“பச் விடும்!” என்ற சேந்தன், கவினி கடைசி வரிசைக்கு முதல் வரிசையில் நிற்பதைப் பார்த்தான்.
“இரும் வாறன்.” எழுந்து விறுவிறுவென்று சென்றவன் அங்கிருந்த மேசையில் அமர்ந்துவிட்டான். வட்டவடிவில் போடப்பட்டிருந்த ஒவ்வொரு மேசையிலும் நான்கு கதிரைகள் இருந்தன. இவன் அமர்ந்த இடத்தில் ஒரு தாயும் மகளும் அமர்ந்திருந்தார்கள்.
வந்த நேரம் தொட்டு சேந்தன் பார்வை இவளைத் தொடர்கிறதே! கவினியும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறாள். தாயில் ஏற்பட்ட மனக்கசப்பு, வெறுப்பு, கோபம் இன்று இந்நிகழ்வில் கலந்துகொள்ளத்தான் வேண்டுமா என்றளவுக்கு யோசிக்க வைத்திருந்தது.
மிகவுமே கனத்த மனத்தோடு இருந்தவளைத் தேற்றி அழைத்து வந்தது பரமேஸ்வரி. அது பார்த்தால் சேந்தன் தன் முடிவிலேயே தொங்கிக்கொண்டிருக்கிறான்!
ஒருபுறம் மதிவதனியின் நெருப்புப் பார்வை அவளைச் சுட்டுக்கொண்டே இருக்க, நிவேதா வேறு தன் பங்குக்கு விழிகளால் துவசம் செய்து கொண்டிருக்கிறார்.
‘இவன என்ன செய்யிறது?’ பற்களை நறும்பினாள். அவனுக்குக் கொடுக்காது செல்லவும் எண்ணினாள். பிறகு, ‘நான் என்ன தேவைக்கு ஒதுங்கிப் போகோணும்’ என்று வீம்பாக எண்ணிக்கொண்டவள், அந்த மேசையில் அமர்ந்திருந்த தாய்க்கும் மகளுக்கும் கேக்கைக் கொடுத்துவிட்டு இவன் முகம் பார்த்தாள்.
அவன் இந்தக் கேக் எடுக்கவா ஓடிவந்து இங்கமர்ந்தான்?
“பச்! எடுங்கோ சேந்தன்.” வலு இயல்பான முறுவலோடு நீட்டியவளை ஆழ்ந்து பார்த்தான். பெரும் அந்தரமாக இருந்ததைக் காட்டிக்கொள்ளாது அருகில் இருந்தவர்களை பார்த்து முறுவலித்தாள், கவினி.
“இப்ப உங்களுக்கு கேக் வேணாமா? நானும் அக்காவும் செய்தது, சாப்பிட்டுப் பாருங்கவன்.” இன்னும் சற்றே அவனுக்கு முன்னால் கூடையை நகர்த்தியவள் கட்டுப்பாடுகள் எல்லாம் கரைந்து போவது போலுணர்ந்தாள். அந்தளவுக்கு அவன் பார்வை நெஞ்சுக்குள் எதுவோ செய்வித்தது. விழிகள் கலங்கி விடுமோ! பயந்து போனாள். அவளை, அவன் எக்கணத்திலும் கண்டுகொள்ளவே கூடாது என்றெண்ணினாள்.
அதுதான் நடந்துவிட்டதே ! அது கொடுக்கும் தைரியத்தில் தான் இவன் ஒரே பிடியில் நிற்கிறான் என்று அவளுக்குத் தெரியாதே!
தானே ஒரு கேக்கை எடுத்து அவன் முன்னால் வைத்த வேகத்தில் அப்பால் நகர்ந்தவளுக்கு, இந்த இடத்தை விட்டுப் போனால் போதுமென்று இருந்தது.
மணிக்கணக்கில் கதைத்தானா பேசினானா? சிரித்துப் பழகியிருக்கிறீர்களா? உனக்கு அவனைத் தெரியுமா அவனுக்கு உன்னைத் தெரியுமா? என்ன, கண்டதும் காதலா? இப்படி, இச்சிலநாட்களாக எத்தனை எத்தனையோ நக்கலான கேள்விகளைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாள்.
