KK- 16 -2

இங்கோ, கொழும்பு நோக்கிப் பயணப்பட்டார்கள். நிவேதாவோ ஒரு வார்த்தை கதைக்கவில்லை. சாப்பிடவில்லை. ஏன், நிறுத்தங்களில் இறங்கி ஏறவில்லை. இறுக்கமாகவே அமர்ந்திருந்தார். இயல்தான் முன்னும் பின்னும் கெஞ்சியபடியே இருந்தாள்.
கொழும்பு வந்து சேர மாலையாகி இருந்தது. வந்ததும் வராததுமாக விமலாவோடு கோபித்துக் கொண்டார், நிவேதா.
“நான் என்ன செய்தன் நிவி?” களைப்போடு திகைத்து நின்றார், அவர்.
“ஒண்ணுமே செய்யேல்ல என்ன? சேந்தன் ஆதினி கலியாணப்பேச்சு எப்படா முறியும் எண்டு பாத்துக்கொண்டு இருந்த கணக்கில, சூரியனுக்கு அந்தப் பிள்ளையக் கேக்கோணும் எண்டு நீ சொல்லேல்லையா? நான் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறது தெரிஞ்சும் அப்பிடிச் சொன்னியே!” என்றவர், அவர் திகைத்துப் போய் நிற்க, மதிவதனியிடம் திரும்பினார்.
முந்திக்கொண்டார் ,மதிவதனி.
“எங்களில ஏன் கோவப்படுற நிவி? முதல் சேந்தனிட்ட வடிவாக் கதை. முறைக்காதையப்பா! கவினி விரும்பிறன் எண்டு சொன்னவளோ எண்டு கேட்டுப்பார். அதில்லாமல் தம்பியா விரும்பினால் சரியா? அவள் இந்த விசயத்துக்குள்ள வரவே மாட்டாள். அதுக்கு நான் உத்தரவாதம். அதால வார்த்தைய விடாத! அமைதியா இரு!” உறுதியாகவே அதட்டிவிட்டார்.
பூங்குன்றன் மனைவியை முறைத்தார். ஆனாலும் மருமகன் வீட்டில் வைத்து வீண் விவாதம் செய்ய விரும்பாது வாய் மூடிக்கொண்டார். அதோடு சின்ன மகள் மனம் என்னெவென்று தெரியாதே!
“தயவு செய்து இந்தக் கதைய விட்டுப்போட்டு அலுவலப் பாருங்க. முதல் ரிசப்சன் முடியட்டும். கவினியும் வந்திருவா. பிறகு கதைக்கலாம்.” என்றார் யோகன்.
“அதை உங்கட தங்கச்சிட்டச் சொல்லுங்க. சும்மா எல்லாத்தையும் தூக்கிப் பிடிச்சுக்கொண்டு நிண்டா. ஆதினி விசயம்…” என்று ஆரம்பித்த விமலா, இளையவர்கள் நால்வரும் உள்ளே வருவதைக் கண்டுவிட்டு அமைதியானார். ஆனாலும் நிவேதாவை முறைத்தார்.
“ஆர், நான் தூக்கிப் பிடிச்சுக் கதைக்கிறனா? என்ர நிலையில நீ இருந்தாத் தெரியும். நீ உன்ர பிள்ளைகளுக்கு அருமையான மருமகள்களாப் பார், என்ர வீட்டுக்கு அடங்காப்பிடாரி…” அழுகையோடு சொன்னவர் முடிக்கவில்லை முன்னால் வந்து நின்றிருந்தான், சேந்தன்.
இருபத்தியைந்து வயது அவனுக்கு. ஒருநாள்சரி தாயோடு மல்லுக்கட்டும் தேவை வந்ததில்லை. தாய் தந்தையோடு கோபித்தது, வாக்குவாதப்பட்டது என்று நினைவும் இல்லை. ஆனால், இப்போது வாய் மூடி நின்றானானால் அவன் கொண்ட நேசத்துக்கு இழைக்கும் துரோகம் அது.
“இங்க பாருங்க அம்மா, நீங்க தலைகீழா நிண்டாலும் நான் கலியாணம் செய்யிறது எண்டா கவினியத்தான் செய்வன். இல்லையோ, உங்களுக்கு மருமகளே வர மாட்டா. நிம்மதியா இருக்கலாம். அதைவிட்டுட்டு கவினியப் பற்றி ஆராவது தேவேல்லாமல் கதைச்சா எனக்கு விசர் தான் வரும் சொல்லிட்டன். எல்லாரும் முதல் உங்க உங்களப் பாருங்க. பெரிய திறமான மனிசரப் போல எந்த நேரமும் அவவக் குறை கதைக்கிறது.” என்றவன் விழிகள், தாயிடமிருந்து மதிவதனியிடம் பாய்ந்து தீர்க்கமாக நிலைத்து நின்றது.
