அத்தியாயம் 3
அன்று சனிக்கிழமை. பொழுது போகாமல் மஃபீன்ஸ் செய்துகொண்டிருந்தாள் கமலி. கேக்குக்கான கலவையை அடித்து எடுத்து, சொக்லெட்ஸ் துருவல்களையும் சேர்த்து மஃபின்ஸ் பேப்பர் கப்புகளுக்குள் ஒவ்வொரு தேக்கரண்டியாக இட்டு நிரப்பினாள்.
அரவிந்தன் அவளுக்காக வாங்கிக்கொடுத்த பேக் செய்யும் ஓவனுக்குள் (oven) வைத்து, ஓவனை(oven) 180 பாகையில் திருப்பி விட்டுவிட்டாள். பத்துத் தொடக்கம் பன்னிரண்டு நிமிடங்களில் பொங்கி நன்றாக வெந்துவிடும் என்பதில் அங்கேயே நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு கிண்டில் ஈ ரீடரில் ஒரு நாவலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.
கிராம சேவையாளராக இருக்கும் அப்பா வீட்டில் தங்குவதே இல்லை. அம்மா சுகுணா வீட்டைத் துப்பரவு செய்கிறேன், சமைக்கிறேன், தோட்டத்தைக் கவனிக்கிறேன் என்று ஓடிக்கொண்டே இருப்பார். அவர்களுடைய காணியும் பின்பக்கமாய் பெரிது என்பதில் முற்றம் கூட்ட, தென்னைகளைப் பராமரிக்க, கஞ்சல்களை ஒதுக்க, விழுகிற தேங்காய்களை விற்க என்று அவரைப் பிடிக்கவே முடியாது. மிச்சம் சொச்சமாக இருக்கும் நேரத்தை கூட நீயா நானா, சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி எல்லாம் பிடித்துக்கொள்ளும்.
கிழமை நாட்களில் அரவிந்தனும் வேலை வேலை என்று ஓடிவிடுவான். அதில், பார்மசியில் வேலை புரிகிற அவள் சனி ஞாயிறுகளை வெகு ஆவலாக எதிர்பார்ப்பாள். அரவிந்தனோடு கேரம் போட் விளையாடுவது, எதையாவது சமைப்பது, பிள்ளையார் பந்து விளையாடுவது, அயலட்டையில் இருக்கிற அவளின் நண்டும் சிண்டுமான நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு உடன் கிடைக்கிற கடல் மீன்களை பார்பிகியூ போடுவது என்று அந்த இரண்டு நாட்களுமே இருவருக்கும் வெகு சுவையாகக் கழியும்.
இப்போதெல்லாம் அது குறைந்து அரவிந்தன் வீட்டில் நிற்கும் பொழுதுகள் சுருங்கிக்கொண்டே போயிற்று. காதலியைக் கட்டிக்கொண்டு அழுகிற காதலனைப்போல அந்தப் புது நண்பனோடே தொங்கிக்கொண்டு அலைகிறான். அந்த எரிச்சலில்தான் தனக்குப் பிடித்த பேக்கிங் வேலையைக் கையில் எடுத்திருந்தாள்.
சொல்லி வைத்ததுபோல் மஃபின்ஸ் வெளியே வருகையில் அரவிந்தன் வீட்டுக்குள் நுழைந்தான்.
“வாசமே மூக்கத் துளைக்குது. இண்டைக்கு என்ன செய்தனி?” என்றுகொண்டு நேராகவே சமையலறைக்கு வந்தான் அவன்.
இருந்த சினத்தில், “தொட்டியோ கைய வெட்டுவன் சொல்லிப்போட்டன்! கொஞ்ச நேரமாவது வீட்டுல நிக்கிறியா நீ? எப்ப பாத்தாலும் ஊரை சுத்துறது. அந்த எளியவன்ர வீட்டில விழுந்து கிடக்கிறது. திண்ணுறதுக்கு மட்டும் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு வா!” என்றவளின் பேச்சை சட்டையே செய்யவில்லை அவன்.
