அவள் முற்றுப்புள்ளி இட்டுவிட்டுச் செல்கிறாள் என்றால் இவன் ஏன் இந்தச் சிரிப்போடு செல்கிறான்? விரும்புகிறேன் என்றவன் அவள் மறுப்பில் கவலையோடு செல்லவில்லையே! அவன் நக்கல் சிரிப்புக்குக் காரணம் என்னவாக இருக்கும்? தன் நிலைப்பாட்டிலிருந்து எக்காலத்திலும் மாறமாட்டேன் என்று சொல்ல வருகிறானா? நிவேதா மனத்துள் கேள்வியெழுந்தது. கொதித்துப் போனார். அப்படி ஏதாவது எண்ணம் இருந்தால் அழித்துவிடு மகனே! இல்லையோ நானே அழிக்க வேண்டிவரும். குமுறலோடு எண்ணிக்கொண்டார்.
அதோடு, மதிவதனியுடனான பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடு என்றது, அவருள்ளம்.
அன்றிரவே, மகன் மகளோடு யாழ்ப்பாணம் செல்லப் புறப்பட்டார், நிவேதா. இன்னமும் ஐந்து நாட்களில் திரும்பி வந்து இலண்டன் செல்ல வேண்டும்.
“இப்ப யாழ்ப்பாணம் போய் என்ன செய்யப் போறீங்க? இங்கயே நிண்டுபோட்டுப் போகலாமே. உங்கட பாக்குகள் அங்க இருக்குதா? நான் எடுப்பிக்கிறன்.” என்றார் யோகன்.
“இல்லை அண்ணா இவரிட அக்கா, அண்ணா வீட்டில எல்லாம் போய் நிக்கேல்ல. பிறகு குறையாகிரும்.அஞ்சு நாளும் மட்டுவிலில தான் நிக்கப் போறம் . அப்பிடியே வந்து ஏர் போர்ட் போகச் சரியா இருக்கும். எங்கட பாக்குகள் இங்க அறைக்க இருக்கு. பிரச்சினை இல்லையே.” என்றவர், அப்போதும் விமலாவோடு பெரிதாகக் கதைக்கவில்லை.
“இதில என்ன பிரச்சினை இருக்கு? என்ன நிவி இன்னுமா கோபமா இருக்கிற?” தங்கையைச் சமாதானம் செய்ய முனைந்தார், யோகன்.
“உங்களோட எனக்கு என்ன கோவம் அண்ணா.” என்றுவிட்டு வெளிக்கிட்டவர், மதிவதனியிடம் வந்தார்.
“நீ அப்போத சேந்தன் தான் உன்ர மகள விரும்பினது, கவினி இல்ல எண்டனி எல்லா? அதைச் சொல்லேக்க ஒரு நக்கல் வேற. ம்ம்.. நீ …உன்னாலதான் அவனிட பார்வை அந்தப் பிள்ளையில பட்டதே!” என்று ஆரம்பிக்க, “இதென்ன புதுக்கதை?” என்றபடி முறைப்பாடு எழுந்தார், மதிவதனி.
“ எல்லாம் பழைய கததான். கவினிட கத எங்கட வீட்டில முதல் முதல் ஆரம்பிச்சது எந்த விசயத்தில தெரியுமா? பெத்த தாயே பிள்ளையைப் போட்டு இந்தப் பாடுபடுத்திறாவே எண்டுதான். அதுவும் இங்க வந்த இந்தக் கொஞ்ச நாளில நீ அந்தப் பிள்ளயப் போட்டு என்ன பாடு படுத்தினனீ? அதைக் கண்ணால பாத்த பரிதாபத்தில தான் அவன் விரும்பிறன் எண்டது. பொன்னுருக்கல் அண்டு இரவு எல்லாரும் சேர்ந்து எவ்வளவு பிரச்சினை நடந்தது எண்டு உனக்குத் தெரியுமா? நீ கவினிய ஏசினத சேந்தன் கேட்டுட்டு வந்து கத்தினவன். அப்ப உனக்காக நானும் விமலாவும் கதைச்சனாங்க. ஆனா, அதெல்லாம் சேர்ந்துதான் அவனை அந்தப் பிள்ளயப் பாக்க வச்சதே! செய்யிறதையும் செய்திட்டு என்னட்டக் குரல உயர்த்திற. உன்னோட பழக்கம் வச்சு நான் பட்டது போதும், உனக்குப் பெரிய கும்பிடு!” என்று சுள்ளென்று கதைத்தவர், கை கூப்பிவிட்டேதான் யாழ்ப்பாணம் புறப்பட்டிருந்தார்.
