“எங்க நிக்கிறீங்க?” என்று கேட்ட மைத்துனிக்குப் பதில் சொன்ன இனிதனால் இயல்பாகக் கதைக்க முடியவில்லை. இங்கே ஒருவன் உன்னை விரும்புகிறானாம். பெரியவர்களிடம் சொல்லியும் விட்டான். எதிர்ப்பலைகள் தான் அதிகம் போலுள்ளது. உன் விருப்பம், முடிவு என்ன? முதல், அதைத் தெரிந்து கொண்ட பின்தான் பெரியவர்களோடு கதைத்தானா?
இப்படி, கேள்விகளும் தடுமாற்றமும் நிறைந்து கிடக்கவேதான் தொடர்ந்து கதைத்தான்.
எது எப்படியோ அவள் யாருமில்லாதவள் இல்லை. என்ன என்றாலும் பார்க்கலாம். விமலாவும் மதிவதனியும் வலு தீவிரமாக எதையோ கதைத்தபடி நிற்க, அவர்களைப் பார்த்த வண்ணம் அவளைப் பற்றிக் கேட்டான். எப்போ கொழும்பு வருவாள் என்றும்.
“ரிசப்சனுக்கு முதல் நாள் தான் வருவியோ? தெகிவளைக்கு எங்கட சித்தப்பா வீட்டதானே வருவ கவினி? அம்மா அண்ணாவேயும் வந்திருவினம்.”
“ஓம் ஓம், நான் உங்களோடதான் நிப்பன். அம்மா அப்பா விமலா அன்ரி வீட்டிலதான் நிப்பினம். அதோட இயல் ஆக்களும் அங்கதானே. ரிசப்சன் எண்டு, வேற சொந்த பந்தங்களும் வரலாம். சாரல், ஆதவன் அண்ணாவேயும் வந்திருவினம். அவேட வீடு நிறைஞ்சிரும்.” என்றவளுக்கு, தங்களோடுதான் தங்க வேண்டும் என்று இயல் சொன்னது நினைவில் வந்தது. அதோடு சேந்தன் முகமும்.
“நீங்க கதிர்காமம் பிறகு உனவட்டுன ரிசோர்ட் எண்டு போயிட்டு, நான் அங்க வாறதுக்கு ரெண்டு நாள்களுக்கு முதல் வந்திருவீங்க என்ன?” என்றவளிடம் இனிதனால் மறைத்துக் கதைக்க முடியவில்லை.
“இல்ல கவினி, நாங்க இண்டே இப்பிடியே கொழும்புக்குப் போகப் போறம்.” என்று விட்டிருந்தான்.
காரணம் கேட்காது இருப்பாளா!
சொல்லியும் விட்டான். கேட்டவளிடம் சிறுபொழுது சத்தமே இல்லை.
“இனிதன் மச்சான்…நான்… இப்ப உங்களுக்கு எடுத்ததே இதைச் சொல்லத்தான். சேந்தன் கோல் பண்ணிவர், நான் எடுக்கேல்ல எண்டோன்ன மெசேஜ் அனுப்பியிருக்கிறார். விரும்புறாராம்.” மெல்லிய குரலில் சொன்னவளின் மனத்தடுமாற்றம் இவனுக்கு நன்றாகவே தெரிந்தது.
“ஓ!” என்றவன் சேந்தனைப் பார்க்கவெனத் திரும்பினான். இயலும் அவனும் பின்னால்தான் நின்றிருந்தார்கள்.
‘ஆள் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்.’ என்று இவன் மனத்துள் சொன்னது அவனுக்குக் கேட்டிருக்குமோ! அப்படியொரு முறுவல் பூத்தான்.
“கவினியா, கதைக்கலாமா?” சின்னக்குரலில் ஆவலோடு கேட்டவனை என்ன செய்வது? கவினியின் முடிவு தெரியாதே இங்கு கதைத்திருக்கிறாரே! அந்தளவுக்கு நம்பிக்கையா என்றெண்ணியவனால் முழுமையாக மகிழவும் முடியவில்லை.
நிவேதா அவ்வளவு இலேசில் விட்டுவிடுவார் போலில்லை. அவன் மாமி மதிவதனியோ, தான்தான் வெறுத்தார் என்றால், தன்னைச் சுற்றியுள்ளவர்களிலும் மகள் மீதான வெறுப்பை, இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி வளர்த்து விட்டிருக்கிறாரே!
சற்று முன்னரும் கூட இவனிடம் என்னமாதிரிக் கதைத்தார். “உங்கட மாமாவுக்கு விசர் பிடிச்சிட்டு இனிதன். அவளிட விருப்பத்துக்குக் குறுக்க நிக்காராம். அவள் என்ன ஆட்டமும் போடட்டும். ஆனா, இவையல் என்ர சினேகிதி குடும்பங்கள் மட்டும் இல்லை, சாரலிட குடும்பமும். அவளால சாரல் வாழ்க்கையில சின்னதாப் பிரச்சின வந்திச்சு, நான் மனிசியாவே இருக்க மாட்டன். அவளுக்கு எடுத்துப் புத்தி சொல்லுங்க.” என்றபோது, விமலாவும் அருகில் தான் நின்றிருந்தார்.
“நீ, உன்ர விருப்பம் என்ன கவினி? பதில் சொல்லிட்டியா? சேந்தன் அருமையானவர் …” என்ற மைத்துனனுக்குப் பதில் சொல்லாமல் கேள்வி கேட்டாள், அவள்.
“இன்னும் நாலு நாள்களுக்குப் பிறகுதானே கொழும்புக்கு வர இருந்தனீங்க? என்ன திடீரெண்டு? அங்க ஏதும் பிரச்சினையா இனிதன் மச்சான்? என்னாலயா?”என்றவளின் கேள்விகளுக்கு, அவன் நேரடியாகப் பதில் சொல்லவில்லை.
“உன்னால என்ன பிரச்சினை வரக்கிடக்கு? விரும்பிறன் எண்டது சேந்தன். பொறு, முதல் சாரலிட ரிசப்சன் முடியட்டும். கதைப்பம் டி. நாங்க எல்லாரும் உனக்கு இருக்கிறம் மறந்திராத!” என்றுவிட்டு வைத்திருந்தான் அவன். அவளுக்கு அதன் பின்னும் ஊகிக்க முடியாதா?
மைத்துனனோடு கதைத்துவிட்டு வைத்த கவினி கைப்பேசியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அதில், சேந்தன் தன் மனத்தைத் தெரிவித்து அனுப்பிய குறுஞ்செய்தி ஒளிர்ந்து கொண்டிருந்தது.