பக்கவாட்டு வேலியை நோக்கி நடந்தவள், அங்கிருந்த கடப்பைத் தாண்டி அத்தை வீட்டிற்குள் உள்ளிட்டாள். அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, ‘உனக்கு உரித்தான இடம் இது’ என்று உணர வைக்கும் இல்லம் இது!
யார் யாருக்கு என்ன என்ன குடிக்க என்று கேட்டுக்கொண்டு வந்த மதிவதனி சின்ன மகளைத் தேடினார். அவளில்லை என்றதும் பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்தார். கவினியும் பரமேஸ்வரியும் நிற்பது தெரிந்தது. எதையோ கதைத்துப் பெரிதாகச் சிரிப்பதைப் பார்த்தவர் பார்வையில் பொறி பறந்தது.
“போய்ட்டாள். பத்து மாசம் முழுசா இருந்து என்னைப் படாத பாடுபடுத்திப் பிறந்தவள், பக்கத்து வீட்டுக்கு நேந்து விட்ட கணக்கில போய்ட்டாள். இவளத் திருத்தவே முடியாது. சனியன் எனக்கெண்டு வந்து வாச்சிருக்கு!” என்று முணுமுணுத்தபடி தேனீர், கோப்பி மற்றும் குளிர்பாணம் என்று தயாரிப்பில் இறங்கிவிட்டார்.
“தேப்பனும் அவரிட வீட்டுச் சனமும் பெரிய பொறுப்பானவள் எண்டு தலையில தூக்கி வச்சுக் கொண்டாட வேண்டியது. வீட்டுக்கு முக்கியமான மனுசர் வந்திருக்கினமே, இதுகளைச் செய்யோணும் எண்ட பொறுப்புக் கொஞ்சமும் இல்லாத எருமை! வந்த மனுசர் போகட்டும் உனக்கு இருக்கு.” மதிவதனியின் முணுமுணுப்பு நிற்கவில்லை. சின்னமகளைப் பெற்றதற்குப் பதில் நான்கு தென்னங்கன்றுகளை நட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்திருக்கலாம் எனறளவுக்கு அவருள் ஆத்திரமும் கோபமும்.
“கிழவி எந்த நேரமும் சொல்லுறது இப்ப நடக்குது.” கோபத்தோடு முணுமுணுத்தவரின் மனக்கண்ணில் பூங்குன்றனின் அன்னையின் அழகிய முகம். அதை முகச் சுளிப்போடு உணர்ந்தார், மதிவதனி.
‘ஒண்டுக்கும் வக்கில்லா வீட்டுப் பெட்டை, குடும்பமும் பெரிசா விறுத்தம் இல்ல. இது நமக்குச் சரிவராது’ என்று, ஒரேயடியாக மறுத்த பின்னும் பூங்குன்றன் அசைந்து கொடுக்கவில்லை. பிடிவாதமாக நின்று தன் விருப்புக்குக் கலியாணம் கட்டிக் கூட்டி வந்த மருமகள்தான் மதிவதனி.
‘வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்’ என்பார்களே! மதிவதனி விடயத்தில் அதுதான் நடந்தது. எப்போதுமே பிடிக்காத மருமகளாகிவிட்டார். ஆரம்பத்தில் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காதுதான் இருந்தார். ஆனால், அவர் வயிற்றில் இரண்டாவதாகப் பிறந்த கவினி எல்லாவற்றையும் மாற்றிவிட்டாள்.
பூப்பந்தாக இருந்த குழந்தையை ஒரே ஒரு நாள்தான் மகிழ்வோடு அணைத்துப் பால் கொடுத்திருந்தார். மறுநாள் காலை வைத்தியசாலைக்கு வந்திருந்தார், பூங்குன்றன் அன்னை.
முகத்தை எட்டுக்கட்டைக்கு நீட்டிக்கொண்டு நின்றவர், “திரும்பவும் பெட்டையா? இந்தக் குடும்பத்திட பேர் சொல்ல ஒரு பெடி பிறக்கப் போறதில்ல எண்டு எனக்குத் தெரியும். எல்லாம் என்ர தலைவிதி!” என்று, பெரும் விசனத்தோடு சிடுசிடுத்தார். வேண்டா வெறுப்போடு கடமைக்காகக் குழந்தையை எட்டிப் பார்த்திருந்தார். மறுநொடி, மனிசியின் முகத்தில் அப்படியொரு பிரகாசம்.
விழிகள் ஒளிர, ஓரெட்டில் வந்து குழந்தையைத் தூக்கி அணைத்துக் கொண்டவர், மகிழ்வோடு மகனை ஏறிட்டார்.
“அப்பிடியே அச்சு அசலா என்னைப் போலயே வடிவா இருக்கிறாளே என்ர பேத்தி!” என்றாரா, அக்கணத்திலிருந்து தொடங்கியது எல்லாம்.
அவள் என் மகள், இந்த மனிசி போலவா இருக்கிறாள்? முதல், பச்சைக் குழந்தை இன்னார் போல் என்று எல்லாம் சொல்ல இயலுமா?
முதலில் இப்படியெல்லாம்தான் எண்ணினார், மதிவதனி. ஆனால், அதன்பின்னர் மகளை உற்று உற்றுப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.
மூக்கு, கண்கள், புருவங்கள், உதடுகள், நாசி, நிறம், தலைமயிர் என்று, ஒன்று ஒன்றாகப் பார்க்க பார்க்க, அவர் மனத்தில், பெற்ற மகள் தூரமாகப் போவதை எள்ளளவும் தடுக்க முடியவில்லை. அந்தளவுக்கு, கணவரின் தாயை வெறுத்தார், அவர்.
