முன்புறம் அரைவட்டத்தில் உயரமான பன்னிரண்டு கண்ணாடி யன்னல்கள், பின்னால் அகன்ற சதுர வடிவமென இருந்தது, அவ்வீட்டின் வரவேற்பறை. யன்னலில் தொங்கிக்கொண்டிருந்த தடித்த திரைச்சீலைகளை கழற்றிக் கீழே விட்டுவிட்டு, தோள்கள் இரண்டிலும் தழுவிக் கிடந்த லேஸ் திரைச்சீலைகளை மாற்றிக்கொண்டு நின்றாள், கவினி.
பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல
பொட்டல் கடந்து
புழுதி கடந்து
தரிசு கடந்து
கரிசல் கடந்து
அந்தோ நான் இவ்வழகினிலே
காலம் மறந்ததென்ன
என்று முணுமுணுத்துக்கொண்டிருந்தவள் மனத்தில், கம்பீரமாக நிமிர்ந்து நின்றாள், பூங்குழலி. கரையே தெரியாத சமுத்திரத்தில் பாய்க் கப்பல் கயிற்றைப் பற்றியபடி, பொங்கிப்பிரண்ட அலையாட்டத்துக்கேற்ப அவள் அசைய அசைய, அதன் பிரதிபலிப்பாக இவள் உடலிலும் மெல்லிய அசைவு தெரிந்தது.
கிர்ர்ர்ர்ர்
திடுமென்று அழைப்பு மணியோசை குறுக்கிட்டது. பூங்குழலி, அருகிலிருந்த காட்டுக்குள் பாய்ந்தோடி மறைந்தாள். ஏணியில் நின்றபடியே குனிந்து வாயில் புறத்தைப் பார்க்க முயன்றாள், கவினி.
அழைப்பு மணி மீண்டும் ஒலித்தது.
“ஏய்… நீ அங்க தானே நிக்கிற? ஆர் எண்டு ஒருக்காப் பாரன். அதைக்கூடச் சொல்லவா வேணும்?”
இவளைப் பெற்றெடுத்த மதிவதனியின் குரல் தான். அதைக் கேட்டாலோ அல்லது இவளோடு அவர் கதைக்கும் விதத்தைப் பார்த்தாலோ, இவள், அவர் மகளென்று கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்தாலும் ஒருவருமே நம்ப மாட்டார்கள்.
தாயின் குரலில் எப்போதும் போல் முகம் சுண்டிப்போனாள், கவினி. வெடுக்கென்று பதில் சொல்ல வேண்டிய வாய் இறுக மூடிக்கொண்டது.
“அக்காட கலியாணம் முடியும் மட்டுக்கும் என்ர வாய்க்குப் பெரிய பூட்டுப்போட்டிருக்கிறன். எவ்வளவு கெதியா ஏலுமோ கண்காணாத இடத்துக்குப் போயிருவன். பிறகு இங்க ஒருத்தருக்கும் பிரச்சினை இராது!” என்று,சென்ற கிழமை தகப்பனிடம் சீறலாகச் சொல்லியிருந்தாள்.
“தமக்கையில அந்தளவுக்கு அன்பு பொங்கி வழியிது! இதை நான் நம்போணும். செய்க்…சுயநலம் பிடிச்சவள். என்ர வயித்தில வந்து பிறந்தியே! எங்க வேணும் எண்டாலும் போவன். அந்த அலுவலக் கொஞ்சம் கெதியாச் செய், அதுக்குப் பிறகு சரி நான் நிம்மதியா இருக்கிறன்.” திருப்பிச் சீறியிருந்தார், மதிவதனி.
மீண்டும் மணி ஒலித்தது. விறுவிறுவென்று ஏணியிலிருந்து இறங்கியவள் விழிகள் அந்த வரவேற்பறையைச் சுற்றி வந்தது.
எல்லாம் அங்கிங்கு என்று கலைந்து கிடந்தன. ஒரே மூச்சில் அனைத்தையும் சுத்தம் செய்து சோடனையையும் முடிக்க வேண்டுமென்று இருந்தால்… யார் இப்ப, அதுவும் சொல்லாமல் கொள்ளாமல்?