“கோபக்காரிதான் எண்டாலும் என்ர தங்கச்சி பாசக்காரி. அவள் அண்ணனுக்கு தராம சாப்பிட மாட்டாள்.” என்றபடி, அவளை ஏமாற்றிவிட்டு படக்கென்று ஒன்றை எடுத்து வாயில் போட்டான்.
“உன்ன… சொல்லச் சொல்ல கேக்காம எடுக்கிறியா?” என்றவள் போட்ட அடிகளை அவன் கவனத்திலேயே கொள்ளவில்லை. சூட்டில் ஆ ஊ என்று ஊதினாலும், “நல்லாருக்கடி! நாலு அஞ்சு எடுத்து ஒரு பெட்டில போட்டுத் தா. கிருபனுக்குக் குடுத்திட்டு வாறன்.” என்றான்.
இருந்த விசருக்கு மஃபின்ஸ் வெளியில் எடுக்கும் கரண்டியினால் படார் என்று அவன் முதுகிலே ஒன்று போட்டாள் கமலி. “நான் இங்க கஷ்டப்பட்டுச் செய்ய நீ சாப்பிட்டதும் இல்லாம தூக்கிக்கொண்டுபோய் அவனுக்கும் குடுப்பியோ? அதென்ன எப்ப பாத்தாலும் இங்க சமைக்கிறதில பாதிய அங்க கொண்டுபோறது? நீ ஏதும் அவனை லவ்வுறியா? பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில பக்கத்தில வச்சா பத்துமாம் எண்டு சொன்னது எல்லாம் அந்தக் காலம். இப்ப நெருப்பையும் நெருப்பையும் வச்சாலுமே பத்துதாம். அப்பிடி ஏதும் உங்களுக்கப் பத்திட்டுதா?”
நொடி நேரம் அவளின் கேள்வி புரியாமல் விழித்துவிட்டு புரிந்ததும் அதிர்ந்து அடக்கமாட்டாமல் சிரித்தான். “ஏய் லூசு! என்ன கதையெல்லாம் கதைக்கிறாய்?” என்று அவளின் தலையில் குட்டினான். “அவன் பாவமடி. அம்மா அப்பா இல்ல. சமைக்கவும் தெரியாது. ஒவ்வொரு நாளும் கடையிலதான் சாப்பிடுவான். நெடுக(எப்பவும்) கடைச் சாப்பாடு எண்டு அதுவும் பிடிக்கிறேல்ல அவனுக்கு. சில நேரம் டீயை மட்டும் போட்டு குடிச்சிட்டு படுத்திடுவானாம்.” என்று, நண்பனின் கதையைச் சொன்னான்.
கமலிக்கு மனம் பாரமாகிப் போயிற்று. “ஓ..! அதுதான் தொரை இடை மெலிஞ்சு சிம்ரன் மாதிரி இருக்கிறாரா?” என்று கேலி செய்தாலும் அவன் மீது ஒரு பரிதாபம் உண்டாயிற்று.
அதில், அரவிந்தனே ஒரு பிளாஸ்டிக் பொக்ஸ் எடுத்து அதில் தாராளமாக மஃபின்ஸ் எடுத்து வைத்ததைப் பார்த்துக்கொண்டு இருந்தாலும் தடுக்கவில்லை, அவள்.
அரவிந்தன் போனபிறகும் அவளுக்கு மனது சரியாகவேயில்லை. என்ன கொடுமை இது? கடவுள் ஒருவனை இப்படியா வதைக்க வேண்டும்? உடம்புக்கு ஏலாமல் போனால் என்ன செய்வான்? மனம் சரியில்லை என்றால்? மனம் விட்டு யாரோடு கதைப்பான்? முதல், தனியாக எப்படி ஒரு வீட்டில் வாழ்வது? நெஞ்சுக்குள் என்னவோ பிசைந்தது.
“கமலி, அம்மாக்கு ஒரு தேத்தண்ணியும் அந்தக் கேக்கில ரெண்டு துண்டும் கொண்டு வாம்மா!” என்ற அன்னையின் குரலில் தன் எண்ணங்களைக் களைந்து எழுந்துபோனாள்.
