KK – 3 (1)

மதிவதனி, விமலா மற்றும் நிவேதா மூவரும் பாடசாலைக் காலத்துச் சினேகிதிகள். பள்ளி நாட்களுக்குப் பிறகு, மதிவதனியின் தொடர்பு விடுபட்டுப் போயிருந்தது. திருமணத்தின் பின், கொழும்பில் வசிக்க ஆரம்பித்திருந்தார், விமலா. நிவேதாவின் ஒன்றுவிட்ட தமையன் யோகனை அவர்  திருமணம் செய்ததில் அவர்கள்  இருவரும் நெருங்கிய தோழிகளாகியிருந்தார்கள்.

இப்படியிருக்க, அவர்கள் பாடசாலை மாணவ மாணவிகளின் ஐம்பதாவது வயது ஒன்றுகூடல் யாழ்ப்பாணத்தில் வெகு சிறப்பாகக்  கொண்டாடப்பட்டிருந்தது. அதிலிருந்து, மதிவதனியுடனான நட்பு புதுப்பிக்கப்பட்டிருந்தது. அதுவே, மதிவதனியின் மூத்த மகள் சாரலுக்கும் விமலாவின்  மூத்த மகன் ஆதவனுக்குமான திருமணத்திற்கு வித்திட்டிருந்தது.

“சரி பின்ன, நாங்க வெளிக்கிடப் போறம். உங்களுக்கும் வீட்டில நிறைய வேலைகள் இருக்கும்.” என்றபடி, யோகன் புறப்படத் தயாரானார்.

“இது நல்ல கதையா இருக்கே, மத்தியானம் சாப்பிட்டுப்போட்டு ஆறுதலாப் போகலாம் அண்ணன். என்னப்பா சொல்லுங்கோவன்.” கணவனைப் பார்த்தார், மதிவதனி.

“அதுதான் யோகன், நிண்டு போட்டு ஆறுதலாப் போகலாம். விமலாவையும் தம்பி ஆட்களையும் வரச் சொல்லி விடுங்கோ!” என்றார், பூங்குன்றன்.

“உமக்கு ஏன் வீண் சிரமம், அதும் ஐஞ்சு நாள்களில கலியாணத்த வச்சுக்கொண்டு. கலியாணம் முடியவிட்டு வந்து சாப்பிடுறம் மதி.” என்றார், நிவேதா.

மதிவதனியும் பூங்குன்றனும் விடவில்லை. 

“இண்டு செவ்வாய்கிழமை,  சைவம்தான். நானே விமலாவையும் தம்பி ஆட்களையும் வரச் சொல்லி விடுறன்.” என்ற மதிவதனி, “நீங்க ஒருக்கா கடைக்கு ஓடிட்டு வாங்கோப்பா! சாரல், உன்ர தங்கச்சிய ஒருக்கா வரச்  சொல்லு!” பரபரப்போடு நகர்ந்தார்.

“சரி பின்ன. நமக்குள்ள தானே, பெரிசா ஒண்டும் எடுத்துப்பிடிக்கத் தேவையில்லை மதி. நானும் உதவி செய்யிறன்.” என்றபடி, சினேகிதியைத் தொடர்ந்தார், நிவேதா.

கவினிக்கு அழைத்தாள், சாரல். இப்படி, இங்குதான் சாப்பாடு என்று சொல்லி, “அம்மா வரட்டாம்.”  என்றுமிருந்தாள். அவள் ஏதோ சொல்வதைப்  பார்த்தபடி இருந்தார்கள், சேந்தனும் இயலும்.

அழைப்பைத் துண்டித்துவிட்டு, “ரெண்டு நிமிசம், இருங்கோ இந்தா வாறன்.”  என்று எழுந்து சென்ற சாரல், “அவள் அங்க அத்தையோட சேர்ந்து சமைக்கிறாளாம் அம்மா. உங்களச் சோறும்  கரட் சம்பலும் பருப்புப் பால்கறியும் செய்திரட்டாம். பப்படம், மிளகாய், வடகம் பொரிக்கட்டாம்.” என்று சொன்னது வரவேற்பறையில்  இருந்தவர்களுக்கும் கேட்டது.