கதவைத் திறந்தவள் நிச்சயம் மாப்பிள்ளையின் தகப்பனை எதிர்பார்க்கவேயில்லை.
“யோகன் மா…மா வாங்கோ… உள்ள வாங்கோ! வாங்கோ அன்ரி!” பரபரப்போடு வரவேற்றாள். அருகில் நின்ற முதிய பெண்மணியின் விழிகள் இவளைப் பார்த்துவிட்டு, தமக்கை மகனை நோக்கியது.
“சாரலின்ட தங்கச்சி சித்தி.” என்ற யோகன், “எப்பிடியம்மா இருக்கிறீங்கள்? சரியான பிசியா நிக்கிறீங்கள் போல!” என்றபடி உள்ளிட்டார்.
“நல்லா இருக்கிறன் மாமா. சோடனை செய்வம் எண்டு வெளிகிட்டன். வந்து இருங்கோ!” அன்பாக வரவேற்றாள். அதேகையோடு உட்பக்கமாகத் திரும்பி, “யோகன் மாமா ஆக்கள் வந்திருக்கினம் அம்மா.” என்றுகொண்டே, வாயிலோரமாக நிலத்தில் கிடந்த திரைச்சீலைகளை அள்ளியெடுத்தபடி திரும்பியவள் யாரிலோ மோதுப்பட்டுத் தடுமாறி நின்றாள்.
“பாத்து!” அவள் ஒரு பக்கத் தோளில் பிடித்து நிறுத்தியிருந்தான், சேந்தன்.
உச்சியில் உருண்டையாகத் தலைமயிர்க் குவியல்; அதைத் தாங்கி நிற்கிற பெருமையோடு ஒருபுறம் சிவப்புப் பேனை, இன்னொருபுறம் நீலப்பேனை; அவற்றின் பிடியை மீறி நெளி நெளியாகத் தொங்கி வழிந்த சுருள் முடிக்கற்றைகள்; முகம் முழுவதும் வியர்வை; முழங்கால் வரையிலான பழைய சட்டை, உள்ளே இருந்து சற்றே எட்டிப் பார்த்த டைட்ஸ்.
சில கணங்களில், அவன் விழிகள் அவளை அளவெடுத்தன. பளிச்சென்று ‘வெளிச்சம்’ நிகழ்ச்சிக்கு வரவேற்றவள் இவளா என்ன?
அந்த நேரடிப் பார்வையில் சற்றே நெளிந்தாள், அவள்.
“சொறி! சொறி… தவறுதலா… சொறி!” அவன் பார்வையைத் தாங்கி நின்றே சொன்னவள் அப்போதுதான் வாயிலுக்கு வெளியில் நின்றவர்களைக் கண்டாள்.
இவள் வாய் திறக்க முனைகையில், “உள்ள வாங்கோ அண்ணா, ஏன் வாசலில நிக்கிறீங்க?” என்றபடி வந்தார், மதிவதனி.
“கெதியா இதுகள அங்கால கொண்டு போவன். வாய் பாத்துக்கொண்டு நிக்கிற! எத்தின தரம் இரவைக்குச் செய்யலாம் எண்டானான், கேக்க மாட்டியே!” மறக்காது மகளிடம் சிடுசிடுத்தார்.
சற்று முதல், பூவாக மலர்ந்திருந்த அவள் வதனம் கன்றிச் சிறுத்திட்டு. மதிவதனி அதையெல்லாம் கவனிக்கவில்லை. அங்கு நின்றவனைப் பார்த்து, “வாங்கோ சேந்தன், அம்மா ஆக்கள் வரேல்லையோ?” என்றபடி வெளியில் பார்த்தவர் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன.
“நிவேதா! லண்டனில இருந்து எப்ப வந்தனீரப்பா? ஒரு வார்த்தை சொல்லேல்ல. அப்பவும் விமலாட்டக் கேட்டனான். மூச்சி விடேல்ல!” ஓடிச் சென்று சினேகிதியைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.