அதன்பின் அவளாக என்ன செய்தாலும் அதில் கொஞ்சத்தை அவனுக்குக் கொடுத்துவிட்டாள். “இனி அங்க போறதா இருந்தா முதலே சொல்லு அண்ணா. ஏதாவது செய்து தாறன்.” என்று அரவிந்தனிடம் சொல்லியும் வைத்தாள்.
அன்றும் ஒரு சனிக்கிழமை. அரவிந்தன் வேக வேகமாகத் தயாராவதைக் கண்டவளுக்கு அவன் வந்து வெளியே நிற்கிறான் என்று புரிந்துபோயிற்று. அன்றைக்குக் கொடுத்த பேச்சுக்குப் பிறகு அவன் கோர்னை அழுத்துவது இல்லை. வந்ததும் மெசேஜ் போடுவான் போலும். இல்லாமல் அதுவரை சோம்பிக் கிடக்கிற அரவிந்தன் காலில் சுடுதண்ணீர் கொட்டியவன் போன்று வேகவேகமாகப் புறப்படமாட்டான்.
வாசலுக்குச் சென்று எட்டிப் பார்த்தாள். எப்போதும்போல பைக்கில் அமர்ந்து இருந்தபடி போனில் கவனமாக இருந்தான் அவன்.
“சிம்ரன்!” என்றாள் சத்தமாக.
வேகமாகத் திரும்பிப் பார்த்தான் கிருபன்.
“அதென்ன எப்ப வந்தாலும் வாசல்லையே நிக்கிறது? எங்கட வீட்டுக்கு எல்லாம் வரமாட்டீங்களா? அவ்வளவு திமிர்?” என்றாள் அதட்டலாக.
கிருபன் அரண்டு போனான். சிவனே என்று நின்றவனைச் சண்டைக்கு இழுக்கிறாளே. அதைவிட அது என்ன சிம்ரன்? முகம் சிவக்கும் போலிருந்தது அவனுக்கு. “இல்ல.. அப்பிடி இல்ல.” என்றான் என்ன சொல்வது என்று தெரியாமல்.
“அப்ப வரவேண்டியது தானே!” என்றாள் அவள் விடாமல்.
உண்மையிலேயே கிருபனுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. மாட்டேன் என்று எப்படிச் சொல்வது? சொன்னால் வந்து அடித்துவிடுவாள் போல் முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் அவள். உள்ளே போகவும் ஒருமாதிரி இருந்தது.
அவள் அவனை நன்றாகவே முறைத்தாள். “இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாம் நீங்க வரத்தேவை இல்ல. நடவுங்க. இனிமேல் எங்கட வீட்டுக்கு முன்னால உங்கள பாத்தன், சானிய கரைச்சு முகத்திலேயே அடிப்பன். அண்ணா எங்கயும் வரமாட்டன்!” அவளின் அதட்டலில் அவனுக்கு முகம் கருத்துப் போயிற்று.
என்ன சொல்வது என்று தெரியாமல் வேகமாக இறங்கி ஸ்டான்ட் போடும்போதே, “ஏய் லூசு. அவனை என்னத்துக்கு அதட்டுறாய்.” என்றபடி அங்கு ஓடிவந்தான் அரவிந்தன்.
“உன்ர நண்பர் என்ன பெரிய கொம்பரே. அவர் வந்து வாசல்ல நிப்பாராம். நீ போவியாம். என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறார் எங்களைப் பற்றி. உள்ளுக்கு வரச்சொல்லு. இல்லையோ நீ போகக்கூடாது. நான் சொன்னதை மீறி போனியோ மண்டைய உடைப்பன்!” விரல் நீட்டித் தமையனை எச்சரித்தாள் அவள்.
