Skip to content
“சின்னவள் சூரி! அப்பிடியே என்ர அம்மாதான்!” பூங்குன்றன், தன்னையும் மீறிச் சொல்லிவிட்டார் போலும், சட்டென்று சமையலறைப் பக்கம் பார்த்தார்.
சாரலும் முகச் சுளிப்போடு தந்தையைப் பார்த்தாள். அவள் கல்யாணம் முடியும் மட்டுக்கும் சரி இந்த வீட்டில் இந்த இழுபறி நடக்காது இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் அவளுள்.
“ஆளைப் பார்த்தாலே தெரியுது. அதுவும் துணிஞ்ச பிள்ளைதான். தமிழ் முரசில் அவவிட நிகழ்ச்சியை ஒவ்வொரு கிழமையும் பார்த்திருவன். மல்டி டேலண்ட்டட் கேர்ள்!” யோகன் மிகவும் பெருமையாகப் பாராட்டினார்.
“நானும் சில எபிஸோட்ஸ் பாத்திருக்கிறன். அதிலும் அவவிட ஷோர்ட்ஸ் ஒவ்வொண்டும் அருமையா இருக்கும். நல்ல கலகலப்பானவா எண்டு நினைச்சன். நேர்ல பாத்தா …கதை பேச்சுக் குறைவோ? வாங்க எண்டவா ஆளையே காணேல்ல.” இடையிட்டிருந்தான், சேந்தன். சொன்னவன் குரலில் எவ்விதமான பிரத்தியேகப் பாவனையும் இல்லைதான். இருந்தாலும் குறையாகச் சொல்வதாகவே பூங்குன்றன் எடுத்துக்கொண்டார்.
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல தம்பி. பிள்ளை வலு கலகலப்பானவள்தான். கொஞ்சம் பழக நேரம் எடுக்கும். இண்டைக்கு லீவு எடுத்திட்டு நிறைய வேலைகள் இருக்கு எண்டு நிண்டவா. அந்த அவசரம்… யோசனையில போயிருப்பாள்.” சமாதானமாகச் சொன்ன பூங்குன்றன் இதயத்தில் கனமுணர்ந்தார்.
பெற்ற தாய், சொந்த மகளையே விரோதியாகப் பார்த்தால்? விருந்தினர் முன்னால் நின்று ஏச்சும் பேச்சும் கேட்டுக்கொண்டு நிற்பாளா? முதல், அவள் என்ன சிறு பிள்ளையா? மனைவியிடம் தன்மையாக, கோபமாக என்றெல்லாம் சொல்லிப்பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டார், மனிதர்.
தகப்பனில்லாது பல சிரமங்களுக்கு மத்தியில் தம்மை ஆளாக்கியவர், கனகாம்பிகை. அவர் விருப்புக்கு எதிராக மதிவதனியைத் திருமணம் செய்து வந்திருந்தார். அந்தக் குற்றவுணர்வுதான் தாய், மனைவியில் காட்டும் கோபத்தை, எரிச்சலை எல்லாம் கேள்வி கேட்க வைக்கவில்லை. மொத்தத்தில், தாய்க்கும் தாரத்துக்கும் இடையில் இடிபட்டு நொந்துபோய் ஓய்ந்து விட்டார்,அவர்.
“விடுங்கப்பா, என்னை நடுவில வச்சு அம்மாவும் நீங்களும் பிரச்சினப்படுறதில எனக்கு விருப்பம் இல்ல. இது எனக்குப் பழகீற்று. விடுங்க!” ஒருமுறை வெடுக்கென்று சொல்லியிருந்தாள், கவினி.
அவள் மனத்திலோ, ‘மனம் மரத்திட்டு அம்மா! என்னை ஏசிப் பேசுறதில உங்களுக்கு மகிழ்ச்சி எண்டால் தாராளமாச் செய்யுங்கோ!’ என்றது யாருக்குத் தெரியும்.
பூங்குன்றன், மகள் மனநிலையை உணர்ந்தும் செய்வதறியாது நடமாடுகிறார்.
இதில் இருந்து கதை வளர்த்தால் மீண்டும் குடும்பக் கதைகள் வரலாம். அதை விரும்பாது எழுந்தார், பூங்குன்றன். பல்பொருள் அங்காடிக்குச் செல்ல வெளிக்கிட்டவரோடு யோகனும் சேர்ந்துகொண்டார்.
“நாங்களும் வெளிய எங்கயாவது போயிட்டு வருவமே?”
பயணம் செய்து வந்த களைப்பு இருந்தாலும் புதிய அறிமுகங்களால் மிகவும் உற்சாகமாக உணர்ந்த இயல்தான் கேட்டாள்.
ஆமோதித்தவர்கள், கல்யாண மாப்பிள்ளை ஆதவனையும் அவன் சகோதரன் சூரியனையும் விரைவாக வரும்படி அழைத்துச் சொன்னார்கள்.
“ஐஞ்சு நாள்களில கலியாணத்த வச்சுக்கொண்டு அங்க இங்க எண்டு அலைஞ்சு திரியிறது இல்ல சாரல்.” என்றார், மதிவதனி.
“அத்த வீட்டுக் கார்ல தான்மா போகப் போறம். இனிதன் மச்சான் நிண்டா அவரையும் கூட்டிக்கொண்டு போவம். நல்லூர் கோயிலுக்கும் பெரியகடைப் பக்கமும் போயிட்டு வாறம்.” என்றாள், அவள்.