கனகாம்பிகையும் தனக்கு மட்டுமே அந்தக் குழந்தை உரித்தானவள் என்பது போல் தான் நடந்துகொண்டார். மருமகள் மனத்தில் உருவான மாற்றத்துக்குத் தூபம் போட்டார், பெரியவர்.
இருந்தபோதும் ஆரம்ப நாட்களில், தவிப்பும் கோபமுமாக கணவரிடம் முறையிட்டார், மதிவதனி.
“அன்பில தானே வதனி, முதல் அம்மாவுக்கு இல்லாத உரிமையா சொல்லுங்க? அதுவும் அக்காவுக்கு ரெண்டும் ஆம்பிளைப் பிள்ளைகளா? பேத்தி எண்டு விருப்பம்.” பூங்குன்றன் இப்படித்தான் மனைவியைச் சமாதானம் செய்வித்தார்.
“இப்ப நீங்க என்ன கதை கதைக்கிறீங்க? சாரல் அவரிட பேத்தி இல்லையா? எண்டைக்காவது இப்பிடியெல்லாம் கொஞ்சி இருக்கிறாரா? ஏனெண்டா அவள் என்ர சாயல். கைக்குழந்தை அழுதுகொண்டு கிடந்தாலே தூக்கார். அழுகிறது நல்லம், நல்லா அழட்டும் எண்டு சொல்லுறவர். கவினிய கீழ விடாமல் மடிக்கையே வச்சிருக்கிறா! ”
சிடுசிடுத்த மனைவிக்குப் பதில் சொல்லப் போகவில்லை, அவர். கல்யாண விடயத்தில் தாயை மிகவுமே எதிர்த்துவிட்ட குற்றக் குறுகுறுப்போடு இருந்தவர் அதன் பின்னர் அவரையும் வருத்த முனையவில்லை.
குழந்தை வளர வளர அப்படியே அச்சுருச்சி பூங்குன்றன் அன்னையைப் போலவேதான் இருந்தாள். மதிவதனி மனத்தில் கனகாம்பிகை சார்பில் வளர்ந்து கொண்டே சென்ற கோபமும் எரிச்சலும் வெறுப்பும் குழந்தையில் அடிக்கடிப் பாய்ந்தது. திடுமென்று சுளீர் சுளீரென்று அடி கூட கொடுத்துவிடுவார். குழந்தை அழுதபடி பக்கத்து வீட்டுக்கு ஓடினால் இரண்டு நாட்கள் வீட்டுப் பக்கமே வர மாட்டாள்.
பூங்குன்றன் மட்டுமல்லாது மதிவதனியின் பெற்றோர், தமக்கைமார், தங்கைகள் என்று எல்லோருமே அவரைக் கண்டித்தார்கள். நீ பெற்ற பிள்ளை அவள். இப்படி நடத்தாதே. உனக்கு உன் மாமியோடு பிரச்சனை என்றால் அவரோடு கதைத்துத் தீர்க்கப்பார் என்று கண்டித்திருக்கிறார்கள்.
அப்படியான நேரங்களில்,“முதல் பெட்டையா எண்டு வெறுப்போடு பார்த்தனீங்க எல்லே? பிறகு என்ன? என்ர மகள்கள் ரெண்டு பேருக்கும் இடையில இப்பிடிப் பிறிம்பு காட்டி அவேய பிரிக்கவா பாக்கிறீங்க!” என்று, கனகாம்பிகையோடு வாதாடி சண்டை கூடப் போட்டிருக்கிறார், மதிவதனி. இது எல்லாம் கடந்து, கவினி வளர வளர அவருக்கும் சின்ன மகள் முகத்தைப் பார்க்க கோபம் கோபமாக வர, விட்டு விட்டார்.
“அப்படியே மாமியைப் போல இவள் பிறந்திருக்க வேணாம்.” கணவரிடம் தன்னையும் மீறியே வாய்விட்டுப் பெரிதாகச் சண்டை கூட வந்திருக்கு.
அந்த வெறுப்பை ஊதி ஊதி பெரிதாக எரிய வைத்தார், பூங்குன்றன் தாய். தளர்ந்து சாகப் போகும் தருணங்களில் கூட, “நான் இல்லாவிட்டால் என்ன, எனக்குப் பதில் என்ர பேத்தி உன்ன இருத்தி எழுப்புவாள்!” சாபம் போல் இதையே சொல்லிக்கொண்டிருந்தார்.
அதுமட்டுமா? தனக்கு என்று இருந்த நகை, வீடு தோட்டம் துறவு எல்லாவற்றுக்கும் ‘என்ர பேத்தி கவினியே உரித்து.’ என்று எழுதி வைத்துவிட்டார். இதை வெளியில் சொல்லி சொல்லிக் காட்டினார். பிரச்சினைகள் கூட உருவானது. முடிவில், மதிவதனி, பெற்ற மகளை முற்றாகவே வெறுக்க வைத்திருந்தார்.
‘அவர் சொல்லுறது என்ன? ‘நான் பெத்ததும் அப்பிடித்தானே எனக்கு எதிரா எல்லாம் செய்ய நிக்கிது.’ எரிச்சலோடுதான் பானங்களைப் பரிமாறினார், மதிவதனி.
அதன் பின்னர், நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த நண்பியுடனான அளவளாவல் அவர் மனக்குமுறலைச் சற்றேனும் மறையச் செய்திருந்தது.