கேட்டுநின்ற விமலாவால் மதிவதனிக்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை. கவினி விடயத்தில் மதிவதனி செய்வது பிழை என்று தெளிவாகவே தெரிந்த பின்னர் என்ன கதைப்பது. மௌனமாக இருந்துவிட்டார்.
பயணத்தில் வைத்து மகனோடு கதைக்க எண்ணினார், நிவேதா. “கடைசித் தடவையாக கேக்கிறன் சேந்தன், ஆதினி விசயத்தில என்ன முடிவு எடுத்திருக்கிற?” கேட்டு முடிக்கவில்லை, அவனுக்கேயுரிய முறுவலோடு தாயைப் பார்த்தான், அவன். இடையில் கதைப்பதையே நிறுத்தியிருந்தவன் அல்லவா?
“அம்மா…” அன்போடு அழைத்தபடி தோளோடு வளைத்துக் கொண்டான், சேந்தன்.
“அது எப்பவோ முடிஞ்ச கதையம்மா. ப்ளீஸ், முதலில இருந்து தொடங்காதீங்க!” அன்போடுதான் சொன்னான், கெஞ்சலும் கலந்திருந்தது.
“அதோட, நான் உங்கட மகன். எப்படியம்மா இருப்பன்?” கண்சிமிட்டியவன், “எடுத்த முடிவில இருந்து மாறவே மாட்டன் மா. இந்த வாழ்க்க எனக்குத் தனிமைய மட்டும் தான் தர இருக்குது எண்டால் அதையும் ஏற்க நான் தயார். ஆனா, கவினி விசயத்தில மாற்றமே இல்ல!” உறுதியாகச் சொல்லி, நிவேதாவை, கோபத்தோடு சேர்ந்து கண்ணீரையும் பொழிய வைத்தான்.
அந்தக் குளிரூட்டப்பட்டப் பேருந்தினுள் பின் இருக்கைகளில் இனிதனும் வாணனும் அமர்ந்திருந்தார்கள். அவர்களோடு இருக்க எழுந்து சென்றுவிட்டான், சேந்தன்.
“அம்மா ப்ளீஸ், கொஞ்சநாள் அண்ணாவ அவரிட போக்கில விடுங்க. கவினி தன்ர முடிவச் சொல்லி இருக்கிறா. என்ன நடக்குது எண்டு பாப்பமே. அண்ணா ஒண்டும் தெரியாத சின்னவர் இல்லயம்மா.” தாயை ஆறுதல் படுத்தியபடி இருந்தாள், இயல்.
யாழ்ப்பாணம் நின்ற நாட்களில் ஏற்கனவே முடிவு செய்தபடி மூன்று குடும்பங்களுக்கு, அவர்கள் வாழ்வாதார விருத்தி, படிப்புச் செலவுகள் என்று பொறுப்பெடுத்திருந்தான், சேந்தன். அதில், மட்டக்களப்புக் குடும்பமும் ஒன்று. வாணனும் இனிதனும் தான் எல்லாவற்றையும் உடனிருந்து பார்த்துக் கொண்டார்கள்.
இலண்டனுக்கு விமானம் ஏறும் கடைசி நிமிடம் வரை கவினியை ஒரு தடவை சந்தித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டான், சேந்தன். நடக்கவேயில்லை.