‘பொடிப்பயல். என்ன துணிவு? முதல் அவள் எனக்கு ஆர், இவனுக்கு ஆர்? ரெண்டு நாள் கதைச்சிட்டு இந்தளவுக்கு உரிமையா அலட்டுறானே, விசரனா இருப்பானோ? முதல், இவன…’ முறைப்போடு பற்களை நறும்பினார், மதிவதனி. அந்தக்கணம், எக்காரணம் கொண்டும் இந்தச் சேந்தனுக்குக் கவினி இல்லை என்று முடிவு செய்துவிட்டார். ‘ இவனிட திமிருக்குச் செய்யிறன் வேலை. கலியாணம் செய்யாமல் இரன் பாப்பம்.’ கடுகடுவென்று பார்த்தார்.
“நிலைமை போகும் போக்குச் சரியில்ல.” முணுமுணுத்தபடி வந்த இயல், தமையனை இழுத்துச் சென்றாள்.
“உன்ர விருப்பம் இல்லாமல் ஒண்ணும் நடவாது நிவி. அதோட உண்மையாவே நீங்க இப்பிடிக் கதைக்கிற அளவுக்கு அந்தப் பிள்ள இல்ல. அருமையானவா. நல்ல கெட்டிகாரி. பொறு பொறு ஒண்டும் சொல்லாத”” சகோதரியைக் கையமர்த்திய யோகன், மதிவதனியைக் குற்றம் சுமத்தும் பார்வை பார்த்தார்.
“என்னதான் சொல்லுங்க தங்கச்சி, பெத்த பிள்ளைகளுக்க இந்தளவு பாகுபாடு பார்த்திருக்க கூடாது. உண்மையைச் சொன்னால் பரவாயில்லை. பெத்த தாய் தகப்பன், உண்மையா இருந்தாலே பிள்ளைகளைப் பற்றி இப்பிடியெல்லாம் கதைக்காயினம். கவினி பற்றி நீங்க சொல்லுறதில உண்மையே இல்ல எண்டு எங்களுக்குத் தெரியும். உங்கட மாமில உள்ள கோபத்த பெத்த பிள்ளையில தீர்க்கிறிங்க!” குற்றம் சாட்டினார். விமலாவின் தலையும் ஒப்புதலாக ஆடியது.
நிவேதா கோபமாகத் தமையனைப் பார்த்தார்.
“நல்ல பகிடியா இருக்கு அண்ணா உங்கட கதை. விமலாவே சாரல் தங்கமான பிள்ள, கவினி அப்பிடி இல்லை, தான் நினைச்சபடி நடக்கிறவா எண்டு சொல்லி இருக்கிறா. இந்தளவுக்குக் கதைக்கிற நீங்க சூரியனுக்குக் கவினியைக் கட்டி வைக்கலாமே!” என்றதும் மனைவியை எரிபார்வை பார்த்தார் யோகன். பூங்குன்றன் முகம் கறுக்க நின்றார்.
“ஐயோ கடவுளே! இதென்ன வீண் பழி? அம்மாவான நான் அந்த அர்த்தத்தில சொல்லேல்ல. மதிவதனி சொன்னதத் தான் நான் சொன்னனான். என்ன நிவி நீ?” பதறிப்போய் விமலா சொன்னபோது, “அம்மா இதுக்கும் மேலே ஒரு வார்த்த கதைக்க வேணாம்!” என்றபடி, மீண்டும் சேந்தன் வந்திருந்தான்.
“ஐயோ அண்ணா விடுங்க, அம்மா வாங்க என்னோட.” விறுவிறுவென்று இழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்திருந்தாள், இயல்.
விமலாவுக்குப் பூங்குன்றனின் முகம் பார்க்க முடியவில்லை. கலங்கிய விழிகளோடு உள்ளே நகர, மதிவதனி பின் தொடர்ந்தார்.
“மனசுக்க வச்சிராதீங்க பூங்குன்றன். சொறி!” என்றபடி அழைத்துச் சென்றார். யோகன்.
என் மகளுக்காக நானே இந்தளவுக்குக் கதைக்கவில்லை என்ற குற்றவுணர்வோடு நகர்ந்தார், அவர்.
யோகன், விமலா ஆட்களில் உள்ள கோபத்தில் இந்தா இலண்டனுக்கு வெளிக்கிடுறன் என்று புறப்பட்ட தாயைச் சமாளிக்கப் பெரும்பாடு பட்டுவிட்டாள், இயல். இலண்டனில் இருந்து ரவியும் எடுத்துக் கதைத்திருந்தார்.
“சின்னப்பிள்ளைகள் போல இதெல்லாம் என்ன நிவி? அமைதியா நிண்டு ரிசப்சன் முடியவிட்டு வாங்கோ!” என்றிருந்தவர்,மகனோடும் கதைத்திருந்தார்.
அவனோ, கவினிதான் என்ற பிடியில் நின்று அங்கிங்கு நகரவில்லை.
மறுநாளே எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு ரிசப்சன் வேலைகளில் இறங்கிவிட்டார், விமலா. மதிவதனியும் சேர்ந்து கொண்டார்.

error: Alert: Content selection is disabled!!