“நான் சொல்லுவன், நான் என்ன சொன்னாலும் அதுக்கு மாறா, தான் ஒண்டு சொல்லுவாள். அதிகாரமா! இப்பச் சொல்லும் நிவேதா,  எனக்குக்  கோவம் வாறது சரியோ இல்லையோ! அந்த மனிசி போய்ச் சேர்ந்து நாலு வருசமாச்சு. இன்னும் நான் பெத்தது வடிவில எனக்கு நடப்புக் காட்டிக்கொண்டு திரியுது!” 

அடிக்குரலில் பொரிந்து தள்ளினார்,மதிவதனி. மனத்திலோ, அப்பாடா என்றிருந்தது. திடுதிப்பென்று எப்படிச் சமையலை ஒப்பேத்துவேன் என்றிருந்த கவலை மாயமாகிவிட்டிருந்தது.

“அம்மோய் என்ன நீங்க?” தாயைக் கடிந்துகொள்ளும் பார்வை பார்த்த சாரலுக்கு, அதற்கு மேல் அதில் நின்று எப்படிக் கதைப்பது என்றிருந்தது. இருந்தாலும் கவினி இலேசுப்பட்டவள் இல்லையே! தாயைக் கோபப்படுத்துவதற்கே ஏறுக்கு மாறாக நடப்பவள். சின்ன வயதிலிருந்தே இவளும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். உணவு, உடை, படிப்பு என்று எதில் பெற்ற தாய் சொன்னதைக் கேட்டிருக்கிறாள்.

மீடியாவா என்று அதிர்ந்து தடுத்ததைக் கேட்டாளா? சரி, செய்தி வாசிக்கிறதோடு நில்லு என்ற பிறகும் ‘வெளிச்சம்’ நிகழ்ச்சி என்று ஆம்பளைகள் போல் ஊர் ஊராகத் திரிகிறாள். தாய் மட்டுமா? தகப்பனும் அதையெல்லாம்  விரும்பவில்லை. மதிவதனிக்குப் பிடிக்கவில்லை என்றதும் பூங்குன்றனின் தாய் கனகாம்பிக்கைக்குப் பிடித்திருந்தது. 

“அண்டை அயலட்ட சொந்த பந்தம் நினைக்கிறதுக்கும் கதைக்கிறதுக்கும் ஏற்ற மாதிரி எல்லாம் வாழேலாது. செய்யிறது நேர் சீரான வேலை எண்டு  எங்கட மனம் நம்போணும், அதன் படி நடக்கோணும்,  அவ்வளவும் தான். நீ பிடிச்சதச் செய் குஞ்சு, இந்த அப்பம்மா எப்பவும் உன்ர பக்கம் தான்!” என்று, அவளுக்கு ஆதரவாகக் கதைத்து அனுப்பி வைத்திருந்தார்.

அவளும் அதோடு நின்றாளா? அவளது யூ டியூப் சேனல் இவ்வளவு வேகமாக வளரக் காரணமே அவள் தனியாகவும் வாணனோடும் சேர்ந்து பாடல்களைப் பாடிப் போடும் ‘ஷோர்ட்ஸ்’  தான். ஒவ்வொரு பாடல் துண்டுகளிலும் இருவரும் நடிப்பதை பார்த்துவிட்டு அவர்களை சோடியென்று கொண்டாடுவதும் நடக்கிறதே! பிக் பொஸ் போவது எப்போ என்ற கேள்விகள் வேறு அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் யார் பேச்சும் கேட்பதில்லை. பிறகு?

 அமைதியாகச் சென்று சேந்தன் இயலோடு அமர்ந்துகொண்டாள், சாரல்.

error: Alert: Content selection is disabled!!