சந்தித்துக் கதைத்துப் பழகவில்லைதான். ஆனால், அவனால் நான் பாதிக்கப்படுகிறேன். அவனை எனக்குப் பிடித்திருக்கு. அவள் உள்ளம் உணர்ந்ததை வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை.
கையிலிருந்த கேக் கூடையை இன்னொரு பிள்ளையிடம் கொடுத்தவள், “ரெஸ்ட் ரூம் போயிட்டு வாறன்.” விடுவிடுவென்று மண்டப வாயிலால் வெளியேறினாள்.
விருட்டென்று எழுந்து வந்த சேந்தன், கேள்வியாகப் பார்த்த சூரியனிடம், “இரும் வாறன்.” வெளியேறினான். சூரியன் பார்வை முன்னால் பாய்ந்தது.
மதிவதனி, விமலா, நிவேதா மூவரும் வெவ்வேறு இடங்களில் நின்றிருந்தாலும் பார்வை இங்குதான்.
“நல்லாப் பார், உன்ர மகன்தான் அவளோட கதைக்க ட்ரை பண்ணுறான்.”வேகமாக நிவேதாவருகில் சென்றமர்ந்த மதிவதனி அடிக்குரலில் சீறினார்.
“பச்! சும்மா இரு வதனி.” என்ற விமலா, “ வா, என்ன எண்டு போய்ப் பாப்பம்.” என்று எழுந்து நகர எத்தனித்தார். மணமக்களின் பெற்றோரைப் புகைப்படம் எடுக்க மேடைக்கு வரும்படி அழைத்தார்கள். நெருங்கிய நட்புகள், மறுக்க முடியுமா? விமலாவும் மதிவதனியும் கணவர்மார்களோடு மேடையேறினார்கள்.
அந்த நேரம் பார்த்து,“பிள்ளை நீர் நிவேதா தானே? லண்டனில இருந்து எப்ப வந்தனீர்? மனுசன் பிள்ளைகள் எல்லாரும் நல்லா இருக்கினமே?” என்றபடி, வயதான பெண்மணியொருத்தி வந்து நிவேதாவின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டார்.
கிடுக்குப் பிடிக்குள் அகப்பட்டுக்கொண்ட நிலையில் சினேகிதிகள் தவித்துப்போய் நிற்கையில், கவினியோ, அவன் முன்னால் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் துளித் துளியாக உருண்டோட நடந்துகொண்டிருந்தாள். தன் கலக்கத்தை அங்கிங்கு தென்பட்டவர்கள் பார்வையிலிருந்து மறைக்க வேண்டுமே.சற்றே தலைகுனிந்தவாறே விறுவிறுவென்று சென்று ரெஸ்ட் ரூம் உள்ள பகுதிக்குள் நுழைய இருந்தவளை, “ கவினி நில்லும்!” கரம் பற்றி நிறுத்தியிருந்தான், சேந்தன்.
கவினி அவள் வசமின்றிப் போனாள். போக வைத்தது ஆழ்ந்தொலித்த அந்தக் குரல். சட்டென்று திரும்ப உன்னியது மனம், திரும்பவில்லை. மறு கைக்குள் கைப்பேசியோடு இருந்த கைக்குட்டையால் கண்களை ஒற்றிக்கொண்டாள். மூக்குவேறு மக்கர் பண்ணியது. மெல்ல இழுத்துச் சரியாக்க முயன்றாள். உருண்டையாகத் திரண்ட துக்கப்பந்தை பெருமுயற்சியால் முயன்று விழுங்கிக்கொண்டு சாதாரணமாகத் திரும்பும் பாவனையில் திரும்பினாள்.
அவன் விழிகளை நேருக்கு நேராக எதிர்கொண்டாள். பார்த்திருக்க அவள் பார்வையில் ஏறிய கடினம் முகத்திலும் பரவியது. மணிக்கட்டின் மேல் பற்றியிருந்த அவன் கையைப் பார்த்தவள், “பச்”முறுக்கி விடுவிக்க முயன்றாள்.