அடுத்த அரை மணித்தியாலத்தில், ஆதவனும் சூரியனும் வந்துவிட்டார்கள். அழைத்துக்கொண்டு தகப்பனின் ஒரே சகோதரியான பரமேஸ்வரி அத்தை வீட்டுக்குச் சென்றாள், சாரல்.
இவர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்கையில் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினான், இசைவாணன்.
“அண்ணா வாறது ஆரெண்டு பாருங்கவன்!” இயல் தான். விழிகள் விரிய அப்படியே நின்று விட்டாள்.
“வாங்க வாங்க பெரியவரே! வீட்டுப்பிள்ளையாக் கலியாண வேலைகள் எல்லாம் செய்து தருவன் எண்டு ஆரோ சொன்ன நினைவு! ஆள் என்ன இந்தப் பக்கமும் இல்லை.” கடித்தாள். சாரல்.
“வராமல் இருப்பனா அக்கா. உங்கட தங்கச்சி தன்ர வேலைகளையும் என்ர தலையில கட்டிப்போட்டு நிண்டுட்டாள். எங்க அவள்? நாளையோட எனக்கு நாலு நாள்கள் லீவு, இங்கதான். ” என்ற இசைவாணன், “மோர்னிங் அண்ணா!”ஆதவனுக்குக் கை கொடுத்தான். சூரியனோடு இரு வார்த்தைகள் கதைத்தான். மற்றவர்களை அறிமுகம் செய்து வைத்தான், ஆதவன்.
“நான் உங்கட பெரிய ரசிகை. அதுவும் உங்கட பாட்டு கிளிப்ஸ் எல்லாம் எப்பவும் கேட்டுக்கொண்டே இருப்பன். ‘நெஞ்சமே நெஞ்சமே’ எத்தின தடவைகள் கேட்டுட்டன் எண்டு எனக்கே தெரியாது. கவினியும் நீங்களுமா போடுறதுகளும் அருமையா இருக்கிறது!” என்றபடி, பரபரப்போடு கையை நீட்டினாள், இயல்.
“நன்றியும் மகிழ்ச்சியும்!”என்று, சிறு முறுவலோடு மெல்லப் பற்றிக் குலுக்கி விடுவித்தான், இசைவாணன்.
“வெளிய வெளிக்கிட்டிட்டீங்க போல, கவினி நிக்கிறாள் தானே அக்கா?” வீட்டினுள் செல்ல முயன்றான், அவன்.
“அவள் இங்க அத்த வீட்டில தான் நிக்கிறாள், வாரும்.” என்று தம்மோடு அழைத்துச் சென்றாள், சாரல்.
எல்லோரையும் உள்ளே வரும்படி அழைத்தான், இனிதன். முதல் போயிட்டு வந்திருவமே என்றுவிட்டார்கள். வெளிவாசலில் நின்றபடியே தங்கையை அழைத்தாள்,சாரல்.
“என்ன! அதுக்குள்ள பத்து மணியாகிற்றா? வாணன் சொன்ன நேரத்துக்கு வந்திட்டான். ஐஞ்சு நிமிசம், இந்தக் கத்தரிக்காய்ப் பொரியலப் பாருங்கோ அத்த, ஓடி வாறன்.” என்றுவிட்டு, “உள்ள வாடா!” என்றபடி வந்தவளை, பொய்யாக முறைத்தான்,அவன்.
“இப்படித்தான் அக்கா உங்கட தங்கச்சி, ஆர் எவர் நிண்டாலும் கவனிக்காமல் பரிசிகெடுத்திருவாள். அவளை விட ஒரு வயசே எண்டாலும் மூத்தவன் எண்ட மரியாதை மருந்துக்கும் குடுக்கமாட்டாள்.” என்றபடி, அவளை நோக்கிச் சென்றவன் தலைமயிரைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டினாள், கவினி.
“இவர் பெரிய ஆள்! இந்தளவுக்கு மரியாதையா நடத்திறன் எண்டு சந்தோசப்படு ராசா. சரி, தேத்தண்ணி குடிக்கிறியா? காலமச் சாப்பிட்டிட்டியா? இடியப்பம் இருக்குச் சாப்பிடன்.” படபடவென்று கதைத்துக்கொண்டே அவன் கரத்திலிருந்த கோப்பினை வாங்கி விரித்தாள்.
உற்ற உறவவென்று யாருமில்லா வறண்ட வாழ்வு வாணனது. நாட்டுப் பிரச்சினை அவன் கண்முன்னாலேயே தகப்பன், தாய், தமக்கை உயிர்களைக் கொடூரமாக எடுத்திருந்தது. முல்லைத்தீவில் சொந்தம் பந்தம் இருந்தாலும் அவன் பொறுப்பை ஏற்க யாரும் முன்வரவில்லை. அவனே தன்னைக் கவனித்துக்கொண்டான். கவினியின் அறிமுகம் நட்பாக மாறிய பின்னர் அவன் வாழ்வில் அவனைக் கவனிக்க ஒரு ஆள். அன்போடு பார்த்து நின்றான், வாணன்.
“சைன் வச்சிட்டு வர வேணும் எண்டு நினைச்சுக்கொண்டே இருந்திட்டு மறந்திட்டன். சொறி வாணன். சரி, பேனை இருந்தாத் தா!” பார்வை கோப்பில் மேய, கரம் நீண்டிருந்தது.
error: Alert: Content selection is disabled!!