இதற்குள் வாசலுக்கு விறுவிறு என்று வந்து சேர்ந்திருந்தான் கிருபன். அவனை ஒரு முறைப்பு முறைத்துவிட்டுப் போனாள் கமலி. இப்போது உள்ளே போவதா இல்லையா? கிருபன் பரிதாபமாகப் பார்க்க, அரவிந்தன் சிரித்தான்.
“அவள் அப்பிடித்தான்டா. நீ உள்ளுக்கு வந்து இரு. ஒரு நிமிசத்தில ஓடி வாறன்.” என்று அழைத்தான்.
வந்து அமர்ந்தவன் பார்ப்பதற்கு ஏதுவாகத் தொலைக்காட்சியை உயிர்ப்பித்துவிட்டு உள்ளே ஓடினான் அரவிந்தன்.
அவளைக் காணவில்லை. என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு எதற்கு விடாப்பிடியாக நின்று கூப்பிட்டாள்? பார்வை தொலைக்காட்சியில் பெயருக்கு இருந்தாலும் உள்ளே யோசனை ஓடிக்கொண்டு இருந்தது. வீட்டில் பெரியவர்கள் யாரும் இருப்பது போலும் தெரியவில்லை.
சற்று நேரத்தில் பலகாரமும் தேத்தண்ணியும் கொண்டுவந்து மேசையில் டொங் வைத்தாள் கமலி. உண்மையாகவே அவனுக்குப் பசி வயிற்றைக் கிள்ளிக்கொண்டுதான் இருந்தது. நேற்று இரவு அவன் சமைத்தது அவனுக்கே கன்றாவியாக இருக்க, வெறுப்புடன் பிரிட்ஜில் தூக்கி வைத்துவிட்டு வந்திருந்தான். இப்போதோ தட்டிலிருந்த முறுக்கு அழைத்தது. அவளின் சுவை அறிந்த நாக்கோ உமிழ் நீரை எப்போதோ சுரக்க ஆரம்பித்து இருந்தது.
வந்த இடத்தில் அதுவும் அவள் முன்னே எடுத்துச் சாப்பிட கூச்சமாக இருக்க, நன்றி என்கிற முணுமுணுப்புடன் தேநீரை மட்டும் எடுத்துக்கொண்டான்.
“முறுக்கையும் சாப்பிடுங்கோ!” அவள் சொன்னபிறகு எடுக்காமல் இருப்பது அழகல்ல என்று ஒன்றை எடுத்துக்கொண்டான்.
அதன்பிறகுதான் அங்கிருந்து நடந்தாள் அவள்.
“டேய் அண்ணா!” திடீரென்று கேட்ட அவளின் அதட்டலில் வாயருகில் கொண்டுபோன தேநீருடன் அதிர்ந்து நிமிர்ந்தான் கிருபன்.
அதுவும் அவளின் பார்வையில் பட்டுவிட்டது. நடை நிற்க, “இங்க என்ன பார்வை?” என்று கேட்டாள்.
இவளுக்கு சாதாரணமாக கதைக்கவே வராதா என்று உள்ளுக்கு ஓடினாலும், ஒன்றுமில்லை என்று வேகமாகத் தலையை ஆட்டினான் கிருபன்.
‘அது!’ என்பதுபோல் மேலும் கீழுமாக அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனாள் அவள்.
‘நல்ல காலம் தேத்தண்ணி ஊத்தேல்ல. இல்ல எல்லாம் அவிஞ்சிருக்கும்.’ மிகுந்த கவனத்துடன் பருகினான். எப்போதுமே அவனை ஒருவிதமான பதட்டத்திலேயே வைத்திருந்தாள் கமலி. இந்த அரவிந்தன் விரைவாக வந்துவிட்டால் எழுந்து ஓடிவிடலாம் போலிருந்தது அவனுக்கு.
“உனக்கு எவ்வளவு சொன்னாலும் சொன்ன நேரத்துக்கு ரெடியாக மாட்டாய் என்ன? அப்பிடி என்னத்த போட்டு உருட்டுறாய்?” என்று தமையனை அதட்டுவதும் கேட்க, அவன் உதட்டோரம் சிரிப்பில் துடித்தது.