அவளுக்கு நேரெதிராக உல்லாசமாக முறுவலித்தான், சேந்தன். இப்போவரை அவனை இப்படி அவள் காணவில்லை. அவளையே ஆழ்பார்வை பார்த்திருந்த விழிகளில் விசமம் வழிந்தது. ஒற்றைப் புருவத்தை ஏறியிறக்கியவன், “ஒரு ஐஞ்சு நிமிசம் ப்ளீஸ்!” என்றான், கெஞ்சலாக.
“இப்பிடிக் கையைப் பிடிச்சுக்கொண்டு நிற்கக் கேட்கேல்ல, கதைக்கோணும்.” தொடர்ந்தான்.
கோபமாகப் பார்க்க முனைந்தாள், கவினி. அது முனைப்பிலேயே வலுவிழந்து போக, தடுமாற்றத்தோடு எச்சில் விழுங்கினாள். இருந்தாலும், “முதல் கையை விடுங்க சேந்தன்.” அவர்களைக் கடந்து சென்ற இரு பெண்கள் தமக்குள் குசுகுசுத்துச் செல்ல, கண்டிப்போடு சொன்னாள்.
“எத்தின கோல், மெசேஜ்? ஒண்டுக்காவது பதில் போட்டனீரா? சரி விடும். கையை விட்டா ஓட மாட்டீர் தானே?” அவன் குரலும் முகம் பிரதிபலித்த பாவனையும், நிமிர்வாக எதிர்கொள்ள முயன்றுகொண்டிருந்த இவள் விழிகளைத் தடுமாற வைத்திட்டு.
“இல்ல, விடுங்க!” கையை உருவிக்கொண்டே முறைப்போடு ஏறிட முனைந்தாள். என்ன கதைக்கப் போகிறான் என்று தெரியுமே! அதற்கான பதில் மட்டும் நிமிர்வாகவே வரிசை கட்டி வந்து தொண்டைக்குள் அணிவகுத்திட்டு. வெளிவருகையில் அதே நிமிர்வைப் பிடித்து வைத்திருக்க அவள்தான் பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.
கைகளைக் கட்டிக்கொண்டே சற்றே தள்ளி நின்றுகொண்டவள், “சரி சொல்லுங்க, என்ன விசயம்? எதுவுமே தெரியாத பாவனையில் தான் வினவியிருந்தாள்.
“அதை ஏற்கனவே சொல்லிட்டன், கவினி பூங்குன்றன். நீர்தான் இன்னும் பதில் சொல்லேல்ல.காத்திருக்கிற எனக்கு… உண்மையாவே… அலுப்பா இல்ல.” என்றபோது அவன் குரல் தடுமாறியது. விழிகளில் மினுமினுப்பு.
“சரி, இப்பிடி நேருக்கு நேராக நிண்டு சொல்லோணும் எண்டு எதிர்பார்க்கிறீர் போல!” கண் சிமிட்டலோடு சொல்லித் தன் தவிப்பை மறைத்தவன், அவள் பார்வையை அலைப்புறுதலோடு அப்பால் அலையவிட்டான்.
“ரெண்டு பேரும் கனக்க நாள்கள் பழகினதில்ல. உண்மைதானே? பழகின கொஞ்ச நாள்கள்…ம்ம்ம் மணித்தியாலங்கள் எண்டும் சொல்லலாம். அண்டைக்கு விடிய வெள்ளன ஒண்டா நிண்டு சமைச்சமே, அதில இருந்து இப்பக் கொஞ்சம் முதல் ரிச் கேக் தந்தீரே அதையும் சேர்த்திரும். நீரும் நானும் உயிரோட இருக்கிற வரைக்கும் அப்பிடி லட்சம் கோடி சந்தர்பங்களில ரெண்டு பேரும் ஒண்டா இருக்கோணும். வருவீரா… கவினி சேந்தனாக?” கண்கள் கலங்க தன் வலக்கரத்தை நீட்டினான், சேந்தன்.
அக்கணம், கவினியின் சுற்றமே இயக்கத்தை நிறுத்திவிட்டிருந்தது.