கு சிறு பிணக்கோ, மனச் சுணக்கமோ வரவிடவில்லையே! தனக்குப் பிடிக்கவில்லை என்று, தன் மீதே பழியைப் போட்டுவிட்டு விடை பெற்றுச் சென்றவள் நினைவு, அவரில் நிரந்தரமாகவே தங்கி விட்டிருந்தது.
அத்தனை நாசுக்காக நடந்திருக்கிறாள். ஒரு குடும்பத்தை நேர் சீராகக் கொண்டு செல்ல அடிப்படையான தகுதிகளில் ஒன்று இதுதானே! ஆதினியில் அவருக்கிருந்த அன்பும் மதிப்பும் அதிகரித்திட்டு. என்ன பாடு பட்டும் அவளைத் தன் மருமகளாக்கிவிட வேண்டும் என்ற எண்ணமும் வலுத்திட்டு.
இவரின் கணவர் முக்கிய வேலைகள் இருப்பதால் இவர்களோடு இலங்கை வரவில்லை. அவரோடு கதைத்தவர், மகனோடு கதைக்கும் படியும் சொல்லியிருந்தார்.
ஆதினி வீட்டில் கதைக்க வேண்டும், அதற்கு முன் மகனைத் தன் வழிக்குக் கொண்டுவர வேண்டும். அதன் ஆரம்பமாக அவனை முற்றாகத் தவிர்த்தார், நிவேதா.
தாய் மனத்தை சேந்தன் அறியவில்லை. அவர் கோபம் உணர்ந்தும் பெரிதுபடுத்தவில்லை. கவினிதான் வாழ்க்கைத்துணை என்று மனத்தில் வரையறுத்துவிட்டான். வலு கலாதியான மனநிலையில் இருந்தவன் விரல்கள் தம்பாட்டில் அவளுக்கு அழைப்பு விடுத்திருந்தன.
ஏற்கவே மாட்டாள் என்பதும் தெரிந்த விடயம்தான். “லெவல் பிடிச்சவள்” முணுமுணுத்தவன் அடுத்தடுத்து அழைத்தான். அவன் நேசத்தைக் கடத்தும் கருவியே இந்தத் தொடர் அழைப்புகள்தான். அது அவளுக்கும் விளங்கும். அவள் தவிர்ப்பு எரிச்சல் கொள்ள வைப்பதற்கு மாறாக சுவாரசியம் கொடுத்தது.
வேலையாக இருப்பாள் போலும். இரவுக்கு எடுத்துப் பார்ப்போம் என்று முடிவெடுத்தவன், பயணத்தில் கவனத்தைத் திருப்பியிருந்தான். அமைதியாக இருந்த வாகனத்தில் மெல்ல மெல்ல கலகலப்புச் சூழ்ந்தது.
தாமரைப்பூக்களோடு சென்று புத்தரின் பல் மற்றும் அவர் சுருவங்களை வழிபட்டார்கள். சுற்றிச் சென்று வரலாறு கூறும் அரண்மணையைப் பார்த்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை. மாலையில் சற்று நேரத்துக்கே ‘எல்ல’(Ella) நோக்கிப் புறப்பட்டுவிட்டார்கள்.
“ஹோட்டல் போக நான்கு மணித்தியாலத்துக்கு மேல பிடிக்குமாம்” என்று கதைத்துக்கொண்டே, “ அம்மா எனக்கு?” பின்புறமாகத் திரும்பி, தாயிடம் கை நீட்டிய சேந்தன் பார்வையும் தாயில் தான்.
மிக்சர் பகிர்ந்து கொண்டிருந்தவர் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது. மகனை எரி பார்வை பார்த்தார்.
“வாட்! கோவமா நிவிச் செல்லம்?” அதுவரை, ஒற்றை வார்த்தை கதை கொடாது கவனமாக எட்டியே நின்றவன், நேசக்கரம் நீட்டினான்.