“என்னடா கலர் இது? புழு டெனிமுக்கு ப்ளூ ஷேர்ட் நல்லாவா இருக்கு? இதுக்கு நீ பேசாம பள்ளிக்கூடத்துக்குப் போட்ட யூனிபோர்ம போடலாம். அத கழட்டிப்போட்டு இந்தச் சாம்பலை போடு!” என்று தொடர்ந்து கேட்டது அவள் குரல்.
“அங்க பார், உன்ர பிரென்ட்ட எவ்வளவு மச்சிங்கா போட்டு வந்திருக்கிறார் எண்டு. நீயும் இருக்கிறியே ரசனை எண்டுறதே மருந்துக்கும் இல்லாம.” அவள் என்னவோ ரகசியமாகத்தான் தமையனுக்குச் சொன்னாள். என்ன, அவளின் அந்த ரகசியம் இவனுக்குத் தெளிவாகக் கேட்கும் அளவில் இருந்தது.
அதைக்கேட்டு அவன் உதட்டினில் ரகசியச் சிரிப்பு மலர்ந்துபோயிற்று. உண்மையிலேயே இந்த மேட்சிங் பார்க்கும் விசயத்தில் அரவிந்தனை விடவும் அவன் மோசம். அவள் என்றோ ஒருநாள் இப்படி அரவிந்தனுக்குச் சொன்னதை அப்படியே நினைவில் வைத்து வாங்கிக்கொண்ட செட் தான் இன்று அவன் அணிந்திருப்பது. இன்றும், அரவிந்தன் வெளியே வந்தபிறகு அதே நிறக்கலவையில் ஒரு செட் வாங்கத்தான் போகிறான். ஆனால், கொஞ்ச நாட்கள் கழித்துப் போடுவான். அப்போது, அவனைக் கண்டதும் அவள் விழிகளில் வந்துபோகும் மெச்சுதலைக் காண அவனுக்கு மிகவுமே பிடிக்கும்.
படிக்கிற காலத்தில் மாமா என்ன வாங்கித் தருகிறாரோ அதுதான் அவனுக்கான ஆடைகள். அடுத்தச் செட் புது ஆடை எப்போது வரும் என்று தெரியாது என்பதில் தானே கவனமாகத் துவைத்து, காயவைத்து, அயர்ன் செய்து மிகவும் பக்குவமாகப் பார்த்துக்கொள்வான். வேலைக்குப் போகத் துவங்கிய பிறகு தன் சம்பளப் பணத்திலேயே வேலைக்கு ஏற்றவாறு அவனே வாங்க ஆரம்பித்தான். முதல் சம்பளம், அதில் அம்மா அப்பாவின் பெயரில் முதன் முதலாக அவன் செய்த அர்ச்சனை, மாமா குடும்பத்துக்கு எடுத்துக்கொடுத்த ஆடைகள், அப்படியே அவனுக்கும் இரண்டு செட் வாங்கிக் கொண்டது எல்லாம் பசுமையாக நினைவில் இருந்தது.
அப்படி வேலைக்குப் பொருத்தமாக என்று வாங்கியபோதும் இந்த மேட்சிங் ரகசியம் பிடிபடவே இல்லை. அரவிந்தனை ஏற்றிச்செல்ல வந்த ஒருநாள் இப்படி அவள் கண்டித்ததை எதேற்சையாகக் கேட்டுவிட்டு அரவிந்தனைக் கவனிக்க ஆரம்பித்தான். உண்மையிலேயே அவன் அணிவது எல்லாம் வெகு நேர்த்தியாய் இருந்தது. அதன் பிறகுதான் வேலைக்கு என்று மாத்திரம் வாங்காமல் இந்த ஜீன்சுக்கு இந்த ஷேர்ட் பொருந்துமா, டீ ஷேர்ட் பொருந்துமா என்று பார்த்து வாங்க ஆரம்பித்தான். கூடவே, இவள் கொசுறு கொசுறாக விடும் தகவல்களைக் கப்பென்று பிடித்துக்கொண்டு ஆடைகளைப் பொருத்தமாகத் தேர்வு செய்வதில் சற்றே தேர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கிறான்.
