இயலோடு இன்முகத்தோடுதான் கதைத்தாள், கவினி. ஆனால் என்ன, சேந்தன் என்றொருவன் அங்கிருக்கிறான் என்றது போலவே நடந்துகொள்ளவில்லை.
“தனிய அம்பிடாமலா போயிருவீர்?” என்று அவளையே பார்வையால் தொடர்ந்தவண்ணம் இருந்தான், அவன்.
அவன் பொறுமைக்குச் சோதனை வைத்தாள், கவினி. எப்போது அவள் மீதான விருப்பை உணர்ந்து அவளிடம் உரைத்தானோ அக்கணத்திலிருந்து இதைத்தானே செய்கிறாள். கோபம் கூட வந்திட்டு. அதை அவளில் காட்ட அவன் சிறிதும் விரும்பவில்லை. ஆனால்…விறுவிறுவென்று எழுந்து நடந்தான்.
“உங்களுக்கு என்னவாவது வேணுமா? நானும் அப்போத இருந்து பாக்கிறன் என்னையே அடிக்கடிப் பாக்கிறீங்க?” இடுங்கிய விழிகளோடு வெருட்டலாகக் கேட்டது மதிவதனியிடம் தான்.
அவரோ திடுக்கிடலோடு அருகில் நின்ற விமலாவைப் பார்த்தார். பெரும் அவமானமாக இருந்தது. சேந்தன் மீதான கோபம் கூடிக்கொண்டே சென்றிட்டு.
“இதென்ன தம்பி உங்கட கதை? பெரிய கரைச்சலாக் கிடக்கு. நான் எங்க உங்களப் பாத்தன்? நீங்கதான் எங்களப் பாக்கிறீங்க போல!” நக்கல் சிரிப்போடு பார்த்த மதிவதனி, அதே நக்கல் சிரிப்போடு நிவேதாவையும் ஏறிட்டார்.
“உங்கட அம்மா ஏதோ தன்ர குடும்பத்தில நாங்க பிரச்சினை பண்ணுறது போல நடந்து கொள்ளுறாள் . ஆனா நடக்கிறதோ…” என்றுவிட்டு நிறுத்தி, அவனைக் கண்டிப்பாகப் பார்த்தார்.
“தயவு செய்து எங்கட வீட்டுக்க வீண் பிரச்சினை பண்ண வேணாம் தம்பி. கவினிக்கு உங்களில அப்பிடி ஒரு எண்ணமும் இல்ல.” அதட்டலாகச் சொன்ன வேகத்தில் அப்பால் நகர்ந்து விட்டார்.
விமலாவுக்குக் கவலையாக இருந்தது. கவினி இயல்பாக இல்லை. அதேபோல்தான் சேந்தனும் நெற்றிச் சுருக்கத்தோடு நடமாடுகிறான். இந்த விடயத்தில் சினேகிதிகளோடு தர்க்கம் செய்யவும் அவருக்கு விருப்பம் இல்லை. கவினிக்கும் விருப்பம் இருக்குமாயின் அதை எப்படித் தட்டிக் கழிப்பது? அந்தநேரம் நிச்சயம் அவர் கவினி, சேந்தன் பக்கம் தான்.
“குஞ்சன் ஏனப்பு? விருப்பம் இல்ல எண்டால் விட்டிரோணும். முதல், அம்மாவோட போய்க் கதையுங்க. வாற போற எல்லாரும் என்ன பிரச்சின எண்டு கேக்கிற மாதிரியே இருக்கிறாள்.” என்றுவிட்டு நகர்ந்தார்.
விசுக்கென்று திரும்பித் தாயைப் பார்த்தான், சேந்தன். அவர் மறுபுறமாகத் திரும்பிக் கொண்டார். அதேவேகத்தில் பார்வையைக் கவினி இருக்கும் இடத்துக்கு நகர்த்தினான் . அவள் பார்வை இவனில் தான். ஊன்றிப் பார்த்தான். பார்வையை விலக்க முனைந்தவளால் முடியவில்லை. விழிகள் கலங்கப் பார்த்தபடியிருந்தாள்.
‘உனக்கு என்னில விருப்பம் இல்லையோ?’ மனத்தில் முணுமுணுத்தபடி நடந்தவன் அந்த மண்டபக் கடைசியில் கிடந்த இருக்கையொன்றில் அமர்ந்து கொண்டான்.
“சேந்தன் என்னவாவது பிரச்சினையா? வதனி அன்ரி என்ன சொன்னவா?” கேட்டபடி அருகிலமர்ந்தான், சூரியன். சேந்தன் தோளில் ஆதரவாகத் தட்டினான்.
உண்மையில் அவனுக்குக் கவினியை அவ்வளவாகப் பிடிக்காது. ‘செடில் குணம் பிடிச்ச பெட்டை’ என்ற எண்ணம் தான். ஆனால், இப்போது அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
“பச்! ஒண்ணும் இல்ல.” என்றுவிட்டு, மீண்டும் கவினி இருந்த இடத்தைப் பார்த்தால் அவள் அங்கில்லை. சட்டென்று விழிகளைச் சுழற்றினான், சேந்தன்.
ரிச் கேக் அடங்கிய பிரம்புக் கூடைகளோடு வந்த இளம்பெண்களில் அவளும் நின்றாள். மிகவும் கவனமாக இவனிருந்த பக்கம் வரவில்லை. மறுபக்கமாகக் கொடுக்க ஆரம்பித்தவளையே பார்த்துக்கொண்டிருந்தான், சேந்தன்.
சூரியனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “கவினியோட கதைச்சுப் பாக்கலாம் சேந்தன்.” மெல்ல ஆரம்பித்தான்.
“வீட்டில சும்மா அப்பிடி இப்பிடிச் சொல்லுறதுகள எல்லாம் பெரிசா எடுக்கத் தேவேல்ல. அவவுக்கும் விருப்பம் இருந்தா…நிவி மாமியை கதைச்சுச் சமாதானம் செய்விக்கலாம். ம்ம்” என்றவனைச் சிறு முறுவலோடு பார்த்த சேந்தனுக்கு, முதன் முதலில் இவனிடம் கவினியைப் பிடித்திருக்கு என்றபோது இவன் முகம் சுளித்தது தெரியும்.
“எனக்கும் முதல் ஆதினிய நினைச்சுத்தான் யோசினையா இருந்தது சேந்தன். சரியில்ல எல்லா? ஆனா, அவாவே சரிவராது எண்டிட்டுப் போய்ட்டா. அதோட கவினியப் பற்றி மதிவதனி ஆன்ரி சொல்லி சொல்லி எனக்குப் பெரிசாப் பிடிக்காதுதான். நான் அவவோட பெரிசா கதை வச்சுக்கொள்ளுறது இல்லை. அண்ணா எப்பவும் நல்ல பிள்ளை எண்டுதான் சொல்லுறவர். இப்ப வீட்டில கதைக்கிறதுகளப் பாக்கேக்க உண்மையா கோவம் தான் வருது. விரும்பிறன் எண்டது நீர். இங்க எல்லாரிட வாய்க்கையும் அரைபடுறது கவினி. அதும் வதனி அன்ரி தன்ர மாமில உள்ள கோவத்த இவவில காட்டுறதே எனக்கு இப்பத்தான் தெரியும்.” அந்தரப்பட்டுக்கொண்டே சொன்னான்,சூரியன்.