நிவி இளகவில்லை. “ நான் கோவம் எல்லாம் இலையப்பா!” என்றபடி, தாயின் கையில் இருந்த சிறு பேப்பர் கப்பை வாங்கிக்கொண்டான், மகன்.
கறமுறவென்று மிக்சரை கொறித்தபடி இனிதன், சூரியனோடு அளவளாவிக்கொண்டு வந்த மகனைப் பார்த்துப் புறுபுறுத்தபடியே பயணப்பட்டார், நிவேதா.
அதை அவனும் அவதானித்தான். தாயோடு மனம் விட்டுக் கதைக்க விரும்பினான். மறுநாள் விடிந்தும் பொருத்தமான சூழல் தான் அமையவில்லை.
நிவேதாவோ, அவனோடு மட்டுமில்லாது சினேகிதிகளோடும் பெரிதாகக் கதை வைத்துக்கொள்ளவில்லை. அதுவும் , “ஆதினி அருமையான பிள்ள, கொஞ்ச நாட்கள் செல்லவிட்டுச் சூரியனுக்குக் கேட்டுப் பாக்கப் போறன்” என்று, விமலா சொன்னதில் உச்சபட்ச எரிச்சல் அவருக்கு.
மறுநாள், 1920 களின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட ‘Nine Arch Bridge’ செல்வதாக ஏற்பாடு. தங்கியிருந்த இடத்திலிருந்து வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்கள். அப்பாலத்தை அடைய, காட்டினூடு செல்லும் ஒற்றையடிப் பாதையால் ஒரு கிலோமீற்றர் வரை நடக்க வேண்டும் என்றார், வாகனச் சாரதி.
சனநடமாட்டம் இருந்தது. சிறு மண்பாதைதான், காட்டினுள் நுழைந்து ஆரவாரத்தோடு நடந்தார்கள்.
“ஏன் நிவி பின்னால நிக்கிற, வாவன்” அழைத்தார், விமலா.
“போங்க, நான் ஆறுதலா வாறன்.” வெடுக்கென்று சொல்லி இருந்தார், நிவேதா. விமலாவின் முகத்தில் அலுப்பு. “இவளை என்ன செய்யிறது? இப்ப என்னத்துக்கு எங்களில கோவப்படுறாள்?” மதிவதனியிடம் புறுபுறுத்தார்.
“விடும் விமலா, அவா தானாச் சரியாகட்டும். ஆதினி மருமகள் எண்டு சரியா நம்பி இருந்தவா. கவலை இருக்கும் தானே!” என்று சொல்லி, விமலாவின் கரம் பற்றிக்கொண்டு நடந்தார், மதிவதனி.
தாய்க்குப் பின்னால் சற்று இடைவெளிவிட்டுப் புகைப்படங்களை எடுத்தபடி வந்து கொண்டிருந்தான், சேந்தன். பார்வை தாயில். கதைக்கச் சந்தர்ப்பம் பார்த்திருந்தான். ஏதுவாக, ஓரிடத்தில் சிறு சிறு படிகளால் இறங்குகையில் தடுமாறினார், நிவேதா.
சட்டென்று எட்டிப் பிடித்தவன் கரத்தை விடவே இல்லை.
“பச் விடு, நான் ஒண்ணும் சின்னப்பிள்ள இல்ல.” நிவேதா அடிக்குரலில் சீறினார்.
அவனோ, கையை உதறிக்கொண்டு நடக்க முனைந்தவருக்கு இடம் கொடுக்கவில்லை.
“கோவமா நிவிச் செல்லம்?” என்று ஆரம்பித்த மகன் முகம் பார்க்காது, “முதல் என்ர கையை விடு எண்டனான்!” மீண்டும் சீறல் தான்.
அவனோ, கேட்டதையே மீண்டும் கேட்டான்.
மௌனம் தான் பதிலாக வந்தது. “தண்ணி வேணுமா எங்கட செல்லத்துக்கு?” வாயடியில் தண்ணீர் போத்தலைக் கொண்டு சென்றான்.