“என்னப்பா நீர் வர வர சின்னப்பெட்ட கணக்கில வந்து கொண்டிருக்கிறீர்?”
“ஐம்பத்தி ரெண்டுதானே? அதெல்லாம் ஒரு வயசா சொல்லும்!” கலகலப்போடு சொன்ன நிவேதா,“நேற்று இரவுதான் யாழ்ப்பாணம் வந்தனாங்க.” என்றபடி உள்ளிட்டார்.
“கலியாண வீட்டில எத்தின வேலைகள் இருக்கும். நாங்க காலம காட்டி வந்திட்டம்.” சங்கடத்தோடு சொன்னார், யோகன்.
“அதுக்கென்ன அண்ணா. எங்கட வீட்டுக்கு வர காலநேரம் பாத்துச் சொல்லிக்கொண்டா இருக்கோணும். ஆனா இவர்தான் இல்ல, வெளில போய்ட்டார்.” அன்பும் பாசமும் வழிய வழிய கதைத்தார், மதிவதனி.
“நாங்க வரப்போறம் எண்டு உங்கட அவர் சொன்னவர் தானே? கொஞ்ச முதல் தான் கோல் பண்ணிச் சொன்னனான்.” யோகன் சந்தேகமாகக் கேட்கையில், “வாங்கோ வாங்கோ!” என்றபடி நுழைந்தார், பூங்குன்றன்.
“இப்பதான் வந்தீங்களா? நீங்க சொன்ன கையோட நான் பிள்ளைட ஃபோனுக்கு எடுத்தனான். கவனிக்கேல்ல போல. மெசேஜ் போட்டனே பாக்கேல்லையாம்மா?” பூங்குன்றன் நகர்ந்து கொண்டிருந்த கவினியிடம் தான் கேட்டார்.
அவள் பதில் சொல்ல மதிவதனி முதல் இடையிட்டிருந்தார்.
“என்ர ஃபோனுக்கு எடுத்துச் சொல்லியிருக்கலாமே.” என்றவர், “அவள் முக்கியமானதுகளப் பாக்க மாட்டாள்.தேவையில்லாத கழிசடை விசயங்கள் எண்டால் அதுக்கயே கிடப்பாள்.” அடிக்குரலில் முணுமுணுத்தது எல்லோருக்குமே கேட்டது.
பூங்குன்றன் மனைவியை முறைத்தார். முகம் சிவக்க விருட்டென்று உள்ளே சென்றுவிட்டாள், கவினி.
இவர்கள் வீட்டுக் கதை வந்தவர்களுக்குப் புதிதானது அல்ல. நிவேதாவின் பிள்ளைகளான சேந்தன், இயலுக்கும் கூட. முகச்சுளிப்போடு தமக்குள் பார்த்துக்கொண்டார்கள்.
“சித்தி ஆட்கள் நேற்று விடியப்புறம் தான் லண்டனால வந்தவே! ஏர்போட்டில இருந்து நேர யாழ்ப்பாணம் வந்தாச்சு.” என்றபடி அமர்ந்துகொண்டார், யோகன்.
“உமக்கு சேர்ப்ரைஸ் தருவம் எண்டு சொல்லாமல் வந்தனாங்க. எங்க சாரல்? பொம்பளைய அம்மா பாக்க வேணும் எண்டு ஆசையா வந்தவா!” என்றபடி அமர்ந்துகொண்டார், நிவேதா.
“கவினி… அக்காவ வரச் சொல்லம்மா!” குரல் கொடுத்தார், பூங்குன்றன்.
“உன்ர மகனும் மகளும் ஃபோட்டோவில பாத்தத விடவும் வித்தியாசமா இருக்கினம்.” என்று சொல்லி, சேந்தன் இயலோடு இன்முகத்தோடு கதைத்தார், மதிவதனி.
கல்யாணப்பொம்பிளை, அந்த வீட்டின் மூத்தவள் சாரல் வர, அங்கு ஒரே கலகலப்பாக இருந்தது. அதை உள்வாங்கிக்கொண்டே பின் வாயிலால் வெளியேறினாள், கவினி.