மற்ற ஆண்கள் எப்படி அணிந்திருக்கிறார்கள் என்று கவனித்து, நன்றாக இருப்பதை மனதில் குறித்துக்கொள்வான். அதில், தனக்குப் பொருந்துகிறவற்றை வாங்கி அணிந்து, அவனே அவனை அழகுபார்க்க ஆரம்பித்ததும் அவளால் தான். அவனை அவனே ரசிப்பதும் அவளால் தான்.
நன்றாக இருக்கிறோம் என்று தோன்றுகிற நாட்களில் ஒரு உற்சாகம் பொங்கி வழியும். அந்த நாளே நல்ல நாளாக மாறிப்போகும் வித்தையை அவனுக்குக் கற்பித்ததும் அவள்தான்.
இதெல்லாம் அவளுக்குத் தெரியாதே. தெரிந்தால் என்னடா வேவு பார்க்கிறாயா என்று கேட்டு மண்டையில் குட்டினாலும் குட்டுவாளாக இருக்கும்.
அரவிந்தன் வெளியே வந்தபோது அவள் வைத்துவிட்டுப் போன முறுக்கில் ஒன்றே ஒன்று மாத்திரமே குறைந்திருப்பதைப் பார்த்து அவனை முறைத்தாள்.
‘இப்ப என்ன?’ நண்பனையும் அவளையும் மாறிமாறிப் பார்த்தான் கிருபன்.
“முறுக்க என்ன வடிவு பாக்கவோ கொண்டுவந்து வச்சனான். அப்பிடியே இருக்கு. இல்ல எங்கட வீட்டு சாப்பாடு உங்கட வாயில வைக்கிற அளவுக்கு இல்லையோ?”
பதறிப்போனான் அவன். “இல்லையில்லை. அப்பிடி இல்ல. எனக்குக் காணும், பசியில்லை. அதுதான்..” என்றான் அவசரமாக.
“லூசு கமலி, சும்மா சும்மா அவனை வெருட்டாத. பசிச்சா சாப்பிடுவான் தானே. இவள் ஒரு ஆள் எண்டு நீயும் ஏன்டா!” என்ற அரவிந்தனின் தலையில் தண்ணீர் போத்தல் ஒன்று நங் என்று வந்து மோதியது.
“அம்மா!” தலையைப் பிடித்துக்கொண்டு அலறினான், அவன்.
தண்ணீர் வேறு தரையில் சிந்தித் சிதறியது. “நான் லூசா உனக்கு? ஒழுங்கா தரையை துடைச்சு மாப் போட்டுட்டு போறாய். இல்லையோ தெரியும்!” என்றுவிட்டு போனாள் அவள்.
“பாத்தியாடா பெருச்…” என்றவனின் வாயை ஓடிவந்து பொத்தினான் கிருபன்.
“என்னடா?” என்றவனின் காதில் குனிந்து, “சொல்லாத! பிறகு இதுக்கும் என்ன வரும் எண்டு தெரியாது.” என்று ரகசியமாகச் சொல்லிவிட்டு நிமிர்ந்தவன், தன் பின்னால் நின்றவளைக் கண்டு திகைத்துப்போனான்.
அவளோ அவர்கள் இருவரையும் மிகக் கேவலமாகப் பார்த்தாள். அப்போதுதான் அவனும் தங்களை பார்த்தான். அரவிந்தனின் வாயை பொத்திக்கொண்டு காதோரமாக் கதை பேசியது ஒரு மார்க்கமாக அவனுக்கே தெரிய, வேகமாக விலகி நின்றான்.
“அடச்செய்! கருமம் பிடிச்சவங்களே. ரெண்டுபேருமே சேர்ந்து பிள்ளையை கிள்ளைய பெத்துடாதீங்கடா.” என்றுவிட்டு போனாள் அவள்.
கிருபனின் முகம் சிவந்தே போயிற்று.
கருத்திட