“அடிவாங்குவ சொல்லிப் போட்டன்.” அவன் கையை விசுக்கென்று விலக்கினார்.
“ஓ அம்மா! பெரிசா லெவல் காட்டாமல் கதையுங்கோவன். பாவம் என்ர அண்ணன்.” தாயிடம் சொல்லிவிட்டு, “தண்ணியைத் தாங்கோ அண்ணா, சரியா விடாய்க்குது.” தண்ணிப்போத்தலை வாங்கிக்கொண்டு முன்னால் சென்றாள், இயல்.
“பிடிக்காமல் எப்பிடியம்மா கலியாணம் செய்யிறது?” பாவமாகக் கேட்டான், சேந்தன். வெடுக்கென்று பார்த்து முறைத்தார், தாய்.
“பிடிக்காமப் போக ஏதாவது ஒரு காரணம் சொல்லு பாப்பம். அருமையான பிள்ளை ஆதினி. நாங்க என்ன உனக்குக் கெடுதல் செய்யவா இதையே திருப்ப திருப்பச் சொல்லுறம்?” அவதியாகக் கேட்டார்.
“இப்பவும் ஒண்ணும் பிரச்சனை இல்ல தம்பி, உனக்கு விருப்பம் எண்டு ஒரு சொல்லு சொல்லு, நான் அங்க கதைக்கிறன். அந்தப் பிள்ள, உனக்கு விருப்பம் இல்ல எண்டுறத விளங்கி, தேவையில்லாத பிரச்சினைகள் வரவிடாமல், எனக்கு எந்த வழியிலயும் சங்கடம் தராமல் எவ்வளவு நாசூக்கா தன்னிலயே பழியைப் போட்டுக்கொண்டு போயிருக்கிறா. எனக்கு முன்னால வச்சே தாய் அவவக்கு நல்ல பேச்சு. இதென்ன விளையாட்டா, ஒருக்கா விருப்பம் எண்டு சொல்லுற, ரெண்டு நாளில பிடிக்கேல்ல எண்டுற எண்டு.” என்றதும் நெற்றி சுருக்கினான், அவன் .
“உண்மையாவோ? அவவிட பெரியம்மாவுக்கு வருத்தம் எண்டெல்லா போனவா?” என்று கேட்கவும் செய்தான்.
“அது ஒரு சாட்டு. அவையள் நல்ல மனிசரா இருக்கப் போய் வீண் பிரச்சினையைத் தவிர்க்க அப்பிடிச் சொல்லிபோட்டுப் போனவே. இங்க பாருங்க தம்பி, அந்தப் பிள்ள உங்களப் பிடிச்சிருக்கு எண்டு சொல்லி, அவே பக்கத்தில முடிவாகின பிறகு தானே நம்மளோட வந்தவா?” என்ற நிவேதா, மகன் மனத்தை மாற்றிவிட தன்னால் இயன்றமட்டுக்கும் முயன்றார்.
“அப்ப நீங்களும் நம்பிக்கை குடுத்திருக்கிறீங்க அம்மா. நான் அண்டைக்கு லிங்கத்தில சந்திச்ச பிறகு என்ன சொன்னனான்?” என்றவனுக்கு, அன்றே இந்த விடயத்தில் திடமாக முற்றுப்புள்ளியிடாத தன்னில் எரிச்சல் தான் வந்தது.
இனியும் அந்தப் பிழை விடக்கூடாதென்ற முடிவுக்கு வந்துவிட்டான்.
கவனி இவனை மறுக்கக் காரணமே இல்லையே! அவளுக்கு நிச்சயம் இவனைப் பிடிக்கும். அவன் மனம் உணர்வதெல்லாம் பொய்யில்லை. முடிவு செய்துவிட்டவன், “எனக்குக் கவினியப் பிடிச்சிருக்கு அம்மா. மேற்கொண்டு அவேட வீட்டில கதைச்சுக் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கம்மா.” ஒரே மூச்சில் சொல்லிவிட்டான்.